Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

போப்பு மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

பிரீமியம் ஸ்டோரி

காற்றில் உள்ள ஈரப்பதத்திலேயே விளைந்துவிடக்கூடியது கேழ்வரகு. நெல் போன்றோ பிற தானியங்கள் போன்றோ அதிக நீர் தேவையில்லை. கொஞ்சம் மழையே போதுமானது. ஆனால், அதிக சூரிய ஆற்றலைக் குடித்து மணி பிடிப்பதால் தானியம் இறுகலாக இருக்கும். தானியத்தின் இறுகல் தன்மைக்கு ஏற்ப கேழ்வரகு கொண்டு சமைக்கப்படும் உணவும் வறள் தன்மையுடனே இருக்கும்.   

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

``கேப்பையில் நெய் வடியுதுன்னு சொன்னா கேப்பவனுக்கு மதி எங்க போச்சி” என்ற பழமொழி வழக்கு நாட்டுப்புறங்களில் மிகவும் பிரபலம். அதாவது அரிசி, கம்பு, சோளம் போன்ற தானியங்களில் வழுவழுப்புத் தன்மை சிறிதளவாவது இருக்கும். குறிப்பாகச் சோளம், கம்பு தானியங்களில் காய்ச்சின கூழினைக் கரைத்தால் லேசான எண்ணெய்த் தன்மையுடன் கூடிய மினு மினுப்பு மேலேடாக மிதப்பதைக் காணலாம். ஆனால், கேழ்வரகில் அறவே மினுமினுப்புத் தன்மையைக் காண முடியாது. முற்றிலும் வறண்ட தானியம் இது. எனவே, கேழ்வரகைப் பாரம்பரியமாக முக்கிய உணவாக எடுத்துக் கொள்பவர்கள் கூழாக நீர்க்கக் கரைத்தோ அல்லது களியாகவோதான் எடுத்துக்கொள்வார்கள்.

களியைக்கூட ஒவ்வொரு விள்ளலையும் நல்லெண்ணையில் தொட்டு, நாட்டுச் சர்க்கரையில் புரட்டி உண்பது ஒரு சாராரின் பழக்கம். அவ்வாறு இளக்கும் தன்மையுள்ள துணைப் பண்டம் சேர்க்காமல் களியை உண்டால் வறண்ட கேழ்வரகு நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும். பலருக்கு மலச்சிக்கல் பிரச்னையை உண்டாக்கும்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7நவீன வாழ்க்கை முறைக்குக் கேழ்வரகில் களியும், கூழும் அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று சிலர் நினைக்கலாம். அவர்களுக்குப் பொருத்தமான மாற்றுப் பண்டங்கள் புட்டு, இடியாப்பம், இட்லி, தோசை, ராகி அடை. இவையும் வறள் தன்மையைக் கொடுக்கும் என்பதால் புட்டுக்கு மாவு கிளறும்போது தாராளமாக நெய் அல்லது வெண்ணெய் அல்லது தேங்காய்ப்பால் விட்டுக் கிளறினால் புட்டு உண்ணும்போது மெத்தென்ற சுவையோடு இருக்கும், வயிற்றுக்கும் தொல்லை தராது. கேழ்வரகின் மேல் ஏடு செவேல் என்ற சிவப்பாகவும், நாள்பட்ட தானியம் அரக்கு நிறத்திலும் இருக்கும். மேலேட்டின் சிவப்பு நிறம் ராகியில் சமைக்கும் பண்டத்திற்கு லேசான கசப்புச் சுவையைக் கொடுக்கும். தேங்காய்ப்பாலை உடன் சேர்த்துக் கொள்ளும் போது தேங்காய்ப்பாலின் இனிப்புச் சுவை ராகியின் கசப்பினை மட்டுப்படுத்திவிடும். புதிய சுவையும் கொடுக்கும். ராகியின் சிவப்பு அல்லது அரக்கு நிற மேலேடுதான் அதன் சிறப்பம்சமே. இந்த நிறம்தான் மற்ற தானியங்களில் இல்லாத இரும்புச்சத்தினை கேழ்வரகிற்கு அளிக்கிறது.

அரிசிக்குரிய அதே நான்குக்கு ஒன்று என்ற விகிதத்தில் உளுந்தினை ஊறவைத்து அரிசிக்குப் பதிலாக நேரடியாக ராகி தானியத்தை ஊறவைக் கவும். இட்லிக்கு உரிய பதத்தில் சற்றே கெட்டியாக அரைத்து நான்குமணி நேரம் மாவினைப் புளிக்க வைத்து இட்லி ஊற்றுவதற்கு அரைமணி நேரம் முன்னதாகத் தேங்காய்ப்பாலை அதனுடன் கலந்து வழக்கமான இட்லி ஊற்றும் விதமாகவே ஊற்றி எடுத்தால் பஃப் என்று குண்டுப் பையன் கன்னம்போல இட்லி உப்பிக்கொண்டு வரும். ‘அப்பிடியே சாப்பிடலாம்’ என்கிற அளவிற்குச் சுவையாகவும் இருக்கும். ராகி தானியத்தை நேரடியாக ஊறவைத்து அரைத்துத் தேங்காய்ப்பால் கலந்து தோசை சுட்டால் மணமணக்கும் வாசனையே ‘என்னைப் பிச்சுத் தின்னேன்டா’ என்று அழைக்கும். எனது பள்ளிக் காலத்தில் வெளி நொறுவிகளுக்கெல்லாம் அனுமதி இல்லை. இன்றைக்குப்போல் அன்று அத்தனை பண்டங்கள் ஜிகினாப் பாக்கெட்டு களாகக் கண் சிமிட்டி அழைத்ததும் இல்லை. வீட்டில் அம்மா, பாட்டிமார்கள் நொறுவி சுடுவதற்கென்றே அவ்வப்போது நாள் குறிப்பார்கள்.

