ஹெல்த்
Published:Updated:

ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை

ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை
பிரீமியம் ஸ்டோரி
News
ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை

பிரவீன் கிருஷ்ணா, குழந்தைகள் கண் மருத்துவர்ஹெல்த்

ண்புரை... கண்ணில் ஒளி ஊடுருவும் தன்மை குறைந்து போவதை, `கண்ணில் திரை விழுதல்’ அல்லது `கண்புரை’ என்கிறோம். வயதானவர்களை மட்டுமே  பாதிக்கும் பிரச்னையாக இருந்துவந்த கண்புரை இன்று குழந்தைகளையும்கூட பாதிக்கிறது. இது முற்றியநிலையில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை ஒன்றே  இதற்குத் தீர்வாக இருக்கும். 

ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை

``குழந்தைகளை பாதிக்கும் கண்புரை என்பது சிலருக்குப் பிறவிக் குறைபாடாகவும் இன்னும் சில குழந்தைகளுக்கு வளர்பருவத்தில் ஏற்படும் குறைபாடாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று கூறும் குழந்தைகள் கண் மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா  `சைல்டுஹுட் கேட்டராக்ட்ஸ்’ (Childhood Cataracts) எனப்படும் அந்த பாதிப்பு குறித்து விரிவாகப் பேசுகிறார்.

``விழித்திரை மற்றும்  கருவிழியின் செயல்திறனைப் பொறுத்தே பார்வைத்திறன் அமையும். நாம் பார்க்கும் காட்சிகள், வெளிச்சம், வண்ணங்கள் என அனைத்தும் கருவிழி (Cornea) மூலம் லென்ஸைச் சென்றடையும். அங்கிருந்து அவை விழித்திரையை (Retina) அடையும்.  அப்போது கண்ணிலுள்ள புரதங்கள் சிலருக்கு லென்ஸ் பகுதியில் அடர்த்தியாகச் சேர்ந்து விழித்திரைக்குச் செல்லும் ஒளியைத் தடுக்கும். கண்ணில் சேரும் இந்தப் புரதங்களால், லென்ஸின் ஒளிபுகும் தன்மை குறைந்து, பார்வை மங்கலாகும்.  `லென்ஸ் ஒபாசிஃபிகேஷன்’ (Lens  Opacification) எனப்படும் இதுதான் கண்புரைக்கான முதல் அறிகுறி.  எனவே இந்த நிலையிலேயே மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை

கர்ப்ப காலத்தில் தாய்க்கு `ரூபெல்லா’ (Rubella) என்ற நோய்த்தொற்று ஏற்பட்டால், அது பிறக்கும் குழந்தைக்கு கண்புரைப் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நோய்த்தொற்றுக்குள்ளான குழந்தைகள் மிகவும் குறைந்த எடையுடன் பிறப்பார்கள். மூளை மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகளும் ஏற்படலாம்.

ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை

சில குழந்தைகளுக்கு  கண்ணில் அடிபடும்போது வலி, எரிச்சல் எதுவும் ஏற்படாது. ஆனால், சில மாதங்கள் கழித்து அவர்களுக்குப்   பார்வைக்குறைபாடு, பார்வை மங்கலாகத் தெரிவது போன்ற பிரச்னைகள் இருந்தால், அது  கண்புரையாக மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, கண்ணில் அடிபட்டதும் உடனடியாக உரிய சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

சில அறிகுறிகள்

ஒருவருக்கு கண்புரை ஏற்பட்டால் கண் இமைகள் லேசாக மூடத் தொடங்கும் (Wobbling Eyes). இதேபோல் சிலருக்கு கண் விழிகள் தானாகவே அசைந்துகொண்டிருக்கும். அதை `நிஸ்டாக்மஸ்’ (Nystagmus) என்பார்கள். ஓரக்கண்களால் பொருள்களைப் பார்ப்பது, விழித்திரைகள் மூடிக்கொண்டிருப்பது போன்ற பிரச்னைகளும் கண்புரையின் அறிகுறிகளே. பெரும்பாலான குழந்தைகளுக்குத் தங்களுக்குள் ஏற்படும் இந்த மாற்றங்களைத் தெளிவாகச் சொல்லத் தெரியாது. எனவே,  குழந்தைகளின் கண் தொடர்பான எந்த மாற்றத்தையும் பெற்றோர் உதாசீனப்படுத்தக் கூடாது. குழந்தை பிறந்தவுடன், முதல் மூன்று நாள்களுக்குள் கண்களைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிகிச்சைகள்

கண்புரை பாதித்து, பார்வை முழுமையாக மங்கலாகும் சூழலில் `கேட்டராக்ட்’ அறுவை சிகிச்சை செய்யப்படும். அப்போது, புரதம் சேர்ந்த லென்ஸ் முழுமையாக நீக்கப்பட்டு, நீண்டகாலம் பயன்படுத்தப்படும் விதத்தில் லென்ஸ் பொருத்தப்படும். இந்த லென்ஸ், குழந்தையின் வயதுக்கேற்ப தயாரிக்கப் பட்டிருக்கும். குழந்தையின் வயதைப் பொறுத்தே லென்ஸின் வளர்ச்சியும் அமையுமென்பதால், அதைப்பொறுத்தே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

லென்ஸின் வளர்ச்சி, குழந்தையின் நான்கைந்து வயதில்தான் இயல்புநிலைக்கு வரும். ஆகவே, அதன் பிறகுதான் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதிக சக்தி கொண்ட மூக்குக்கண்ணாடி மட்டும் தரப்படும். அறுவை சிகிச்சை சரியாகச் செய்யாவிட்டால், `கண் அழுத்த நோய்’ (Glaucoma), `சோம்பேறிக் கண்’ (Lazy Eye) போன்றவை ஏற்பட்டு பார்வைக்குறைபாடு ஏற்படலாம் என்பதால், தகுதிவாய்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்” என்கிறார் பிரவீன் கிருஷ்ணா.

- ஜெ.நிவேதா