Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6
பிரீமியம் ஸ்டோரி
News
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6

போப்பு மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

வெள்ளை நிறத்தாலான பிற சிறுதானியங்கள் மாவினை அரிசி மாவுடன் கலந்து பண்டங்கள் சமைக்கலாம். அவற்றின் சுவையில் நம்மால் வேறுபாட்டைக் காண முடியாது. ஆனால், கேழ்வரகு மாவைக் கலந்து சமைத்தால் அதன் மங்கலான நிறமே வேறுபாட்டைத் துல்லியமாக எடுத்துக்காட்டிவிடும். அதேபோலே அதன் உள்ளோடிய கசப்புச் சுவையும் கேழ்வரகை மற்ற தானியங்களில் இருந்து தனித்துவமாகத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்.  

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6

தனித்துவமான கேழ்வரகில் நுண் சத்துகள் நிறைய உண்டு. பிற தானியங்களைக் காட்டிலும் அதிக அளவில் இரும்புச் சத்து முதல் மெக்னீசியம் வரை நுண் தாதுச் சத்துகளைக் கொண்டது. நோய்கள் மலிந்து உடல் நலன் குறித்த அக்கறை மேலோங்கிய நம் காலத்தில் பலரும் சிறு தானியங்களை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அது இன்னும் பரவலான பயன்பாட்டிற்கு வரவில்லை யுவர் ஹானர்! எங்காவது சிறுதானியம் குறித்துக் கேள்விப்படுகிறபோது நாளையில் இருந்து ஒரு நேரமாவது சிறுதானியம் சமைத்துண்பது என்று புத்தாண்டு ரெஸல்யூஷன்போல மனச் சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மறுநாள் காலையில் சமைக்க ஆரம்பிக்கிறபோது அனிச்சைச் செயலாக ஃப்ரிட்ஜ் குளிரில் பாண்டாக் கரடிபோல உறங்கிக்கொண்டிருக்கும் இட்லி மாவை இறக்கி வைத்து விடுவார்கள்.

ஒருவேளை மனதின் ஓரத்தில் இருந்து  சிறுதானியம் பற்றி மேற்கொண்ட தீர்மானம் எட்டிப்பார்த்தால் அதெல்லாம் ரிலாக்ஸ்டான மூடில் இருக்கும்போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு அவசரத்துக்கு வழக்கமான உணவைச் சமைத்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்துகொள்வார்கள். இப்படி மாதக்கணக்காகத் தள்ளிப்போட்டுக்கொண்டே போக சூப்பர் மார்க்கெட் ரேக்கில் இருந்து நம்முடைய கூடைக்கு ஆசையாசையாக வந்திறங்கிய சிறுதானியங்கள் வண்டுப் பிடித்து உருமாற்றம் கொள்ளத் தொடங்கியிருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6சிறுதானியங்களை நாம் புதிதாகச் சமைக்கத் துவங்குகிறபோது அதற்கென்று ஒரு தனியான படைப்பு மனநிலை தேவைப்படுகிறது. பொதுவாகவே சமையல் என்பது சட்டுப்புட்டு என்று முடித்துத் தூக்கி எறிகிற வேலையல்ல. ஒவ்வொரு நேரமும் சமையல் கூடத்தில் நுழையும்போது கலைக்கூடத்தினுள் அடியெடுத்து வைக்கும் மனநிலையுடன் நுழைகிறவர்களுக்குத் தான் அது மேலான படைப்பை வழங்குகிறது. பெண்களின் படைப்புத்திறன் வருமானம் ஈட்டும் ஊதியத்திற்காக மடைமாற்றம் கொள்ளத் துவங்கிவிட்டது. அதனால் சமீபகாலமாக வீட்டுச் சமையல் தனது உயிர்ப்பண்பை இழந்துவிட்டது. உயிர்ப்பண்பை இழந்த உணவைக்கொண்டு வயிற்றை நிரப்பத் தொடங்கிய பின்னரே நம்மிடம் நோய்கள் பரவலாகிக்கொண்டு வருகின்றன. ஒரு வேலையின் நிமித்தமாக விசாகப்பட்டிணம் சென்றிருந்தேன். வாரக்கணக்காகத் தங்க வேண்டியும், உண்டிக்காகவும் நண்பரின் வீட்டைத் தேர்வு செய்திருந்தேன். பிரம்மச்சாரி நண்பரின் அம்மா சமையலை நானும் ருசித்துப் புசித்து வந்தேன்.

