மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு!

அடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு!
பிரீமியம் ஸ்டோரி
News
அடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

சிங்கிள் மதர் பேரன்ட்டிங்கில் உள்ள சிரமங்கள் மற்றும் தீர்வுகளை விளக்குகிறார், மனநல மருத்துவர் ஷாலினி.

‘`சிங்கிள் பேரன்ட்டாக குழந்தையை வளர்ப்பது, மொத்தச் சுமையையும் ஒற்றை ஆளாகத் தாங்குவது சிரமமான விஷயம். குறிப்பாக, தாய்க்கு. அவர் பதற்றமாக உணரலாம்; இயலாமை ஏற்படலாம். ‘என்னால முடியவே இல்லை... இந்தப் பாரத்தை யாராவது கைமாற்றிவிட மாட்டாங்களா?’ என்ற எண்ணம் தோன்றலாம். தூரத்திலிருந்து பார்ப்பவர்கள், ‘ஏன், டீச்சர் வேலை பார்த்து அவ வளர்க்கலையா?’, ‘கூலி வேலைக்குப் போனாலும் அவ தனியா புள்ளைங்களை வளர்த்துடலையா?’ என்று அதைச் சுலபமாக மதிப்பிடலாம். ஆனால், அந்தப் பயணத்தில் அந்தத் தாய்படும் கஷ்டங்களை, கூடவே வாழ்ந்துபார்த்தால்தான் உணர முடியும்.

அடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு!

மாஸ்டர் ரோல் யாருக்கு?

பொதுவாக, ஆண் குழந்தையின் தன்மை வேறு. தனிப்பட்ட முறையில் தன் பையனைப் புரிந்துகொள்ளத் தாய் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் அவன் அம்மாவின் பேச்சைக்கேட்டு வளர்வான். வயதுக்கு வந்து, அவனுக்குத் `தான்' என்ற அக(ம்பாவ)ம் வந்த பிறகு அம்மாவை எதிர்த்துப்பேசுவது, துணிச்சலாக இருப்பது, ரிஸ்க் எடுப்பது போன்ற பழக்கங்கள் தோன்றும். இந்தக் காலகட்டத்தில், ‘சரி, இப்போ நீ வயசுப் பையன். உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. உன்னையே கண்காணித்துக் கொண்டிருப்பதைத் தவிர, எனக்குன்னும் ஒரு வாழ்க்கை இருக்கு; அதை நான் வாழணும்’ என்று அவனையும் இயல்பாகப் புரிந்துகொண்டு, தன்னையும் லகுவாக வைத்துக்கொள்ளும் அம்மாவாக இருக்கும் பட்சத்தில், அவர் தன் மகனைக் கட்டுப்படுத்த நினைக்க மாட்டார். மாறாக, தான் ஒரு மாஸ்டர் போலவும், தன் மகனை ஓர் அடிமை போலவும் மாற்றி வைத்துக்கொள்ளும் அம்மாக்களும் உள்ளனர். இந்தச் சூழலில் வளரும் பையன், மற்ற பெண்களுக்கும் தன்னை அடிமைபோல எண்ணிக்கொள் வான். இவன் பிற்காலத்தில்  தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும், அப்படியே அமைந்தாலும் நல்லபடியாக தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுவதும்  கேள்விக்குறியே. அப்படியே ஈடுபட்டாலும், அதில் அவன் முழு மகிழ்ச்சி அடைவதற்கான வாய்ப்பும் குறைவு.

இன்னொரு பக்கம், சுயசார்பு இல்லாத தாய், தன் மகனிடம் மிகவும் அடங்கிப்போவார். ‘அவனிடம் நாம் நல்ல முறையில் நடந்துகொண்டால்தான் பிற்காலத்தில் அவன் நம்மைப் பாதுகாப்பான்’ என்று தன் ஆண் குழந்தையை ஒரு மாஸ்டர் போலவும், அவனுக்குத் தன்னை ஓர் அடிமை போலவும், அவனுக்கு ஊழியம் செய்தே வாழும் அம்மாவாகிப் போவார். இப்படி தன் அம்மாவைத் தனக்கு அடிமையாக நினைத்து வேலைவாங்கும் பையன், பொதுவாக எல்லாப் பெண்களையும் இவ்வாறு நடத்தவே வாய்ப்புள்ளது. எனவே, இந்த இரண்டு அணுகுமுறைகளுமே தவறு!

அடிமைப்படுத்துவதும் தவறு... அடங்கிப்போவதும் தவறு!

தைரியம் தேவைஅம்மாவுக்குத்தான் குழந்தையை எப்படிக் கையாள  வேண்டும் என்று தெரியும்; வீட்டை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரியும். பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் குடும்பத்தை நடத்தி தலைமை வகிக்கிறார்கள். அம்மாவாக இருப்பதே ஒரு லீடர்ஷிப் ரோல் என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ளும்போதுதான், ‘நான் ஒரு கான்ஃபிடன்ட் லீடர். எனக்குப் பிறகு இந்த லீடர்ஷிப் பொறுப்பை நீ ஏற்று நடத்த வேண்டும்’ என்று அவர்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குவார்கள். அந்தத் தலைமைப் பண்பு இல்லாத இன்செக்யூர்டு பெண்கள், தன் இடத்தை யாராவது பிடித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு, தன் மகன் தன் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்ற ஆசையும், இன்னொருத்தி வந்து தன் மகனைக் கூட்டிப் போய்விடுவாளோ என்ற பயமும் சேர்ந்துகொள்ளும். இதனால், இவர்கள் தானும் சந்தோஷமாக வாழாமல், தன் மகனின் இல்வாழ்க்கையிலும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

