மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

##~## |
பிரசன்னா வழக்கம்போல் ஆரம்பித்தான். ''இந்த கரன்ட்டே இப்படித்தான் முக்கியமான வேளைகளில் கட்டாகிவிடும்'' என்றான்.
அதற்கு மாயா டீச்சர், ''சில சமயங்களில் வோல்டேஜ் குறைவாக இருந்தாலோ அல்லது எங்காவது மின்சாரக் கம்பிகள் பாதிப்பு அடைந்தாலோ... அதைச் சரி செய்ய நிறுத்துவார்கள். இப்போதும் அப்படிக்கூட ஏதாவது நேர்ந்திருக்கலாம்'' என்றார்.
''டீச்சர், கரன்ட்டைக் கண்டுபிடிக்கலைன்னா என்ன ஆகியிருக்கும்?'' என்றாள் மது.
''ஐயையோ! கரன்ட் மட்டும் இல்லைனா? காலைல பல் தேய்க்கறதுல இருந்து... இரவு 'குட்நைட்’ சொல்றவரைக்கும்... யப்பா, நினைச்சே பார்க்க முடியலை.'' என்றான் கணேஷ்.
''கரன்ட் என்பது இப்போதைய அன்றாட வாழ்க்கைக்கு ரொம்பவே அவசியமாயிட்ட ஒண்ணு. அதைத் தவிர்த்து நாம் வாழ முடியாது. அது எவ்வளவு யூஸ்ஃபுல்லோ... அதேபோல டேஞ்சரும் கூட, மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது மிகவும் ஜாக்கிரதையா இருக்கணும்.'' என்றார் மாயா டீச்சர்.
''ஸோ... இன்னிக்குக் கரன்ட் டாபிக்கே 'கரன்ட்’தான் இல்லையா?'' என்றாள் சரசு.
'ஆமாம்,’ என்றபடி மாயா டீச்சர் தொடர்ந்தார். ''முதல் முதல்ல இத்தாலிய நாட்டைச் சேர்ந்த அலெஸ்ஸாண்ட்ரோ வோல்டா என்பவர்தான் இரண்டு வேறுபட்ட உலோகத் தகடுகளை உப்பு அல்லது ஆசிட் திரவத்தில் வைத்து, அவற்றைக் கம்பியின் மூலம் இணைத்தால், மின்சாரம் உருவாகும் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் நினைவாகத்தான் மின்சார அலகுக்கு வோல்ட்ஸ் என்று பெயரிடப்பட்டது.'' என்றார் மாயா டீச்சர்.

''கரன்ட்டை எப்படி டீச்சர் பார்க்க முடியும்?'' என்றாள் சரண்யா.
''மின்சாரத்தை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால், அதை உணரமுடியும். மின்சாரத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா அணுவைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். உலகமே அணுக் களால் ஆனது. எல்லா உயிரினங்கள், அவை விடும் மூச்சு, நிலம், நீர் ஆகிய அனைத்துமே அணுக்களால் ஆனவை. உதாரணமா, நம்ம தலைமுடில மட்டும் பத்து லட்சத்தைவிட அதிகமான அணுக்கள் இருக்கு. ஓர் அணுவுக்கு நடுவில் இருக்கிற நியூக்ளியஸை, எலக்ட்ரான்கள் சுத்திச் சுத்திவரும். இந்த எலக்ட்ரான்கள் ஒரு அணுவை விட்டு இன்னொரு அணுவுக்குத் தாவும். இப்படித் தொடர்ந்து தாவும்போது உண்டாகும் சக்திக்குப் பேர்தான் மின்சாரம்.'' என்றார் மாயா டீச்சர்.
''டீச்சர், மின்சாரம் எங்கே... எப்படி தயாரிக்கப்படுது? அது எப்படி நம் வீடுகளுக்கு வருதுன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என்றான் பிரசன்னா.
மாயா டீச்சர் மந்திரக் கம்பளத்தை விரித்தார். அதில் சுட்டிகளும் டீச்சரும் ஏறிக்கொண்டனர். மந்திரக் கம்பளம் பறக்க ஆரம்பித்தது.
