மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தை?

சேகுவேரா  கொலம்பஸ் உங்கள்  குழந்தை?
பிரீமியம் ஸ்டோரி
News
சேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தை?

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? யாழ் ஸ்ரீதேவி

ண் குழந்தைகளை நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யப் பழக்கப்படுத்துவது பற்றி மனநல மருத்துவர் ஷாலினி விவரிக்கிறார்...

நண்பர்களுடன் அவுட்டிங் அனுப்பலாமா?

ஆண் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்க முடியாது; வளர்க்கக் கூடாது. ‘கிரவுண்டுக்குப் போகாதே’, ‘மேட்சுக்குப் போகாதே’, ‘ஃப்ரெண்ட்ஸ்கூட அவுட்டிங்குக்குப் போகக் கூடாது’ என்றெல்லாம் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. உள்ளூர் தெருக்கள் முதல் நண்பனின் அக்கா/அண்ணாவின் கல்யாணத்துக்காக வெளியூர் பயணங்கள் வரை அவன் கால்கள் நண்பர்களுடன் பயணிக்கட்டும். பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து விடுபட்டு, நான்கு இடங்களுக்கு அவன் சென்றுவரும்போதுதான் அவனுக்குத் தன்னம்பிக்கையும் ஆளுமையும் அதிகரிக்கும்; தைரியம் கிடைக்கப் பெறுவான். 

சேகுவேரா மாதிரி, கொலம்பஸ் மாதிரி ஒரு பையன் வேண்டும் என்றால், அவன் வீட்டைவிட்டு வெளியேறுவதை அனுமதித்து ரசிக்கத்தான் வேண்டும். ‘அதெல்லாம் வேண்டாம், பத்திரமா வீட்டுல, எங்ககூடயே இரு’ என்று சொல்வீர்களானால், நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டது அதற்காக அல்ல என்பதை உணர வேண்டும்.

பாதுகாப்பு அவசியம். அதைப்போலவே, நம் குழந்தைகளுக்கு ‘டெசிஷன் மேக்கிங்’ திறனும் அவசியம். நண்பர்களுடனான குழுச் செயல்பாடுகளில் அதை அவன் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். அத்திறன் கைவரப் பெற்றால், எந்தச் சூழ்நிலையிலும் அவன் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்வான். இப்படி அவன் மூளையை வளர்த்துக்கொடுக்கும் பொறுப்புதான் பெற்றோருடையது; அவனைக் கைக்குள் வைத்துப் பொத்திப் பொத்தி வளர்ப்பதல்ல. ஆனால், எங்கே சென்றாலும், அதை வீட்டில் சொல்லி விட்டுச் செல்லவேண்டியது அவசியம் என்பதை அவனுக்குப் பழக்கப்படுத்துங்கள்.

சேகுவேரா  கொலம்பஸ் உங்கள்  குழந்தை?

பொறுப்புகளை உணர்த்துங்கள்!

ஆண் பிள்ளையின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், ‘இப்போ உனக்கு இத்தனை வயசாகிடுச்சு, இனிமே நீ இ.பி பில் கட்டப் போகலாம்’, ‘உனக்கு பேங்க்ல ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிடலாம்’, ‘உனக்கு எல்.எல்.ஆர் வாங்கிடலாம்’ என்பதாக, அவன் வயதுக்குரிய பொறுப்புகளை பாசிட்டிவ்வாக உணர்த்தி, உற்சாகப்படுத்துவதோடு, அந்த வயதில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் நண்பர்கள் மூலமாக வரலாம் என்பதை, அவனுக்குப் புரியவைக்கும் விதத்தில் பக்குவமாகப் பெற்றோர்  உரையாட வேண்டும். அது பெரும்பாலும் ஒழுக்கக் கேடுகள் குறித்து இருக்கலாம்.

`பெண் பிள்ளையை டீஸ் செய்வது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்கள் எல்லாம் நல்ல மனிதனுக்கான லட்சணமில்லை' என்றும், `அவ்வாறு இருப்பவர்களை நண்பர் களாகக்கொள்வது ஆபத்தான சேர்க்கை' என்றும் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும்.

பதின்வயதில் ஒரு பையன் சிகரெட் பிடிக்கிறான், மது அருந்துகிறான், கஞ்சா அடிக்கிறான் என்றால், அவற்றை ஆண்மையின் அடையாளமாக அந்தப் பிஞ்சு மனசை நம்பவைக்கும் வேலையை மீடியா செய்கிறது.

‘எந்த மிருகமும் தனக்கு ஆபத்தான விஷயங்களைச் செய்யாது. ஆறறிவு உள்ள மனிதன் அதைச் செய்யலாமா?’ என்று அறிவுறுத்தி, அவனுக்கு மனக்கவசம் போட்டுவைக்க வேண்டும்.  இப்படிப் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே சொல்லிவைக்கும்போது, குழந்தைக்கும் அதை எதிர்கொள்ளும்போது தடுமாற்றம் இருக்காது; பெற்றோரும் நிம்மதியாக இருக்கலாம். இந்த அணுகுமுறை, பேரன்ட்டிங்கை லகுவாக்கும். ஆண் குழந்தைகளின் நட்பு வட்டம் ஆரோக்கியமாக அமைந்துவிட்டால், அவர்கள் ஸ்போர்ட்டிவ்வாக வளர்வார்கள். குழந்தைகள் உற்சாகத்துடன் இருப்பது, வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு மிகவும் முக்கியம்.

ஸ்மார்ட்போன் போதை... நாம் நினைப் பதற்கு மேலே ஆபத்தானது!

அடுத்த இதழில் விளக்குகிறார்

டாக்டர் ஷாலினி