ஹெல்த்
Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7
பிரீமியம் ஸ்டோரி
News
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

போப்பு மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

ராகியின் மேலேடு சிவப்பு அல்லது அரக்கு நிறங்களில் இருக்கும். ஆனால், அதை மாவாக்கி உடன் தேங்காயைப் பாலாகவோ, பூவாகவோ சேர்த்து உணவு தயாரிக்கிறபோது பண்டம், நம்மைக் கவரும் நிறத்திற்கு மாறிவிடும். நாம் உண்கிற ஒவ்வோர்  உணவும் கவர்ச்சிகரமான நிறத்தில் இருக்க வேண்டும்.  

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

ஒரு பொருளின் நிறக்கவர்ச்சி அதை நுகர்வதற்குத் தூண்டுதலாக இருக்கிறது. அந்த வகையில் உணவும் கவர்ச்சிகரமாக இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால், செயற்கை (ரசாயன) நிறமூட்டிகளைப்போட்டு உணவுக்கு நிறக் கவர்ச்சி ஏற்றுவது மிகவும் ஆபத்தானது. இந்த உண்மையை மருத்துவர்கள் உட்பட யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இப்போது பல வீடுகளில் மளிகைப் பொருள் பட்டியலில் நிறமிகளும் சேர்ந்துவிடுகின்றன. இதுபோக, நாம் வாங்கும் மஞ்சள் பொடியும், மிளகாய்த்தூளும், இன்னபிற மசாலாப் பொருள்களும் வேதி நிறம் கலக்கப்பட்டவை என்பது நமக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டும் காணாததுபோலக் கடந்துவிடுகிறோம்.

எப்போதாவது உணவின் வழியாக உள்ளே போகும் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் உடலுக்கு உண்டு. ஆனால், ஒவ்வோர்  உணவின் வழியாகவும் உட்செல்லும் நச்சுக் கழிவுகளை உடனடியாக நீக்க முடியாது. நம் உடல் அவ்வாறு நீக்க முனைந்தால் ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை பேதியாகி நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாமல் போய்விடும். 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7



உடலில் தேங்கும் சாதாரணக் கழிவுகளின் அடர்த்தி அதிகரிக்கும்போதே உடல் அவற்றை நச்சுக் கழிவுகளாகத்தான் மாற்றி வெளியேற்று கிறது. (அதைத்தான் நோயென்று புரிந்துகொள் கிறோம்) அப்படி இருக்க நச்சுக் கழிவின் தேக்கம் அதிகரித்துக்கொண்டே போனால் அதை ‘வெச்சு செய்வதை’த் தவிர உடலுக்கு வேறு வழியே இல்லை.

அரிப்பு நோயில் தொடங்கிச் சருமம் நிறமிழத்தல், முடி கொட்டுதல், சிறுநீரகக் கற்கள் தோன்றுவது வரை பல்வேறு நோய்களுக்குக் காரணம் வேதிக் கூறுகள் உடலில் தேங்குவதே ஆகும். நோய்களுக்குக் காரணம் மரபணுக் குறைபாடு, தொற்று என்று புரிந்துகொண்டால் நாம் தற்காலிகத் தீர்வை மட்டுமே தேடுகிறோம், நோயை முற்றாகக் குணப்படுத்த விரும்பவில்லை, அது மீண்டும் ஏற்படாத வகையில் களைய விரும்பவில்லை என்றே பொருள்.

நம் உணவின் வழியாக உட்செல்லும் ஒவ்வொரு 0.1 மில்லிகிராம் நச்சுக் கூறுகள் குறித்தும் மிகுந்த கவனம் காட்டியாக வேண்டும். பல பெரிய நிறுவனங்களின் கேன்டீன்களில் நிறைய பேருக்குச் சமைப்பதற்கு ஏதுவாக (அரிசி, காய்களைத் தவிர மற்ற அனைத்தையும்) பொடிகளாகப் பயன்படுத்துகிறார்கள். பொடிகளுடன் சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் சேர்க்கப்படுவதால் அந்த உணவைத் தொடர்ந்து உண்ணும் இருபத்தைந்தே வயதிற்கு உட்பட்ட ஊழியர்கள் பலருக்கும் சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படுவதை மிகச் சாதாரணமாகக் காண முடிகிறது.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

வெளியுணவுகள் நம்மை இத்தகைய சீரழிவிற்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் தற்காலத்தில், வீட்டு உணவிலும் ரசாயனக் கலப்பு இருக்கு மானால் என்னாவது..? எனவே, வேதிக்கூறுகளைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உணவுப்பண்டம் நிறக் கலப்பில்லாமல் கவர்ச்சியாக இல்லையென்றால் பிள்ளைகள் உண்ண மறுக்கிறார்களே என்ற கேள்வி எழலாம்.