மந்திரக் கம்பளம் போய்ச் சேர்ந்த இடம், மிகப் பெரிய அனல் மின்நிலையம். ''இங்கிருந்துதான் நம்முடைய நகரத்துக்கே மின்சாரம் சப்ளை செய்கிறார்கள்'' என்ற மாயா டீச்சர், எப்படி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை சுட்டிகளுக்கு விளக்க ஆரம்பித்தார்.
''இந்தப் பெரிய புனல் மூலமாக நிலக்கரியை உள்ளே போடுவார்கள், நாமும் உள்ளே போகலாம். மந்திரக் கம்பளத்தில் இருப்பதால் நம்மைப் பாதிக்காது'' என்ற டீச்சர், அங்கு புனலில் கொட்டிக் கொண்டிருந்த நிலக்கரிக் குவியலுடன் சேர்ந்து மந்திரக் கம்பளத்தையும் உள்ளே போகும்படிச் செய்தார்.
நிலக்கரிக் கட்டிகள் கிரஷர் மூலம் தூளாக்கப்பட்டு... காற்றுடன் கலந்து, கொதிகலனுக்குள் சுட்டிகளுடன் சென்றது. அங்கே குழாய் மூலம் சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீர் வந்து சேர்ந்தது.

''தண்ணீர் ரொம்பவும் சூடானால் என்ன செய்யும்?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.
''தெரியும் டீச்சர், நீராவியின் அழுத்தம் அதிகமாகி, அது ஒரு சக்தியாக வெளிப்படும்.'' என்றான் கணேஷ்.
''சரிதான்! அந்தச் சக்தியைப் பயன்படுத்தி நாம் நிறைய காரியங்கள் செய்யலாம். நீராவியோட சக்தியால என்ன காரியம் ஆகுதுன்னு தெரிஞ்சுக்க நாம் டர்பைன் பகுதிக்குப் போகவேண்டும்'' என்றார் டீச்சர்.
அந்த டர்பைன் பகுதியில் ஏராளமான விசிறிகள் நீராவியின் விசையால் சுழன்று கொண்டு இருந்தன.
''டீச்சர், டர்பைன்கள் சுழல்வதால் என்ன நடக்கும்?'' இது மது.
''அதுதான் அடுத்த கட்டம். நாமும் அதனுள் செல்வோம்'' என்றபடியே டீச்சரும் சுட்டிகளும் சுழன்று கொண்டிருந்த டர்பைனுடன் சேர்ந்து சுழன்றார்கள்.
அப்படி சுழன்றபடியே அவர்கள் ஜெனரேட்டருக்குள் சென்றார்கள். அங்கு இருந்த உலோகத் தண்டும் டர்பைனுடன் இணைந்து வேகமாக சுழன்றபடியே இருந்தது. அதன் எதிர் முனையில் பிரமாண்டமான காந்த உருளையையும் அது சுழற்றியது. காந்த உருளையைச் சுற்றிலும் உலோகக் கம்பிகள் சுற்றப்பட்டிருந்தன. உள்ளே காந்தம் சுற்றச் சுற்ற, உலோகக் கம்பிகளில் இருந்த எலக்ட்ரான்கள் வேக வேகமாக இடம் மாற ஆரம்பித்தன. அவ்வளவுதான், மின்சாரம் உற்பத்தியானது.
அந்த இடத்தில் 25,000 வோல்ட்ஸ் மின்சாரம் உற்பத்தி ஆனது. ஜெனரேட்டரில் உற்பத்தியான மின்சாரம் டிரான்ஸ்ஃபார்மருக்குள் வந்து சேர்ந்தது. அங்கு, அதனுடைய சக்தி ரெண்டே முக்கால் முதல் நாலு லட்சம் வோல்ட்ஸ் வரை அதிகரிக்கப்பட்டது. ''இந்த மாதிரி அழுத்தம் அதிகரிக்கப்பட்டால், மின்சாரம் இன்னும் வேகமாகப் பாயும்'' என்றார் மாயா டீச்சர்.