தாய் - மகனுக்கு இடைவெளி வேண்டும்பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளுக்குப் பாலியல் எண்ணம் தூக்கலாக இருக்கும். இதனால் அந்தக் காலகட்டத்தில் அம்மாவிடம் அதிகமாகக் கோபப்படுவது, தேவையில்லாமல் அம்மாவைச் சண்டைக்கு இழுப்பது என்றிருப்பார்கள். சிலர், அம்மாவிடமே பாலியல் சீண்டல்கள் செய்வதுகூட நடக்கலாம். அம்மாவைக் கிள்ளுவது, கட்டிப்பிடிப்பது, இடிப்பது என விளையாட்டாகச் செய்வதுபோல செய்வார்கள். அப்பா என்கிற ஓர் ஆள் அந்த வீட்டில் இருந்தால், ‘டேய், என் பொண்டாட்டிடா’ என்று அவர் கர்ஜிக்கும் பயம் அந்தப் பையனுக்கு இருக்கும். மாறான சூழலில் இது நடக்கும்போது, அந்த அம்மாவுக்குப் பாதுகாப்புக்கு யாரும் இருக்க மாட்டார்கள். எதார்த்த வாழ்க்கையில் இது ஒரு சங்கடமான நிலை. எனவே, வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளை சிங்கிள் பேரன்ட் அம்மாக்கள் தள்ளிவைப்பது அவசியம். அப்போதுதான் அந்த இடைவெளியை ஆண் குழந்தை பின்பற்றுவான்; அவனது வளர்ச்சியில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

பிரைவஸி முக்கியம்

‘அம்மாவுக்கு யாரும் இல்லை; நாமதான் அவங்களைப் பாதுகாக்கணும்’ என்று ஓர் ஆண் குழந்தை வளரும்போது, தன் அம்மாவுக்கு நண்பர்கள் இருந்தால் அது அவனுக்குப் பிடிக்காது. ‘நான்தான் இந்த வீட்டுக்கு எல்லாம். அவங்க ஏன் வந்து பேசறாங்க?’ என இது ஈகோ பிரச்னையாக மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, அப்படியான நண்பர்களை மகன் பதின் வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பே, அம்மா பக்குவமாக அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கூடவே, ‘உனக்கு பிரைவஸி இருப்பதுபோல எனக்கும் பிரைவஸி இருக்கிறது’ என்று அவனுக்கான எல்லையையும் அவனுக்குப் புரியவைக்க வேண்டும். பெண் பிள்ளையைக் கண்காணித்து வளர்க்கும் அப்பா, அண்ணனின் ரோல் போல தன்னை, தன் மகன் நடத்த அம்மா அனுமதிக்கக் கூடாது. ‘என் வயதுக்கும் அனுபவத்துக்கும், வாழ்க்கையின் நீள அகலங்கள், நல்லது கெட்டது எனக்குத் தெரியும், நீ என்னை உன் கன்ட்ரோலுக்குள் கொண்டுவர நினைக்கக் கூடாது’ என்ற அணுகுமுறையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல செயல்படுத்த வேண்டும்.

அப்பா இல்லாத ஏக்கம்


சிங்கிள் மதரிடம் வளரும் பெண் குழந்தையைவிட ஆண் குழந்தை, வெளியுலகைச் சந்திக்கும்போது தனக்கு அப்பா இல்லை என்பதை அதிகமாக உணருவான். அப்பாவிடமிருந்து கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உணர்வு, சமூக அங்கீகாரம், அந்தஸ்து இவையெல்லாம் தனக்குக் கிடைக்காமல் போனதைத் தன் பலவீனமாக உணருவான். இதை அம்மாவிடம் சொன்னால் அம்மா வருத்தப்படுவார் என்று, தனக்குள் வெம்பி, தேவையில்லாத பழக்க வழக்கங்களுக்கு ஆளாவது, தன்னம்பிக்கை குறைவது என்றாகிப்போவான். வளரிளம் பருவத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் காரணமாக அவன் அப்படி நடந்துகொள்கிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும். கோபப்படாமல், அவனுக்கு ஏற்றாற்போல அவனிடம் பேசி, பக்குவமாக வழிக்குக் கொண்டுவரும் புரிந்துணர்வு அம்மாக்களுக்கு அவசியம்.

உதவியை நாடலாம்!

என்னதான் பல விஷயங்களையும் முன்கூட்டியே யோசித்துச் செயல் பட்டாலும், பதின்பருவக் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம். அதிலும் சிங்கிள் மதருக்கு இந்தக் கஷ்டம் இரு மடங்காகும். அதற்காக, தன்னை ஒரு சூப்பர் வுமன் என்று உருவேற்றிக்கொண்டு, தன்னைத்தானே வருத்திக்கொண்டு வீம்பாகப் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. குடும்பநல ஆலோசகர், வீட்டுப் பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என பேரன்ட்டிங் பொறுப்புக்குக் கைகொடுக்க எப்போதெல்லாம் பிறரின் உதவி தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர்களை நாட வேண்டும். ஏதேனும் ஒரு பிரச்னை என்றால், இந்தக் கோணத்தில்தான் யோசிக்க வேண்டுமே தவிர, ‘தனியா நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்... பொம்பளையா எவ்வளவு சமாளிக்கிறேன் தெரியுமா’ என சுயபச்சாதாபத்தில் பற்றுகொள்ளக் கூடாது.’’