Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 3

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 3
பிரீமியம் ஸ்டோரி
News
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 3

போப்பு மருத்துவ எழுத்தாளர்ஹெல்த்

இந்த இதழில் குழந்தைகளுக்கான தனித்துவமான உணவு குறித்துப் பார்ப்போம்.

உணவின் ஆதாரப் பொருள்களான அரிசி, கோதுமை, காய்கறி, பால் அத்தனையும் ரசாயனக் கூறுகள் நிறைந்தவையாகவும் அவற்றின் மூலச் சத்துகள் சிதைக்கப்பட்டவையாகவும் இருப்பது நாம் அறியாததல்ல.   

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 3

ரொம்பவெல்லாம் வேண்டாம்... 50 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னுடைய 98-ம் வயதில் இறந்த என் தாத்தாவை உயிர்ப்பிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர், தான் காணாத இந்தப் புதிய உலகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறார். வரவேற்பு, குசல விசாரிப்பு அத்தனையும் முடிந்தது.

அந்தப் பெரியவருக்கு நல்லதொரு விருந்து வைக்கிறோம். இலையைப் போட்டு முதலில் ஜாங்கிரியை வைக்கிறோம். மனிதர் பயந்துபோய் எழுந்து விடுவார். பின்னே...  ஜொலிக்கும் நெருப்புத்துண்டுபோன்ற ஒரு வஸ்த்துவை வைத்தால் மிரளாமல் என்ன செய்வார்..?

“இது உளுந்துமாவைக்கொண்டு கொதிக்கிற எண்ணையில் வட்டவட்டமாகச் சுற்றி, ஜித்து வேலைகள் செய்து பொரித்தெடுத்து அப்புறம் சர்க்கரைப்பாகில் முக்கி எடுத்தது” என்று ஒரு வழியாக ஏ.பி. நாகராஜன் சினிமா வாயிலாக‍க் கற்றுக்கொண்ட தமிழில் சொல்லிப் புரிய வைக்கிறோம். ஆனாலும், ஜாங்கிரியின் ஜொலிக்கும் ஃப்ளோரசன்ட் நிறம் அவரை அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. 

ஆயிரம்தான் இருந்தாலும் அவரும் தமிழர் தானே. விருந்து வழங்குகிற  மரியாதைக்கு, பதில் மரியாதை செய்யும் விதமாக அச்சத்தை அடக்கி அமர்ந்துகொண்டிருக்கிறார். ‘இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு’ என்று கவிமணியின் பாடலைப் பாடியபடி ஒரு ஹாட் பாக்ஸில் ஆவி பறக்கும் சோற்றைக் கொண்டு வருகிறோம்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 3

அந்தக் காலத்தில் மூங்கில் கூடையில் சோற்றைப் பார்த்துப் பழகிய மனிதர், லிக்யூட் சோப்புப் போட்டு விளக்கிய பளபளக்கும் எவர் சில்வர் பாத்திரத்தைப் பார்த்ததும் மிரண்டு விடுகிறார். தமிழர் பண்பாட்டுக்கு உரிய ‘அந்த மரியாதை’ அவரை எழ விடாமல் செய்கிறது. ஆவி பறக்கும் சோற்றை இலையில் போட்டதும் அவரது மூக்கில் ஒரு ‘வாசம்’. அல்ல அல்ல... வாசம் அல்ல பெருந்தகையீரே... ‘நெடி’. நெடி வந்து ஏறுகிறது. மயக்கமடிக்காத குறைதான். அப்படி அடிக்கிறது யூரியாவும் பூச்சிக்கொல்லியும் இணைந்த ஒரு கதம்ப நெடி.

என்ன இருந்தாலும் அந்தக் காலத்து வைரம் பாய்ந்த கட்டை அல்லவா? அந்த மரியாதையின் பொருட்டு சமாளித்துக்கொள்கிறது.  சொட்டுநீலம் போடாத குறையாக வெள்ளென்று வெளுத்த நிறத்தில் உள்ள சோற்றை இலையில் சரிக்கும்போதே ஒரு சின்ன ஜெர்க் கொடுக்கிறார். அவர் காலத்தில் சோறு, முத்துப்போலப் பழுப்பு நிறத்தில் இருந்தது. சரி, விதியே என்று சாம்பார் ஊற்றுவதற்கு முன்பே அவசரமாகச் சோற்றை உருட்டி கப்பென்று ஒரு கவளம் உள்ளே தள்ளுகிறார். மனிதர் அசை போட்டுக்கொண்டிருக்கும்போதே வெட்டிச் சரித்த மரம்போல சரசரவென்று சரிகிறார்.

‘‘அய்யய்யோ என்ன ஆச்சு?’’