அம்மாவுக்குச் சட்டென்று இரண்டு நாள் காய்ச்சல். நண்பர், அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தார். அவர்கள் வருவதற்குள் காய்ச்சலுக்கு உகந்த உணவைத் தயாரித்து அவர்களை அசத்திவிட வேண்டும் என்று சாகசச் சூரனாக நான் சமையலறைக்குள் நுழைந்திருந்தேன்.   எவ்வளவு தேர்ந்த சமையலனுக்கும் பழகிய கூடம்தான் கை கொடுக்கும். இது சமையலின் அசைக்க முடியாத விதி. புதிய சமையல் கூடத்தில் திக்குத்தெரியாத காட்டில் நிற்கும் வேடனின் நிலையில் உப்பு டப்பா எது, மஞ்சள் டப்பா எது என்று தேடி உருட்டிக் கொண்டிருந்தேன். நான் டப்பாக்களை உருட்டிய சப்தம் ஐந்தாறு கி.மீ தொலைவிற்கு அப்பால் இருக்கும் அம்மாவிற்கு நகரத்து இரைச்சலையும் தாண்டி, காய்ச்சலையும் மீறிக் கேட்டு விட்டது போலும். `தம்பி என்ன செய்யுது?’ என்று நண்பரிடம் தொலைபேசச் சொல்லி இருக்கிறார்.

நண்பர் எனக்கு போன் அடித்ததும் நான் பெருமையாகச் சமைக்கத் துவங்கி இருப்பதைச் சொல்ல அம்மாவுக்கு அந்த நிமிடமே காய்ச்சல் போயே போயிந்தி.  கையில் வாங்கிய டோக்கனைத் திணித்துவிட்டு ஓடிவந்து விசாகப்பட்டிணத்திற்கே உரிய தொப்பல் வியர்வையுடன் சமையலறை நிலைப்படியில் கை வைத்துக்கொண்டு நின்றார். அவர் நின்ற தோரணை, சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த எனக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நான் அவரது சமையலறையில் நுழைந்தது அம்மாவுக்கு மனச் சலனத்தை உண்டாக்கிவிட்டது. அதுவே காய்ச்சலை அவசரமாக அவரிடமிருந்து துரத்தி விட்டது.

சமையலறை என்பது சென்சிட்டிவான ஒரு  பகுதி. ஆயிரம்தான் ஆண்கள் சமைக்கப் புகுந்தாலும் அது அள்ளித் தெளிக்கிற சமாச்சாரமாகத்தான் இருக்கிறது. தவிர, அது இன்னமும் ஆண்களின் கைக்கு லாகவமும், எளிமையும், நுட்பமும் கூடி வருவதாக இல்லை. அத்தனைக்கும் மேலாகச் சமைத்த பண்டங்களில் பெண்கள் சமைக்கும்போது இருக்கிற உணவின் உயிர்ச்சுவை ஆண்கள் சமைக்கும்போது இருப்பதில்லை. காரணம். ஆண், சமையலை ஆர்ப்பாட்டமாகவும், தியாக உணர்வுடனும், கடமை உணர்வுடனும் செய்கிறான். பெண் இவற்றையெல்லாம் கடந்து ஈன்று புறந்தருவதைப் போன்ற படைத்தளிக்கும் இன்ப உணர்வுடன் சமைக்கிறாள். இன்றைய வேலைக்குப் போகும் பெண், தனது படைப்புத்திறனையெல்லாம் வேலைத் தளத்திலேயே வடித்துக் கொடுத்து விட்டுச் சக்கையாக வீடு திரும்புகிறாள். எனவே, வீட்டில் சமையலைக் கடனே என்றுதான் செய்ய நேர்கிறது.

சிறுதானியங்கள் நமது பாரம்பரியமான விளைபொருள் என்றாலும் இரண்டு தலைமுறைக்கு முன்னர்வரைதான் பரவலான புழக்கத்தில் இருந்து வந்தன. இன்றைய தலைமுறையினருக்கு எங்கோ கண்ணுக்குத் தெரியாத பிரதேசத்தில் விளைந்து, மனிதக் கைபடாமல் பேக் செய்யப்படும் ஆலைகளில் இருந்து வந்திறங்குகிற ஓட்ஸ்களையும், கார்ன் பிளேக்ஸ்களையும், நூடுல்ஸ்களையும் நெருக்கமாக உணர முடிகிறது. இன்னமும் தம் தாத்தா பாட்டிகள் கிராமத்தில் விளைவிக்கிற சிறுதானியங்களை அந்நியமாக உணர்கிறோம். சிறுதானியங்களே தற்கால அவசரத்திற்கு விரைந்து சமைக்க ஏற்றவை என்ற எளிய உண்மையை நாம் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. சிறுதானியங்களில் நுண் சத்துகள் நிரம்பி இருப்பதால் அதனுடன் தொட்டுக்க, தொவட்டிக்க என்று இரண்டு வகையான சட்டினி, சாம்பார் கூட்டு, பொரியல், அப்பளம் என்று சர்வ அலங்கார அணி வகுப்புகள் தேவையில்லை.   

