கல்பனா சோழன் மாடல்: ஸ்ருதி ,ஹாசிப்கான்
டிங்...டிங்...
##~## |
மாயா டீச்சர் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்து பார்த்தார். வாசலில்... டோனி, ரீனா, மதி, தேவி.
''ஹாய்... இப்பத்தான் உங்களை நினைச்சுட்டு இருந்தேன். எங்கே சிவாவைக் காணோம்?'' என்று கேட்டார் டீச்சர்.
''உங்களுக்கு விஷயம் தெரியாதா டீச்சர்? சிவா அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. சிவாவின் தங்கச்சிப் பாப்பா அழகா இருக்காம். கை, கால் எல்லாம் குட்டி குட்டியா... தலை நிறைய முடியோட...'' என்றாள் ரீனா.
''நீங்களும் அப்படித்தான் குட்டிக் கை, குட்டிக் கால், தலை நிறைய முடின்னு பிறந்து இருப்பீங்க'' என்றார் டீச்சர்.

''எனக்கும் தலை நிறைய கர்லிங் முடி இருந்ததுன்னு அம்மா சொல்வாங்க டீச்சர். நம்ம முடி இவ்வளவு மெல்லிசா இருக்கே... இந்த முடிக்குள்ளே என்ன இருக்கு டீச்சர்?'' எனக் கேட்டாள் தேவி.
''நல்ல சப்ஜெக்ட்! முடி, புரோட்டீன்னால் ஆனது. குறிப்பா... கேரட்டின். முடிக்கு ரெண்டு பாகம் இருக்கு. முதலாவது, முடி வேர்க் கால். இது தோலுக்கு உள்ளே இருக்கு. இதுதான் முடி கொட்டினாலும் மறுபடியும் முளைக்கவைக்குது. ஒருவேளை காயம்பட்டா, அந்த இடத்தில் தோல் வளரும்போதும் உதவும். இரண்டாவது... தோலுக்கு மேலே நீளமா வளர்வது...'' என்ற மாயா டீச்சர், ''வாங்க, நேரிலே போய்ப் பார்த்துடுவோம்'' என்று மந்திரக் கம்பளத்தை விரித்தார்.
''ஹை! கம்பளம் புத்தம் புதுசாப் பளபளக்குது...'' என்றான் டோனி.
அதற்கு மதி, ''சுட்டி விகடன்தான் வளர்ந்தாச்சே... இனி எல்லாமே புதுசாத்தான் இருக்கும்.'' என்றாள்.
புன்னகைத்தபடி மாயா டீச்சர், கம்பளத்தில் எல்லோரையும் ஏற்றிக்கொள்ள, கம்பளம் சர்ர்ரெனப் பறந்தது. அடுத்த நிமிஷம், அனைவரும் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு பொடி சைஸுக்கு மாறினார்கள். கம்பளம் நேராக ஒரு சுட்டியின் தலையில் ஒரு தூசி போல போய் ஒட்டிக்கொண்டது.
அடுத்த நொடி, 'வீல்’ எனக் கத்தினாள் மதி.

''என்ன ஆச்சு?'' என்று கேட்டார் டீச்சர்.
''தலைமுடிக்குப் பதிலா, நாம தப்பான இடத்துக்கு வந்துட்டோம் போல இருக்கு. பாருங்க எவ்வளவு பெரிய வண்டுங்க'' என்றாள்.
சிரித்த டீச்சர், ''அது வண்டு இல்லை... பேன். நல்லவேளை, இந்தச் சுட்டியோட தலையில ஒரு சில பேன்கள் இருக்கு. இதுவே நிறைய பேன்கள் இருக்கிற தலையில போய் இறங்கி இருந்தா, இப்ப நாம இருக்கிற சைஸ¨க்கு ஜுராஸிக் பார்க்ல மாட்டிக்கிட்ட மாதிரி முழிச்சு இருப்போம். சரி, விஷயத்துக்கு வருவோம்'' என்ற டீச்சர் தொடர்ந்தார்...
''இங்கே, ஒரு முடியை குறுக்கில் வெட்டிப் பார்ப்போம்'' என்றபடி, ஒரு முடியை கட் பண்ணி நடுவில் நின்றுகொண்டார். ''ஒவ்வொரு முடியும், ஒண்ணு மேலே ஒண்ணா நிறைய அடுக்குகளா இருக்கு பாருங்க, வெளிப் பக்கத்துல இருக்கிற அடுக்குதான் கியூட்டிகிள்'' என்றார்.

''வீட்டுக் கூரையில் ஒண்ணு மேலே ஒண்ணாக் கல் அடுக்கிவெச்ச மாதிரியே இருக்கே'' என்றாள் தேவி.
