Published:Updated:

`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி

`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி
பிரீமியம் ஸ்டோரி
News
`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி

தன்னம்பிக்கை

`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி

நான் ஒவ்வொரு முறை தண்ணீருக்குள்ள இறங்கும்போதும், ‘இதுதான் உனக்கான இடம்... உன் வெற்றிக்கான இடம். தோத்துடக் கூடாது தேஜு. நீ மத்தவங்க மாதிரி இல்லை. உன் குறையைப் போக்குற ஒரே இடம் இதுதான். இதுல விட்டுடாம ஜெயிச்சிடு... ஜெயிச்சிடு’னு ஏதோ ஒண்ணு என்கிட்ட சொல்லிட்டே இருக்கும். அதுதான் என்னை இன்டர்நேஷனல் கேம்ஸ்வரை கொண்டு போய் நிறுத்தியிருக்கு அண்ணா’’ - நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் அருவிபோலப் பாய்கின்றன தேஜஸ்வினியிடமிருந்து.

சென்னை, தாம்பரத்துக்கு அருகேயுள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி, பிறவி மாற்றுத்திறனாளி. ப்ளஸ் டூ மாணவி. ஏழு வயதில் பிஸியோதெரபிக்காக நீச்சல் பழகியவர், இன்று ஆசிய அளவிலான பாரா ஸ்விம்மிங் போட்டிகளில் அசத்திக்கொண்டிருக்கிறார். அன்று, ‘ஒரு கையைவெச்சுக்கிட்டு எப்படி நீச்சலடிப்பே?’ என்று கேட்டவர்கள் மட்டுமல்ல, தேஜஸ்வினியின் எதிர்நீச்சலை இன்று பல நாடுகளும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றன. 

`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“எங்களுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் தேஜு பிறந்தா. வரம் வாங்கிப் பிறந்தவ அவ. ஆசை ஆசையா வளர்த்தோம். அவளோட சின்னச் சின்னச் செய்கைகளையும் ரசிச்சு வியந்தோம். ஆனா, ஒன்றரை வயசுலகூட பாப்பா தவழ்றதுக்கு ரொம்ப சிரமப்பட்டா. அவளுக்குனு பார்த்துப் பார்த்து வாங்கிட்டு வந்த விளையாட்டுப் பொருள்களையெல்லாம் அவளால கையில பிடிச்சு விளையாட முடியலை. இடது கையை மட்டும்தான் யூஸ் பண்ணுவா... வலது கை வராது. நாங்களும் எத்தனையோ டாக்டர்ஸைப் பார்த்தோம். யாராலயும் அவளுக்கு என்ன பிரச்னைனு கண்டுபிடிக்கவே முடியலை. மூணு வயசு ஆன பிறகுதான், அவளோட வலது கையில முழங்கை இணையுற இடத்துல பிரச்னை (Congenital Radioulnar Synostosis) இருக்குனு கண்டுபிடிக்க முடிஞ்சுது. இதை இப்படியேவிட்டா வளர வளர ரொம்ப கஷ்டமாகிடும்னு ரெண்டு இடத்துல சர்ஜரி பண்ணி கையைத் திருப்பிவெச்சாங்க. அதுலருந்து அவளால சாப்பிட முடிஞ்சுது; எழுத முடிஞ்சுது. ஆனாலும், கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் பிரச்னை வந்துடுச்சு. மீண்டும் பிளேட்வெச்சு ஆபரேஷன் பண்ணினோம்.

தேஜுவைப் பார்த்து எல்லாரும் பரிதாபப்பட்டாங்க. ‘இந்த மாதிரி பிள்ளைகள்லாம் வளர்ந்ததும் ரொம்பக் கஷ்டப்படுவாங்க. அதுவும் பொண்ணா வேற போயிடுச்சு... கூடுதல் கஷ்டம்தான்’னு எங்களை பயமுறுத்தினாங்க; காயப்படுத்தினாங்க. ஒரு கட்டத்துக்கு மேல, ‘தேஜுவுக்கு இப்படியொரு குறை இருக்குங்கிறதை மறந்து, நாம அவளைக் கொண்டாடணும். நம்மைப் பொறுத்தவரை இணையில்லாத பொக்கிஷம் நம்ம குழந்தைதான்’னு சொல்லி, என் கணவர் ரவிதான் எங்க வீட்டின் சூழலை மாத்தினார்’’ என்ற தேஜஸ்வினியின் அம்மா சுபஸ்ரீயை புன்னகையுடன் பார்க்கிறார் அவர் கணவர் ரவி. வலது கையால் சாப்பிடுவதற்கே சிரமப்படும் தேஜஸ்வினி, நீச்சல் போட்டிகளில் அசத்த ஆரம்பித்தது எப்படி என்று பேச ஆரம்பித்தார் ரவி.

