FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

கார்விங் இளவரசன்!

கார்விங் இளவரசன்!
பிரீமியம் ஸ்டோரி
News
கார்விங் இளவரசன்!

ஆர்.வைதேகி, படங்கள்: தே.அசோக்குமார்

ந்தை எட்டடி பாய, சுவையோடு 16 அடி பாய்ந்திருக்கிறார் மகன்.

கார்விங் இளவரசன்!

சென்னையைச் சேர்ந்த பிரபல செஃப் உமாசங்கர் தனபால். அவருடைய 13 வயது மகன், யஷ்வந்த் குமார் ஜெர்மனியில் நடைபெற்ற ‘இன்டர்நேஷனல் கலினரி ஒலிம்பிக்ஸ்’ போட்டியில் அசத்தி இருக்கிறார்.

‘‘ரொம்ப சின்ன வயசுல  இருந்தே எனக்கு சமையலில் ஆர்வம் உண்டு. தினமும் கிச்சனில் அம்மாவுக்கு உதவுவேன். என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்தாங்கன்னா விதவிதமா செய்துகொடுப்பேன்’’ எனப் புன்னகையுடன் வரவேற்கிறார்.

கார்விங் இளவரசன்!



இவருடைய தந்தை காய்கறி மற்றும் பழங்களில் சிற்பங்கள் செய்வதில் எக்ஸ்பர்ட். ‘‘அவரைப் பார்த்து நானும் கார்விங் பண்ண ஆரம்பிச்சேன். அம்மாவுக்கு என்னோட ஆர்வம் புரியும். ‘தொடர்ந்து செய்’னு ஊக்கப்படுத்துவாங்க. ஸ்கூல் முடிஞ்சு வந்ததும், இன்னைக்கு எந்த வெஜிடபிளில் என்ன உருவம் கொண்டுவரலாம்னு ட்ரை பண்ணிட்டே இருப்பேன். அப்போதான் ‘இன்டர்நேஷனல் கலினரி ஒலிம்பிக்ஸ்’ பற்றி அப்பா சொன்னார். ‘இந்தப் போட்டியில் கலந்துக்க வயசு முக்கியம் இல்லை. நிறைய பிராக்டீஸ் பண்ணினா ஜெயிக்கலாம்’னு சொன்னார். 6 மாதங்கள் பயிற்சி எடுத்து கலந்துகிட்டேன்’’ என்று கண்கள் விரிய சொல்கிறார் யஷ்வந்த் குமார்.

இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களில் மிகவும் குறைந்த வயது இவருக்குத்தான். ‘‘மூன்று மணி நேரம் லைவா கார்விங் பண்ணினேன். போட்டியில் நான் பண்ணின தாய் (Thai)ஸ்டைல் கார்விங்குக்கு டிப்ளோமா பிரிவுல பரிசு கிடைச்சது. உலகத்திலயே தைவான்தான் கார்விங் கலைக்குப் பிரபலமானது. நான் பரிசு வாங்கினதும், தைவானுக்கு அழைப்புகள் வந்தன. இன்னும் நிறைய பயிற்சிகளோடு அடுத்த முறை தங்கம் ஜெயிப்பேன்’’ - தன்னம்பிக்கை ததும்புகிறது யஷ்வந்த் பேச்சில்.

கார்விங் மட்டுமின்றி, எங்கே சமையல் போட்டிகள் நடந்தாலும் அங்கே யஷ்வந்தை பார்க்கலாம். பரோட்டா செய்வதிலும் இவர் எக்ஸ்பர்ட்.

‘‘இதுக்காக, ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஹோட்டலில் பரோட்டா போடக் கத்துக்கிட்டேன். தினமும் 4 மணி நேரத்துக்கு மாவு பிசையறது, பரோட்டா சுடறது, கொதிக்கக் கொதிக்க பரோட்டாக்களை அடுக்கி, அடிக்கிறதுனு எல்லாம் பண்ணியிருக்கேன். அப்படி அடிக்கும்போது கையெல்லாம் எரியும். அங்கேயே தினம் 100 வெங்காயம் வெட்டுவேன். இந்தப் பயிற்சிகள்தான் போட்டிகளில் ஜெயிக்கும் தன்னம்பிகையை கொடுக்குது. ஆர்வமும் உழைப்பும் சேர்ந்தால், அழகா ஜெயிக்கலாம். பெஸ்ட் செஃப் ஆகறதுதான் என்னோட லட்சியம். அதுக்கு இன்னும் நிறைய உழைப்பேன்!’’

சின்னக் கண்களில் பெரிய கனவுகள் தேக்கிச் சொல்கிறார் யஷ்வந்த் குமார்.

யஷ்வந்த் தரும் ஒரு சிம்பிள் ரெசிப்பி...

அவல் கொழுக்கட்டை

கார்விங் இளவரசன்!

தேவையானவை: சிவப்பு அவல் - 1 கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, கொத்தமல்லி - அலங்கரிக்க.

செய்முறை: கடலைப்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும். அவலை 10 நிமிடங்களுக்கு ஊறவைத்து, மஸ்லின் துணியில் வடிகட்டி, தண்ணீர் இன்றி எடுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும். ஊறிய பருப்புகளில் இருந்து தண்ணீரை வடிக்கவும். இதனுடன் அவலையும் நறுக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசையவும். இதை, கொழுக்கட்டை வடிவங்களில் செய்து, இட்லித் தட்டில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கொத்தமல்லி தூவி, சட்னியுடன் சாப்பிட்டால், செம ருசியாக இருக்கும்.