''ஆமாம். கியூட்டிகிளுக்கு அடுத்து இருக்கிறது கார்டெக்ஸ். அங்கே பாருங்க... இந்த செல் ஒவ்வொண்ணிலும் கேரட்டினை கட்டுக்கட்டா சேர்த்துக் கட்டிவெச்சு இருக்கு. அதனாலதான், தலைமுடி நல்ல கம்பி மாதிரி இருக்கு. சில முடிக்குள்ளே முடி இழையோட நடுவிலே மெடுல்லா இருக்கும்'' என்று சொல்ல, ரீனா குறுக்கிட்டாள்.
''டீச்சர், நமக்கு எல்லாம் தலைமுடி கறுப்பா இருக்கு. ஆனால், டேவிட் தலைமுடி மட்டும் ப்ரௌன் கலர்ல இருக்கே?''
''அதுவா... முடியை ரெண்டு பாகமாப் பிரிக்கலாம்னு பார்த்தோம் இல்லையா? ஒவ்வொரு முடி இழையோட மேல் பாகம்தான் நாம கண்ணால் பார்க்கறது. அந்த முடியை, மண்டையோட ஓட்ட வைக்கிற அடிப் பாகம்தான் வேர். ஒவ்வொரு முடியோட வேர்ப் பாகத்தையும் சுத்தி, தோலுக்கு உள்ளே ஒரு சதை இருக்கு. இதை வேர்க் கால்னு சொல்லலாம். இந்த ஒவ்வொரு வேர்க் காலுக்கு உள்ளேயும் நிறம் சேர்க்கிற செல்கள் கொஞ்சம் இருக்கும். இந்தச் செல்கள் மெலனின் ரசாயனத்தை உருவாக்கும். இந்த மெலனின்தான் தலைமுடிக்கு நிறம் தரும். இந்த நிறமி எவ்வளவு இருக்கோ... அந்த அளவுதான் தலைமுடியோட நிறத்துக்குக் காரணம்'' என்றார் டீச்சர்.
''என்னோட மாமா தலைமுடி... நிறைய வெள்ளையும் கருப்புமாக் கலந்து இருக்கே... அது ஏன் டீச்சர்?'' என்று கேட்டாள் மதி.
''வயசு ஆக ஆக இந்த நிறமி செல், கொஞ்சம் கொஞ்சமா இல்லாமப் போகுது. அப்படி குறைஞ்சிட்டே போகும்போது, அந்த முடியில் மெலனின் இல்லாமப் போயிடும். அப்போதான் முடி நிறமற்று வளரும். அப்படி நிறம் இல்லாத முடிதான் நமக்கு வெள்ளையாத் தெரியுது. அதைத்தான் நரைன்னு சொல்றோம்.'' என்றார் டீச்சர்.
''ஆனா, எங்க எதிர் வீட்டு அண்ணாவுக்குக்கூட தலையிலே நிறைய நரை இருக்கே?'' என்றாள் மதி.
''நரை எப்போ வேணும்னாலும் வரலாம் மதி. உன் எதிர் வீட்டு அண்ணாவுக்கு கொஞ்சம் சீக்கிரமே வந்து இருக்கு. 30 இல்லேன்னா 40 வயசுலே தான் முதல் நரை முடி தலைகாட்டும். இப்போ எல்லாம் கொஞ்சம் சீக்கிரமே வருது. இதுக்கு நம்ம ஜீன்ஸ் தான் காரணம்.'' என்றார் டீச்சர்.
''என் தாத்தாவுக்கு தலையிலே முடியே இல்லை.'' என்றாள் தேவி.
''எல்லாருக்குமே ஒவ்வொரு நாளும் ஐம்பது முதல் எண்பது முடி உதிரும். பொதுவா காலையிலதான் முடி அதிகம் உதிரும். ஏன்னு இன்னும் காரணம் கண்டுபிடிக் கலை. 4 இன்ச் நீளத் தலைமுடின்னா, ஒரு நாளைக்கு 87 முடி கொட்டும். 12 இன்ச்’னா, 26 முடி கொட்டும். தலைமுடி நீளம் அதிகம் ஆக ஆக கொட்டுற முடியோட நம்பர் அதிகமா ஆகும்.'' என்றார் டீச்சர்.
''நான் பிறந்தப்போ கொஞ்சம் தலைமுடிதான் இருந்ததாம். பிறகு, அதுவும் கொட்டிப் போச்சாம்... நல்ல வேளையா திரும்ப முளைச்சுடுச்சு'' என்றான் டோனி தன் தலையைக் கோதியபடி.
