Published:Updated:

முதல் மூன்றாண்டுகள் `கிரிட்டிக்கல் பீரியட்'... குழந்தை வளர்ப்பில் கவனம் பெற்றோரே!

மூளை சார்ந்த வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் திக்குவாய் உள்ளவர்களுக்கும் தொடர்ச்சியான பேச்சுப் பயிற்சியின் மூலம் குறைபாடுகளைக் களையவோ அல்லது குறைக்கவோ இயலும்.

முதல் மூன்றாண்டுகள் `கிரிட்டிக்கல் பீரியட்'... குழந்தை வளர்ப்பில் கவனம் பெற்றோரே!
முதல் மூன்றாண்டுகள் `கிரிட்டிக்கல் பீரியட்'... குழந்தை வளர்ப்பில் கவனம் பெற்றோரே!

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர். செவி வழி பெறுவதுதான் தகவல்களாக, அறிவாக நம் மூளையில் சேகரமாகிறது. ஆனால் ஒரு சிலருக்குப் பிறவியிலேயே கேட்கும் திறன் குறைபாடும் அதன் தொடர் விளைவாகப் பேச்சுத் திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இந்தக் குறைபாடுகளை முயன்றவரைக் களைவது குறித்தும் அதற்கான நவீன சிகிச்சைகள் குறித்தும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் விதமாக உலகெங்கும் ஆண்டின் டிசம்பர் மாத இரண்டாம் வாரம் பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புஉணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகின்றது. குழந்தை பிறந்த முதல் மூன்றாண்டுகள் `கிரிட்டிகல் பீரியட்' எனப்படுகிறது.

பிறந்த சில நாள்களிலேயே குழந்தையின் பிற உடல் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயல்வதுபோல் கேட்கும் திறன் குறைபாட்டைக் கண்டுகொள்ள முடிவதில்லை. எனவேதான் அதை மருத்துவத் துறையில் `ஹிடன் டிஸெபிலிடி' ( Hidden Disability) என்று அழைக்கிறார்கள்.  
குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு அவற்றின் செயல்பாடுகள் மூலம் வெளிப்படையாக அதை நாம் அறிந்துகொள்வது கடினம். தலை நிற்பதில் தொடங்கி ஆ ... ஊ என்று சப்தம் எழுப்பும் காலம் வரைக்கும் குழந்தையின் செயல்பாடுகள் மிகவும் இயல்பானதாகவே இருக்கும். ஆனால் வீட்டில் பெரும் சத்தம் உருவாக்குவதுபோல பாத்திரம் விழும் சத்தமோ அல்லது வேறு சத்தங்களுக்கோ குழந்தை சத்தம் கேட்கும் திசை நோக்கித் திரும்புகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பல பெற்றோர்கள் அப்படிக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.  


பேச்சுக் குறைபாடு குறித்த அலட்சியமும் பெற்றோர்களிடம் மிகுதியாக இருக்கும். முதல் அல்லது இரண்டாம் ஆண்டுக்குள்ளாகவே குழந்தை ஓரிரு வார்த்தைகள் முதல் மழலையாகச் சில சொற்களைக் கூட்டிப் பேசத் தொடங்க வேண்டும். ஆனால், ஒரு சில பெற்றோர் அதைப்  பொருட்படுத்துவதில்லை. மூன்று வயதிற்கு மேல்தான் மருத்துவ ஆலோசனைக்கு வருகிறார்கள்.   
``குழந்தைப் பருவத்தில் ``கிரிட்டிகல் பீரியட்" எனப்படும் முதல் மூன்று வயது மிக முக்கியமான காலமாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை அதிவேகமாக வளர்கிறது. மூளையில் உள்ள நியூரான்களுக்கிடையே மிக நுட்பமான இணைப்பு ஏற்படுகிறது. இந்தக் காலத்தில்தான் குழந்தை ஒரு மொழியைக் கற்றுத்தேர்கிறது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் மொழி, ஒலி வடிவில் காது வழியே மூளையைச் சென்றடையும்பொழுது, அதே மொழி குழந்தையிடம் பேச்சாக வெளிப்படுகிறது.
பிறவி செவித்திறன் குறைபாடு காரணமாக, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பேசும் மொழி, சுற்றுப்புற சப்தங்கள் என எவையும் குழந்தையின் மூளையைச் சென்றடைவதில்லை. இதன் விளைவாகச் செவித்திறன் குறைபாடுடைய குழந்தை பேச்சுத் திறன் வளர்ச்சியில் சக குழந்தைகளைவிடப் பின் தங்கி நிற்கிறது. 

