சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்

“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்

நேர்காணல்வெ.வித்யா காயத்ரி

 ஹாய் ஃப்ரென்ட்ஸ்... சமீபத்தில் வெளியான ‘அறம்’ படம் பார்த்தீங்களா? சமூக அக்கறையைப் பேசும் அந்தப் படத்தைப் பார்த்தவங்களுக்கு, அதில் தன்ஷிகா மற்றும் முத்து கேரக்டர்களில் அசத்தியவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கும். தன்ஷிகாவும் முத்துவும் அவங்க மாமா சரவணனோடு ஜாலியா விளையாடிக்கிட்டே, கொஞ்சம் சீரியஸாகவும் பேசினாங்க. அப்படி அவங்க என்னதான் பேசிக்கிறாங்கன்னு ஃபாலோ பண்ணித் தெரிஞ்சுக்குவோம் வாங்க...

தன்ஷிகாவின் நிஜப்பெயர் மகாலட்சுமி. முத்துவாக நடித்த சின்ன காக்கா முட்டை ரமேஷ், ‘‘உனக்கு தன்ஷிகா பெயர்தான் பாப்பா சூப்பரா இருக்கு’’னு சொன்னார்.

“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்

தன்ஷிகாவின் மாமாவாக நடித்த ‘பெரிய காக்கா முட்டை’ விக்னேஷும், ‘‘ஏய்ய்.. ரமேஷூ இந்தப் பிள்ளை பெரிய செலிப்ரிட்டி ஆயிடுச்சுடா. இப்பவே நினைச்சதைப் பேசிக்கோ. பின்னாடி பிஸியாகி, நம்மளைக் கண்டுக்க நேரம் இருக்காது’’னு அவர் பங்குக்குக் கலாய்ச்சார்.

‘‘அப்படியெல்லாம் இல்லே, நான் எப்பவும்போல இருப்பேன்’’ எனச் செல்லமாய் கோபித்துக்கொண்டார் மகா.

‘‘சரி... சரி... கோவிச்சுக்காதே. நீ என்ன படிக்கிறே? உங்க வீட்டுல எத்தனை பேரு?’’ என ரமேஷ் கேட்க, “என் அப்பா கூலி வேலை பார்க்குறாரு. அம்மா பூ வியாபாரம் பண்றாங்க. நான் மூணாவது படிக்கிறேன். எனக்கு அண்ணன், ஒரு தங்கச்சி இருக்காங்க. எப்பவும் ஜாலியா விளையாடிட்டிருப்பேன்’’ எனப் புன்னகைத்தார் மகா.

‘‘நான் ஒன்பதாவது படிக்கிறேன். எனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்காங்க. அப்பா மீன் பிடிக்கப் போவார். ஷூட்டிங் இல்லாதப்போ, எங்க ஏரியாவில் கபடி, கோலினு நேரம் போறதே தெரியாம விளையாடிட்டிருப்பேன்’’னு அழகான சிரிப்போடு பேசினார் ரமேஷ்.

“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்

‘‘நீ மட்டும் ஏன் மாமா அமைதியா இருக்கே?’’ என விக்னேஷிடம் கேட்டதும், “எங்க வீட்டுல கூட்டுக் குடும்பமா இருக்கோம். அக்கா, அண்ணன் இருக்காங்க. நான் பிளஸ் டூ படிக்கிறேன். ‘என்னதான் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், படிப்பு ரொம்ப முக்கியம்டா’னு அம்மா சொல்லிட்டே இருக்கும். நல்லா படிக்கணும்’’னு பொறுப்பாகப் பேசினார் விக்னேஷ்.

‘‘ஹேய் மகா... உனக்கு ஏன் நயன்தாரா ஆன்ட்டியைப் பிடிக்கும்?’’னு ரமேஷ் கேட்க, ‘‘அவங்க நல்லா நடிக்கறாங்க. எனக்கு சாக்லேட் ஊட்டிவிட்டாங்க. சரி, என்னையே கேள்வி கேட்கறியே... உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு’’ என்றார் மகா.