நமது படைப்புத் திறனை மேம்படுத்திக் கொண்டால் அந்தக் கேள்விக்கு இடமே இல்லை. எந்த உணவும் சமைக்கும்போது மூலப் பொருள்களின் கலவையைப் பொறுத்துக் குறிப்பிட்ட கட்டத்தில் கவர்ச்சியான புதிய நிறத்தில் திரட்சிகொள்ளும். பச்சை நிற வெற்றிலையும், மங்கின நிறப் பாக்கும், வெள்ளைச் சுண்ணாம்பும் சேர்த்து மெல்லும்போது வாயில் செஞ்சாந்து திரளுகிறதே அதுபோல.

உணவில் கலவைகூடிப் புதுநிறம் பெறுகிற அந்தக் கட்டம்தான் அதை அடுப்பிலிருந்து இறக்குவதற்குப் பொருத்தமான நேரம்.  அதேபோல எந்த உணவு சமைக்கும்போதும் அதற்குக் கூடுதலான நிறம் வேண்டும் என்று கருதினால் அதை இறக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அதனுடன் தேங்காய்ப் பாலையோ பசும் பாலையோ சுமார் 50 மில்லி சேர்த்துவிட்டால் உணவுப்பொருள் கவர்ச்சியான நிறத்தை அடைந்துவிடும். இனிப்பு என்றால் அதில் சேர்ப்பதற்கான நீரின் அளவைக் குறைத்துக்கொண்டு அதிகளவு தேங்காய்ப் பால் அல்லது பால் சேர்க்கலாம். அதேபோல உலர் அரவைப் பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதால் அவற்றின் சத்துகள் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கையான நிறமும் பாதுகாக்கப்படும்.

உணவின் மூலப்பொருள்கள் யாவும் இயற்கையிலேயே கவரும் நிறத்தில்தான் உள்ளன. ஆனால், பளிச்சென்று இருப்பதில்லை. வெள்ளை நிறத்தின் உச்சத்தைக் குறிக்க, முத்துப்போன்ற வெள்ளை என்று சொல்வார்கள். உண்மையில் முத்து சற்றே மங்கிய வெள்ளை நிறம்தான். பளீரென்று டாலடிக்கும் நிறத்தில் வடிக்கப்பட்ட சோறோ, அவித்த இட்லியோ அதன் இயற்கையான சத்துகள் நீக்கப்பட்டதாகவே இருக்கும். ஏனென்றால் சத்துகள் பாதுகாக்கப்பட்ட புழுங்கல் அரிசி வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. அரிசி குறித்து அப்புறம் பார்க்கலாம். இப்போது ராகிப் பயன்பாட்டிற்கு வருவோம்.  

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 7

ராகியை நவீனப்படுத்துகிறேன் என்றும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது என்றும் ராகி பக்கோடா, முறுக்கு, சீடை, ஓமப்பொடி என்று எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்கு ராகியைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய பலகாரங்கள் மெல்லுவதற்குக் கடினமாக இருப்பதோடு செரிமானமாவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் நோயின் தீவிரம் கூடத் தான் செய்யுமே தவிர குறையாது.

எத்தகைய சிறந்த உணவுப் பொருளையும் அதன் மூலப்பண்பு சிதையாமல் பயன்படுத்தும் போதுதான் அதன் சிறப்பம்சங்களின் பலனையும் பெற முடியும்.  வறள் தன்மையான ராகி மாவைப் பிசைந்து பிழி உரலில் இட்டுப் பிழிந்து எண்ணெயில் பொரித்து எடுக்கிறபோது அதன் மூலச் சத்துகள் மிகை வெப்பத்தில் சிதைந்து எண்ணெயில் இறங்கிவிடும் என்பதோடு வறண்ட ராகி மேலும் வறண்டு போகிறது. ராகி லாடு, ராகி பிஸ்கட் போன்றவையும்கூட உடலுக்கு ஏற்றதல்ல. கோதுமை, கடலை மாவுகள் தரும் மெது மெது தன்மையை ராகி தருவதில்லை என்ற உண்மையை நவீன உணவுத் தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, ராகியில் மரபான பதார்த்தங்கள் செய்வதோடு புதிதாகக் கொழுக்கட்டை, அதிகமும் வறண்டு போகாத பணியாரம் போன்றவற்றைச் செய்யலாம். உடனடியாகச் சாப்பிடும் வகையில் ராகி அல்வாவும் செய்யலாம்.