''சரி சரி, நாம ரொம்ப நேரம் இங்கேயே இருக்க வேண்டாம். மிச்சத்தை வெளியே போய் பேசிப்போம்'' என்றார் டீச்சர். மந்திரக் கம்பளம், அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து பழைய உருவத்துக்கு மாற்றியது.
அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தொடர்ந்தார் டீச்சர். ''பிறந்ததில் இருந்து மூணு வயசு வரைக்கும், 10 வயசு, 22 வயசு, 26 வயசு, 35 வயசு, அப்புறம் 54 வயசு. இந்த நேரங்களில்தான் நம்ம உடம்புக்குள்ள ஹார்மோன் மாற்றங்கள் நடக்குது. தவிர, தலைமுடி கொட்டுறதுக்கு நிறையக் காரணங்கள் இருக்கு. வயதாவது, தலைமுடியை இறுக்கிக் குதிரை வால் கொண்டை போடுவது, இரும்புச் சத்து குறைவது, கான்சர் மாதிரி நோய் வந்தா... முடி கொஞ்சமாவோ அல்லது மொத்தமாவோ காணாமப் போயிடும்!'' என்றார்.
''நாங்க ஒரு படம் பார்த்தோம். அதில், ஒரு சின்னப் பொண்ணுக்கு கேன்சர். கடைசிலே தலையில முடியே இல்லை.'' என்றான் டோனி.
''அந்த மாதிரி நிறையப் பேர் இருக்காங்க. நாம அவங்களுக்கு நம்ம முடியைக்கூட டொனேட் பண்ணலாம்.'' என்றார் டீச்சர்.
''என் அம்மாகூட போன வருஷம் முடியை டொனேட் பண்ணாங்க.'' என்றாள் தேவி.
''நல்ல விஷயம்! ஒவ்வொரு முடியும் உதிர்ந்து வளரும். ஆனால், வளர்வது படு ஸ்லோ. ஒரு வருஷத்துக்கு 6 இன்ச்தான் வளரும். போன முடியை மறுபடியும் வளர்க்கிறதைவிட, இருக்கிற முடியை பத்திரமாப் பார்த்துக்கணும்'' என்றார் டீச்சர்.
''எப்படிப் பார்த்துக்கறது?'' என்று கேட்டாள் மதி.

''தலைமுடியை சுத்தமா வெச்சுக் கணும். சத்துள்ள சாப்பாடு, நிறையத் தண்ணீர் குடிக்கணும். கொளுத்துற வெயில்லே போனா, தொப்பி போட்டுக்கலாம். அந்தத் தொப்பியையும் டைட்டா போடக் கூடாது. அழுக்கு இல்லாம இருக்கணும். தலைமுடி காய்ஞ்சு போய்... கவனிக்காம விட்டா, அதிகம் கொட்டும். அதனால், கண்டிஷனர் கட்டாயம் போடணும். தலையை மசாஜ் பண்ணும்போது, ரத்த ஓட்டம் கூடும். தலைமுடிக்குத் தேவையான சத்தும் ஆக்சிஜனும் கிடைக்கும். அதோடு தூங்கிட்டு இருக்கிற தலைமுடியின் வேர்க் கால்களை எழுப்பிவிட்டு, வளர வைக்கும்.'' என்றார் டீச்சர்.
''விளக்கெண்ணெய் தேச்சா முடி நல்லா வளரும்னு என் பாட்டி சொல்றாங்களே... உண்மையா டீச்சர்?'' என்று கேட்டான் டோனி.
''ஆமா! தலைமுடியை நல்ல சாஃப்ட் ஆன பிரஷால் வாரணும். சீப்பு, பிரஷ் எல்லாம் வாரத்துக்கு ஒரு தரமாவது சுத்தம் பண்ணணும். அயர்ன் மாத்திரைகள் சாப்பிடலாம். புரோட்டீன், இரும்புச் சத்துள்ள சாப்பாடு சாப் பிடணும். பச்சைக் காய்கறி, கீரை, பீன்ஸ், பருப்பு, காரட் எல்லாம் நிறையச் சேர்த்துக்கணும்.'' என்றார்.
''வீட்டிலே போய் இனிமேல் அடிக்கடி இதை எல்லாம் சமைச்சுத் தரச் சொல்லப் போறேன்.'' என்றாள் மதி.
''வெரி குட்! இப்படி சத்துள்ள சாப்பாடு சாப்பிட்டா, தலைமுடி நல்ல ஸ்ட்ராங்கா ஹெல்த்தியா இருக்கும். ஆல் தி பெஸ்ட்!'' என்று சொல்லி எல்லோரையும் அனுப்பிவைத்தார் மாயா டீச்சர்.