‘‘அவங்களோட சுறுசுறுப்பு பிடிக்கும். ஒரே டேக்ல எவ்வளவு அழகா நடிச்சாங்க பார்த்தியா? அதனால எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்’’ என்றார் ரமேஷ்.

‘‘அதெல்லாம் சரிடா, படத்தில் நடிக்க ஆரம்பிச்சதிலிருந்து ஸ்கூல் பக்கம் தலைவெச்சும் படுக்கலையே. ஹெச்.எம் என்ன சொல்லப் போறாங்களோ?’’ என்று விக்னேஷ் புலம்ப, “எனக்கும் அதே பயம்தான்’’ என முழித்தார் ரமேஷ்.

‘‘ஹா... ஹா... எனக்கு பயம் இல்லையே. என் மிஸ்கிட்டே சொல்லிட்டுத்தான் நடிக்க வந்தேன்’’ என அழகு காட்டினார் மகா.

‘‘முதல் படத்துல நடிக்கும்போது நாங்களும் தைரியமா சொல்லிட்டுதான் வந்தோம். இப்போ, அடிக்கடி கேட்டால் மிஸ் அடிச்சுப் பின்னிடுவாங்களோனு பயமா இருக்கு’’ என்றார் விக்னேஷ்.

“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்

‘‘நாம நடிச்ச படங்கள் செம ஹிட்டாகிடுச்சு. ஆனா, நீதான் என்னை விட்டுட்டு ‘அப்பா’ படத்துல தனியா நடிச்சுட்டே’’னு ரமேஷ் சொல்ல, “இப்போ என்னை விட்டுட்டு நீயும் ஒரு சில படத்துல நடிக்கிறியே. அதுக்கு இது சரியாப்போச்சு போ’’ என்று கலாய்த்தார் விக்னேஷ்.

‘‘எனக்கு தனுஷ் மாமாவை ரொம்பப் பிடிக்கும்’’னு மகா சொல்ல, “எனக்கும் பிடிக்கும். அவரை அண்ணன்னுதான் கூப்பிடுவேன்’’னு ரமேஷ் குஷியாக, “நான் தல ஃபேன்’’ என்றார் விக்னேஷ்.

‘‘மகா, நாங்களும் உன்னை மாதிரிதான் சின்ன வயசிலேயே நடிக்க வந்து, நேஷனல் அவார்டுனா என்னன்னே தெரியாம அந்த விருதை வாங்கினோம். அந்த மாதிரி, ‘அறம்’ படத்துக்காக நீயும் வாங்குவே’’ என்றார் ரமேஷ்.

“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்


‘‘உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... என் ஸ்கூல்ல நான் முதல் மார்க் வாங்கிருக்கேன். இன்னொரு படத்துல என்னை நடிக்கக் கூப்பிட்டிருக்காங்க. ‘நான் நல்லா படிக்கவும் செய்றேன்; நடிக்கவும் செய்றேன்’னு எங்க ஏரியாவில் எல்லோரும் பாராட்டுறாங்க’’ என்று மகா சொல்ல, “ம்ஹூம்... நாங்க ஒருமுறைகூட  ஃபர்ஸ்ட் மார்க்  வாங்கியதில்லே’’ என்றார்கள் மற்ற இருவரும்.

‘‘பாப்பா, எவ்ளோ பெரியாளா ஆனாலும் நம்ம ஏரியாவை மறந்துடக் கூடாது. இந்த ஏரியாதான் நம்ம அடையாளம். உனக்கு என்ன உதவி வேணும்னாலும், எங்களைக் கேளு. முடிஞ்சதை நிச்சயம் செய்வோம்’’னு விக்னேஷ் சொன்னதில் அன்பு மிளிர்ந்தது.

மூன்று பேரும் மீண்டும் விளையாட்டில் மும்முரமானார்கள்.

