
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்
இரண்டு வயதுவரை சத்தாகச் சாப்பிட்டு, ஆரோக்கியமாக வளர்ந்த குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்கு மேல் பெரும்பாலும் ஆரோக்கியக் குறைபாடுகள் வராது. அதனால், கருத்தரித்த நாளிலிருந்து குழந்தைக்கு இரண்டு வயது ஆகிறவரைக்கும் பேரன்ட்டிங்கில் பதற்றமாக இருந்த அம்மாக்கள், இனி ரிலாக்ஸ்டாக தங்கள் பிள்ளைகளை வளர்க்கலாம்.

இடது கைப் பழக்கத்தை மாற்றலாமா?
`குழந்தைகள் இரண்டாவது வயதில்தான், தங்களுடைய இயல்புகளைத் தீர்மானிப்பார்கள்’ என்று சென்ற இதழில் சொல்லியிருந்தேன். இயல்புகளை மட்டுமல்ல... இடது கையைப் பயன்படுத்தப்போகிறார்களா அல்லது வலது கையைப் பயன்படுத்தப்போகிறார்களா என்பதையும் இந்த வயதில்தான் குழந்தைகளின் மூளை முடிவெடுக்கும். 95 சதவிகிதக் குழந்தைகள் வலது கைப் பழக்கம்கொண்டவர்கள் என்பதாலேயே அதுதான் மிகச் சரியான விஷயம் என்பதில்லை. அதேபோல, ஐந்து சதவிகிதக் குழந்தைகள் மட்டுமே இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் மற்ற குழந்தைகளைவிட புத்திசாலிகள் என்பதும் கிடையாது. இரண்டுமே சாதாரண விஷயம்தான். படித்த அம்மாக்கள் நிறைந்த இந்தக் காலத்திலும், குழந்தைகளின் இடது கைப் பழக்கத்தைத் தவறென்று நினைத்துக்கொண்டு, அதை மாற்ற முயல்கிறார்கள். இப்படிக் குழந்தைகளின் தன்னியல்பான இடது கைப் பழக்கத்தை மாற்றும்போது, அவர்களின் பலத்தை பலவீனமாக மாற்றுகிறீர்கள் என்று அர்த்தம்.

கைகளைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்களா?
சில குழந்தைகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், இரண்டு கைகளையும் மிகக் குறைவாகப் பயன்படுத்துவது தெரியும். கைகளைக் குறைவாகப் பயன்படுத்துகிற குழந்தைகளின் கை தசைகள் பலவீனமாக இருக்கும். இந்தப் பிரச்னை இருந்தால், உடனே குழந்தைகள்நல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
கண்களில் பிரச்னை இருந்தால், கைகள் காட்டிக்கொடுக்கும்!
கண்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான், குழந்தைகளின் கண்களுக்கு முப்பரிமாண உருவம் கிடைக்கும். இதற்கு, குழந்தையின் இரண்டு பக்க மூளையும் செயல்பட வேண்டும். சில குழந்தைகளுக்கு ஒரு கண்ணில் மட்டும் பார்வை மந்தமாக இருக்கும். இதை ‘சோம்பேறிக் கண்’ (Lazy Eye) என்று குறிப்பிடுவோம். ஒரு குழந்தை எல்லா விஷயங்களையும் வலது கையில் செய்துவிட்டு, ஏதோ ஒரு விஷயத்தை மட்டும், (உதாரணமாக கிரிக்கெட் மட்டையை மட்டும் இடது கையில் எடுத்து வீசினால்) இடது கையில் செய்தால், கண்களில் பிரச்னை இருப்பதற்கான அறிகுறி அது. ‘சோம்பேறிக் கண்’ பிரச்னை உங்கள் குழந்தைக்கு இருப்பதாகச் சந்தேகம் வந்தால், ஒரு கண்ணை மட்டும் கைகளால் மூடி, இன்னொரு கண்ணால் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பார்க்கச் சொல்லுங்கள். இதேபோல இரண்டு கண்களையும் பரிசோதித்துப் பார்த்துக் கண்டறியலாம். இரண்டு வயதிலிருந்து, குழந்தைகள் மற்றவர்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துச் சிரிக்க வேண்டும்; பேச முயல வேண்டும். இல்லை யென்றால், மருத்துவரிடம் சென்று காரணத்தைக் கண்டறியவேண்டியது அவசியம்.
சாதிக்க வேண்டும் என்றால் தூங்க வேண்டும்!
இந்த வயதில் குழந்தைகளின் பகல் தூக்கம் குறையும். அப்படிப் பகல் தூக்கம் குறைந்தாலும், இரவில் குழந்தைகள் நன்கு உறங்க வேண்டும். இரவுத் தூக்கத்துடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 10 மணி நேரத் தூக்கம் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம். ஏனென்றால், குழந்தைகளின் மூளை தன் வளர்ச்சிக்காகத் தூக்கத்தைத்தான் நம்பியிருக்கும். உங்கள் குழந்தைகள் வருங்காலத்தில் சாதிக்க வேண்டுமென்றால், இப்போது நன்கு உறங்க வேண்டும்.

