
செ.சல்மான், படங்கள் : க.விக்னேஷ்வரன்
‘‘ஒவ்வொரு முறை ‘ஸ்கேட்டிங் ஷூ’வை கால்களில் கட்டும்போதும் என்னை ஒரு பறவையாக நினைச்சுக்குவேன். பறவைகள் ஊர், நாடு என்ற எந்த எல்லையும் இல்லாமல் போய்ட்டே இருக்கும். அந்த மாதிரி, ஸ்கேட்டிங்கில் எல்லை இல்லாத சாதனை படைக்கணும்’’ என அழகாகப் பேசும் தேஜஸ்வினி மதுரை, மகாத்மா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். வீடு முழுவதும் அவர் வாங்கிய கோப்பைகள், கேடயங்கள் வரவேற்கின்றன.

சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவில் அமிர்த்ஸரில் நடந்த ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் தேஜஸ்வினி.
‘‘முதலில், என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தேங்க்ஸ் சொல்லணும். மூணு வருஷத்துக்கு முன்னாடி, அண்ணனை ஸ்கேட்டிங் கிளாஸில் சேர்த்துவிட்டார் அப்பா. அவனை கிளாஸுக்குக் கூட்டிட்டுப் போகும்போது, ‘நீயும் வா தேஜு’னு அப்பா சொல்வார். அங்கே போய் வேடிக்கை பார்த்தேன். எனக்கும் இன்ட்ரஸ்ட் வந்து சேர்ந்துட்டேன். ‘என்னைவிட நல்லா விளையாடறே தேஜு... தொடர்ந்து விளையாடு’னு அண்ணன் என்கரேஜ் பண்ணினான். இப்போ, அவன் ஃபுட்பால் பக்கம் போய்ட்டான். நான் ஸ்கேட்டிங்கில் பறக்கிறேன்’’ எனச் சிரிக்கிறார் தேஜஸ்வினி.
கடந்த மூன்று வருடங்களில் மட்டும் ஸ்கேட்டிங் போட்டிகளில் 40 பதக்கங்கள் வாங்கியுள்ளார் தேஜஸ்வினி. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கம், மாநிலப் போட்டியில் தங்கம் என விறுவிறு பயணம். இப்போது, தேசிய அளவிலான போட்டியில் வெள்ளியைத் தட்டி இருக்கிறார்.
‘‘இந்தியாவின் எட்டு ஸோன்களில் இருந்து வந்திருந்தாங்க. என்னோட கேட்டகிரியில் எட்டுப் பேர் இருந்தாங்க. தங்கம் மிஸ்ஸானது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், என்னைவிடத் திறமையான ஒருவருக்கு அது கிடைச்சிருக்கு. அடுத்த வருஷம் அந்த இடத்தை நான் பிடிக்கணும்னு நினைச்சுகிட்டு, அவங்களைப் பாராட்டினேன்’’ எனப் புன்னகைக்கிறார் தேஜஸ்வினி.
தேஜஸ்வினியின் தந்தை அரியநாயகம், ‘‘நான் காவல்துறையில் இருக்கேன். எனக்குச் சின்ன வயசில் இருந்தே பல விளையாட்டுகள் மீது ஆர்வம். ‘படிப்பு மட்டுமே ஒரு குழந்தையின் வளர்ச்சி கிடையாது. விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தணும். ஆண், பெண் பேதமே அதில் கூடாது’னு நினைக்கிறவன். ‘உங்களுக்கு எந்த விளையாட்டுப் பிடிக்குமோ, அதில் முழு ஈடுபாட்டைச் செலுத்துங்க’னு என் பசங்களுக்குச் சொல்லியிருந்தேன். தேஜஸ்வினி ஸ்கேட்டிங்கை செலக்ட் பண்ணினது சந்தோஷம்தான். ஸ்கேட்டிங் விளையாட்டுக்கு தமிழக அரசின் விளையாட்டு ஆணையத்துல எந்தப் பயிற்சியும் கொடுக்கிறது இல்லை. ஸ்கேட்டிங் கிளப்புகள் மூலம்தான் கற்றுக்கொடுக்க வேண்டியதா இருக்கு. ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு மேடு, பள்ளம் இல்லாத நீண்ட, முறையான சாலைகளும் இல்லை. தமிழக அரசு இதில் கவனம் செலுத்தினால், தேஜஸ்வினி மாதிரி இன்னும் நிறைய பேர் உருவாகலாம்’’ என்றார்.
‘‘நிறைய பேர் ஸ்கேட்டிங் விளையாட்டுன்னா அடிபடும்னு பயப்படறாங்க. அதிலும், ‘பெண் குழந்தைகளுக்கு அதெல்லாம் வேணாம். அடிபட்டு ஏதாச்சும் ஆச்சுன்னா பின்னாடி ரொம்ப கஷ்டம்’னு பயமுறுத்தறாங்க. கஷ்டம் இல்லாத விளையாட்டே கிடையாது. ஆர்வமும் முறையான பயிற்சியும் கவனமும் இருந்தால் போதும். சாதனையாளராக உயர இதுகூடச் செய்யாட்டி எப்படி அங்கிள்?’’ என்று சிரிக்கிறார் ஸ்கேட்டிங் பறவை.