
நிதர்ஸனா

தமிழ்நாட்டுக்கு வரும் கோதாவரி!
இது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நடந்தால் நன்றாக இருக்கும். காவிரியில் தண்ணீருக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ‘‘கோதாவரித் தண்ணீர் விரைவில் தமிழகத்துக்கு வரும்’’ என அறிவித்திருக்கிறார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. தென்னக நதிநீர் இணைப்பைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. கோதாவரி நதியில் சுமார் 3,000 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. சமீபத்தில் ஆந்திர அரசு, கோதாவரியையும் கிருஷ்ணா நதியையும் இணைத்துச் சாதித்தது. ‘‘இதே வழியில் கோதாவரியிலிருந்து கிருஷ்ணாவுக்கும் அங்கிருந்து பெண்ணையாற்றுக்கும் அதிலிருந்து காவிரிக்கும் தண்ணீர் கொண்டுவரப்படும்’’ எனச் சொல்கிறார் கட்கரி. விரைவில் கோதாவரித் தண்ணீரைக் குடிக்கலாம்.

அமிதாப் பாப்புலர்!
உலக அரசியல் தலைவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் நம் பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கிறார். ஆனால், இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடியை முந்திவிட்டார் நடிகர் அமிதாப் பச்சன். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் யுனிசெஃப் அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியது. நகரங்களில் உள்ள ஆயிரம் குழந்தைகள் மத்தியில் நடந்த ஆய்வில், ‘உங்கள் பிறந்தநாள் பார்ட்டிக்கு யாரைக் கூப்பிடுவீர்கள்?’ என்ற கேள்விக்கு 15 சதவிகிதம் பேர் அமிதாப் பெயரைச் சொன்னார்கள். 14 சதவிகிதம் பேர் மோடி பெயரைச் சொன்னார்கள். சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

மீண்டும் பண்டாரி
சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியை நியமிப்பதற்கான போட்டியில் பிரிட்டனை வீழ்த்தியிருக்கிறது இந்தியா. நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. இதில், மொத்தம் 15 நீதிபதிகள். ஐ.நா பொதுச்சபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து, இவர்களைத் தேர்வுசெய்யும். சமீபத்தில் நடந்த தேர்தலில், தல்வீர் பண்டாரியை இந்தியா நிறுத்தியது. ஏற்கெனவே சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார் இவர். இவரை எதிர்த்து, பிரிட்டன் கிரீன் உட் என்பவரை நிறுத்தியது. பாதுகாப்புச் சபையில் உள்ள வல்லரசு நாடுகள் பிரிட்டன் நீதிபதியை ஆதரிக்க, பொதுச்சபையில் இந்தியரான பண்டாரிக்கும் பெரும் ஆதரவு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ‘இந்தியாவுடனான உறவுக்கு மதிப்புதரும் வகையில் எங்கள் வேட்பாளரைத் திரும்பப் பெறுகிறோம்’ என பிரிட்டன் போட்டி வேட்பாளரை வாபஸ் வங்கியது. இது, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாகும்!
அஞ்சல் அலுவலகங்களில் ஆதார்!
‘ஆதார் இல்லாத மனிதன் அரை மனிதன்’ என இனி பழமொழி சொல்வார்கள். அரசின் சேவைகளுக்கு மட்டுமன்றி, செல்போன் போன்ற தனியார் சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனாலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னமும் நிறைய பேர் ஆதார் அட்டை பெறவில்லை. எனவே, அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் பதிவுசெய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதலில், சென்னை அண்ணாசாலை தலைமை அலுவலகத்தில் ஆதார் பதிவுசெய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 1,434 அஞ்சல் நிலையங்களில் படிப்படியாக இந்தச் சேவை அமலுக்கு வரும்.

தூதர் த்ரிஷா!
குழந்தைகள் உரிமைக்கான ‘யுனிசெஃப்’ அமைப்பின் தமிழகம் மற்றும் கேரளத் தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் குழந்தைகளின் உரிமைக்காக இனி த்ரிஷாவின் குரலும் ஒலிக்கும். தென்னிந்திய நடிகை ஒருவர் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.

தெரியுமா?
* இந்தியாவில் மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவருக்கு 35 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.