டாய்லெட் ட்ரெய்னிங்கை ஆரம்பியுங்கள்!
2 - 3 வயதுகளில் குழந்தைகளுக்கு டாய்லெட் ட்ரெய்னிங் செய்ய ஆரம்பிக்கலாம். அப்படிச் செய்யும்போது, குழந்தையை தினமும் ஒரே இடத்தில் டாய்லெட் அமர்த்திப் பழக்கப்படுத்துங்கள். சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து டாய்லெட் போகிறார்கள் என்பதை கவனித்து, அந்த நேரத்தில் குழந்தைகளிடம், டாய்லெட் போகிறார்களா என்று கேளுங்கள். முக்கியமான விஷயம், இதை ஒரே வார்த்தையைப் பயன்படுத்திக் கேளுங்கள். தினமும் புதுப்புது வார்த்தைகளைப் பயன்படுத்தி குழந்தைகளைக் குழப்பாதீர்கள்.
தன்னைத் தானே நம்புகிற வயது!
உணவை எடுத்து வாயில்வைப்பது, தண்ணீர் எடுத்துக் குடிப்பது, நடப்பது, எதையாவது கிறுக்குவது, வீட்டுக்குள் யாருடைய உதவியும் இல்லாமல் அங்கும் இங்கும் போவது எனச் சுயமாகப் பல செயல்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.

அவர்களுக்கும் உண்டு உணர்வுகள்!
அன்பு, ஆசை, விருப்பு, வெறுப்பு... ஏன், மன வருத்தம் எல்லாம் வரக்கூடிய வயது ஆரம்பித்துவிட்டது உங்கள் செல்லத்துக்கு. அவர்களுக்குப் பிடிக்காத ஏதோவொன்றை நீங்கள் செய்தால், தங்களுடைய குட்டி முகத்தைத் தூக்கி உம்மென்று வைத்துக்கொள்வார்கள் இல்லையா? அது உணர்வுகளை அறிய ஆரம்பித்ததனால்தான்.
இரண்டு மணி நேரம் மட்டும்தான்!
இரண்டு வயதிலேயே, இந்தக்கால குழந்தைகள் மொபைல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். இதனால் உடம்பில் இருக்கிற மற்ற உறுப்புகளைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள். தலையும் கையும்தான் தங்களுக்கு இருப்பதாக நினைக்கிறார்கள். வேலைகளைச் செய்வதற்கு ஆளை எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார்கள். கார்ட்டூன் கேரக்டர்களை நண்பர்களாக நினைக்கிறார்கள். கற்பனை உலகில் வாழ்கிறார்கள். சுற்றுவட்டத்தில் இருக்கிற நிஜமான உயிர்களோ அல்லது பொருள்களோ அவர்களுடைய கண்களுக்குக் குறைவாகவே தட்டுப்படும். உடலை அசைத்துச் செய்யவேண்டிய வேலைகளை இன்றைய குழந்தைகள் விரல் அசைவில், மூட்டு அசைவில் செய்கிறார்கள் என்பது வேதனை.
குழந்தை வளர்ப்பில் இன்றைக்கு இருக்கிற பெரிய பிரச்னை இதுதான். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், `ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கலாம் அல்லது மொபைலில் விளையாடலாம்’ என்கிறது. அதற்கு மேல் பயன்படுத்தினால், அது தவறு. இதைத் தடுக்க மருத்துவர்களிடம் தீர்வு இல்லை. பெற்றோர்களான நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(வளர்த்தெடுப்போம்...)
- ஆ.சாந்தி கணேஷ்