Published:Updated:

பிப்ரவரி 8-ம் தேதி 2.26 கோடி மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள்!- என்ன பயன்?

பிப்ரவரி 8-ம் தேதி 2.26 கோடி மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள்!- என்ன பயன்?
பிப்ரவரி 8-ம் தேதி 2.26 கோடி மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள்!- என்ன பயன்?

லகளவில், குழந்தைகள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தினால், அதில் மூன்றில் ஒரு பகுதியினர் குடற்புழுவால் பாதிக்கப்பட்டிருப்பர்' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். வறுமைமிக்க நாட்டிலுள்ள குழந்தைகள் மத்தியில், குடற்புழு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பது கூடுதல் தகவல். வயிற்றில் குடற்புழு பாதிப்பு என்பது நாள்பட்ட பிரச்னை வகையைச் சேர்ந்தது. பெரியவர்களை விடவும், குழந்தைகள்தான் குடற்புழுவால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றன ஆய்வுகள். 

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் குடற்புழு பிரச்னை அதிகம் ஏற்படும் என்பதால், மத்திய அரசின் சார்பில் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வருடம் ஒருமுறை குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி முதற்கட்டமாக மாத்திரைகள் வழங்கவேண்டும் என்று தேசிய சுகாதாரத் திட்டத்தின் செயலாளர் பிரித்தீ சூடன் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில், வரும் பிப்ரவரி 8-ம் தேதி தமிழகத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தமிழகப் பொதுச்சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் பேசினோம். ``உலகச் சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இந்தியாவில் 1 முதல் 14  வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 24.1 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் இருக்கின்றனர். இந்தப் பிரச்னையை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்காகவே குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. 
ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்டு 10-ம் தேதிகள் குடற்புழு நீக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் பிப்ரவரி 10-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், 8-ம் தேதி குடற்புழு நீக்க நாளாகத் தமிழகத்தில் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் என அனைத்திலும் பிப்ரவரி 8 -ம் தேதி ஆல்பென்டாசோல் (Albendazole) என்ற மாத்திரை விநியோகிக்கப்படும். 2,26,000,00 பேருக்கு மாத்திரைகள் விநியோகிக்கப்பட உள்ளன.

2 வயதுக்குட்பட்ட குழந்தையெனில் 200 மி.கி. அளவும், 2 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 400 மி.கி. அளவும் மாத்திரை வழங்கப்படும். கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்படும். விடுபட்டவர்களுக்கு பிப்ரவரி 14 -ம் தேதி மீண்டும் மாத்திரை வழங்கப்படும். 19 வயதுக்குட்பட்ட அனைவரும் மாத்திரையைத் தவறாமல் வாங்கி உட்கொள்ள வேண்டும்" என்றார்.

வயிற்றில் குடற்புழு அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகளைக் கொடுக்கும்போது மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். குடற்புழுக்கள் மற்றும் மாத்திரையின் தன்மை இரண்டும் சேர்வதால் ஏற்படும் பிரச்னைதான் இது. `குழந்தையைக் காற்றோட்டமான பகுதியில் படுக்கவைத்து, உப்பு சர்க்கரை கரைசல் கொடுத்தால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும். அறிகுறிகள் அதிகமானாலோ, தொடர்ந்து இருந்தாலோ அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்' எனச் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடற்புழு பாதிப்பு குறித்தும், ஆல்பென்டாசோல் மாத்திரை குறித்தும் பொதுநல மருத்துவர் அர்ஷத் அகிலிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

``குடற்புழு பாதிப்புக்கான அடிப்படைக் காரணம், தனிமனித சுகாதாரக் குறைபாடுதான். குழந்தைகள் அசுத்தமான இடங்களில் விளையாடும்போது மண்ணில் இருக்கும் புழு வகைகள், குழந்தைகளின் கைகளைச் சென்றடையும். அசுத்தமான கைகளைக் குழந்தைகள் வாயில் வைக்கும்போது, அந்தப் புழுக்கள் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கும். குடலைச் சென்றடையும் புழுக்கள், வளர்ச்சியடைந்து பிரச்னைகளை ஏற்படுத்தும். பிரச்னை தீவிரமடையும்போது பசியின்மை, ரத்தசோகை,  குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். புழுக்களில் நாடாப் புழு, நூல் புழு, கொக்கிப் புழு, சாட்டைப்புழு, தட்டைப் புழு  எனப் பல வகைகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான வழிதான் குடற்புழு நீக்க மாத்திரைகள். 

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில், குடற்புழுவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படுவது உலகச் சுகாதார நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்க பெற்றோர் முழுப் பங்களிப்பை அளிக்க வேண்டும். அரசு வழங்கும் குடற்புழு நீக்க மாத்திரையைக் குழந்தைகள் முறையாக உட்கொண்டார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். 

ஆல்பென்டாசோல் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது, அதன் அளவில் மிகக்கவனமாக இருப்பது அவசியம். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால், குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுப் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

அதேபோல, இந்த மாத்திரையை நன்கு சப்பிச் சுவைத்துச் சாப்பிட வேண்டும் அல்லது நன்கு பொடியாக்கி நீரில் கலந்து குடிக்கக் கொடுக்கலாம். ஆல்பென்டாசோல் மாத்திரையுடன், இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது வேறு ஏதேனும் ஊட்டச்சத்து மாத்திரைகளைச் சேர்த்து இரண்டையும் ஒன்றாகச் சில மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் குழந்தையின் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.  
குடற்புழுப் பிரச்னையைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை நகம் வெட்டுவது, வெளியில் விளையாடச் சென்றால் காலணி அணிந்துகொள்வது, கழிவறையிலிருந்து வெளிவந்த பிறகு கைகளைச் சோப்புப் போட்டு நன்றாகக் கழுவுவது போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்" என்றார்.