
சுட்டி ஸ்டார் நியூஸ்


சுனாமியை மிரட்டிய அதிசய மரம்!
ஜப்பான் நாட்டின் ரிகுஜென் டகடா (Rikuzentakata) என்ற பகுதியில் உள்ள பைன் மரம் ஒன்று 200 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து, இது, 88 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கிறது. 1986-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இந்தப் பகுதியில் இருந்த 90 ஆயிரம் மரங்கள் சாய்ந்தன. எஞ்சி நின்றது, இந்த பைன் மரம் மட்டுமே. ஜப்பான் நாட்டை 1986, 1994, 2011 என்று மூன்று முறை சுனாமி பேரலைகள் தாக்கின. பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பலமுறை சூறாவளி காற்று வீசியிருக்கிறது. எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறது இந்த பைன் மரம். தற்போது இந்த மரம் வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்டு, இவாட்டா என்ற பகுதியில் நடப்பட்டுள்ளது.
ஆ.பாஸ்டின் ஜோயல், தே.பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.


மண்ணில்லா விவசாயம்!
மண்ணே இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறைக்கு ஏரோபோனிக்ஸ் (Aeroponics) என்று பெயர். பஞ்சகாவ்யா போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, கோஸ், தக்காளி, சாமந்திப் பூ, ரோஜா, அவரை, கோவக்காய் எனப் பல வகையான தாவரங்களை வளர்க்கலாம். மண்ணில் விதைக்கும்போது என்ன சத்து கிடைக்குமோ, அதே சத்துகள் இந்தக் காய்கறிகளிலும் கிடைக்கும். சொந்தமாக காய்கறிகளைப் பயிரிட நினைக்கும் நகரவாசிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
க.பாலமுருகன், அரசினர் உயர்நிலைப் பள்ளி சிறுகளத்தூர் (தெற்கு), நந்தம்பாக்கம். சென்னை.


கா... கா... கிளாக்!
கோழியைக் காலம் காட்டும் கடிகாரமாக, விடியலைக் குறிக்கும் அலாரமாக சொல்வார்கள். ஆனால், ‘காலம் அறிவிப்பதில் கோழியைவிட பெஸ்ட், காகம்’ என்கிறார்கள், ஹாலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இதற்காக, ஒளி புகாத இருட்டறை ஒன்றில், காகத்தை அடைத்தனர். காலை, மாலை தெரிய வாய்ப்பே இல்லை. ஆனாலும், காகம் கச்சிதமாக கரைந்தது. பிறகு, சூரியனை போல செயற்கை ஒளியை காகம் இருக்கும் அறை முழுவதும் பரப்பினர். ஆனாலும் ஏமாறாத காகம், சரியான நேரத்தில் மட்டுமே கரைந்தது.
இரா.அனிதா புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேலம்.


கெய்டார் தெரியுமா?
கிடார் தெரியும்... கீபோர்டு தெரியும்... கெய்டார் (Keytar) பார்த்திருக்கிறீர்களா? கிடார் மற்றும் கீபோர்டு இரண்டும் சேர்ந்த இருமுகன், இந்த கெய்டார். 1963-ம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள வெல்ட்மெய்ஸர் (Weltmeiser) என்பவர் பாஸ்ஸட் (Basset) என்னும் கெய்டார் வகையைக் கண்டுபிடித்தார். தற்போதைய நவீன கெய்டாரைக் கண்டுபிடித்தவர் ராபர்ட் மூக் (Robert Moog). முதன்முதலில் டீவோ (Devo) என்ற இசைக் குழு, பொது நிகழ்ச்சியில் கெய்டார் கருவியை வாசித்தது.
வி.தனேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி, மேற்கு மாம்பலம், சென்னை.


நோட் திஸ் நோட்டு!
கி.பி. 1770-ம் ஆண்டு ‘பேங்க் ஆஃப் இந்துஸ்தான்’ என்ற தனியார் வங்கிதான் முதன்முறையாக நம் நாட்டில் பண நோட்டுகளை வெளியிட்டது. 1861 ஆகஸ்ட் 6-ம் தேதி, இந்திய அரசின் சார்பில் முதலில் வெளியிடப்பட்ட நோட்டு, 10 ரூபாய். இதையடுத்து 5, 20, 50, 100 ஆகிய ரூபாய் நோட்டுகள் 1927 வரை வெளியிடப்பட்டன. ஆரம்பத்தில் இந்த நோட்டுகளில் ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்டு இருக்கும். இரு பக்கமும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு 1917-ல் வெளிவந்தது. 1935-ம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் முழு அதிகாரத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது. 1950 முதல் சாரநாத் கல்தூண் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தன.
ச.கமலி, வாலரைகேட் வித்யாலயம், திருச்செங்கோடு.