கல்பனா சோழன்ஹாசிப்கான்
##~## |
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓர் அடுக்கு மாடி வணிக வளாகம். வாசலில் ஏக டென்ஷனில் மதுவின் அப்பா அடிக்குரலில் உறுமிக்கொண்டு இருந்தார். 'இன்னும் அஞ்சு நிமிஷத்துலே படம் ஆரம்பிச்சுடுவாங்க. எப்போ பார்த்தாலும் இப்படி அவசர அவசரமாக கடைசி நிமிஷத்துலே வந்து நின்னா... எப்போ டிக்கெட் வாங்கி, எப்போ உள்ளே போறது?'
சர்ரென்று வந்து நின்ற மந்திரக் கம்பளத்தில் இருந்து குதித்த சுட்டிகளும் மாயா டீச்சரும், ''கவலைப்படாதீங்க. இதோ ஒரு நிமிஷத்துல சீட்ல இருக்கலாம்'' என்றபடி உள்ளே நடந்தார்கள். சிட்டாகப் பறந்த சுட்டிகள், வாசலில் இருந்த பெரிய ரிசர்வேஷன் ஸ்க்ரீனில் ஆங்காங்கே தட்டி, டிக்கெட்டை வாங்க, மாயா டீச்சர் கிரெடிட் கார்டை இழுக்க, சொன்னபடி ஒரு நிமிஷத்துக்குள் சீட்டில் இருந்தார்கள்.
கொஞ்ச நேரத்திலேயே படம் போரடிக்க ஆரம்பித்ததால்... மாயா டீச்சர், தன் கைப்பைக்குள் இருந்து ஸ்மார்ட் போனை எடுத்து, இ-மெயில் பார்த்துப் பதில் போட ஆரம்பித்தார். தேவி கண்கள் விரிய, 'டீச்சர் இதெல்லாம் மாயமா... மந்திரமா?' என்று கேட்டாள்.

மாயா டீச்சர், 'மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. சயின்ஸ்' என்றார் பெருமையாக.
''அது எப்படி, போனிலேயே மெயில் பார்த்துப் பதில் போடுறீங்க? கம்ப்யூட்டர் இல்லாமலேயே டிக்கெட் ரிசர்வ் பண்ணீங்க?''
'மாயம், மந்திரம் இல்லைன்னா... எப்படி ஸ்க்ரீனை தட்டினா இவ்வளவும் நடக்குது?' என்று மாறி மாறிக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல், சுட்டிகளுடன் தியேட்டரைவிட்டு வெளியில் வந்தார் மாயா டீச்சர்.
கொட்டும் மழைக்கு இதமாக, ஆளாளுக்கு காபி, சூப் என ஆர்டர் கொடுக்க, அதையும் ஒரு பெரிய டச் ஸ்க்ரீனில் படபடவென்று தட்டி ஆர்டர் கொடுப்பதைப் பார்த்ததும், கவினுக்குப் பொறுமை போய்விட்டது. 'அங்கே தியேட்டர், இங்கே ரெஸ்டாரன்ட், எங்கே போனாலும் இப்படி ஸ்க்ரீனைத் தட்டித் தட்டியே எல்லா வேலையும் முடிச்சுடுறீங்களே... எப்படி இப்படி?' என்று வியப்பு மாறாமல் கேட்டான்.

எல்லாச் சுட்டிகளையும் மந்திரக் கம்பளத்தில் ஏற்றி, முதலில் ஒரு பெரிய மாலுக்குள் போனார் மாயா டீச்சர். 'ஐ போன், ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன், டேப்லட், இ-ரீடர், G P S இப்படி நீங்க எங்கே திரும்பினாலும், டச் ஸ்க்ரீன் டெக்னாலஜி பயன்படுத்தும் நிறையக் கருவிகளைப் பார்க்கலாம். முன்பு வீட்டில், ஆபீஸில் மானிட்டர், கீ போர்டு, மௌஸ், ஸ்பீக்கர்னு தனித்தனியாக ஏகப்பட்ட கருவிகளோடு கம்ப்யூட்டர் வேலைகளைச் செய்தது. அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எதுவும் இந்த டச் ஸ்க்ரீன் காலத்தில் தேவை இல்லை...' என்று ஓர் அறிமுகம் கொடுத்தார்.
'அப்போ இந்த போன், டேப்லட் எல்லாம் ஒரே மாதிரியானதா? எப்படி வேலை செய்யுது?' -குழப்பம் கூடிப்போய் கேட்டாள் ரேவதி.
'டச் ஸ்க்ரீன் பயன்படுத்தும் எல்லாக் கருவிகளையும், பாட்டு கேட்க, போட்டோ எடுக்க, யு டியூப் பார்க்க... இப்படித் திரையில் தெரிகிற ஐகானை, கைவிரலால் தொட்டால் அந்த வேலை நடக்கும். இது மட்டும்தான் ஒற்றுமை. மற்றபடி, அந்த வேலை நடக்கிற விதம் வித்தியாச மானது'
'அது எப்படி?' ஆர்வம் தாங்காமல் கேட்டான் கவின்.
ரேசிஸ்டிவ் (Resistive System): இது ஒரு சாதாரணமான கண்ணாடித் தட்டு. ஓர் உலோகத் தகடு. இரண்டுக்கும் நடுவில் ஓர் இடைவெளி. இது எல்லாத்துக்கும் மேலே கீறல் விழாமல் ஒரு படலம். இதன் மேல் நம் கை படும்போது, இரண்டு படலங்களும் ஒன்றோடு ஒன்று சரியாகத் தொட்டுக்கொள்ளும். அந்த இடத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனித்து, என்ன செய்ய வேணும்னு கம்ப்யூட்டர் கணக்குப்போடும். அந்தத் தகவல் தெரிஞ்சதும், கம்ப்யூட்டருக்குப் புரிகிற மொழியில் பேசி, சொன்ன வேலையைச் செய்யும். ஸ்டைலஸ்பென், விரல் நகம், பென்சில் முனை என்று எதனால் தொட்டாலும் இது வேலை செய்யும்.

