Published:Updated:

'பேரன்பு' பாப்பாவின் 'ஸ்பாஸ்டிக்' பிரச்னைக்கு தீர்வே இல்லையா? உண்மை என்ன?

ஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டால், தசைச் செயல்பாடுகளில்தான் இறுக்கம் ஏற்படுமே தவிர, அறிவு வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

'பேரன்பு' பாப்பாவின் 'ஸ்பாஸ்டிக்'  பிரச்னைக்கு தீர்வே இல்லையா? உண்மை என்ன?
'பேரன்பு' பாப்பாவின் 'ஸ்பாஸ்டிக்' பிரச்னைக்கு தீர்வே இல்லையா? உண்மை என்ன?

`பேரன்பு'... கடந்த வாரம் வெளியாகி அனைவரையும் கசிந்துருகச் செய்த திரைப்படம். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகள் - தந்தை அனுபவிக்கும் வாழ்வின் பெரும் துயரங்களை, அழகான கவிதையாகச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ராம். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையாக `தங்கமீன்கள்' படத்தில் நடித்த சாதனா நடித்திருக்கிறார். கை, கால்கள் வளைந்து, வாய் இழுத்தபடி, தன் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்துகொள்ள இயலாத குழந்தையாக அவரது நடிப்பு அனைவரையும் கொள்ளை கொண்டது.

படத்தின் ஆரம்பக் காட்சியில் மம்மூட்டி, `நாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்' என்பார். சாதனாவின் பாத்திரம் அந்த வார்த்தைகளை 100 சதவிகிதம் உண்மையாக்குகிறது. இன்னொரு காட்சியில் `என் குழந்தைக்கு இருக்குற பிரச்னைக்குப் பேர் `ஸ்பாஸ்டிக்' (Spastic), தமிழ்ல சொல்லணும்னா மூளை முடக்குவாதம்.

இந்தப் பிரச்னையை அலோபதி, சித்தா, ஆயுர்வேதா.. இப்படி எந்த மருத்துவத்தாலயும் சரிசெய்யமுடியாது . ஏன்னா இது நோய் இல்லை'' என விரக்தியாகப் பேசுவார். 

உண்மையில், மூளை முடக்குவாதப் பிரச்னையைச் சரிசெய்யவே முடியாதா? எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையின் நரம்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் லஷ்மி நரசிம்மனிடம் பேசினோம்,

``செரிப்ரல் பால்சி (Cerebral palsy) எனப்படும் மூளை முடக்குவாதப் பிரச்னை ஒரு நரம்பியல் குறைபாடு. மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் நரம்புக் கற்றைகளில் ஏற்படும் பாதிப்பால்தான் இந்தக் குறைபாடு உருவாகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தசைகளின் ஒருங்கிணைவு தடைப்படும். அதன் காரணமாக, தசைகள் இறுகிக்கொண்டு கை, கால்கள் செயல்படமுடியாமல் போகும். 

குறிப்பாக, உடலின் எந்தவொரு இயக்கத்துக்கும் அதையொட்டியுள்ள தசைகள் இறுக்கமாகவும் (Agonist), அதற்கு எதிர்புறம் உள்ள தசைகள் நெகிழ்வாகவும் (Antaganist) இருக்கவேண்டும். உதாரணமாக நாம் கையை மடக்கவேண்டும் என்றால், மணிக்கட்டுக்குக் கீழ் உள்ள தசைகள் இருக்கமாகவும் மணிக்கட்டுக்கு மேல் உள்ள தசைகள் நெகிழ்வாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் கையை மடக்கமுடியும். ஆனால், இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இரண்டு தசைப் பகுதிகளுமே இறுகி, கையை மடக்க முடியாத நிலை ஏற்படும். நரம்புகளின் குறைபாட்டால், மூளையிலிருந்து தசைப் பகுதிகளுக்கு வரவேண்டிய சிக்னல்கள் சரியாக வந்து சேராமல் இருப்பதே இதற்குக் காரணம்.

ஸ்பாஸ்டிக் செரிப்ரல் பால்சி (Spastic cerebral palsy), டிஸ்கைனடிக் செரிப்ரல் பால்சி (Dyskinetic cerebral palsy), ஹைப்போடானிக் செரிப்ரல் பால்சி(Hypotonic cerebral palsy), அட்டாக்ஸிக் செரிப்ரல் பால்சி (Ataxic cerebral palsy) மற்றும் மேற்கண்ட மூன்றும் கலந்த மிக்ஸ்டு செரிப்ரல் பால்சி (Mixed cerebral palsy) என இதில் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான குழந்தைகள் இந்த `ஸ்பாஸ்டிக் செரிப்ரல் பால்சியால்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதில், ஸ்பாஸ்டிக் டைப்லிஜியா (Spastic diplegia), ஸ்பாஸ்டிக் ஹெமிபிலிஜியா (Spastic hemiplegia), ஸ்பாஸ்டிக் குவாட்ரிபிலிஜியா (Spastic quadriplegia) என மூன்று வகைகள் உள்ளன.