படங்கள்: மீ.நிவேதன்

“நாங்க மூணு பேரு... எங்களுக்கு பயமே இல்லை!” - அறம் சுட்டிகள்

குழந்தைகளைக் காப்பாற்றும் ரோபோ!

‘அறம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூடப்படாத போர்வெல் குழிகளுக்குள் விழுந்துவிடும் குழந்தையைக் காப்பாற்ற மனிதாபிமானமும் கடமையும் கொண்ட கலெக்டர் ஒருவர் எடுக்கும் விடா முயற்சியை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இதில் குழந்தையை மீட்க ரோபோ போன்ற ஓர் இயந்திரத்தை மீட்புக்குழுவினர் பயன்படுத்துவதைக் காட்சி படுத்தியிருப்பார்கள். அது சினிமாவுக்காகப் பயன்படுத்தப்பட்ட செட்டப் கருவி அல்ல. உண்மையிலேயே பல குழந்தைகளைக் காப்பாற்றியுள்ள கருவியாகும். அதைக் கண்டுபிடித்த ஆசிரியர் மணிகண்டனும் அப்படத்தில் நடித்துள்ளார். 

ஐ.டி.ஐ ஆசிரியரான மணிகண்டனின் ரோபோ போன்ற இக்கருவியால் கடந்த 2015-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஒரு குழந்தை மீட்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா எனப் பல  மாநில அரசுகளும் தமிழகத் தீயணைப்புத் துறையும் தேசியப் பேரிடர் மீட்பு அமைப்புகளும் மணிகண்டனின் கண்டுபிடிப்பைப்  பயன்படுத்திவருகின்றனர்.

இந்தப் பயனுள்ள கருவியை  உருவாக்கியுள்ள மணிகண்டனைச் சந்தித்தபோது...

“என்னுடைய சொந்த ஊர், கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புதூர். திருநெல்வேலி அரசு ஐ.டி.ஐ-யில் பிட்டருக்குப் பயின்றேன். சிறு வயதிலிருந்தே எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். படிக்கும்போது பல புராஜெக்ட்டுகளைச் செய்து பரிசு வாங்கியுள்ளேன்.

முன்பு ஒருமுறை எங்கள் ஊர் போர்வெல் குழிக்குள் என் மூன்று வயது மகன் தவறி விழுந்துவிட்டான். அவனை மிகுந்த சிரமப்பட்டு மீட்டுவிட்டோம்.  அப்போதுதான்  போர்வெல் குழிக்குள் தெரியாமல் விழுந்துவிடும் குழந்தைகளின் வேதனையும் அவர்களின் பெற்றோர் படும் துயரத்தையும் உணர முடிந்தது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று யோசித்ததன் விளைவாக  2003-ல், இந்தக் கருவியைக் கண்டுபிடித்தேன். அதன்பிறகு அந்தக் கருவியில் பேட்டரியால் இயங்கும் சிறு கேமரா, ரத்த அழுத்தம் சோதனை செய்யும் கருவி இணைத்து, இன்னும் நவீனமாக உருவாக்கினேன். மொத்தம் ஐந்து கிலோ எடையுள்ள இக்கருவியால் ஐம்பது கிலோ  எடையைத் தூக்கும் வகையில் செய்து அதைச் சென்னை ஐ.ஐ.டி-யில் டெமோ செய்து காட்டினேன், அவர்கள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்கள்.

தற்போது அறம் திரைப்படத்தின்மூலம் என்னுடைய கண்டுபிடிப்பின் பயன் மக்களுக்குச் சென்றுள்ளது.’’ என்று ஆர்வமாக விவரித்தார் மணிகண்டன்.

என்னதான் மீட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், நாம் செல்லும் பாதைகளில், வசிக்கும் தெருக்களில் பள்ளம், குழிகள் இருப்பதைப் பார்த்தால் பெரியவர்களிடம் தெரிவிக்க வேண்டும், நாமும் பார்த்து நடக்க வேண்டும் நண்பர்களே... 

- செ.சல்மான் 

படம் : ஈ.ஜெ.நந்தகுமார்.