மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மயக்கும் மழலைச்சொல்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 7

மயக்கும் மழலைச்சொல்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 7
பிரீமியம் ஸ்டோரி
News
மயக்கும் மழலைச்சொல்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 7

தனசேகர் கேசவலு குழந்தைகள்நல மருத்துவர்

றாவது மாதத்தில் தாய்ப்பாலுடன் சாதம், பருப்பு, காய்கறிகள், சில பழங்கள் என்று உங்கள் பட்டுச் செல்லத்துக்கு இணை உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று பார்த்தோம். வாருங்கள், ஏழாம் மாதம் உங்கள் குழந்தை என்னென்ன செய்வாள்/ன் என்று தெரிந்துகொள்வோம்.

மயக்கும் மழலைச்சொல்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 7

குட்டிக் கைகளில் பற்றிக்கொள்வார்கள்!

ஏழாம் மாதத்தில் நான்கு விஷயங்கள் குழந்தையின் வளர்ச்சியில் காணப்படும். முதலாவது, `கிராஸ் மோட்டார் ஸ்கில்’ (Gross Motor Skill) எனப்படும் உடல் அசைவுகள். ஒரு பொருளை எடுத்து, அதை இன்னொரு கைக்கு மாற்றுகிற திறன் ஏழாம் மாதத்தில் இன்னும் மேம்படும். அதனால், அவர்கள் கையில் பிடிக்கிறபடி, அவர்களின் சின்னஞ்சிறு கைகளைவிடச் சற்று அகலமாக இருக்கும்படி விளையாட்டுப் பொருள்களை வாங்கிக்கொடுங்கள். அப்போதுதான் பொருள்களை இறுகப் பிடிக்கிற திறன் அவர்களுக்கு அதிகமாகும். மெத்தென்ற பொம்மைகளைக் கொடுக்க வேண்டாம்.

மைல் கல்... மாறலாம்!

குழந்தைகள், இந்த மாதத்தில் எழுந்து உட்கார முயல்வார்கள். அப்படி உட்கார்ந்துவிட்டால் அது மைல் கல். என்றாலும், இது கொஞ்சம் தள்ளிப்போனால், அதைக் குறை என்று நினைத்துப் பயந்துவிடாதீர்கள். சில குழந்தைகள் நான்கு, ஐந்து மாதங்களிலேயேகூட எழுந்து உட்கார ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் ஏழாவது மாதத்தில் உட்கார ஆரம்பிப்பார்கள் என்று பார்த்தோம். அதேபோல ஏழு அல்லது எட்டாவது மாதத்தில் ஃபர்னிச்சரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க ஆரம்பிப்பார்கள் சில சுட்டிகள்.

மயக்கும் மழலைச்சொல்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 7நுட்பமான செயல்கள்!

அடுத்தது, `ஃபைன் மோட்டார் ஸ்கில்’ (Fine Motor Skill) எனப்படும் நுட்பமாகச் செய்யும் வேலைகள். ஒரு பொருள் சூடாக இருக்கிறது, ஜில்லென்று இருக்கிறது போன்ற உணர்வுகளைக் குழந்தை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிற மாதம் இது. கூர்மையான பொருள், ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிற பருவமும் இதுதான்.

ஒளியும் ஒலியும்!

மூன்றாவது, பார்வை மற்றும் செவித்திறன். அப்பாவின் ‘ஹச்’ தும்மலுக்கே தூக்கிவாரிப்போட்டு அழுத குழந்தைகளுக்கு, இனி அந்த பயமெல்லாம் பறந்துவிடும். ‘விஜய்யோட இந்தப் பாட்டைக் கேட்டா என் பொண்ணு சட்டுனு தலையை உயர்த்திப் பார்ப்பா’ என்று தோழிகளிடம் சில அம்மாக்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? குழந்தைகளின் செவித்திறன் அதிகரிப்பதையும், சில ஓசைகளையும் இசைகளையும் அவர்கள் ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் செயல்தான் இது. ஒரு குழந்தையின் பார்வைத்திறன் என்பது இரண்டு மாதத்தில் பழைய டி.வி பெட்டிபோல துல்லியம் குறைவாக இருக்கும். நான்காவது மாதத்தில் ஹை ரெசல்யூஷன் டி.விபோல பளிச்சென்றும், ஏழாவது மாதத்தில் எல்இடி டி.வி-போல மிகக் கூர்மையாகவும் தெரிய ஆரம்பிக்கும்.

மயக்கும் மழலைச்சொல்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 7

கிளிப்பேச்சு!

நான்காவது, பேச்சும் மொழிப் பரிமாற்றமும். பிள்ளைகள், ‘தா தா’, ‘மா’, ‘ங்கா’, ‘பா’ என ஒற்றை வார்த்தைகளை மழலையில் பேச ஆரம்பிப்பார்கள். தவிர, ‘செல்லத்துக்கு பசிக்குதா?’ என்று கேட்டால், ‘ம்’ என்று ஓர் எழுத்தில் பதில் சொல்ல ஆரம்பிப்பார்கள். இதை நாங்கள் ‘மோனோசிலபல்’ (Monosyllable) என்று சொல்வோம்.

கையில் கிடைப்பதை வாய்க்குள் போட்டு..!

இனி பட்டாணி, பீன்ஸ் துண்டு, சாக்பீஸ், பட்டன் பேட்டரி, குட்டிக்குட்டி பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த க்ரேயான்ஸ் என்று எதுவும் தரையில் கிடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கையில் கிடைக்கிற பொருள்களைக் குழந்தைகள் வாய்க்குள் போட்டுக்கொண்டால், அது மூச்சுக்குழாயில் அல்லது உணவுக்குழாயில் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய் என்பது குழந்தையின் சுண்டு விரல் அளவுக்குத்தான் இருக்கும். அதில் ஏதாவது பொருள் சிக்கிக்கொண்டால், மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். தொண்டையில் திணறல் ஏற்படும். ‘ஹாங்... ஹாங்...’ என வழக்கத்துக்கு மாறான சத்தத்துடன் மூச்சுவிடுவார்கள். உடனே மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்றுவிடுங்கள். நீங்களாகவே குழந்தையின் வாய்க்குள் விரலைவிட்டுப் பொருளை வெளியே எடுக்க முயன்று, மேலும் உள்ளே தள்ளிவிடாதீர்கள். 

மயக்கும் மழலைச்சொல்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 7

ஒரு சம்பவம்!

சில வாரங்களுக்கு முன்னர், ஏழு மாதக் குழந்தை ஒன்று சிறிய சைஸ் குளிர்பான பாட்டிலின் மூடியை விழுங்கிவிட்டது. பெற்றோரே அதை எடுக்க முயற்சி செய்ய, இன்னும் உள்ளே போய்விட்டது கடைசியில் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, ஃபோர்செப்ஸ் (Forceps)பயன்படுத்தித்தான் மூடியை வெளியே எடுக்க முடிந்தது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அம்மாக்களே, குட்டிச் செல்லங்கள் பட்டன் பேட்டரியை விழுங்கி, அது அவர்களின் சுவாசக்குழாய்க்குள் சென்றுவிட்டால், குழாய் கிழிந்துகூட போகலாம். சுவாசக்குழாய் கிழிந்தால் இதயம் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம். 

உணவுக்குழாய்க்குள் மாட்டிக்கொண்டால்..!

சிறிய பொருள்கள் உணவுக்குழாய்க்குள் மாட்டிக்கொண்டால் குழந்தைகள் உணவை விழுங்கும்போது சிரமப்படுவார்கள். தொண்டை வலிக்கிறது என்பதை அழுகையாகவோ அல்லது அவர்களுக்குத் தெரிந்த வகையிலோ தெரியப்படுத்துவார்கள். வழக்கத்தைவிட அதிகமாக வாயில் எச்சில் ஊற்றிக்கொண்டே இருக்கும். குழந்தைகளுக்கு எச்சில் வடிவது சாதாரணம்தான். ஆனால், சிரமப்படாமல் வடிகிற எச்சிலுக்கும், சிரமப்பட்டு வடிக்கிற எச்சிலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. குட்டிப் பாப்பா ஒருவேளை பட்டன் பேட்டரிகளை விழுங்கிவிட்டால், இரண்டு பேட்டரிகளும் வயிற்றுக்குள் டிஸ்சார்ஜ் ஆகி, குடலில் ஓட்டையே விழலாம், எச்சரிக்கை.

மூக்குக்குள் ரப்பர்!


சில வாண்டுகள் கையில் கிடைத்த பேப்பர் துண்டுகளை, பட்டாணியை, அக்கா/அண்ணாவின் அழிப்பான் துண்டுகளை மிகச் சரியாக மூக்குக்குள் போட்டுக் கொண்டு மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். ஒருவேளை ஏதாவது அழுகும் தன்மையுள்ள பொருள் ஒன்று மூக்கின் உள்ளே போய், அதை கவனிக்காமல்விட்டு, அதிக நாள்கள் ஆகிவிட்டால், சுவாசத்தில் கெட்ட வாடை வர ஆரம்பிக்கும். சட்டென சுதாரித்து மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

‘முந்தானை முடிச்சு’ வைத்தியம் வேண்டாம்!

குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் வைத்தியர் பாணியில் குழந்தையைத் தலைகுப்புறத் தூக்கி முதுகைத் தட்டுகிற வேலையெல்லாம் செய்ய வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரையவும்.

எட்டாம் மாதத்தில் உங்கள் குழந்தை எட்டு வைத்தே ஆக வேண்டுமா? சொல்கிறேன்!

- ஆ.சாந்தி கணேஷ்