இதில் ஸ்பாஸ்டிக் டைப்லிஜியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கால் பகுதியில் தசைகள் விரைத்துச் சரியாக நடக்க முடியாமல் போகும். ஒரு சிலருக்குத் தோள்பட்டைகளிலும் இந்தப் பாதிப்பு ஏற்படும். ஸ்பாஸ்டிக் ஹெமிபிலிஜியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலின் ஒரு பகுதி முழுவதும் தசைகள் பாதிக்கப்பட்டு சரியாகச் செயல்பட முடியாமல் போகும். தோள்பட்டை தொடங்கி பாதம் வரை இந்தப் பாதிப்பு இருக்கும். 

ஸ்பாஸ்டிக் குவாட்ரிபிலிஜியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒட்டுமொத்தமாக உடல் முழுவதும் பாதிப்பு இருக்கும். கை, கால், வாய் எனப் பல பகுதிகள் பாதிக்கப்படும். ஸ்பாஸ்டிக் வகை செரிப்ரல் பால்சியிலேயே இதுதான் மிகவும் வீரியமான ஒரு பாதிப்பு. `பேரன்பு' திரைப்படத்தில் காண்பிக்கப்படும் குழந்தைக்கும் இந்தப் பாதிப்புதான். 

பிரசவ காலத்தில், தாய்க்குக் கர்ப்பப்பையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்படும். தவிர, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தாலோ, குறைவான எடையில் பிறந்திருந்தாலோ, பிறக்கும்போது மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலோ, பிறந்தவுடன் ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ,  மூளைக்கு போதிய ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படும். அதனால், அங்க அசைவுகளுக்குக் காரணமான மூளை நரம்பில் பாதிப்பு ஏற்படும். 

ஒருமுறை, இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதைச் சரிசெய்யவே முடியாது. முறையான சிகிச்சை, பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் தசைகளின் இறுக்கம்  குறைவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, ஆக்குபேஷனல் தெரபி, ஹைட்ரோ தெரபி, பிசிக்கல் தெரபி போன்ற சில தெரபிகளின் மூலமாக இந்தப் பாதிப்பைக் குறைக்க முடியும். தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பதற்கு பேக்லோஃபென் (baclofen),  குளோனாஸிபம்(Clonazepam) போன்ற மருந்து, மாத்திரைகளும் இருக்கின்றன. அதேபோல, தசை இறுக்கத்தைக் குறைப்பதற்கான மருத்துவ உபகரணங்களும் தற்போது கிடைக்கின்றன. 

தற்போதைய நவீனத் தொழில்நுட்பத்தில் பேக்லோஃபென் (Baclofen) மாத்திரையை வாழ்வழியாக உட்கொள்வதற்குப் பதிலாக, இன்ட்ராதெகல் பேக்லோஃபென் பம்ப்-ஐ (Intrathecal baclofen pump)முதுகுத் தண்டில் பொருத்திக்கொண்டால், நிரந்தரமாகத் தசைகளின் இறுக்கத்தைக் குறைக்கமுடியும். சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த பம்ப் கிடைக்கிறது. 

அரசு மருத்துவமனைகளில் பொட்டுலினம் டாக்ஸின் (Botulinum toxin) என்கிற ஊசி இலவசமாகப் போடப்படுகிறது. உடலின் எந்தத் தசை இறுக்கமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதியில் இந்த ஊசி போடப்படும். ஆறு மாதத்துக்குத் தசைகள் நெகிழ்வுத் தன்மை கொடுக்கும். உலகளவில் பல குழந்தைகள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை இந்த ஊசியைப் போட்டுக்கொள்கிறார்கள். 

ஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டால், தசைச் செயல்பாடுகளில்தான் இறுக்கம் ஏற்படுமே தவிர, அறிவு வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, பல துறை வல்லுநர்களாகச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அவ்வளவுதான் வாழ்க்கை என முடங்கிப் போகத் தேவையில்லை'' என நம்பிக்கை விதைக்கிறார் மருத்துவர் லஷ்மி நரசிம்மன்.