Published:Updated:

புற்று நோய் சர்ச்சை... ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்புக்குத் தடை!

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளி வந்தன. 

புற்று நோய் சர்ச்சை... ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்புக்குத் தடை!
புற்று நோய் சர்ச்சை... ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்புக்குத் தடை!

'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனம் விற்பனை செய்து வரும் குழந்தைகளுக்கான பவுடரில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, 'ஆஸ்பெஸ்டாஸ்' என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதன் 2 இந்திய உற்பத்திக்கூடங்களில் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இதுநாள் வரை தங்களது குழந்தைகளுக்கு இந்த பேபி பவுடரைப் பயன்படுத்தி வந்த தாய்மார்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு, ஆயில் போன்றவை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அமோகமாக விற்பனையாகி வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளி வந்தன. 

புற்று நோய் சர்ச்சையும் வழக்கும்

இந்த நிறுவனத்தின் பவுடர் சாம்பிள்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 'ஆஸ்பெஸ்டாஸ்' எனப்படும், புற்றுநோய்  ஏற்படுத்தக் கூடிய கனிமப்பொருள் சிறியளவில் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம், சமீபத்தில் செய்தி வெளியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971-ம் ஆண்டு முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகளில் அதன் பங்கு மதிப்பு சரிந்தது. 

இதைத் தொடர்ந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான்சன் அண்டு ஜான்சன்ஸ் நிறுவனம், "நாங்கள் தயாரிக்கும் பவுடரை வைத்து, ஒரு லட்சம் ஆண் - பெண்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பவுடர் பயன்படுத்துவதால், புற்று நோய் ஏற்படாது என்பது, அந்தச் சோதனைகளில் தெளிவாகி உள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைபட்சமானது" எனத் தெரிவித்திருந்தது. 

இதனிடையே, இந்த நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர்களை பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் 22 வழக்குகள் தொடரப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் ஃபாக்ஸ் (62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டு ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் ஃபாக்ஸ் இறந்தார். இந்த நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறிய அவரது குடும்பத்தினர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்குத் தெரிவிக்க தவறிவிட்டது எனத் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர்.  

இது சம்பந்தமான சுமார் 1000 வழக்குகள் மிசௌரி மாநில நீதிமன்றத்திலும், சுமார் 200 வழக்குகள் நியூஜெர்ஸி நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன. மேற்கூறிய சர்ச்சையைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. 

தயாரிப்புக்குத் தடை

இந்த நிலையில், மேற்கூறிய புகாரைத் தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள அந்நிறுவனத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அண்மையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேபி பவுடர், பேபி ஷாம்பூ மற்றும் பேபி சோப் ஆகியவற்றின் தயாரிப்பு மாதிரிகளைச் சேகரித்து, சோதனைக்கு எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், சோதனை முடிவுகள் வெளிவரும் வரை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், அதன் 2 இந்திய உற்பத்திக் கூடங்களிலும், தனது மூலப்பொருள்களைப் (Raw material) பயன்படுத்தி பேபி பவுடர் தயாரிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கடிதம் மூலம் உத்தரவிட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அதிகாரிகள், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தங்கள் உற்பத்திக் கூடங்களுக்கு வந்து டால்கம் பவுடரின் தயாரிப்பு மாதிரிகளைச் சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

"எங்கள் தயாரிப்பான முக அழகுப் பவுடர் பயன்படுத்த பாதுகாப்பானது என்பது உலகம் முழுவதும் பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்ட சோதனைக் கூட ஆராய்ச்சிகளில் நிரூபணமாகி உள்ளது. தற்போது இந்திய அதிகாரிகள் எங்கள் தயாரிப்புகளான பேபி பவுடர், ஷாம்பூ மற்றும் சோப்பு ஆகியவற்றின் மாதிரிகளைச் சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளது வழக்கமான நடவடிக்கைதான்" என்று அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியச் சந்தையில் நம்பர் ஒன் பிராண்ட் 

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரைப் பொறுத்தவரை அது இந்தியாவில் நன்கு அறிமுகமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டாகத் திகழ்கிறது. பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்த மறு ஆண்டிலிருந்தே, அதாவது 1948 லிருந்தே இந்தியாவில் தனது பேபி பவுடரை விற்கத் தொடங்கியது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 130 கோடி. இதில் 28 சதவிகிதம் பேர் 0 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்தான். இந்தியக் குடும்பங்களில் புதிதாகக் குழந்தை பிறந்தால், அந்த வீட்டுக்குச் செல்லும் உறவினர்கள் இந்த நிறுவனத்தின் சோப்பு, பவுடர் மற்றும் ஷாம்பூ உள்ளிட்ட குழந்தை பயன்பாட்டுக்கான பொருள்கள் அடங்கிய பரிசு பெட்டியை வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. 

இந்தியா முழுவதும் மருந்துக்கடைகள், பெட்டிக் கடைகள் முதல் பெரிய பெரிய டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்கள் வரை தனது தயாரிப்புப் பொருள்களை விற்பதற்கான மிகப் பெரிய நெட்வொர்க்கை ஜான்சன் அண்டு ஜான்சன் கொண்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமான விற்பனையிலும் மிகப் பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. 

மேற்கூறிய புற்றுநோய் மூலப்பொருள் சர்ச்சையைத் தொடர்ந்து ராய்ட்டர் செய்தியாளர்கள், இந்தியாவில் பரவலாக மருந்துக் கடைகளில் நடத்திய ஆய்வில் 8 கடைகளில் 7 கடைகளில் ஜான்சன் பவுடர்தான் விற்பனையில் முதலிடத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

அதன் இந்தியப் போட்டியாளரான ஹிமலாயா ஹெர்பல்ஸ், இத்தாலியின் அர்ட்ஸானா போன்ற நிறுவனங்களும் குழந்தைகளுக்கான பவுடர் உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து விற்கின்ற போதிலும், ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் கால்வாசியைக் கூட நெருங்க முடியவில்லை. 

இந்தியச் சந்தையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 178 மில்லியன் டாலராக உள்ளதாகவும், 2022 -ல் இது மேலும் 85 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும் அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்தது. 

இத்தகைய நிலையில், ஜான்சன் பேபி பவுடர் மீதான புற்று நோய் சர்ச்சை, அதன் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் இந்திய தாய்மார்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உண்மை என்ன என்பது இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெளியிட சோதனைக் கூட ஆய்வறிக்கையில்தான் தெரியவரும்.