உடலில் வலு இருக்கலாம். நம் காலத்து உணவின் விஷத்தைச் செரிக்கும் ஆற்றல், அவரின் உள்ளுறுப்புகளுக்கு இல்லை. ‘அவருக்குச் சர்க்கரை உச்சத்திற்கு எகிறிவிட்டதுபோல’ என்று நினைத்து அவசர அவசரமாகக் கோதுமைச் சோறு வடித்து வைத்துக்கொண்டு, பெரியவருக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறோம். நமக்குத்தான் உயிர் கொடுக்கும் வித்தை தெரியுமே..! ஏற்கெனவே பசி ஆசை தோன்றிவிட்டதால் கோதுமைச் சோற்றை அள்ளி வாய்கொண்ட மட்டும் திணிக்கிறார். மீண்டும் சில நிமிடத்தில் ‘சரக்’ என்று சரிந்துவிட்டார்.  ‘செத்துச் செத்து விளையாடிக்கொண்டிருக்கிறாரே’ என்று மறுபடியும் உயிர்ப்பித்து அவருக்கு ‘என்னதான் பிரச்னை’ என்று அவரையே கேட்கிறோம்.

``ஏண்டா என் ஆயுசுக்கும் காணாத விஷ மருந்துகளை ஒரு கவளம் அரிசிச் சோத்துக்குள்ளேயும், கோதுமை சோத்துக்குள்ளேயும் வெச்சிருக்கீங்களேடா. இதையே என்னால தாங்க முடியலையே... இனி எங்க வந்து சுற்றிப்பார்க்க.. போதும் என்னை விட்டுருங்கடா’’ என்று அடுத்த வாய்ப்புத் தராமல் இறந்து விடுகிறார். ஆக, எந்த அளவிற்கு உணவின் மூலப்பொருள் விஷமேறியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். உடலின் அடிப்படைக் கட்டுமானம் வடிவமைக்கப்படுகிற குழந்தைப் பருவத்தில் உணவு, இயற்கைத்தன்மை கெடாமல் வழங்கப்பட  வேண்டியது எத்தனை முக்கியத்துவம் நிறைந்தது என்று சொல்லத் தேவையில்லை. பொதுவாகக் குழந்தைகள் கொழுப்புச்சத்து நிறைந்த பால் மற்றும் பால் பொருள்களை மூன்று வயது வரை அதிகம் விரும்புவது இயற்கையே. அதற்குக் காரணம், உணவை மெல்லுவதற்குச் சோம்பல்பட்டு அல்ல. குழந்தைகள் முட்டி போட்டுத் தவழத் தொடங்கிய பின்னர் எலும்பு அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. 

எலும்பில் நிகழும் மாற்றங்களுக்கு அடிப்படையானது கொழுப்புதான். உண்ட உணவு, உடல் எனும் மகத்தான தொழிற்சாலைக்குள் சிதைக்கப்பட்டுச் சாரமாகி, அது ரத்தமாக மாறி இந்த வரிசையில் எலும்பாக மாறுவதற்கு முந்திய சத்து வடிவம் கொழுப்புதான். கொழுப்பு, எலும்பாக மாறுகிறது. பற்களும் நகங்களும் உள்ளிருக்கும் எலும்பின் புறவடிவம். அதாவது அவை எலும்புகளின் மானிட்டர். பற்களோ எலும்புகளோ பலவீனமாக இருந்தால் உள்ளே எலும்பும் பலவீனமாக இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 3

தாயின் வயிற்றில் சுருண்டு படுத்திருக்கும்போது உருவான தட்டையான எலும்புகள் பிறந்து நீட்டிப் படுத்து,தவழ்ந்து,நடந்து,ஓடியாடும்போது உருண்டு திரட்சி பெறுகின்றன. சுருண்டிருக்கும்போது உருவாக முடியாத சில எலும்புகள் புதிதாக உருவாகின்றன. (எடுத்துக்காட்டாக முட்டிச் சிப்பி). சில எலும்புகள் ஒன்றாக இணைந்து விடுகின்றன.குழந்தை பிறக்கும்போது எலும்புகளின் எண்ணிக்கை 270. அடிப்படை வளர்ச்சிக் கட்டுமானம் முடிவடையும் போது 206.

நாம் ஒரு பொருள் வாங்கும்போது கையாள்வதற்கு வசதியாகப் பாகங்களை பேக்கிங்கில் உதிரியாக வைத்துக் கொடுத்திருப்பார்கள். நாம் வீட்டிற்கு வந்து ஃபிட் செய்து கொள்கிறோமில்லையா அதைப்போல. பால் பல் தோன்றி, முட்டி போடத் தொடங்கும் ஆறாம் மாதம் முதல் பற்கள் விழுந்து முளைக்கும் ஏழு வயது வரை எலும்புக் கட்டுமானத்தில் நிறைய மாற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கும். ஆனால், ஏழு வயதுக்குப் பின் எலும்புகளை உருமாற்றும் வேலையைக் கை விட்டுவிட்டு, உடல் தன் கவனத்தை வளர்ச்சியின் பக்கம் திருப்பி விடும்.

