FA பக்கங்கள்
Published:Updated:

கொஞ்சம் கொஞ்சம் சண்டை... நிறைய நிறைய டான்ஸ்! - க்யூட் சுட்டிகள்

கொஞ்சம் கொஞ்சம் சண்டை... நிறைய நிறைய டான்ஸ்! - க்யூட் சுட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் கொஞ்சம் சண்டை... நிறைய நிறைய டான்ஸ்! - க்யூட் சுட்டிகள்

ஆர்.வைதேகி, படங்கள் : பா.காளிமுத்து

நிமிடத்துக்கு ஒரு சண்டை... அடுத்து 10 நொடிகளில் அளவில்லா அன்புப் பேச்சு என ஆச்சர்யப்படுத்துகிறார்கள் ரித்வா மற்றும் ஹீத். விஜய் டி.வி-யின் ‘ஜோடி’ நிகழ்ச்சியில் கலக்கும் சுட்டிகள். இருவரின் நடனங்கள் போலவே, பேச்சும் ச்சோ ஸ்வீட் அண்ட் க்யூட்!

கொஞ்சம் கொஞ்சம் சண்டை... நிறைய நிறைய டான்ஸ்! - க்யூட் சுட்டிகள்

‘‘உங்களைப் பற்றிச் சொல்லுங்க?’’ என்றதும், ‘நான் சொல்றேன்... நான் சொல்றேன்’ என ஆரம்பித்தது சண்டை. பிறகு, ‘‘சரி, ‘கேர்ள்ஸ் ஃபர்ஸ்ட்'னு சொல்வாங்க.... நீயே சொல்லு’’ எனப் பெரிய மனிதத் தோரணையுடன் ரித்வாவுக்கு விட்டுக்கொடுக்கிறார் ஹீத்.

‘‘நான், ‘லேர்னிங் ட்ரீ’ ஸ்கூல்ல, ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறேன். என் பாட்டி லக்ஷ்மி ராவ், அந்தக் காலத்துப் படங்களுக்கு கொரியோகிராஃபர். அம்மா ஜெய டான்ஸர், சீரியல்லயும் நடிக்கிறாங்க. குட்டிப் பாப்பாவா இருந்தபோதே பரதநாட்டியம் பிடிச்சுப்போச்சு. ஸ்கூல்ல, `டான்ஸ்னா ரித்வா’னு சொல்ற அளவுக்குப் பேர் வாங்கிட்டேன். அம்மா ‘மானாட மயிலாட' ஷோவோட டைட்டில் வின்னர். ‘ஜோடி’ புரோகிராம்ல என் அம்மாவும் அப்பாவும்தான் ஜோடியா ஆடறதா இருந்தது. அப்புறம் அது மாறிடுச்சு. இந்த ஹீத் உள்ள வந்துட்டான்'' என ஹீத் தலையில் குட்டுகிறார் ரித்வா.

‘‘இப்ப என் போர்ஷன்... நான் தேர்ட் ஸ்டாண்டர்டு   படிக்கிறேன். எங்க சொந்தக்காரங்க கல்யாணத்துல `சங்கீத்’ நடந்துச்சு. அதுல நான் டான்ஸ் ஆடினதைப் பார்த்து,  ஹிந்தி ஜீ டி.வி-யின் ‘இந்தியாஸ் பெஸ்ட் டிராமேபாஸ்' என்ற ஷோவுல கலந்துக்கச் சொன்னாங்க. அப்போ எனக்கு 4 வயசு, 3 மாசம். அந்த ஷோவுல கலந்துக்க 5 வயசு முடிஞ்சிருக்கணுமாம். ஆனாலும், என் டான்ஸைப் பார்த்துட்டு ஜட்ஜஸ் எனக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்தாங்க. ஐயா அவ்வளவு டேலன்ட்!’’ என கெத்தாக காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார் ஹீத்.

ஹீத் தனது அம்மாவுடன்  ஜோடியாக ஆடுவதாகவே பிளான். அப்போது, அம்மாவுக்குத் திடீரென உடம்பு சரியில்லாமல் போனதால் ரித்வா என்ட்ரியானார்.

கொஞ்சம் கொஞ்சம் சண்டை... நிறைய நிறைய டான்ஸ்! - க்யூட் சுட்டிகள்

‘‘ஷூட்டிங் ஸ்பாட்ல எங்க டான்ஸ் மாதிரியே எங்க சண்டையும் ஃபேமஸ். நான் பண்ற ஸ்டெப்பை தப்புன்னு சொல்வான். பதிலுக்கு நானும் சொல்வேன். ஜட்ஜஸ் டென்ஷன் ஆகிடுவாங்க. ‘இனிமே சண்டை போட்டீங்கன்னா உங்களை எலிமினேட் பண்ணிடுவோம்’னு  சொல்வாங்க. நாங்க சண்டை போட்டாலும் உடனே ஃப்ரெண்ட்ஸ் ஆயிடறோமில்லே?’’ என சமர்த்தாகச் சொல்கிறார் ரித்வா.

சின்னத்திரையில் இருந்து பெரியதிரையான சினிமாவுக்கும் இருவரும் செல்கிறார்கள்.

‘‘இந்த ‘ஜோடி' புரோகிராமைப் பார்த்துட்டு ‘ராஜு பஜ்ரங்கி' என்கிற ஹிந்திப் படத்துக்குக் கூப்பிட்டாங்க. தமிழ், தெலுங்கில்  ‘ராஜு ஆஞ்சநேயர்'னு வருது.  அதில், ராஜுவா நடிக்கிறது நான்தான்’’ என்கிறார் ஹீத்.

‘‘நான் ‘கள்ளாட்டம்’ படத்தில் நடிச்சிருக்கேன். பிரகாஷ் ராஜ் அங்கிள், நயன்தாரா ஆன்ட்டி படங்களில் நடிக்கவும் கேட்டாங்க. ஆனா, ரொம்ப நாள் நடிக்கணுமேனு அம்மாகிட்ட வேணாம்னு சொல்லிட்டேன். அட்வர்டைஸ்மென்ட்ஸ்னா ஒரே நாள்ல ஷூட்டிங் முடிஞ்சிரும். அதுக்கு மட்டும் `ஓகே’ சொல்லி இருக்கேன்'' - இது ரித்வா.

நடிப்பு, டான்ஸ் மட்டுமின்றி, படிப்பிலும் பின்னி எடுக்கிறது இந்த க்யூட் ஜோடி.

‘‘ஸ்கூல்ல எனக்கு எல்லோருமே ஃபுல்  சப்போர்ட் பண்றாங்க. எனக்காக ஸ்பெஷல் கிளாஸ் வெச்சு சொல்லித் தராங்க. திடீர்னு ஷூட்டிங் வந்துடும். ராத்திரி 11 மணிக்கு  மிஸ்ஸுக்கு போன் பண்ணி, லீவு சொல்லிட்டுப் போவேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் என்கரேஜ் பண்றாங்க’’ என குஷியாகிறார் ஹீத்.

கொஞ்சம் கொஞ்சம் சண்டை... நிறைய நிறைய டான்ஸ்! - க்யூட் சுட்டிகள்

‘‘என்னை ஸ்கூல்ல ‘ரொம்ப கிளவர் கேர்ள்’னு சொல்வாங்க. ஸ்கூல்ல டிக்டேஷன் கொடுத்தாங்க. முதல் ரெண்டு தடவையும் ஃபுல் மார்க்ஸ் வாங்கிட்டேன். மூணாவது வாட்டியும் கொடுத்ததையே திரும்பவும் கொடுத்தாங்க. ‘போரிங்’னு எழுதலை. அதுக்கு அம்மா ஏன் திட்டினாங்கனு புரியவே இல்லை’’ என சோக ஸ்மைலி காட்டுகிறார் ரித்வா.

படிப்பு, டான்ஸ், நடிப்பு... அப்புறம்?

‘‘ம்ம்ம்ம்ம்’’ என உதட்டில் கைவைத்துச் சில நொடிகள் யோசித்த ஹீத், ‘‘சின்ன வயசுல போலீஸ் ஆகணும்னு ஆசை. அப்புறம், மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஃபேமஸ் ஆக நினைச்சேன். இப்போ... பெரிய ஹீரோ ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கு என்ன பிளான்பா?'' என ரித்வாவைக் கேட்கிறார் ஹீத்.

‘‘எனக்கு டான்ஸர் ஆகணும். அப்புறம், நிறைய படிக்கணும். இப்போ எல்லாம் வெளியில் போகவே யோசனையா இருக்கு. பெரிய பெரிய அக்கா, அண்ணா, அங்கிள், ஆன்ட்டி எல்லாம் என்கூட செல்ஃபி எடுத்துக்கிறாங்க. எனக்கு வெட்கம் வெட்கமா இருக்கு. `ஏன்  போட்டோ எடுக்கறீங்க’னு கேட்டா, ‘நீ சூப்பரா டான்ஸ் பண்றியே'னு சொல்றாங்க. எனக்குப் பிடிச்சிருக்கு டான்ஸ் பண்றேன்.  அதுக்கு எதுக்கு போட்டோ?'' என அப்பாவியாகக் கேட்கிறார் ரித்வா.

குழந்தைகள், தங்கள் உலகத்தில் புகழ்ச்சிகளை அனுமதிப்பது இல்லை. அதனால்தான் அவர்களது உலகம் அத்தனை அழகாக இருக்கிறது.