பெரிய கூட்டுக் குடும்பங்களில் வயதான அத்தை, சித்திமார் இருப்பார்கள். அவர்களது அடையாளமே தனித்துவமான பலகாரங்களாக வெளிப்படும். முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற வரிசைகளில் சட்டென்று முன்னுக்கு வந்து நிற்பவை ராகிப் பலகாரங்களே. ராகிப் புட்டு அவித்து ஈரம் போக உலரவிட்டு அதனுடன் வெல்லம், எள், சுக்கு சேர்த்துக் குத்துரலில் இட்டு இடிப்பார்கள். இடிக்க இடிக்க மேற்படிக் கலவை இளகித் திரண்டு வரும். அப்படியே லட்டுபோலச் சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து வைத்திருப்பார்கள்.  இந்த லட்டினை மெல்வதற்கே தனிச்சத்துத் தேவைப்படும். ஆனால், இதனைத் தின்கிற பயல்களால் சும்மா இருக்க முடியாது. குளத்தங்கரை ஆலமர உச்சிக்கு ஏறி, ததும்பும் நீருக்கு நடுவில் குதித்து இமைக்கும் நேரத்தில் கரையேறுவார்கள். அத்தனை வலுவூட்டும் சத்துகள் நிறைந்தது ராகி எள் லட்டு.  குறிப்பாகப் பூப்பெய்திய பெண், உதிரப்போக்கின் வழியாக இழந்த ஆற்றலை ஈடுசெய்வதற்கு ஏற்ற பண்டமாக இருந்தது.

புட்டவித்து, உலர்த்தி, எள், வெல்லம்…  என்று நான்கைந்து ப்ராசெஸ் செய்ய ஒழியாத பொழுதுகளில் நச்சரிக்கும் பிள்ளைகளுக்கு இன்ஸ்டன்ட் எளிய நொறுவிகளும் உண்டு. வேறொன்றுமில்லை. அரைத்த ராகி உலர் மாவு, இடித்த வெல்லத் தூள், தேங்காய்ப்பூ  இம்மூன்றையும் சுவைக்கு ஏற்றவாறு கலந்து கிண்ணத்தில் போட்டு ஒரு ஸ்பூனையும் கொடுத்துவிடுவார்கள். தயாரிக்க எளிதானது மட்டுமல்ல மிகவும் சுவையாகவும் இருக்கும். அனைத்திற்கும் மேலாக வெல்லம், தேங்காய்ப்பூ ஆகியன இயற்கையான சத்தளிப்பவை என்பதால் உடலின் கட்டான வளர்ச்சிக்கு ஏற்ற பண்டமும்கூட. இதேபோல ராகி மாவில் பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து போட்டு, அதில் பொட்டுக்கடலையைத் தூவி, அதன்மீது இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயை இரண்டு சுற்று வார்த்து, சீரகத் தூளையும் தூவி உண்டால் சளிப் பிடித்த நேரத்தில் மருத்துவ குணம் நிறைந்த பண்டமாகவும் அமைந்துவிடும். 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7பிள்ளைகளின் நாவின் மொட்டுகள் செயற்கை சுவையூட்டப்பட்ட பலகாரங்களுக்குப் பழகும் முன்னர் இத்தகைய பலகாரங்களைக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட்டால் அவர்கள் பாதுகாக்கப்பட்ட பாக்கெட் நொறுவிகளை விரும்ப மாட்டார்கள். பிஸ்கட், சிப்ஸ் போன்ற செயற்கை நிறமூட்டிய, செயற்கை சுவையூட்டிய நொறுவிகள் நம் பிள்ளைகளுக்கு எந்த விதமான நுண் சத்துகளையும் வழங்குவதில்லை. சத்துகள் வழங்காத எந்த உணவுப்பொருளையும் செரிப்பதற்கு உடல் தன்னிடம் இருப்பில் உள்ள ஆற்றலையும் இழக்கிறது.