அந்த அழுத்தத்தைச் சுட்டிகளும் உணர்ந்தார்கள். அங்கிருந்து சுட்டிகள் மின்சாரத்துடன் பயணித்து, மத்திய கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் போனார்கள். அங்கிருந்து 'ஸ்விட்ச் கியர்’ பகுதிக்கு வந்தார்கள். அங்கிருந்துதான் மின்சாரம், உயர் அழுத்த மின்கம்பிகள் வழியாக தேவைக்கேற்ப விநியோகிக்கப்படும். சுட்டிகளும் மின்கம்பிகள் வழியாக மின்சாரத்துடன் பயணித்தார்கள்.
மின்சாரக் கேபிளின் உள்ளே எலக்ட்ரான்கள் கன வேகத்தில், அணுவிட்டு அணு மாறிக்கொண்டிருந்தன. அடுத்து அவர்கள் வந்திருந்த இடம், ட்ரான்ஸ்மிஷன் டவர். ''இங்கு வோல்டேஜ் 11,000-மாகக் குறைக்கப்படும். ஏன்னா, ''பெரிய பெரிய ஃபேக்டரிகளுக்கு இவ்வளவு வோல்ட்ஸ் மின்சாரம் இருந்தாப் போதும். அதேபோல இன்னொரு ட்ரான்ஸ்ஃபார்மர் மூலம் நம்ம வீட்டுக்குத் தேவையான அளவான 220-240 வோல்ட்ஸுக்குக் குறைச்சு அனுப்புவாங்க'' என்றார் மாயா டீச்சர்.
அதுவரை மின்கம்பிகள் வழியாக வந்து கொண்டிருந்த மதுவும், பிரசன்னாவும் கம்பிக்கு வெளியே வந்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்து மின்சாரத்துடன் பயணித்தார்கள். இருவரும் பேச்சு சுவாரசியத்தில் பிரசன்னாவின் கை, மதுவின் கை மீது பட்டது. அப்போது இருவரும் எலெக்ட்ரிக் ஷாக்கால் தாக்கப்பட்டதை உணர்ந்தார்கள். இத்தனை நேரம் கம்பிக்குள் பயணம் செய்தபோது அடிக்காத ஷாக், வேறு வேறு கம்பிகளில் பயணிக்கும்போது அடித்ததை உணர்ந்தார்கள்.
இதைக் கவனித்த மாயா டீச்சர், ''ஒயர்களின் மூலம் பாயும் மின்சாரமானது, ஒயர்களின் இணைப்பினால் முடிவுக்கு வருகிறது. இதுதான் நம் உடலில் பாயும்போது ஷாக் என்று சொல்கிறோம். இந்த அதிர்வானது ஒருவரின் உடல் பலத்தை மட்டும் பொறுத்ததாக இல்லாமல், அவர் நிற்கும் இடத்தின் ஈரத்தன்மை, மண், கல், மரக்கட்டை என எதன் மீது அவர் நிற்கிறார் என்பதைப் பொறுத்தும் இருக்கும். இதனுடைய பாதிப்பால் ஒருவருக்கு சின்ன அதிர்வில் இருந்து மயக்கமடைதல், உடல் கருகுதல் அல்லது மரணம் வரைக்கும்கூட ஏற்படலாம். ஆனால், பொதுவாக மரம், ரப்பர், கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் மூலம் மின்சாரம் பாயாது. அதனால்தான், மின் கம்பிகளின் மீது பிளாஸ்டிக் ஒயரால் உறை மாதிரி போடுகிறார்கள். அதுதான் நம்மை மின்சாரத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.'' என்று முடித்தார்.
''இன்னிக்கு நாம் பார்த்தது... அனல் மின் நிலையம். இதைப் போலவே தண்ணீர், சூரிய ஒளி மூலமும் மின்சாரத்தைத் தயாரிக்கிறார்கள். காற்றாலைகளை அமைத்து, அவற்றின் மூலமும் மின்சாரம் தயாரிக்கிறார்கள். அணு உலைகள் மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுது. ஆனால், அணு உலைகள் பாதுகாப்பானதல்ல என்ற கருத்து உலகம் முழுவதும் பரவி வருகிறது'' என்றார் மாயா டீச்சர்.
அவர்கள் வீட்டுக்கு வந்ததும், ''மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்க'' என்று சொல்லி, சுட்டிகளை அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.