Published:Updated:

குழந்தைகளை அடித்து வளர்த்தால் ஆபத்து... எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு!

குழந்தைகளை அடித்து வளர்த்தால் ஆபத்து... எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு!

குழந்தையை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமைகிறது.

Published:Updated:

குழந்தைகளை அடித்து வளர்த்தால் ஆபத்து... எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு!

குழந்தையை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமைகிறது.

குழந்தைகளை அடித்து வளர்த்தால் ஆபத்து... எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு!

'டித்து வளர்க்கப்படும் குழந்தைகளிடம் வன்முறை எண்ணமும் சேர்ந்தே வளரும்' என்று அதிர்ச்சியூட்டுகிறது அமெரிக்காவின் சமீபத்திய ஆய்வு. குழந்தை வளர்ப்பு பற்றி 'அமெரிக்கன் அகடெமி ஆப் பீடியாட்டிரிக்ஸ்'  (American Academy of Pediatrics) அமைப்பு  ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், அடித்து வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் அதிக வன்முறை குணங்களுடன், மன ரீதியாகப் பாதிப்படைவதாகவும் தெரியவந்துள்ளது. 

1998 முதல் 2018 வரை  20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்தத் தொடர் ஆய்வின் முடிவு கடந்த திங்கள்கிழமை வெளியானது. இதில்  அடித்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மூளையில் சில மாற்றங்கள் ஏற்படும். வளர்ந்தபிறகு தற்கொலை எண்ணம் உண்டாகும். முரட்டுத்தன்மையான குணங்கள் சேர்ந்தே வளரும் என்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு வளர்க்கப்படும் சில குழந்தைகள் எளிதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள் என்பதும் தெரியவந்தது. இந்த ஆய்வின் முடிவு கண்டிப்பான பெற்றோர்களிடையே பதைபதைப்பை உண்டாக்கியிருக்கிறது. 

ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலமும், அவர்களின் பெற்றோர்களின் கையிலேயே இருக்கிறது. குழந்தையை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமைகிறது. பத்து பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாய் வளர்த்தவர்கள் நம் முன்னோர். ஆனால் இப்போது ஒரு குழந்தையை வளர்க்கவே சிரமப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தவறான வளர்ப்பால் சில குழந்தைகள் தங்களுடைய, ஆசிரியரையே கத்தியால் குத்திய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. 

"ஆங்கிலத்தில், "Spare the rod, Spoil the Child" என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, பிரம்பை மறைத்து வைத்தால் குழந்தை கெட்டுப் போகும். இதுபோன்ற பழமொழிகள் நம்மூரிலும் இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம், இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. இந்த ஆய்வு முடிவு மட்டுமல்ல, ஏற்கெனவே, அமெரிக்காவில் உள்ள மனநல மருத்துவ அமைப்பும் (American Psychological Association - APA) குழந்தை

 வளர்ப்பு பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் மூளைகள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டன. அப்போது மூளையில் அட்ரினலின் (Adrenaline), கார்ட்டிசால்  (Cortisol)  ஆகிய  ஹார்மோன்களும், மூளைச் செயல்பாட்டுடன் தொடர்புடைய  சாம்பல் நிறப்பொருள் (Grey matter) மற்றும் வெண்பொருள் (White Matter) ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்திருந்தது தெரியவந்தது. இதனால், அவர்களிடம் இருந்து  தற்கொலை எண்ணங்கள், அதிக கோபம், போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது போன்ற பழக்கங்களும் அதிகரிக்கின்றன என்று அந்த ஆய்வு உறுதி செய்தது. 

மேலும், அடித்து வளர்க்காமல் தடித்த வார்த்தைகளால் திட்டி (verbal Abuse) வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு (Deprived Behavior) ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும், பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகள்தான் அடித்து வளர்க்கப்பட்டிருக்கின்றனர் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வி அறிவு இல்லாத பெற்றோர்கள்தான்  இதுபோன்ற தண்டனைகளை  குழந்தைகளுக்குத் தருகிறார்கள். அதனால்,  குழந்தைகளிடம் படிப்புத்  திறன் குறைந்து போவதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மனச்சோர்வால் அவதிப்படுவதையும், ஆண் குழந்தைகள் சமூக விரோதச் செயல்களில் செயல்படும் வன்முறையாளர்களாக மாறிவிடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்திருக்கிறது. 

இதுபோன்ற ஆய்வுகளின் அடிப்படையில், 1979 முதல் ஸ்வீடன் நாட்டில் குழந்தைகளை அடித்து வளர்ப்பது தடை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக 30 நாடுகளில் இது தடை செய்யப்பட்டது. அந்த நாடுகளிலெல்லாம் சமூகவிரோதச் செயல்கள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி ஏற்பட இதுவே முக்கியக் காரணம் என்று வாதிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுபோல இன்னமும் பல ஆய்வுகளையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். எனவே, குழந்தைகளை அடித்து வளர்த்தால்தான் ஒழுக்கத்தோடும் வளரும் என்ற எண்ணத்தைப் பெற்றோர் கைவிடவேண்டும்" என்கிற முஹம்மது கிஸார். குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்றும் விவரிக்கிறார்.

நேரக்கட்டுப்பாடு  (Time-out )

தவறு செய்யும் குழந்தைகள்,  விரும்பும் செயலில் ஈடுபடும் நேரத்தைக் குறைத்துவிடுவது. உதாரணத்துக்கு 1 மணி நேரம் விளையாட அனுமதிக்கும் குழந்தைகளுக்கு அந்த நேரத்தை 1/2 மணி நேரமாகக்  குறைத்துவிட வேண்டும்.