இதுபோன்ற ஆற்றல் இழப்பு நம் பிள்ளைகளின் நினைவாற்றலைச் சிதைப்பதுடன் அவர்களிடம் மட்டுமீறிய, புறச்சூழலை உணரவிடாத கோபத்தையும் உருவாக்குகிறது.  சாதாரணமாகவே வீட்டில் சமைக்கிற உணவு சத்தற்றவையாக இருப்பதால் சத்தின்மையின் வெற்றிடத்தை நிரப்ப பிள்ளைகளுக்கு அடிக்கடி எதையாவது உண்ணத் தோன்றுகிறது. அப்படி உண்ணுகிற நொறுவிகளும் சத்தற்றவையாக இருப்பதோடு இருக்கும் சத்துகளையும் திருடுவதாக இருப்பதே நம் காலத்தின் மிகப்பெரிய கெடுவினை. இவையனைத்துக்கும் காரணம் ரசாயனச் சேர்மானங்களே என்பது சொல்லாமலே விளங்கும்.

கிராமப்புறங்களில் ராகியில் தயாரிக்கும் எளிய உணவான கூழ், தற்காலத்தில் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்துவிட்டது. காலையில் நகரப் பூங்காக்களுக்கு வாக்கிங் சென்று திரும்புபவர்கள் கொத்தவரங்காய் வத்தலைக் கடித்துக்கொண்டு சொம்புக் கூழ் குடிக்கும் காட்சியை அடிக்கடி காண நேர்கிறது. வீட்டிலும் ராகிப் பயன்பாட்டினை அதிகரித்துக்கொள்வது நம் உடல்நல மேம்பாட்டிற்கு மிகவும் உதவும். கடையில் கிடைக்கும் பாக்கெட் மாவுகள் அத்தனை சிறப்பானதல்ல. நாள்பட்டு விற்பனைக்குக் கொண்டு சேர்க்கும் மாவு, புழுப் பிடித்து விடக் கூடாது என்பதற்காக வறுத்து அரைப்பதோடு பூச்சிக் கொல்லி ரசாயனமும் சிறிதளவு சேர்க்கப் பட்டிருக்கும்.  

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

சிறுதானியங்களைச் சமைக்கத் துவங்குவதன் சிறப்பம்சமே அவை உரம், பூச்சிக்கொல்லி இன்றி விளைவிக்கப்படுவதுதான். எனவே, இப்போது எங்கும் பரவலாகக் கிடைக்கும் ராகி தானியத்தை அவ்வப்போது வாங்கி, இன்னமும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் தெருமுனை மாவு மில்களில் பத்து நிமிடம் நின்று அரைத்து,  ஆறவைத்து தேவைக்கேற்ற டப்பாக்களில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் எத்தனை மாதங்கள் ஆனாலும் புழுப் பிடிக்காது.

சரி, இந்த இதழில் அவசரத் தயாரிப்பான ராகி இனிப்பு ஒன்றைப் பார்த்துவிடுவோம். சுமார் 300 கிராம் ராகி மாவினை, விசாலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது. அப்படியே  கனிந்த கற்பூரவள்ளி வாழைப்பழம் ஒன்றையும்,  தேங்காய் பத்தை மூன்றையும் எடுத்துப் பொடியாக அரிந்துகொள்ள வேண்டியது. பனங்கருப்பட்டித்தூள் நூறு கிராம், ஏலக்காய் நான்கு, நூறு மில்லி பால். மாவு தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டியது. அப்புறம் மாவினை உருண்டை கட்டாமல் தோசைப் பதத்திற்குச் சற்றுக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ள வேண்டியது.

இந்தக் கரைசலைப் பத்து நிமிடம் ஊற வைத்துப் பின் தோசைக்கல்லில் நெய் காட்டி குட்டிக் குட்டி வட்டமாக ஊற்றி எடுக்க வேண்டியது. தோசைக்கல்லுக்குச் சூடு குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். சூடு அதிகமாக வைத்தால் அப்பத்தின் மீது கொள்ளும் ஆசையால் தோசைக்கல்லே ராகி அப்பத்தைத் தின்னத் தொடங்கிவிடும்.மிதமான சூட்டில் திருப்பிப் போட்டு எடுத்தால் கருப்பட்டியும், ஏலக்காயும், தேங்காயும் கலந்த வாசனை கோக்கோ போல மணக்கும். மெத் மெத்தென்று இருக்கும். ஆற விட்டாலும் இறுகாது.

கூடுதல் சுவைக்கு சுக்கு கலந்த பனங்கருப்பட்டியின் நீர்த்த பாகு, ரேர் காம்பினேஷனாக இருக்கும். ஓரிரு நாள்கள் வைத்தும் சாப்பிடலாம். ஜிம் பாய்ஸ், வொர்க் அவுட் செய்வதில் எரித்த சக்தியைச் சட்டென்று பெறலாம். எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு  மட்டும் உப்பி கையும் காலும் குச்சிக் குச்சியாகவே இருப்பவர்கள் மேற்படி அப்பத்துடன் எள், கசகசா கலந்து அவ்வப்போது உண்டு வந்தால் ஓரிரு வாரங்களிலேயே சதைப்பற்று துலக்கமாவதைத் துல்லியமாகப் பார்க்கலாம். சருமத்தில் மினுமினுப்பு கூடும்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு