ஹெல்த்
Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22
பிரீமியம் ஸ்டோரி
News
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22

குடும்பம்

ல்லாப் பழங்களிலுமே நம்மை ஈர்க்கும் ஒருவித வாசனை உண்டு. இந்த வாசனை, பழத்தின் சதைப்பற்றான பகுதிகளில் இருப்பதைவிடத் தோல் பகுதியிலேயே அதிகம் இருக்கும். ஒரு பழம், கவர்ச்சிகரமான வாசனையை எழுப்பி,  நம்மிடம்  மட்டுமல்ல,  பழ உண்ணிகளான வௌவால், அணில், பறவைகள் போன்ற சிற்றினங்கள் அனைத்தையும் பார்த்து, “ஏ சக உயிரியே, வா வந்து என்னைத் தீண்டு, சுவைத்து உண், உண்டு முடித்த பின்னர் என் உயிரின் ஆதாரமான விதையை எங்கேனும் எறிந்துவிட்டுப் போ... என் இனத்தை நான் பெருக்கிக்கொள்கிறேன்” என்கிறது. 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22

அதற்காகத்தான் தன் முழு ஆற்றலையும் தன் வாசனையில் சுமந்திருக்கிறது பழம். மாம்பழ வாசனை குறித்து நாம் சொல்லவேண்டியதே இல்லை. பலாவும் அப்படித்தான்.

பழம் எவ்வளவுக்கு எவ்வளவு வெயிலைக் குடிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு வாசத்தையும் பரப்பும். வெயிலை விரும்பாத பழ வகைகளான வாழை, ஆப்பிள் போன்றவை அவ்வளவாகச் சுண்டி இழுக்கும் வாசனை கொண்டிருப்பதில்லை. வாழைக்குத் தன் விதை மீது நம்பிக்கை இல்லை. எனவே, ஒரு குலைதள்ளும் அதே நேரத்தில் ஒரு கன்றையும் ஈன்றுவிடும். வாழை, பழமாக முற்றிக் கனியும் தருணத்தில் தன் ஆயுளை முடித்துக்கொள்ளும்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22பனியையும் நீரையும் குடித்து வளரும் ஆப்பிளும் அவ்வளவாக வாசனை எழுப்புவதில்லை. நீரை அதிகம் குடிக்கும் ஆப்பிளும் வாழையும் சதைப்பற்றானவை. சதைப்பற்றான பழங்கள், உண்பவரின் சதையைப் பெருக்கவல்லவை. ஆனால், வைட்டமின் எனும் உயிர்ச்சத்தும் தாதுச்சத்தும் வெயில் பழங்களான மா, பலா, கொய்யா போன்ற பழங்களில் இருக்கும் அளவுக்கு அவற்றில் இருப்பதில்லை. இரவின் குளிர்ச்சியையும், பகலின் வெயிலையும் உண்டு பருக்கும் ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, திராட்சை போன்றவை குறைவான சதைப்பற்றும், சாறும் நிறைந்தவை. சாறு நிறைந்த பழங்கள் நம் உயிராற்றலை வளர்க்கக்கூடியவை. வைட்டமின்களும் மினரல்களும் நிரம்பியவை.

 இந்தப் பழங்களை நிதானமாகச் சுவைத்துப் பார்த்தால் புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கசப்பு என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளிப்படும். காயும் கனியுமாக இருக்கும் நெல்லிக்காயில் மேற்படிச் சுவைக் கூறுகளை நம்மால் துல்லியமாக உணர முடியும். பழங்கள் அனைத்திலும் அதிகமான சத்து மதிப்பைக்கொண்டிருப்பது நெல்லிக்கனி. 

நெல்லியை வற்றல், பொடி, ஊறுகாய் என எந்த வடிவத்துக்கு மாற்றினாலும் அதன் சத்துகள் சிதைவதில்லை. ஐந்து வருடங்கள்வரை தன் சத்துகளை இறுக்கிப் பிடித்து வைத்துக்கொள்ளும் பிடிவாத குணமுடையது நெல்லிக்காய். வளரிளம் பருவத்தினருக்கு மிகவும் தேவையானது. உயிர்ச்சத்து மிகவும் தேவைப்படுகிற கர்ப்பிணிகளுக்கு உப்பிட்ட நெல்லிக்காய்களை எத்தனை உண்டாலும் ஆவல் தீராது.

ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாகக் கிடைத்த உப்பு நெல்லி, தற்காலத்தில்  அதிகம் கிடைப்பதில்லை. என்றாலும், சிறுவர்கள் நெல்லிக்காயை நறுக்கி உப்பில் தொட்டு, உமிழை ‘உர் உர்’ரென்று உறிஞ்சிக்கொண்டு கண்கள் மினுக்க உண்பதைக் காணமுடிகிறது. 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22

சதைப்பற்று முழுமையடைந்த நடுத்தர வயதினருக்கும் சதை தளரத் தொடங்கும் பெரியவர்களுக்கும் அப்படி உண்ண முடியாமல்  பற்கள் கூசும். ஏனென்றால், நெல்லியின் மிகுதியான சத்துகளை ஏற்கும் திறனை நடுத்தர வயதினரும், பெரியவர்களும் இழந்துவிட்டிருப்பார்கள்.

‘சாறு மிகுந்த பழங்கள் புளிப்பாக இருப்பதால் அதில் சிட்ரிக் ஆசிட் அதிகமாக இருக்கும். எனவே நெல்லி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் குடலை அரித்துவிடும்’ என்று பரவலாக நம்பப்படுகிறது. சிட்ரிக்கின் அமிலத் தன்மையை மட்டுப்படுத்தக்கூடிய கசப்பு மற்றும் புளிப்புச் சுவையை மேற்படி பழங்கள் இயல்பாகவே கொண்டிருக்கின்றன. உடலில் அமிலத் தன்மை மிகுந்திருந்தால் நெல்லி, எலுமிச்சை போன்றவற்றைப் பார்க்கும்போதே ஒருவிதமான அச்ச உணர்வும், விலகல் உணர்வும் தன்னியல்பாகவே தோன்றும். அப்படியான உணர்வு யாருக்கெல்லாம் தோன்றுகிறதோ அவர்கள் மேற்படி அமிலத்தன்மை உள்ள பழங்களைத் தவிர்க்கலாம். ஆனால், பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் குடலை அரிக்கும் என்பது உடலறிவியலுக்கு ஒவ்வாத கற்பனை. பழங்களின் இயற்கையான அமிலத்தின் தன்மையும்,  செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அமிலத்தின் தன்மையும் ஒன்றாகாது.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் பரவலாக விற்பனைக்கு வந்துவிட்டது. பிற நொறுவிப் பண்டங்களைவிடத் தேனில் ஊறிய நெல்லிக்காய் உடலுக்கு நன்மை செய்யும் என்ற வகையில் அதனை நாம் ஏற்றுக்கொள்வது நல்லது. இரண்டு நெல்லிக்காயை அரிந்து போட்டு, இரண்டு சிட்டிகை உப்பு போட்டு, 200 மி.லி நீர்விட்டு மிக்ஸியில் அடிக்க வேண்டியது. அதை வடிகட்டி, அவசியமானால் ஒரு டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை கலந்து வாரத்துக்கு ஓரிரு முறை குடிக்கலாம். தலைசூடு தணியும். முடியின் வேர்கள் பலப்படுவதால், அதை உறுதியாக்குவதுடன் புதிய முடி வளரவும் துணைசெய்யும். நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, அதனுடன் சாறு வடித்தது போக, மீந்த நெல்லிக்காய் சக்கையைப் போட்டுப் புரட்டி, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22

நிரந்தர சளித் தொல்லை, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கக் கூடாது. அவர்கள் சாறு நீக்கிய மேற்படி சாதத்தை உண்ணும்போது எதிர் விளைவுகள் ஏற்படாது. அதேபோல மேற்படி சக்கையை தேங்காய்ச் சட்னி அல்லது வறுத்த கடலைச் சட்னியுடன் கலந்து இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வெயில் மண்டலமான தமிழகத்தில் பரவலாக விளையும் நெல்லியும் எலுமிச்சையும் மிக முக்கியமான பழ வகைகள். எலுமிச்சை இடம் பெறாத சடங்குகளே இல்லை. சீன, அரேபிய உணவுகளில் எலுமிச்சைக்கு முக்கியமான இடம் அளிக்கப்படும்.