புறக்கணித்தல் (Ignore)

குழந்தைகளிடம் ஏதாவது தேவை என்றால், 'அடம்பிடித்தால் கிடைத்துவிடும்' என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அந்தச் சமயங்களில் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். இதனால், அடம்பிடித்தாலும் பெற்றோர்கள் பொருட்படுத்தமாட்டர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் வந்துவிடும்.

இதைச் செய்தால் இது கிடைக்கும் (Logical Consequences)

இன்றைக்கு இதைச் செய்தால் நாளை இது கிடைக்கும் என்ற எண்ணம் வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் செய்வதில் ஓர் ஒழுங்கு இருக்கும்.

இயற்கை நியதி (Natural Consequences) 

இயற்கையான விளைவுகளைச்சொல்லி அவர்களைத்  திருத்துவது. உதாரணத்துக்கு, 'நெருப்பைத்  தொட்டால் சுடும் என்று புரியவைக்க வேண்டும். இயற்கை நியதிகளை மாற்ற முடியாது என்பதைப் புரிய வைக்கவேண்டும்.  

நேர்மறையான விளைவுகள் (Positive Reinforcement)

சரியான செயல்களுக்கு உரியப் பலன் கிடைக்கும். சொல்கிற வேலையைச்  சிறப்பாக செய்தால் அவர்களுக்கு சாக்லெட் போன்ற பிடித்தமான பொருள்களை வாங்கித் தரவேண்டும்.

எதிர்மறையான விளைவுகள் (Negative Reinforcement)

தவறிழைக்கும் குழந்தைகளுக்கு அதற்கான தண்டனை வழங்கப்படவேண்டும். தண்டனை வன்முறையாக இல்லாமல்,  இதைச் செய்யாவிட்டால்  இது கிடைக்காது என்பதுபோல இருக்கவேண்டும்.  விளையாட அனுமதியில்லை; நண்பர்களுடன் வெளியில் செல்ல அனுமதியில்லை உள்ளிட்டவை. இவற்றைக் குறுகிய காலம் என்றில்லாமல் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும்.

குடும்பத்துக்கான வரையறை வடிவமைத்தல் (Setting Family Rules)

குடும்பத்தில் ஒவ்வொருவருக்குமான எல்லைகளையும், பொறுப்புகளையும் நிர்ணயிக்கவேண்டும். உதாரணத்துக்கு, 4 சாக்லெட் இருக்கிறது. 2 பேர் இருந்தால் ஒவ்வொருவருக்கும் சமமாக கிடைக்கும் என்று பதியச் செய்யவேண்டும். இவற்றையெல்லாம் செய்தால், குழந்தைகளை அடிக்காமலே, சிறப்பானவர்களாக வளர்க்க முடியும்" என்கிறார்.

குழந்தைகளிடம் அன்பு காட்டினால் மட்டும் போதுமா? அடம் பிடிக்கும், முரண்டுப் பிடிக்கும், சொல்வதைக் கேட்காத குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்? குழந்தைகளிடம் கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது? - உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்திடம் கேட்டோம்.

"அந்த காலங்களில் நிறையக் குழந்தைகள் இருந்தால் குழந்தைகளை அடித்துத்  துன்புறுத்தி வளர்க்க வேண்டியதிருந்தது.

இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகள்  இருந்தாலே அதிசயம். அந்தக் குழந்தைகளை அன்பு காட்டியே சிறப்பாக வளர்க்கலாம்.  ஒரு குழந்தையை பெற்றோர்  அடித்து வளர்த்தால் அதேபோலவே அந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். மேலும் வளர்ந்தபிறகு பெற்றோரிடமோ அல்லது தங்கள் குழந்தைகளிடமும் அதேபோல நடந்துகொள்வார்கள்.  

குழந்தைகள் நிரந்தரமாகத் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், அடித்து உதைத்து உணர்த்தும் வழிமுறை பலனளிக்காது. நீங்கள் இருக்கும்போது சரியாக நடந்துகொள்வார்கள். இல்லாதபோது மீண்டும் அந்தத் தவறுகளைச் செய்வார்கள். எனவே, அது அந்தத் தவறான குணத்தைத் திருத்துவதற்கும் உதவாது. மேலும், எந்தக் குழந்தையையும் குறிப்பிட்ட காலம்வரைதான் அடித்து வளர்க்க முடியும். அதன்பிறகு அதுவும் முடியாது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

குழந்தைகளைத்  திருத்தவேண்டும் என்றால், தவறுகளுக்கான தண்டனையைக் கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கக் கூடாது. ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்தால் அதைப் பாராட்ட வேண்டும். ஆனால், அதையும் சொல்லிக்காட்டி செய்யக் கூடாது. செயலில் புரிய வைத்துவிட வேண்டும். அதனால் அது மனதில் பதிந்துவிடும். வீடு என்பது வெறும் வாழ்விடம் மட்டுமல்ல, அதுவே குழந்தைகள் கற்றுக்கொள்கிற முதல் கல்விக்கூடம்.தாய், தந்தை, தாத்தா, பாட்டி எனப் பெரியவர்களிடம் இருந்தே பிள்ளைகள் நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாகப் பெற்றோர் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்டப் பழக்கங்கள் இருந்தால், குறைந்தபட்சம் அவற்றைக் குழந்தைகள் முன்பு செய்யாமல் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் தூங்கிவிட வேண்டும் என்றால் நீங்களும் அந்த நேரத்தில் தூங்கச்சென்றுவிடவேண்டும். பெற்றோர் நமக்காக இதைச் செய்கிறார்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும்." என்கிறார் சித்ரா அரவிந்த்.