ராகியை ஊறவைத்துப் பாலெடுத்து அதைக் கோதுமைப் பாலுக்கு மாற்றாக அல்வா கிண்டப் பயன்படுத்தலாம். கோதுமை, அல்வாபோலத் திரண்டு வராது. கொழகொழப்பாக இருக்கும். ஆனால், பந்திக்கு ஏற்ற விசேஷமான மாற்றுப் பதார்த்தமாக இருக்கும். பனை வெல்லப்பாகு காய்ச்சி அதில் ராகி மாவையும், தேங்காய்ப் பூவையும், சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடியும் கலந்து சற்று நேரம் ஊற வைத்துச் செட்டிநாட்டு வெள்ளைப் பணியாரம்போல எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். இதுவும் குறைந்தளவு ஈரத்தன்மையுடன் இருப்பதால் செரிக்கக் கடினமாக இராது.

ராகியை மரபான உணவு வகைகளாகவும், புதிய மாற்றுப் பலகாரங்களாகவும் எடுப்பதுடன் வழக்கொழிந்துபோன சில பதார்த்தங்களை இன்றைய அவசர உலகத்தில் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது நல்லது. சளி, காய்ச்சல் நேரங்களில் உணவின்மீது நாட்டம் இருக்காது. உடலும் ஓய்விற்குக் கெஞ்சும். அதுபோன்ற நேரங்களில் நாக்குக்கு சுவையும், தொண்டைக்கும், வயிற்றுக்கும் இதமும், உடலுக்கு ஊக்கமும் தரக்கூடிய அற்புதமான ஓர் உணவுப் பொருள் உண்டு. அது, சமைப்பதற்கு மிக எளிமையான ஃப்ரெஷ் ராகிக் கூழ்.

சுமார் நூறு கிராம் ராகி மாவைச் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டியது. உடன் 250 மில்லி நீரும், 100 மில்லி தேங்காய்ப்பால் அல்லது தவிர்க்க முடியாதபட்சத்தில் பசும்பால் சேர்த்துக் கலக்கிக்கொள்ள வேண்டியது. கலவையை அடுப்பில் ஏற்றிச் சூடாக்கிக்கொண்டே ஐந்து கிராம் சுக்குத்தூள், அதே அளவு மிளகுத் தூள் சேர்க்க வேண்டியது. அடுப்பிலிருந்து இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய்யைச் சேர்க்க வேண்டியது. இறுதியாக ஐம்பது கிராம் பனை வெல்லத் தூளையோ பனங்கற்கண்டோ சேர்த்துக் கலக்கி ஆவி அடங்கும் முன்னரே குடித்தால் உடலெங்கும் அப்படியே இதமாகப் பரவும்.

கூழ் பரவப்பரவ வற்றிய உடலில் ஆற்றல் பெருகுவதையும், குளிர்மை குறைந்து சூடு ஏறுவதையும் நன்றாக உணர முடியும். காய்ச்சல் தீரும்வரை இதையே மீண்டும் மீண்டும் உணவாக எடுத்து வந்தால் ஓரிரு நாள்களிலேயே காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம். ராகியில் உள்ள இரும்பு, மக்னீசியம் சத்துகள் உடலின் பற்றாக்குறை சத்துகள் அனைத்தையும் உடனடியாக ஈடு செய்யும். இந்த ஃப்ரெஷ் கூழுடன் சேர்க்கப்பட்ட மிளகும் சுக்கும் நுரையீரலுக்கு வலு சேர்த்து அதில் மிகுந்துள்ள ஈரப்பதத்தை அகற்றிச் சளியாக உருகி ஓடச் செய்துவிடும்.

நீர்த்த உணவாக இருப்பதால் வயிற்றுக்குத் தொல்லை தராமல் செரிமானம் ஆகிவிடும்.  ராகி அவசியமான சத்துப் பொருள் மட்டுமல்ல; அவசரத்திற்குக் கை கொடுக்கும் ஆதாரப் பொருளும்கூட. தற்காலத்து இளம் தாய்மார்கள் பலரும் தாம் பெற்ற குழந்தைக்குப் பால் தர இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். தாய்ப்பால் கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கும், பல் முளைக்கத் துவங்கிய பின்னர் தரக்கூடிய அரை திட உணவு தயாரிப்பதற்கும் ஏற்ற தானியம் ராகி.

குழந்தைகளுக்கு எளிதில் செரிக்கவல்ல ராகிப் பால் தயாரிப்பு குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...