Published:Updated:

செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?
செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?

குடும்பம்சரவணன், கால்நடை மருத்துவர்

பிரீமியம் ஸ்டோரி

ளர்ப்புப் பிராணிகளான நாய்களுக்கும், மனிதர்களுக்குமான உறவு 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மனிதர்கள்,  வீடுகளில் முடங்கியதும் நாய்களும் கூண்டுகளில் முடங்கிப் போயின. நாய்களோடு விளையாடுவது, பூனைகள் வளர்ப்பது, மீன் வளர்ப்பது போன்ற விஷயங்கள் மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், செல்லப் பிராணி களுக்கும் மன அழுத்தம் வரும் என்கிற  விஷயம் நம்மில் பலர் அறியாதது.

மும்பையிலிருந்து சென்னைக்கு ஒரு நிகழ்வில் பங்கேற்க வரும்  குடும்பம்  ஒன்று தங்கள் நாய்க்கு எனத் தனிக் காரை ஏற்பாடு செய்து அழைத்து வருகிறது.  அவர்களைவிட்டுப் பிரிந்திருந்தால், அந்த நாய் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடும் என்று காரணம் சொன்னார்கள். மேம்போக்காக இதைக் கேட்பதற்கு சற்றே முட்டாள்தனமாகத் தெரிந்தாலும், இதன் பின் உண்மை அறிவியல் ஒளிந்திருக்கிறது.

செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?

பிராணிகளுக்குப் பிடிக்காத தனிமை

செல்லப்பிராணிகளைப் பொதுவாகவே, அவை பிறந்து சில தினங்களிலோ, மாதங்களிலோ  தாயிடமிருந்து பிரித்து நாம் வளர்க்க ஆரம்பித்துவிடுகிறோம். இதன் காரணமாக,  இயல்பிலேயே அவை வளர்ப்பவரிடம் ஒருவித அதீத நெருக்கத்தைக் கொள்கின்றன. இந்த உணர்வுபூர்வமான உறவில் மனிதர்கள் புரிந்துகொள்ளாத பல சிக்கல்களைப் பிராணிகள் சந்திக்கின்றன. குறிப்பாக, தனிமை. நாய்கள் கூட்டத்தில் வாழும் உயிரினம். காலை அனைவரும் அவரவர் அலுவல்களைப் பார்க்க வீட்டிலிருந்து கிளம்பிவிட, தனிமையில் தவிக்கும் நாய்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன. மேலும், அவை பின்பற்றும் தினசரிப்  பழக்கவழக்கங்களில் ஏதேனும், திடீர் மாறுதல்கள் ஏற்பட்டால் அவற்றால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?

தான் பழகும் பக்கத்து வீட்டு நாய், இடம் மாறிப் போய்விட்டாலோ, தனக்குப் பழக்கப்பட்ட நாய் இறந்துவிட்டாலோ, தொடர்ச்சியாகக் கூண்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தாலோ, ஏன்... வானிலையில் ஏற்படும் மாற்றங்கள்கூட பிராணிகளின் மன அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தன் எஜமானர் இறந்த இடத்திலேயே சாப்பிடாமல் பட்டினி கிடந்து இறக்கும் நாய்களின் கதைகளை எல்லாம் கூடக் கேள்விப்பட்டிருப்போம். இல்லாமையின் மன அழுத்தம் அவற்றை மரணம் வரைக்கும்கூடக் கொண்டு சேர்த்துவிடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எப்படிக் கண்டறியலாம்?:

வளர்ப்புப் பிராணிகள் மன அழுத்தத்தில் இருப்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அறிந்துகொள்ளலாம். அதிகப்படியான சோம்பல், நீண்ட நேரத் தூக்கம், பட்டினி கிடப்பது, உடல் மெலிவது, ஊளையிடுவது, காரணமில்லாமல் குரைத்துக் கொண்டேயிருப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது எனப் பல வழிகளில், தன் மன அழுத்தத்தை அவை வெளிக்காட்டும். தன் பக்கம் கவனத்தை ஈர்க்கப் பல விஷயங்களைச் செய்யும்.

செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?

இது குறித்துக் கால்நடை மருத்துவர்  சரவணனிடம் கேட்டோம்.

 “ஒரு வலியை உணரக்கூடிய அனைத்து உயிரினங்களுக்குமே மன அழுத்தம் ஏற்படும். பொதுவாக, செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், சுயநலமாகத் தம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். நாய்களோடு, பூனைகளோடு விளையாடினால், தொட்டியில் இருக்கும் மீன்களைப் பார்த்தால் தங்களின் மன அழுத்தம் குறைகிறது என்ற அடிப்படையிலேயே அவர்கள் இருப்பது இயல்பு. ஆனால், நாம் வளர்க்கும் பிராணிகள் பல சமயங்களில் மிகப் பெரிய மனப் போராட்டத்தில் சிக்கிக் கொள்வதுண்டு.

செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?


 ஒரு ஆட்டையோ, மாட்டையோ கறிக்கடை பக்கம் கூட்டிச்சென்று பாருங்கள். அந்த வழியிலேயே வர மறுக்கும். அதற்கு அவ்வளவு பயம் ஏற்படும். சமயங்களில் எங்கோ இருக்கும் தன் எஜமானருக்கு நடக்கவிருக்கும் பிரச்னையை நாய்கள் உணர்ந்துவிடும். இயற்கைச் சீற்றங்களின் போதும்கூட அப்படித்தான். நமக்குப் புரியவில்லை என்பதைத் தவிர, நம்முடைய செல்லப்பிராணிகள் நம்மோடு தொடர்ந்து உரையாடிக் கொண்டேதானிருக்கும்.  சில நேரங்களில் மிக மூர்க்கமாக நடந்து கொண்டு நம் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க முயலும்.

பிராணிகளின் மன அழுத்தத்திற்கு எத்தனையோ மாத்திரை, மருந்துகள் இருந்தாலும்கூட அவை நிரந்தரத் தீர்வு கிடையாது. ஒரே மருந்து, ‘நேரம்’ மட்டுமே. செல்லப்பிராணிகளோடு அதிக நேரம் செலவிட்டு, அவற்றுடன் விளையாடுவது, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்களைத் தொடர்ந்து செய்தாலே அனைத்துப் பிரச்னைகளும் தீர்த்துவிடும்’’ என்று அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார்.

பெரும் பணம் செலவழித்து ஒரு செல்லப் பிராணியை வாங்குகிறோம். அதற்கான அலங்காரங்கள், உயர்தர உணவுகள் எனப் பணத்தை எத்தனையோ வகைகளில் செலவு செய்வதன் மூலம் செல்லப்பிராணிகளின் மீதான அன்பை வெளிப்படுத்துகிறோம். அது மட்டும் போதாது. கூடவே  சில நிமிடங்களைக் கூடுதலாக அவற்றோடு செலவிட்டாலே, அந்தப் பிராணிகள்  மகிழ்ச்சி கொள்ளும். அதைச் செய்யாமல், பிராணிகளை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் செயலும் ஒரு வகையில்  உண்மையிலேயே மிருகவதைதான்!

- இரா. கலைச் செல்வன்.

செல்லத்துக்கும் ஸ்ட்ரெஸ் வருமா?

சின்ன சின்ன விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் பிராணிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

* இளவெயில் நேரத்திலும்,  நிலா வெளிச்சத்திலும் நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்லலாம்.

* வாரத்திற்கொரு முறை மணலிலோ, தண்ணீரிலோ விளையாட விடலாம். இது அவற்றின் மன அழுத்தத்தைக் குறைக்கப் பெரிதும் உதவும்.

* நேரம் கிடைக்கும் போதெல்லாம் வளர்ப்பவரே அதைக் குளிப்பாட்டிவிடுவது, அதற்கான உணவுகளைக் கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்யலாம்.

* வீட்டில் இரண்டு செல்லப் பிராணிகளை வளர்த்து வந்து, அதில் ஒன்று இறந்து விட்டால், மற்றொன்று கடுமையான மன அழுத்தத்தில் சிக்கியிருக்கும். உடனடியாக, அதேபோன்ற வேறொரு பிராணியை வாங்குங்கள்.

* மாலை ஓய்வு நேரங்களில் சோபாவிலோ, சேரிலோ உட்காராமல் தரையில் செல்லப்பிராணிகளோடு சமமாக உட்கார்ந்து விளையாடுங்கள்.

* நேரம் கிடைக்கும் போதெல்லாம், உங்கள் செல்லப் பிராணிகளோடு உரையாடுங்கள். உங்கள் ரகசியங்களைக் கூட பகிர்ந்துக் கொள்ளலாம். அவை நிச்சயம் யாரிடமும் சொல்லாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு