மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 18

குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 18
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 18

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

குழந்தைகளின் மூன்று முதல் நான்கு வயதுவரையிலான ஒரு வருட காலத்தில் அவர்களிடம் நிகழவேண்டிய இயல்புகள், நிகழக் கூடாத இயல்புகள் என்னென்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 18

* உலகத்தையும் தன் எதிர்காலத்தையும் எதிர்கொள்வதற்கான முதல் காலடியை உங்கள் குழந்தைகள் எடுத்துவைக்கிற வயது இது. தனக்கான தேவைகள் என்னென்னவென்று தெரியும். பக்கத்தில் இருக்கிற குழந்தைகளிடம் நட்பு பாராட்டத் தெரியும். உங்கள் குட்டிப் பறவைக்கு சிறகுகள் முளைத்து, வெளியுலகத்தைப் பார்க்க ஆசைப்படுகிற வயது இது. அதனால்தான் இந்த வயதில் பிள்ளைகளை முறைப்படி பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பிக்கிறோம்.

* ஆணோ, பெண்ணோ இந்த வயதில் அவர்கள் எந்நேரமும் சந்தோஷமாகச் சுற்றித் திரிவார்கள். அவர்களைக் கொஞ்சினாலும் தங்களை விடுவித்துக்கொண்டு விளையாட்டே நோக்கமென்று ஓடுவார்கள். இந்த வயதில் அவர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாதீர்கள்.

குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 18



* ‘விளையாடி முடித்தவுடன் பொருள்களை எடுத்த இடத்திலேயே வை; பொருள்களை தாறுமாறாகப் போடாதே’ போன்ற அவர்களின் வயதுக்கான ஒழுக்க விதிகளைக் கற்றுக்கொடுங்கள். இதன் தொடர்ச்சியாக வகுப்பில் தன் டேபிளில்தான் தன் பையை வைக்க வேண்டும் என்கிற ஒழுக்கம், நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணுதல், பகிர்ந்து வாழ்தல், தன்னுடைய வாட்டர் பாட்டில், எல்லோருக்கும் பொதுவான வாட்டர் கேன் ஆகியவற்றை சொல்லித் தராமலேயே புரிந்துகொள்வார்கள். அந்தப் பக்குவம் வர ஆரம்பித்துவிட்டதால், ஏன், எதற்கு என்ற கேள்விகள் குறைய ஆரம்பிக்கும்.

* குட் டச், பேட் டச், அறிமுகமில்லாதவர்களிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லித் தந்தால், அதன் அடிப்படை அர்த்தம் புரியவில்லையென்றாலும், கவனமாக உள்வாங்கிக்கொள்வார்கள்.

* இந்த வயதில் குழந்தைகளை மதிய வேளையில் தூங்க வைக்காதீர்கள். அவர்களே பள்ளிக்கூடம் போய் வந்த களைப்பிலும், நண்பர்களுடன் விளையாடிவிட்டு வந்த களைப்பிலும் தூங்கினால் சரி. ஆனால், நீங்கள் வற்புறுத்தித் தூங்க வைத்தால், இரவில் நேரத்துக்குத் தூங்க மாட்டார்கள். அப்படியே நேரத்துக்குத் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் வராது. இந்தப் பிரச்னை தொடர்ந்தால், குழந்தைகளின் ஞாபகசக்தி குறையும்.

* நகைச்சுவையைப் புரிந்து சிரிப்பார்கள். கள்ளங்கபடம் அறியாத பருவம் என்பார்கள் இல்லையா? அந்தப் பருவம் இதுதான்.

குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 18

* இந்த வயதில் குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். ஆனால், வார்த்தைகளைக் கோத்து பேசுகையில் குழம்பிவிடுவார்கள். அந்தக் குழப்பத்தை, ‘குழந்தை பொய் சொல்கிறது’ என்று நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

* `அடுப்படியில் விளையாடக் கூடாது; மாடிப்படிகளின் கைப்பிடி மீது சறுக்கக் கூடாது; கத்தரிக்கோல், கத்தி, அரிவாள்மணை என்று ஆபத்தான விஷயங்களுடன் விளையாடக் கூடாது’ போன்ற எச்சரிக்கைகளைக் கொடுங்கள். இது விளையாட்டாக அடிபடுகிற வயதும்கூட.

* இந்த வயதில் பேய், பூதம் போன்ற பயங்களெல்லாம் உங்கள் குழந்தையின் உலகத்தில் நுழைய ஆரம்பித்திருக்கும் என்பதால், `பூதத்துக்கிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்’ என்பது போன்ற பயமுறுத்தல்கள் வேண்டாம்.

இந்த வயதில் குழந்தைகளிடம் நிகழக் கூடாத விஷயங்கள், நீங்கள் பயப்படவேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

* குழந்தை அடிக்கடி நடை தடுமாறினால்... படி ஏறத் தடுமாறினால்... க்ரேயான்ஸைக் கையில் பிடிக்க முடியாமல் தவித்தால்... நீங்கள் வரைந்த வட்டத்தைப் பார்த்து அவர்களால் வட்டம் போட முடியாமல் தவித்தால்... வார்த்தைகளில் `என்னுடைய பொருள், உன்னுடைய பொருள்’ என்று பிரித்துப் பேசத் தெரியாமல் இருந்தால்... பந்தைத் தூக்கிப் போட்டு விளையாட முடியாமல் இருந்தால்... சைக்கிள் ஓட்ட முடியாமல் இருந்தால்... அவர்களுடைய வளர்ச்சிநிலையில் பிரச்னை இருக்கலாம்.

* சில குழந்தைகளுக்கு இந்த வயதிலும் பேச்சு சரியாக வராமலிருக்கும். வாயில் எச்சில் சுரந்துகொண்டேயிருக்கும். ‘அம்மா அப்பா விட்டுட்டுப் போயிடுவாங்களோ’ என்ற பயத்தில் அவர்களைவிட்டே ஒதுங்கி இருப்பார்கள். இதை `Separation Anxiety’ என்போம். இது ஓர் அதிகப்படியான உணர்வு; பெரிய பிரச்னையும்கூட. நாம் நடந்துபோகும்போது, `கீழே விழுந்துவிடுவோமோ’ என்று பயந்துகொண்டேயிருந்தால் எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட ஓர் உணர்வு இது. `டீச்சர், டாக்டர்’ போன்ற ரோல் ப்ளே விளையாட்டு பிடிக்காமல் இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசாமல் இருப்பது, மற்ற குழந்தைகளுடன் விளையாடப் பிடிக்காமல் இருப்பது, தனி உலகத்தில் இருப்பது... இவையெல்லாம் ஆட்டிசத்தின் ஆரம்பகால அறிகுறிகள்.

* பொதுவாகக் குழந்தைகள் நாம், `எதைச் செய்யாதே’ என்று சொல்கிறோமோ அதைத்தான் சரியாகச் செய்வார்கள். அதன் பெயர் சேட்டை. இதைத் தாண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அதாவது, பெற்றவர்களின் சொல்பேச்சுக் கேட்கிற செல்ஃப் கன்ட்ரோல். சில குழந்தைகள் ‘குளிக்க வா’ என்றால் வர மாட்டார்கள். டிரஸ் போட்டுக்கொள்ள மறுப்பார்கள். தூங்கப் போவதற்கு முன்னால் ‘சிறுநீர் கழிக்கப் போ’ என்றாலும் செய்ய மாட்டார்கள். இவையெல்லாம், குழந்தையிடம் அதிகமாக எதிர்க்கும் குணம் இருப்பதற்கான அறிகுறி. இதை நாங்கள் `புரட்சி’ என்று சொல்வோம். குழந்தைகள் புரட்சி செய்யக் கூடாது. இந்த வயதில் நீங்கள் சொல்வதை, சொல்லிக் கொடுப்பதை குழந்தைகள் செய்யவில்லை என்றால், சொல்பேச்சுக் கேளாமை பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

(வளர்த்தெடுப்போம்...)

ஆ.சாந்தி கணேஷ் - படங்கள்: சி.சுரேஷ்பாபு

குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது! - ஆனந்தம் விளையாடும் வீடு - 18

மாம்பழம் காக்கும்!

`வை
ட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை; தட்டம்மை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பவை’ என்று பரிந்துரைக்கிறது உலக சுகாதார நிறுவனம். பால் பொருள்கள், மஞ்சள் மற்றும் பச்சை நிறக் காய்கறிகள், மாம்பழம், மிளகாய் இவையெல்லாம் வைட்டமின் ஏ நிறைந்தவை.