ஹெல்த்
Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 8

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 8
பிரீமியம் ஸ்டோரி
News
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 8

குடும்பம்போப்பு, மருத்துவ எழுத்தாளர்

கேழ்வரகை மாவாக மட்டுமே நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். மரபான பலகாரங்களைத் தவிர்த்து இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு ஏற்பப் புதிய சில பதார்த்தங்கள் சமைப்பது எப்படி என்று முன்பு பார்த்தோம். கேழ்வரகை ஊறவைத்துப் பால் எடுக்கும் முறை குறித்து இந்த இதழில் பார்ப்போம்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 8

நார்ச்சத்து மிகுந்த இந்த இறுகலான தானியத்தை சுமார் 12 மணி நேரம் ஊற வைத்தால் மட்டுமே தனது இறுக்கத்தைத் தளர்த்தி மனம் குளிர்ந்து சிரிக்கும். நன்றாக ஊறிய கேழ்வரகை நீர் வடித்துச் சற்று நேரம் கழித்துப் பார்த்தால் நல்ல செந்நிறத்தில் பூரித்திருக்கும். அதைக் கெட்டியான பருத்தித் துணியில் கட்டி, முடித்த முடியின் மீது தாராளமாக நீர் தெளித்து காற்றோட்டமான வெளியில் மேலும் பன்னிரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னர் அதைப் பிரித்தால் பிறந்து நான்கைந்து நாள்களே ஆன குழந்தை மெதுவாகக் கண் திறந்து பார்த்துப் புன்னகைப்பதைப் போல முளை விட்டிருக்கும்.

முளை விட்ட தானியம் எதுவானாலும் அதன் முழுத்திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். முளைவிட்ட கேழ்வரகை அந்தக் காலத் தாய்மார்கள் அம்மியில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு அரைப்பார்கள். அரைத்த அரவையை மெல்லிய துணியில் ஊற்றிப் பிழிந்தால் கெட்டியான பால், புத்தம் புதிய உயிர்ப்பான வாசத்துடன் கிடைக்கும்.  மண்ணை முட்டி வெளிவரும் அளவுக்கு வீரியமிக்க முளைப்புத்திறன் உடைய தானியத்தை அரைத்து எடுக்கும் பாலும் அதே அளவுக்கு வீரியம் மிக்கதாகத்தானே இருக்கும். ஆகவே, செரிக்கக் கடினமாக இருக்கும். எனவே இந்தப் பாலை, சுக்குத் தூள், பனை வெல்லத்தூள் சேர்த்துக் காய்ச்சினால் அதன் கமகமவென்ற மணம் யாரையும் சாப்பிடத் தூண்டுவதாக இருக்கும்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 8

இரண்டு தலைமுறைக்கு முன்னர் குழந்தை, முட்டிபோட்டுத் தவழத் தொடங்கும் பருவத்தில் அதன் எலும்புக்கு வலுச் சேர்க்க இந்தப் பாலைப் புகட்டுவார்கள். அதேபோல பூப்பெய்திய பெண், உடலில் போதிய பலம் இல்லாமல் காணப்பட்டால் அவளது உடலைத் தேற்றுவதற்கும் கேழ்வரகுப் பாலைக் கொடுப்பது உண்டு. பால் பற்கள் முளைக்கத் தொடங்கும் கட்டத்தில் குழந்தையைப் பால் நினைவை மறக்கச் செய்ய திட உணவுக்கு முன் கட்டமாக இந்த கேழ்வரகுப் பாலை விவசாயம் சார்ந்த கிராமப்புற மக்கள் இன்றளவும் கொடுத்துவருகிறார்கள்.

பிள்ளைகளின் பால் பற்கள் விழுந்து ஏழாம் வயதில் இரண்டாம் பல் முளைக்கும் வரை உடலின் அடிப்படைக் கட்டுமானத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. கருவறையில் சுருண்டு படுக்க ஏதுவாக உருவான எலும்புகள் தவிர்த்து பல புதிய எலும்புகள் உருவாகின்றன. ஆறாம் மாதம் தொடங்கி ஏழாம் வயது வரை நெகிழ்வுத் தன்மையான எலும்புகள் உறுதியாக மாறிக் கொண்டு வருகின்றன. எனவே, அடிப்படைக் கட்டுமானம் உறுதிப்படுகிற இந்தப் பருவத்தில் பிள்ளைகளின் உணவில் பெற்றோர் போதிய கவனம் செலுத்துவது அவசியம்.