வயிற்றில் அமிலப் பிரச்னை உள்ளவர்கள் ரசத்தில் புளி சேர்ப்பதற்குப் பதில் தக்காளி மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். உடன் எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்டால் நாவுக்குச் சுவையாக இருக்கும். வாசனையில் இன்னும் இரண்டு கரண்டி ஊற்றிச் சாப்பிடத் தோன்றும்.வரவிருக்கும் பனிக் காலத்தில்  சரும வறட்சி பரவலாகக் காணக்கூடிய ஒன்றுதான். எனவே, குளிக்க சோப்புப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.  சாறு பிழிந்து மிகுந்த எலுமிச்சைத் தோலை பக்கெட் தண்ணீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊறப்போடவும்.

குளிக்கும்போது அந்தத் தோலை எடுத்து மேல் முழுவதும் தேய்த்துவிட்டு, எலுமிச்சைத் தோல் ஊறிய நீரை ஊற்றிக் குளித்தால் சரும வறட்சி தெரியாததுடன் மினுமினுப்பாகவும் இருக்கும். கண்கள் குளிர்ச்சி அடையும். இதேவிதமாக ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி தோல்களையும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடித் தோல்களை வெயிலில் உலரவைத்து, காற்றுப் புகாத டப்பியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டியது. அவ்வப்போது டீ தயாரிக்கும்போது ஓர் அங்குலத் தோலை நீரில் போட்டு, நன்றாகக் கொதிவரவிட்டு அதற்குப் பிறகு டீத்தூளைப் போட்டு வடிகட்டினால், டீயின் மணமே கிளர்ச்சியூட்டும். இந்த டீ, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். ரத்தத்தின் அடர்த்தியைத் தணிக்கத் தனியாக மாத்திரை போடவேண்டிய அவசியம் நேராது. ரசம் தயாரிக்கும்போதும் காய்ந்த பழத் தோலைப் பயன்படுத்தலாம். சட்னி அரைக்கும்போதும் மிகச் சிறிய அளவில் பழத்தோலை உடன் சேர்த்து அரைக்கலாம்.  சீயக்காய் அரைக்கும் போது அரப்புத் தூளையும், வெந்தயம், பாசிப்பருப்பு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்வதுண்டு. அத்துடன் ஒரு கிலோ சீயக்காய்க்கு சுமார் நூற்றைம்பது கிராம் காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி பழத்தோலை சேர்த்துக்கொண்டால் நல்லது.

சீயக்காயின் காரத் தன்மை தணிவதோடு சீயக்காய் தேய்ப்பதால் ஏற்படும் சரும வறட்சியும் நீங்கும்; வாசமும் தூக்கும். ஆறு மாதங்கள் கடந்த குழந்தைகளுக்கு இந்த சீயக்காய்த் தூளைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதன் மூலம் சளித் தொல்லை குறையும். சிறு வயதிலேயே ஏதேனும் ஒரு வகையில் பழவாசனையைப் பழக்கப்படுத்திவிட்டால், வளர வளர அவர்கள் செயற்கை மணமூட்டிகளை விரும்ப மாட்டார்கள். சாக்லேட், பிஸ்கட் போன்ற செயற்கை மணமூட்டிய உணவுப் பண்டங்கள் மீதான நாட்டம் குறையும்.

பழப் பயன்பாடு குறித்து மேலும் பல புதிய உத்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

போப்பு மருத்துவ எழுத்தாளர்