ரேசிஸ்டிவ் (Capacitive System): இந்த வகையில், கண்ணாடிக்கு மேல் மின் சக்தியைத் தேக்கிவைக்கிற படலம் ஒண்ணு இருக்கு. நம்ம விரலால் தொடும்போது... இந்த சக்தி, தொடும் ஆளுக்கு ஏற்ப மாறும். அப்போது, கண்ணாடித் துண்டு மேல் மின் சக்தி குறையும். எந்த இடத்தில் எந்த அளவு குறையுதுன்னு தெரிஞ்சதும் அதைக் கணக்குப் போட்டுச் சொல்லி, சொன்ன வேலையைச் செய்து முடிக்கும்.''
'சும்மா தொட்டதும் வேலை நடக்குதுன்னு விளையாட்டா நினைச்சா... இவ்வளவு விஷயம் இருக்கா?' பெரிய மனுஷி மாதிரி ஆச்சர்யப்பட்டாள் பூமா.
'எனக்கு விதவிதமா கேம்ஸ் விளையாட மட்டும்தான் தெரியும்' என்று ஒப்புக் கொண்டான் பாபு.
'ஆமாம், இவன் எல்லா நேரமும் கேம்ஸ் விளையாடுறதைப் பார்த்து, இவங்க அம்மாவுக்கு பயங்கரமாக் கோபம் வரும்.' சந்தடிசாக்கில் பாபுவின் காலை வாரினான் டோனி.
'டீச்சர், என் அம்மாவின் போனில் பாபு விளையாடுற கேம்ஸ் எதுவும் இல்லையே... ஏன்?' என்று கேட்டாள் தேவி.
'காரணம் இருக்கு. இப்போது மார்க்கெட்டில் கருவிகள், இரண்டு விதமான ஆபரேட்டிங் சிஸ்டத்தோடு இருக்கு. ஒண்ணு ஆப்பிள் கம்பெனியோடது. க்வாலிட்டி, கிளாரிட்டி எல்லாம் நல்லா இருக்கும். இந்த ஆப்பிள் புராடக்ட்ஸ் வாங்கினால், எல்லாமே அவங்ககிட்டே இருந்துதான் வாங்கணும். ஐ-டியூன்ஸ் கம்ப்யூட்டரில் இருந்து டவுன்லோட் செய்யலாம். ஆப்பிளோட ஐபேட் ஒரு பக்கம். இரண்டாவது, ஆண்ட்ராய்டு (android.) இதில் ஏகப்பட்ட அப்ளிகேஷன்கள் இருக்கும். யார் வேணும்னாலும் புதுசா அப்ளிகேஷன்கள் உருவாக்கலாம். இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தோட ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு விதமாக் கருவிகளை உருவாக்கி விற்பனை செய்றாங்க. அதில் ஏகப்பட்ட அப்ளிகேஷன்ஸ் இலவசமா இருக்கு. கேம்ஸ், திருக்குறள், ஆத்திச்சூடியில் இருந்து ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. கூகுள், மோட்டரோலா இரண்டும் ஒண்ணா சேர்ந்ததும், ஹனிகம் ஆபரேட்டிங் (Honeycom Operating) சிஸ்டம் உள்ள முதல் தலைமுறை டேபிலட் ஜூம் வந்திருக்கு. அன்னிக்கு, மோட்டரோலா கம்பெனியில் வேலை செய்யும் கார்த்திக் அப்பா கிரி, இன்னொரு ஆபரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசிட்டு இருந்தார். இப்படிப் புதுசு புதுசா ஒவ்வொரு நாளும் உலகம் வேகமா மாறிட்டே இருக்கு.' என்றார் மாயா டீச்சர்.

'’யார் வேணும்னாலும் அப்ளிகேஷன் உருவாக்கலாமா? அப்போ நான் செய்ய முடியுமா?' மது ஆசையாகக் கேட்டாள்.
'நிச்சயமா செய்யலாம். அதுக்குத் தேவையான பயிற்சி எடுத்தால், புதுசு புதுசா உனக்குப் பிடிச்ச மாதிரி செய்யலாம். http://www.ted.com/talks/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html. என்ற லிங்க்-ஐ கிளிக் பண்ணிப் போய்ப் பாருங்க. அடுத்த முறை சந்திக்கும் போது உங்க ஐடியாவைச் சொல்லுங்க. நானும் இந்த மந்திரக் கம்பளத்தை அன்ட்ராய்ட், டச் ஸ்க்ரீன் டெக்னாலஜியில் மாற்ற முடியுமான்னு யோசிக்கிறேன்' என்றார் மாயா டீச்சர்.
சுட்டிகள், ''குட் ஐடியா!'' என்று உற்சாகக் கூச்சல் போட்டார்கள்.
மந்திரக் கம்பளம், அவர்களை மறுபடியும் தியேட்டருக்கு அழைத்து வந்து இறக்கியது. படமும் முடிந்து மதுவின் அப்பா வெளியே வந்து இருந்தார்.