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6

ஒன்றுக்கு இரண்டுமுறை தீட்டப்பட்ட அரிசியின் சத்துகள் உமியுடன் அகற்றப்பட்டு விடுவதால் ஒருவாய்ச் சோற்றைக்கூட நம்மால் துணை உணவின்றி மெல்ல முடியாது. சிறுதானிய உணவை நாம் அப்படியே சாப்பிடலாம். நான் எனது பாண்டிச்சேரி வீட்டில் இருந்து சென்னைக்குக் கிளம்பும் நாள்களிலெல்லாம் இரண்டு மூன்று நண்பர்களுக்கு உரிய அளவில் உணவைத் தயாரித்துக்கொண்டு வருவேன். மரபார்ந்த மூலப்பொருள்கள் சேர்த்த நவீனச் சமையல் முறை. இதுதான் என் டப்பாக்களின் சிறப்பம்சம். கடந்த வாரம் தீட்டப்படாத வரகரிசி சாதமும், பிதுக்கின அவரைக் கொட்டைக் கறிமசால் குழம்பும் கொண்டு வந்திருந்தேன். வரகரிசியை அதன் நிறக் கவர்ச்சிக்காகச் சுவைத்துப் பார்த்த புதிய நண்பர் தனது பிரியாணித் திட்டத்தை ரத்து செய்துவிட்டு வரகரிசிச் சோற்றை ‘அப்பிடியே சாப்பிடலாம்’ என்று எதிலும் கூட்டணி சேர்க்காமல் வெறும் வாயில் சுவைத்துவிட்டு, அவரைக் கொட்டை கறிமசால்க் குழம்பினைத் தனியாகச் சப்புக்கொட்டி அருந்தினார். 

முதன்மை உணவான சோறு, தோசை, இட்லி போன்றவை அவற்றின் மூலச் சுவையுடன் இருந்தால் அவற்றுக்குத் துணைப் பொருள்கள் இல்லாமலே சுவைத்து உண்ண முடியும். அவ்வாறு சுவைத்து உண்கிற உணவுதான் உடலுக்கு நலனைக் கொடுக்கும். வரகரிசிச் சோறு உண்ட நண்பர் ‘எங்க வீட்டுல இதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாக்கூட இப்பிடில்லாம் சமைத்துத் தர மாட்டாங்க பாஸ்’ என்று குறைபட்டுக்கொண்டார்.  

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 6குடும்பத்தை வசதியாக நடத்திச் செல்ல பெண்களின் வருமானத்தை எதிர்நோக்கத் துவங்கி விட்டோம். இக்காலத்தில் குடும்பத்தைச் செம்மையாக நடத்த வேண்டும் என்று விரும்பினால் ஆண்கள், வெறுமே ட்ரவுசர் போட்டுக்கொண்டு காய்கறிக் கடைக்குப் போய்வந்தால் மட்டும் போதாது. உளப்பூர்வமாக சமையலில் பங்கேற்க வேண்டும். கலை யார்வத்துடன் புதிய புதிய படைப்பாக்கங்களைப் படைத்து இல்லத்தினருக்குப் படையல் செய்ய வேண்டும்.

போகிற போக்கில் இந்த இதழிலும் புதிய உணவு ஒன்றைப் படைக்கக் கற்றுக் கொள்வோம்.

சுமார் முன்னூறு கிராம் ராகி முழுத்தானியத்தை எடுத்து முதல்நாள் மாலையிலேயே ஊற வைக்க வேண்டியது. காலையில் நீரை வடித்துவிட்டு கிரைண்டரில் இட்டு ஓடவிட வேண்டியது. ராகியுடன் அரைமூடித் தேங்காயைக் கீற்றுகளாக வெட்டிப்போட்டு அரையவிட வேண்டியது. இருபது நிமிடம் ஓடிய பின்பு அரைவையைப் பாலாகப் பிழியும் அளவு நீர் சேர்த்துப் பசும்பாலுக்குரிய அடர்த்தியில் பிழிந்து அல்லது வடிகட்டியில் வடித்து எடுக்க வேண்டியது. சக்கையை எடுக்க வேண்டியது. சுமார் ஒரு லிட்டர் தேறும் அந்தப் பாலைக் கனமான பாத்திரத்தில் ஊற்றிச் சூடேற்ற வேண்டியது. உடன் அரை அங்குல அளவு இஞ்சியை மையத் தட்டிப் போட வேண்டியது. ஏலக்காயும் மூன்று நான்கு தட்டிப்போட வேண்டியது. நூறுகிராம் பனை வெல்லம் துருவி உடன் சேர்த்து, ஒரு கொதியோடு இறக்கி ஆற வைத்துக் குடித்தால் இலகுவில் செரிமானம் ஆகும் சுவை மிகுந்த சத்து பானம் தயார்.

உயிர்ப் பண்பு நிரம்பிய இந்த ராகி மால்ட் வயிற்றை இலகுவாக உணரச் செய்யும். வயிற்றில் ஏதேனும் அடைப்பு (மலச்சிக்கல்) இருந்தாலும் எளிதில் நீக்கிவிடும். விடுமுறை நாள்களில் மதிய உணவை மேலும் சுவை மிக்கதாக மாற்றும்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...