பல பெற்றோர் தம் பிள்ளைகள் ‘கொழுக் மொழுக்’ என்று அமுல் பேபியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர அவர்களது எலும்பின் எடை, போதிய கனத்துடன் இருக்கிறதா என்பது பற்றி அக்கறை கொள்வதில்லை. அதற்குப் பொருத்தமான உயிர்ச் சத்துகளும், தாதுச் சத்துகளும் நிரம்பிய உணவுகளைத் தருவதில் அக்கறை காட்டுவதில்லை. குழந்தை உணவில் அக்கறை என்றதும் பலர் சந்தையில் கிடைக்கும் டப்பா பால்மாவுப் பக்கம் திரும்பிவிடுகின்றனர். செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட, எந்தப் பாதுகாக்கப்பட்ட (preserved) டப்பாப் பாலும் இயற்கையான பாலுக்கு ஈடாக முடியாது என்ற ஆதாரமான உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

செயற்கை வாசமேற்றிய உணவு முறைக்கு குழந்தைப் பருவ நாக்குப் பழகி விடுமானால் அது என்றென்றைக்கும் இயற்கையான சத்து மிகுந்த உணவின் பக்கம் திரும்பாது. உடலின் வளர்சிதை மாற்றங்கள் (மெட்டபாலிசம்) இயற்கையான உயிர்ச் சத்துகளால் கட்டப்படவில்லையானால் மிக எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி விடும். தற்காலத்தில் பெருகிவரும் நோய்களுக்கு நமது வளர்சிதை கட்டமைவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

வளர்சிதைக் கட்டமைவு சரியாக அமையப்பெற்ற உடல்தான் போதுமான உயிர் ஆற்றல் பெற்றிருக்கும். அதன் மனவலிமைக்கும், உழைக்கும் திறனுக்கும், தாங்கு திறனுக்கும், சூழலை ஏற்கும் திறனுக்கும் கட்டமைவுதான் முக்கியப் பங்காற்றுகிறது. போதுமான அளவு தாய்ப்பால் பெறாத குழந்தைகள் உடலளவிலும், உளவில்ரீதியாக வும் எப்போதும் போதாமையில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. சதா நொறுக்குத் தீனி தின்று கொண்டிருப்பதற்கும், சட்டென்று கோபப்படுவதற்கும் அவ்வப்போது சளி பிடித்துக் கொண்டிருப்பதற்கும் காரணம் அடித்தளக் கட்டுமானம் முழுமை பெறாததே ஆகும். பேஸ்மென்ட் வீக்தான் ஒரு நபரின் பலவீனமான குணவியல்பாகவும் மாறி விடுகிறது.  ஒரு குழந்தை நிறைய அடம்பிடிக்கத் தொடங்குகிறது என்றால், நாம் கவனம் செலுத்த வேண்டியது அதன் கேரக்டர் பில்டிங்கில் அல்ல. மாறாக அதன் உணவில் இடம்பெற வேண்டிய உயிர்ச்சத்து குறித்துதான்.

தற்காலத் தாய்மார்கள் தம் குழந்தைகள் திட உணவுக்கு மாறும் பருவத்தில் ஓரளவு அக்கறையுடனே இருக்கிறார்கள். என்றாலும் நாம் மேலே சொன்னதுபோல உயிர்ச்சத்து சிதையாத கேழ்வரகுப் பால் போன்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை. முளை கட்டிய கேழ்வரகை அம்மியில் இட்டு அரைக்கச் சாத்தியப்படாத இடங்களில் மிக்ஸி ஜாரில் இட்டு அரைத்துப் பாலெடுத்தால் உயிர்ச்சத்து சிதையாமல் பால் கிடைக்கும். அதில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியது மிக வேகமாகச் சூடேறும் வகையில் அரைக்கக் கூடாது. அரைபடும்போது சூடாகும் எதுவுமே அதன் உயிர்ப்பண்பை இழந்துவிடும். நான்கு கதிர்களுக்குப் பதிலாக இரண்டு கதிர்கள் உள்ள பிளேடால் குறைவான வேகத்தில் ஒன்றிற்கு இரண்டு முறை அரைத்துப் பால் எடுத்து ஒரு சிட்டிகை சுக்குத் தூள், குறைவான இனிப்புக்குப் பனை வெல்லத் தூள் ஆகியவை சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சி ஆறவிட்டுக் கொடுக்கலாம். வாரத்தில் எல்லா நாள்களிலும் முடியாவிட்டாலும் நான்கைந்து நாள்களாவது சேர்க்க முயற்சி செய்யலாம்.  சில பாட்டிமார்கள் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா என்று வெளிநாடுகளில் வளரும் தம் பேரப் பிள்ளைகளுக்கு முளைகட்டிய தானியங்களைக் காயவைத்து அரைத்து மாவாக்கி பேக் செய்து, உள்ளுக்குள் பெருகும் பாசத்தையும், ஏக்கத்தையும் பேக்கிங்கில் முத்திரையிட்டு அனுப்பிவைக்கிறார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் சத்து மாவில் மேலும் சத்துகளைக் கூட்டுகிறேன் என்று நான்கைந்து பாதாம் பருப்பையும், முந்திரிப் பருப்பையும் உடன் சேர்த்து அரைக்கிறார்கள். இப்பருப்புகளில் உள்ள எண்ணெய் தன்மை, சத்துமாவை விரைவில் கெட்டுப் போகச் செய்யும். எனவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு அரைப்பதே நல்லது. சத்துமாவைக் காய்ச்சும்போது அதோடு பசும்பாலோ அல்லது தேங்காய்ப் பாலோ சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். அவ்வாறு சேர்க்கும் பாலின் எண்ணெய்ப்பண்பு சிறந்த மலமிளக்கியாகச் செயலாற்றும். குழந்தைகளின் சருமம் இயல்பாகவே ஒளி விடக் கூடியதாக இருக்கும். தாய்ப்பாலின் புரதச் சத்தும், இயற்கை வழங்கும் பிரபஞ்ச ஆற்றலும் குழந்தைகளின் மீதான ஈர்ப்பை உருவாக்கும் விதமாகக் குழந்தைகளின் சருமம் தளிரைப் போல மினுமினுக்குகிறது. சில குழந்தைகளின் சருமம் வறண்டு காணப்படுமானால் கேழ்வரகுப் பால் கொடுப்பதுடன் வாரத்துக்கு இரண்டு மூன்று முறை எண்ணெய்த் தன்மை மிகுந்த இன்னொரு பாலும் தயாரித்துக் கொடுக்கலாம்.