“அப்போ தேஜுவுக்கு ஏழு வயசிருக்கும். பிஸியோதெரபி பண்ணும்போது கைவலி அதிகமா இருந்தது. மேலும், கையில பிளேட் வேற வைக்கவேண்டியதா இருந்தது. அப்போதான் டாக்டர், ‘தண்ணியில இருந்தா வலி தெரியாது. ஸ்விம்மிங் கிளாஸ்ல சேர்த்துவிடுங்க’னு சொன்னார். சும்மா தண்ணியில் இருக்கிறதுக்காக அந்தக் கிளாஸுக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தா. ஏழாவது படிக்கும்போது அவ கையில இருந்த பிளேட்டை எடுத்தப்போ, ‘அம்மா, நான் ஸ்விம் பண்ணட்டுமா?’னு அவளே கேட்டா. நாங்க ஆச்சர்யமும் சந்தோஷமுமா சம்மதிச்சோம். கிளாஸுக்கு போன அடுத்த இருபதாவது நாளலயே மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில கலந்துகிட்டு, சில்வர் மெடல் அடிச்சது எங்க எல்லாருக்குமே பெரிய சர்ப்ரைஸ்.

`விட்டுக்கொடுக்காம ஜெயிச்சுடு!’ - வெற்றிப் பின்னணி சொல்லும் தேஜஸ்வினி

அந்த மெடல், தேஜு வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்திடுச்சு. ‘நம்மளால கதவைத் திறக்க முடியாது; வேகமா எழுத முடியாது; மக்ல தண்ணி எடுத்து குளிக்கக்கூட முடியாது; நாம மத்தவங்ககிட்டயிருந்து வித்தியாசமா இருக்கோம்... நம்மால எதுவுமே முடியாது’னு நினைச்சிட்டு இருந்தவளுக்கு அந்த வெற்றி ரொம்பப் பெரிய ஊக்கமா இருந்துச்சு. அதனால, நாங்க அவளைத் தொடர்ந்து நீச்சல் போட்டிகளுக்கு அழைச்சிட்டுப் போக ஆரம்பிச்சோம்...’’ என்று நிறுத்திய ரவியைத் தொடர்ந்தார் சுபஸ்ரீ.

``ஒருமுறை சிவகங்கையில நடந்த போட்டிக்கு அவளை அழைச்சிட்டுப் போயிருந்தப்போதான், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஸ்விம்மிங் பத்தி எங்களுக்குத் தெரியவந்தது. அங்கேயிருந்த கோச் ஒருத்தர் பாப்பாவைப் பார்த்துட்டு, ‘இவ்வளவு நல்லா ஸ்விம்மிங் பண்றியே! நீ பாராவுல பண்ணினா இன்னும் பெரிய அளவுல சாதிக்க முடியும்’னு நம்பிக்கை கொடுத்தார். அதுக்குப் பிறகுதான் ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல், இன்டர்நேஷனல் லெவல்னு பாப்பா முன்னேறினா. தேஜுவோட திறமை அவளைப் போன வருஷம் துபாய்ல நடந்த யூத் ஏஷியன் பாரா ஸ்விம்மிங் போட்டியில கொண்டுபோய் நிறுத்திச்சு. அதில் மெடல் வாங்கின நான்கு இந்தியர்கள்ல தேஜுவும் ஒருத்தி.

