
மைடியர் ஜீபா!

‘‘ஹலோ ஜீபா... உயிரி பிளாஸ்டிக் (Bioplastic) என்பது சுற்றுச்சூழலுக்கு நன்மையா தீமையா?’’
- ஏ.சுரேந்தர் ராஜ், தேனி.
‘‘பிளாஸ்டிக்கை கார்பன் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைச் சேர்த்து உருவாக்குகிறார்கள். உயிரி நெகிழி அல்லது உயிர்ம நெகிழி எனக் குறிப்பிடப்படும் பயோபிளாஸ்டிக் மாறுபட்டது. தாவரக் கொழுப்பு, எண்ணெய், பட்டாணி மாவு, சோள மாவு உள்ளிட்ட பொருட்களால் உருவாக்குகிறார்கள். பெட்ரோலியப் பொருட்களால் உருவாகும் பிளாஸ்டிக்கோடு ஒப்பிடும்போது, பயோபிளாஸ்டிக் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஆனால், முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.’’
‘‘ஹாய் ஜீபா... நம் கால் முட்டியில் புண் ஏற்பட்டால் ஏன் சீக்கிரம் சரியாவது இல்லை?’’
- வெ.வித்யா, து.தர்ஷினி, மேச்சேரி, சேலம்.

‘‘நாம் விளையாடும்போது, உடலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி அடிபட்டால், முதலுதவி எடுத்துக்கொள்ளத் தாமதிக்கக் கூடாது. பொதுவாக, நமது உடலில் காயம் அல்லது புண் ஏற்பட்டால், குணமாக ஒரே கால அளவைத்தான் நமது உடல் எடுத்துக்கொள்ளும். கால் முட்டியும் அப்படித்தான். ஆனால், நடக்கும்போதும் உட்காரும்போதும் முட்டியை மடக்கி நீட்டுவதால், அந்தப் புண் அசைவிலேயே இருக்கும். எனவே, குணமாவதில் தாமதம் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் அல்லது தோல் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்களுக்கு, புண் ஆறும் காலம் அதிகமாகும்.’’
‘‘அதிரம்பள்ளி அருவியைப் பற்றி சொல்வாயா ஜீபா?’’
- என்.மணிகண்டன், தஞ்சாவூர்.

‘‘கோடைக்கு ஏற்ற குளுகுளு பகுதியைப் பற்றி கேட்டிருக்கிறாய் மணிகண்டன். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது அதிரம்பள்ளி அருவி. நான்கு இடங்களில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியின் அழகு, மனதைக் கொள்ளையடிக்கும். இந்தியாவின் மிக அகலமான அருவிகளில் இதுவும் ஒன்று. ‘இந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்படும் இதன் அகலம், சுமார் 100 மீட்டர். சுற்றிலும் பசுமை நிறைந்த இந்த அருவியைப் பார்க்கப் பார்க்கத் திகட்டாது. திருச்சூரிலிருந்து சாலக்குடி செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த அருவியின் அருகில் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒன்றும் உள்ளது. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள் பறப்பதை ரசிக்கலாம். இங்கு, செல்வதற்கு ஏற்ற மாதம் செப்டம்பர். நீ இருக்கும் தஞ்சாவூரிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாகச் செல்லலாம்.’’
‘‘ஹலோ ஜீபா... ‘7 Years in Tibet’ என்கிற ஆங்கிலப் படத்தில் நடித்ததற்காக, ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் சீனாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டதாக என் நண்பன் சொன்னான். அது உண்மைதானா?’’
- எம்.பிரவின் குமார், எஸ்.சரவண பாலாஜி, பவானி.

‘‘உண்மைதான். ‘7 இயர்ஸ் இன் திபெத்’ திரைப்படம் 1997-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது. இது Heinrich Harrer எனும் ஆஸ்திரேலியர் எழுதிய ‘Seven Years in Tibet’ நாவலை அடிப்படையாகக்கொண்டது. திரைப்படத்தின் இயக்குநர் ஜூன் ஜாக்குவஸ் அனௌட் (Jean-Jacques Annaud). பிராட் பிட், டேவிட் திவ்லிஸ் (Brad Pitt, David Thewlis) உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இமயமலையின் உச்சியைத் தொட விரும்பிப் பயணிக்கும் இருவரின் கதை. இந்தியா மற்றும் சீனாவில் பல காட்சிகள் படமாக்கப் பட்டிருந்தன. அதில், சீனாவைப் பற்றித் தவறாகக் காட்டியிருப்பதாகச் சீன அரசு கருதியது. அதனால், படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்கள் பிராட் பிட், டேவிட் தியூவ்லிஸ் ஆகியோர் சீனாவுக்குள் நுழையத் தடை விதித்தது. பின்னாளில், இந்தப் படத்தின் இயக்குநர் 2012-ம் ஆண்டு நடந்த ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.’’
‘‘டியர் ஜீபா... வ.உ.சிதம்பரனாரை ‘செக்கிழுத்த செம்மல்’ என்று அழைப்பதன் காரணம் என்ன?’’
- ஜி.லலித்குமார், டி.சிவானந்தன், பி.அபிஷேக், கோவை.
‘‘நமது நாட்டின் விடுதலைக்காக பலர் இன்னுயிரைக் கொடுத்தனர். பலர் சிறையில் கடுமையான துன்பங்களை அனுபவித்தனர். அந்தத் தியாகப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர்தான் வ.உ.சிதம்பரனார். 1872-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர். சிறப்பாகக் கல்வி கற்று வழக்கறிஞர் ஆனார். தன் திறமையால், சிக்கலான பல வழக்குகளில் வெற்றிபெற்றார். பாரதியார், சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரின் நட்பு கிடைத்தது. நம் நாட்டுப் பொருட்களையே பயன்படுத்தும் சுதேசிக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
கப்பல் வணிகத்தில் ஆங்கிலேயர் கோலோச்சி இருந்ததை முறியடிக்க, தானும் கப்பல் வணிகம் செய்யத் துணிந்தார். சொந்தமாகக் கப்பல் வாங்க முடிவெடுத்து, அதற்கான 10,00,000 ரூபாயை, நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தேசபக்தர்கள் மூலமாக வசூல் செய்யத் திட்டமிட்டார். கடும் முயற்சிக்குப் பிறகு சுதேசிக் கப்பல் வாங்கப்பட்டு, கடலில் பவனி வந்தது. பங்குதாரர்கள் தந்த சிக்கல்கள் ஒருபுறம், நாட்டின் விடுதலைப் போராட்டங்களில் கலந்துகொள்வது ஒருபுறம் எனத் தினந்தோறும் பல சவால்களைச் சந்தித்தார்.

விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுவதும் அர்ப்பணித்த விபின் சந்திரபாலரைச் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. அவரின் விடுதலையை வெற்றி விழாவாகக் கொண்டாட முடிவெடுத்தார் வ.உ.சிதம்பரனார். அதற்காக வழக்குத் தொடுத்ததனால், இவரோடு சுப்ரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்டோரைச் சிறையில் அடைத்தது. வ.உ.சி-க்கு மட்டும் ஜாமீன் கொடுக்க, தம் நண்பர்களுக்கு ஜாமீன் கிடைக்காததால் தானும் சிறையிலேயே இருக்க முடிவெடுத்தார். கடுமையான முயற்சிக்குப் பிறகு மூவருக்கும் ஜாமீன் கிடைத்தது. ஆனால், ஆங்கிலேய அரசு மீண்டும் வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகிய இருவரின் மீதும், வேறொரு வழக்கைப் பதிவுசெய்து கைது செய்தது. அதில், வ.உ.சி-க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இயந்திரத்தில் சணல் திரிக்கும் வேலை, எண்ணெய் எடுக்கும் செக்கில் மாடுகளுக்குப் பதிலாக வ.உ.சி-யை செக்கிழுக்கவைத்தது எனக் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். உணவும் முறையாக வழங்கப்படவில்லை. அதனால், இவரின் எடை வெகுவாகக் குறைந்தது. இந்தக் கொடுமை இரண்டரை ஆண்டுகள் நீடிக்க, கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கோவை சிறைபோல கண்ணனூரில் கொடுமைகள் இல்லாதது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அந்தச் சூழலை, படிக்கவும் நூல்கள் எழுதவும் பயன்படுத்திக் கொண்டார்.
விடுதலைக்குப் பிறகும் வ.உ.சி பட்ட சிரமங்கள் ஏராளம். வழக்கறிஞர் பணிசெய்ய அரசு தடை செய்ததால், மளிகைக்கடை போன்ற பல வேலைகளில் ஈடுபட்டார். நீதிபதி இ.எச்.வாலஸ் என்பவரின் முயற்சியால் மீண்டும் வழக்கறிஞர் வேலை கிடைத்தது. எவ்வளவு துன்பத்தை அனுபவித்தாலும், நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களிலிருந்து ஒருநாளும் வ.உ.சி ஒதுங்கியது இல்லை. சிறையில் செக்கிழுத்துத் துன்பப்பட்டதால், ‘செக்கிழுத்த செம்மல்’ எனப் புகழப்பட்டார். ஏராளமான நூல்களை எழுதிய வ.உ.சி, 1936-ம் ஆண்டு மறைந்தார். வ.உ.சி போன்ற உண்மையான விடுதலை வீரர்களின் வியர்வைத் துளிகளே இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றுக்குக் காரணம்.’’