இத்தகைய குழந்தைகளுக்கு கிரிட்டிகல் பீரியட்(Critical Period) வீணடிக்கப்பட்டுவிட்டால், காதுகேள் கருவி பொருத்தப்பட்டாலும், அறுவை சிகிச்சை செய்து காக்ளியார் இம்பிளான்ட் கருவி‌ பொருத்தப்பட்டாலும், குழந்தையின் பேச்சுத் திறனை பேச்சுப் பயிற்சியின் மூலம் மட்டுமே  சீராக்க இயலும். 
பெரியவர்களுக்கும் வேலைச் சூழலால் ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிக நேர ஹெட்போன் (Headphone) பயன்பாடு காரணமாகவும், ஒலி மாசுகாரணமாகவும் இக்குறைபாடு ஏற்படலாம். அவர்களுக்கும் பியூர் டோன் ஆடியோமெட்ரி ( Pure Tone Audiometry) மூலம் குறைபாட்டின் அளவைக்  கண்டறிந்து சிகிச்சை செய்யலாம். 
பேச்சுப் பயிற்சி பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கும் தேவை. குறிப்பாக ஆட்டிசம், எ.டி.எச்.டி(ADHD) உள்ளிட்ட மூளை சார்ந்த வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும்  Be care in child growth stage! (Stuttering / Stammering) உள்ளவர்களுக்கும் தொடர்ச்சியான பேச்சுப் பயிற்சியின் மூலம் குறைபாடுகளைக் களையவோ அல்லது குறைக்கவோ இயலும்.  சில குழந்தைகளுக்கு  உளவியல் ஆலோசனையும் தேவைப்படலாம்.
ப்யூபர்போனியா(Puberphonia) என்பது ஆண் குழந்தைகளுக்குப் பதின் பருவத்தில் ஏற்படும் குரல் மாற்றச் சிக்கலால் சிலருக்குப் பெண் போன்ற மெல்லிய குரல் ஏற்படும். சரியான குரல் பயிற்சி அளிப்பதன்மூலம் , இந்நிலையிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவலாம்.
மூளை முடக்குவாதம்(Stroke), வலிப்பு (Epilepsy)உள்ளிட்ட நோயின் விளைவாக ஏற்படும் அஃபேசியா(Alphasia) எனப்படும் மொழித் திறன் இழப்பைச் சரிசெய்யவும் பேச்சுப் பயிற்சி உதவும்..." என்கிறார் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை செவித்திறன் மற்றும் கேள்விக் குறையுற்றோருக்கான மறுவாழ்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயா. 


இதுதொடர்பான விழிப்புஉணர்வு நிகழ்வு, நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு அளிக்கும் வண்ணம், கேள்வியியல் மற்றும் பேச்சுப் பயிற்சி துறை மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோர் விழிப்புஉணர்வுப் பதாகைகளை ஏந்திப் பேரணி சென்றனர்.  இதை மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
நிகழ்வில் பேசிய காது, மூக்கு, தொண்டை துறையின்  இயக்குநர் பேராசிரியர் முத்துக்குமார்  ``உலகில் 2 சதவிகிதம் மக்கள் கேள்வி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். நமது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  பிறவி செவித்திறன் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளுக்கு  இலவச காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது " என்றார்.