மாற்றங்களுக்கான வேகம் குழந்தைக்குக் குழந்தை மாறுபடலாம். அதற்கான காரணம் மரபணுக்கூறு தொடங்கி வாழிடப் புறச்சூழல் வரை வெவ்வேறு இருக்கும். ஆனால், ஆதார எலும்புகள் அமைவது தொடங்கி அவற்றின் உறுதி, வளர்ச்சி ஆகியவற்றிற்கு முதன்மைக் காரணியாக இருப்பது ஏழு வயது வரையிலான உணவே ஆகும்.

புறத்தோற்றத்தின் அடிப்படைக் கட்டுமானமாகிய எலும்புகள்போலவே உடலின் அக ஆற்றலின் ஆதாரமான உள்ளுறுப்புகளும்  இந்தப் பருவத்தில் வலுப்பெறுகின்றன. இந்த வலுவைத்தான் ஓர் உடல் தன் வாழ்நாள் முழுவதும் கொண்டு செலுத்துகிறது. எனவே, இந்தப் பருவத்தில் ஒவ்வொரு கைப்பிடி உணவும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது உடல்  இயற்கை ஆற்றல்களான நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் மினியேச்சர். இதில் இரண்டாம் நிலை ஆற்றலின் உறுப்புகளாகிய மண்ணீரலுக்கும் வயிற்றுக்கும் பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காகப் போட்டுவிட்டால் பில்டிங்கின் மற்ற உறுப்புகள் வீக்காகாமல் அமைந்துவிடும்.

நில மூலகத்தின் ராஜ உறுப்பான மண்ணீரலுக்கும் அதன் துணை உறுப்பான வயிற்றுக்கும் ஏற்ற நிறம், செம்மண் அரக்கு  அல்லது மஞ்சள் நிறம். இந்த நிறங்களைப்போன்ற  நிறங்கொண்ட மூல உணவு தானியங்கள் சிவப்பரிசி, பூங்கார், கேழ்வரகு அல்லது பழுப்பு நிறத்தில் உள்ள இயற்கைக் கைக்குத்தல் புழுங்கல் அரிசி அல்லது ஈர்க்கு போன்ற செந்நிறத்தில் உள்ள கோதுமை. இயற்கைக் குறித்த விழிப்பு உணர்வு மேலோங்கி வரும் நம் காலத்தில் கொஞ்சம் முயன்றால் கைக்கெட்டும் தொலைவில் மேற்படி அரிசிகள், கோதுமை, கேழ்வரகு ஆகியன கிடைக்கவே செய்கின்றன.

மேற்சொன்ன இவற்றில் ஏதேனும் ஒன்றை கைப்பிடி அளவு எடுத்து நான்குமணி நேரம் ஊற வைக்க வேண்டியது. ஊறியபிறகு, நீரை இரண்டு முறை அலசி எடுக்க வேண்டியது. குழந்தை செரிக்க முடியாத அடர் சத்தின் வீரியத்தைச் சற்றுத் தணிப்பதற்காக ஒன்றிற்குப் பலமுறை அலசுவது நல்லது. அதனோடு இரண்டு விரலளவு தேங்காய்ச் சில், ஐந்து கிராம் அளவு பனங்கருப்பட்டி, ஏலக்கி அல்லது கற்பூர வாழை பாதிப் பழம், ஓர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு எல்லாம் ஒன்றாகப் போட்டு மிக்ஸி ஜாரில் இட்டு அரைப்பதற்கு ஏதுவாகச் சிறிதளவு நீர்விட்டு ரவைப் பத‍த்திற்கு அரைக்க வேண்டியது.

பேஸ்ட்போலத் திரளும் இக்கலவையை ஒரு கனமான பாத்திரத்தில் இட்டு,  அரைத் தேக்கரண்டி நெய்விட்டு இறுகிவிடாமல் ஒரு கொதிவிட்டு கலக்கி எடுத்து ஆறவைத்துத் தாய் அல்லது குழந்தைக்கு நெருக்கமானவர்கள் விரலால் சிறிது சிறிதாக வழித்தெடுத்து ஊட்ட வேண்டும்.

மெய்யான இந்தச் சத்துக் கலவையில் இயற்கையான இனிப்பும், வாசமும், சத்தும், நெய்யின் கொழுப்புத் தன்மையும் கலந்திருப்பதால் எளிதில் செரிப்பதோடு எந்தச் சிக்கலும் இல்லாமல் மலம் இலகுவாகப் பிரியும்.

குழந்தைப் பருவத்தில் வயிற்றில் மலம் இறுகுவதே அப்போதைய அதன் சளி, இருமல், காய்ச்சல் தொடங்கி ஆயுள் முழுவதும் நீடிக்கும் அனைத்துத் தொல்லைகளுக்கும் காரணம்.

மலத்தை இளக்கும் இலகுவான குழந்தை உணவுகளை அடுத்தடுத்துப் பார்க்கலாம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

படங்கள்: மதன்சுந்தர்