Published:Updated:

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!
பிரீமியம் ஸ்டோரி
News
மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

மைடியர் ஜீபா!

‘‘டியர் ஜீபா... லண்டனில் உள்ள மேடம் டுஸாட் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?’’

- ம.அக்‌ஷயா, அரூர்.

மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!
மைடியர் ஜீபா!

‘‘பிரான்ஸைச் சேர்ந்த ‘மேரி டுஸாட்’ என்பவர், மெழுகுச் சிற்பங்களைச் செய்வதில் புகழ்பெற்றவர். பிரான்சின் புகழ்பெற்ற தத்துவ மேதை வால்டேரின் சிலையைத்தான் முதன்முதலாக மெழுகுச் சிலையாக உருவாக்கினார். அதற்கடுத்து ரூஸோ, பெஞ்சமின் ஃபிராங்ளின் எனப் பலருடைய மெழுகுச் சிலைகளை உருவாக்கினார். ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் வரும் லண்டன் பேக்கர் தெருவில் 1835-ம் ஆண்டு, தான் உருவாக்கிய மெழுகுச் சிலைகளைக் கண்காட்சியாக வைத்தார். அவர் மறைவுக்குப் பிறகு, 1884-ம் ஆண்டு லண்டனில், மெரில்போன் சாலைக்கு அவரது பேரன்களால் மாற்றப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது நடந்த குண்டுவீச்சில், இந்த அருங்காட்சியகம் சேதம் அடைந்தது. மீண்டும் அருங் காட்சியகத்தைச் சரிசெய்தார்கள். இப்போது, ஆம்ஸ்டர்டாம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், நியூயார்க், வாஷிங்டன், பெர்லின், பாங்காக், வியன்னா, ஹாங்காங், ஷாங்காய் என உலகின் பல பகுதிகளிலும் இந்த அருங்காட்சியகத்தின் கிளைகள் உள்ளன. உலகின் பல தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், சினிமா கதாபாத்திரங்களின் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, அமிதாப்பச்சன், ஷாருக் கான், சச்சின் டெண்டுல்கர் என இந்தியாவைச் சேர்ந்த பல பிரபலங்களின்  சிலைகளும் இங்கே உள்ளன.’’

‘‘ஹலோ ஜீபா... இந்திய கிரிக்கெட் அணியின் இளம் புயல் ஹர்த்திக் பாண்ட்யா எப்படி அணிக்குள் வந்தார்?’’

- கே.பாலகிருஷ்ணன், எம்.சந்தோஷ், திருப்பூர்.

மைடியர் ஜீபா!

“ஹர்த்திக் பாண்ட்யா, இந்திய அணியின் சென்சேஷன் ப்ளேயர். குஜராத் மாநிலத்தில்  1993-ம் ஆண்டு பிறந்தவர். வேகப்பந்து வீசக்கூடிய, அதே நேரம் தேவையான சமயங்களில் ரன்களைக் குவிக்கக்கூடிய  அதிரடியான வீரர் தேவை என்ற இந்தியாவின் பல ஆண்டுத் தேடலில் கிடைத்த அற்புத வீரர், ஹர்த்திக் பாண்ட்யா. பரோடா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஜொலித்து, ஐபிஎல்-ல், மும்பை அணியில் இடம்பிடித்தார். சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுடனான போட்டிகளில் அதிரடியாக விளையாடி, இந்திய அணியின் தேர்வாளர்களைக் கவர்ந்தார். கடந்த ஜனவரி மாதம், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேசப் போட்டியில் முதல் ஓவரிலேயே எக்கச்சக்க வைடுகளோடு 11 பந்துகளை வீசினார். பின்னர், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் இக்கட்டான சூழ்நிலையில் அற்புதமாக விளையாடினார். உலகக் கோப்பை டி20 முக்கியமான போட்டியில், வங்கதேச அணி 3 பந்தில் 2 ரன்கள் எடுக்கவேண்டிய சூழ்நிலை. பாண்ட்யா அபாரமாகப் பந்து வீசி, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் கடைசிப் பந்தை அபாரமாக வீசி, இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார். பாண்ட்யாவுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.’’

‘‘விலங்குகளிலே அதிக வேகம் ஓடுவது எது ஜீபா?’’

-ஈ.கார்த்திகேயன், சுண்டகாமுத்தூர், கோவை.

மைடியர் ஜீபா!

‘‘சிறுத்தை. பூனை இனத்தைச் சேர்ந்த சிறுத்தை, மணிக்கு சுமார் 100 கி.மீ வேகம் வரை ஓடக்கூடியது. அமெரிக்காவின் சின்சினாட்டி வனவிலங்குக் காப்பகத்தில் இருந்த ‘சாரா’ எனும் சிறுத்தை, 5:95 நொடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. இதைக் கிலோமீட்டரில் கணக்கிட்டால், மணிக்கு 98.2 கி.மீட்டர் ஆகும். சிறுத்தைகள் பெரும்பாலும் ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. இதன் ஆயுட்காலம் 8 முதல் 15 ஆண்டுகள். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் சிறுத்தையையும் குறிப்பிட்டுள்ளது. மனிதர்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் எனப் பல உயிரினங்கள் வாழ உரிமைகொண்டது இந்த உலகம். அதனால், அழிந்துவரும் உயிரினங்களைக் காப்போம்.’’