Published:Updated:

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று- கதறும் பெற்றோர்!

மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு வயதான பெண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று- கதறும் பெற்றோர்!
கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று- கதறும் பெற்றோர்!

மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு வயதான பெண் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி பெயர் சித்ரா. தற்போது திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

அப்போது பெண் குழந்தையின் உடல் எடை குறைவாக இருந்ததால் ஒரு வாரத்திற்கும் மேலாக ஐ.சி.யூ-வில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார்கள். அதன்பிறகு, நலமாக இருந்த அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வருடங்கள் கழித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. பதறிப்போன விஸ்வநாதன் குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார். `குழந்தையின் உடல் நிலை மோசமாக இருக்கிறது, இங்குப் பார்க்க முடியாது' என்று சொல்லி கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளார்கள். 

கோவை அரசு மருத்துவமனையில் ஒரு வாரக் காலம் குழந்தைக்குச் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு, ஆறு மாதங்கள் கழித்து குழந்தைக்கு உடல் முழுவதும் தடிப்புகளும், காதுகளுக்குப் பின்புறம் கட்டியும் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்கள். அப்போது குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

உடனடியாக விஸ்வநாதன், சித்ரா மற்றும் அவர்களின் மற்றோர் ஆண் குழந்தையின் ரத்தங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால், அவர்கள் மூன்று பேருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தினால்தான் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர் விஸ்வநாதனின் குடும்பத்தினர். 

இதுகுறித்து விஸ்வநாதனிடம் பேசினோம், ``திருச்சி ஜி.ஹெச்-ல உடல் எடை கம்மியா இருந்ததுக்குதான் ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. ஆறு மாசத்துக்கு முன்னால குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஆச்சு. அப்போ கோவை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிட்டு வந்தோம். டெஸ்ட்லாம் எடுத்துப் பார்த்துட்டு, `குழந்தையின் ஹார்ட்ல ஓட்டை இருக்கு. ஆனால், அதுக்கு பயப்படாதீங்க. சரி பண்ணிறலாம்'னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு, `ரத்தம் கம்மியா இருக்கு'னு சொல்லி ஒரு டாக்டர் ரத்தம் ஏத்தினார். அந்த ரத்தம் முழுசா ஏறுறதுக்கு முன்னாடியே இன்னொரு டாக்டர் வந்து அதைக் கழற்றிட்டார். 

`ஏன் டாக்டர் பாதியிலேயே கழட்டுறீங்க'னு நான் கேட்டப்போ, `இது வயசானவங்க ரத்தம்'னு சொன்னார். எனக்கு அப்போ ஹெச்.ஐ.வி பத்தியெல்லாம் தெரியாது. இப்போதான் என்ன நடந்திருக்குன்னு புரியுது. கோவை ஜி.ஹெச்ல கேட்டால், `நீங்க குழந்தையை வேற எங்கேயாச்சும் காட்டியிருப்பீங்க. அங்கிருந்துதான் பரவியிருக்கும். இங்கிருந்து பரவ வாய்ப்பே இல்லை’னு சொல்றாங்க. திருச்சி ஜி.ஹெச்ல குழந்தை பிறந்ததிலிருந்து நாங்க வேற எங்கேயும் காட்டல. திருப்பூர் அரசு மருத்துவமனையிலயும் குழந்தைக்கு எந்த ட்ரீட்மென்டும் கொடுக்கல. ஒரே ஒருமுறை திருப்பூர்ல குழந்தைக்குத் தடுப்பூசி போட்டோம். மத்தபடி வேற எங்கேயும் நான் குழந்தையைக் காட்டலே. புகார் கொடுக்க ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். `சும்மா வாயால சொன்னாலாம் கம்ப்ளைன்ட் பதிவு செய்ய முடியாது. ஆதாரம் கொண்டுக்கிட்டு வாப்பா..’னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க.

நான் எங்கிருந்து ஆதாரத்தைக் கொண்டுகிட்டுப் போகமுடியும், என் குழந்தைக்கு கோவை ஜி.ஹெச்-லேயிருந்துதான் ஹெச்.ஐ.வி பரவியிருக்கு. அரசாங்கம்தான் என் குழந்தையின் எதிர்காலத்திற்குப் பதில் சொல்லணும். நான் சாதாரண தினக்கூலி...  எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..." என்கிறார் கண்ணீரோடு.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகனிடம் கேட்டோம்.

``அந்தக் குழந்தைக்கு ரத்தச் சிவப்பு அணுக்கள்தான் ஏற்றினோம். அதில் ஹெச்.ஐ.வி தொற்று பரவாது. என்றாலும் அந்தக் குழந்தைக்குச் செலுத்தப்பட்ட ரத்த மாதிரியை ட்ராக் செய்து அதை மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தோம், அதில் ஹெச்.ஐ.வி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தைக்கு இங்கிருந்து ஹெச்.ஐ.வி வைரஸ் பரவவில்லை. வேறு எங்கிருந்தாவது பரவியிருக்கலாம். குழந்தைக்குத் தேவையான சிகிச்சையை வழங்கி வருகிறோம்” என்று முடித்துக்கொண்டார்.