பாதாம், முந்திரி, வேர்க்கடலைப் பருப்பு நான்கைந்து, சின்னக் குழிக்கரண்டி அளவு மக்காச் சோளம் அனைத்தையும் ஒன்றாக ஊற வைக்க வேண்டியது. சுமார் எட்டு மணி நேரம் ஊறியபின் நீரை வடித்துவிட்டு சில மணி நேரம் உலரவிட்டு மூன்று விரல் அளவு தேங்காய் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்க வேண்டியது. அதனுடன் நீர் சேர்த்துக் கலக்கி வடிகட்டி சிறிதளவு நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லத்தூள் சேர்த்துக் குழந்தைக்குப் புகட்டலாம். இந்தப் பால் குழந்தையின் சருமத்துக்குச் செழுமை சேர்ப்பதுடன் எலும்பையும் வலுப்படுத்தும்.

சிந்தெடிக் மணமும், நிறமும் ஏற்றிய பிராண்டட் பாக்கெட் உணவுகள் குழந்தைகளுக்கு ஆதாரமான சத்துகளை வழங்குவதில்லை என்பதோடு அதன் இயற்கையான ஆற்றலைச் சுரண்டுவதாகவும் இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகள் அடிக்கடி சளி, காய்ச்சல் மூச்சிரைப்பு ஆகிய நோய்களுக்கு உள்ளாகின்றனர். வளரும் பருவத்தில் சளியும், காய்ச்சலும் இயல்பானதுதான். அதுதானாக வந்து மூன்று நாள்களில் தானாகவே குணமாகி விடுமானால் குழந்தை முன்பைவிட சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதனுடைய உணவு ஏற்புத் திறன் கூடி வளர்ச்சியின் வேகமும் அதிகரிக்கும். சளியும், காய்ச்சலும் தேக்கமுற்ற கழிவை நீக்கி உடல் தன்னை வளர்த்தெடுப்பதற்காகத் தானே உருவாக்கிக்கொள்ளும் சுத்திகரிப்பு முறைதான்.

முறையான உணவும், உடலில் ரசாயனத் தேக்கமும் இல்லாமல் இருந்தால், குழந்தையின் உயிர் சக்தி சிதைக்கப்படாமல் இருந்தால் குழந்தைக்குப் பெரிய அளவில் நோய்கள் உருவாகாது. அவ்வப்போது தோன்றும் நோய்களும் குழந்தையைப் படுத்தி எடுக்காமல் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும். எனவே, தம் குழந்தைக்கு உயிர்ச்சத்து மிகுந்த உணவை அளிக்க விரும்பும் பெற்றோர் சின்னச் சின்ன மெனக் கெடலையும் பாச உணர்வு பொங்கவே செய்வார்கள். கேழ்வரகு ஒருவகையில் சத்தானது என்றால், வேறொரு வகையில் சத்துகள் மிகுந்தது நாம் பரவலாக ஏற்றுவரும் அரிசி.

அரிசிப் பயன்பாடு குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

படம்: மதன்சுந்தர்