அதுக்கப்புறம் ஜெர்மனியில நடந்த போட்டியில ஃபைனல் லெவல்வரை முன்னேறினா. கடைசியா ஜகார்த்தாவுல நடந்த போட்டியிலயும் கலந்துகிட்டா. 2015, 2016, 2017-னு தொடர்ந்து மூணு வருடங்கள் மெடல் வாங்கி சாதனை படைச்சிருக்கா. தேஜுவோட கனவு 2020-ம் ஆண்டில் நடக்கப்போற பாரா ஒலிம்பிக்ஸ். எனக்கு நம்பிக்கை இருக்கு... நிச்சயமா என் பொண்ணு அதில் கலந்துக்குவா” என்று கண்களில் நீர் மின்ன சுபஸ்ரீ சொல்ல, “அம்மா, `என் பொண்ணு `ஒலிம்பிக்ஸ்ல கலந்துகிட்டு கோல்டு மெடல் வின் பண்ணுவா’னு நம்பிக்கையோடு சொல்லுங்க” என்று தேஜஸ்வினி, அம்மாவின் வார்த்தைகளுக்கு உற்சாகமும் உத்வேகமும் பாய்ச்சுகிறார்.

‘‘நான் முதன்முறையா கலந்துகிட்ட நீச்சல் போட்டியில, என் பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு, ‘நீ இந்தக் கையைவெச்சுக்கிட்டு ஏன் எங்களோட ஸ்விம் பண்ண ஆசைப்படுறே? உன்னால எங்களுக்கு இணையான  போட்டியாளரா ஆக முடியுமா?’னு கேட்டா. அந்தப் போட்டியில நான் ஜெயிச்சேன். அவ தூரத்துல நின்னு நான் சர்டிஃபிகேட் வாங்குறதைப் பார்த்தா. அப்போதான் `திறமைங்கிறது உடல்ல இல்லை, மனசுலதான் இருக்கு’னு எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துச்சு.

அம்மாவும் அப்பாவும் எனக்காக எல்லாமே செய்வாங்க. அவங்களுக்காக நான் ஏதாச்சும் செய்யணும்னு தோணிச்சு. ஒவ்வொரு போட்டியிலும் என்னைத் தூண்டிவிடுறது அதுதான். தேசிய அளவிலான போட்டிகள்ல, இந்தியா சார்பாக நான் விளையாடுற பெருமையை, சந்தோஷத்தை எப்படிச் சொல்றதுனு தெரியலை. போன டிசம்பர்ல நடந்த இன்டர்நேஷனல் லெவல் போட்டில, நான்தான் இந்திய அணியை ரெப்ரசென்ட் பண்ணியிருந்தேன். அன்னிக்கு என் பர்த் டே வேற. இந்த ரெண்டு சந்தோஷங்களுடன், அந்தப் போட்டியில் நான் மெடல் வாங்கின சந்தோஷமும் சேர்ந்துக்கிச்சு. போட்டிக்கு முன்னதா, ‘நீ ஜெயிக்கலைன்னாலும் வருத்தப்படக் கூடாது. இந்தியாவை நீ ரெப்ரசென்ட் பண்ணினதே நமக்குப் பெரிய சந்தோஷம்’னு எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்க. ரிசல்ட் அறிவிச்சப்போ, சில்வர் மெடல் வாங்கினதா என் பெயரைச் சொல்ல, மறக்க முடியாத நொடி அது.

இப்போ என்னோட ஒரே லட்சியம் 2020-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்ஸ்ல கலந்துக்கிட்டு கோல்டு மெடல் வின் பண்ணணும்ங்கிறது மட்டும்தான். அது கொஞ்சம் கஷ்டம்தான்னு தெரியும். அதுக்காக அந்தக் கனவை விட்டுட முடியாது. தினமும் தூங்கும்போதெல்லாம் என் கனவுல ஒலிம்பிக்ஸ்ல நான் ஜெயிச்சதுக்குப் பிறகு தேசிய கீதம் ஒலிக்கிறதும், நம்ம இந்தியக் கொடி பறக்கிறதும்தான் வந்து போகுது. அந்தக் கனவை நான் நிச்சயம் நிஜமாக்கிக் காட்டுவேன். அதுக்கு என்னோட கோச் அரவிந்த் நயினார் ரொம்ப பக்கபலமா இருக்கார்.”   தன்னம்பிக்கையோடு தேஜஸ்வினி பேசும்போது நமக்கும் அந்த பாசிட்டிவ் கரன்ட் பாய்கிறது.

நாங்களும் காத்திருக்கிறோம் வாழ்த்துச் சொல்ல!

-மு.பார்த்தசாரதி

படங்கள்: தே.அசோக்குமார்