Published:Updated:

5, 8-ம் வகுப்புக்கு பப்ளிக் எக்ஸாம்... குழந்தைகளின் மனநிலை, உடல்நிலையைப் பாதிக்கும்! - குழந்தைகள் உளவியலாளர் எச்சரிக்கை!

நம் நாட்டைப் பொறுத்தவரை பப்ளிக் எக்ஸாம் என்றால் மார்க் வாங்குவது மட்டுமே. குழந்தைகளைச் சரியாக விளையாட விடாமல், தூங்க விடாமல், மார்க்கின் பின்னால் ஓட வைக்கவே பொதுத்தேர்வுகள் உதவும்.

5, 8-ம் வகுப்புக்கு பப்ளிக் எக்ஸாம்... குழந்தைகளின் மனநிலை, உடல்நிலையைப் பாதிக்கும்! - குழந்தைகள் உளவியலாளர் எச்சரிக்கை!
5, 8-ம் வகுப்புக்கு பப்ளிக் எக்ஸாம்... குழந்தைகளின் மனநிலை, உடல்நிலையைப் பாதிக்கும்! - குழந்தைகள் உளவியலாளர் எச்சரிக்கை!

தேர்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே பள்ளி மாணவர்கள் மத்தியில் பயம் தொற்றிக் கொள்ளும். நன்றாகப் படிக்கும் மாணவனாக இருந்தாலும்கூட, காரணமில்லாமல் எழும் அந்தத் தேர்வு பயத்தைத் தவிர்க்கமுடியாது. அதிலும் பொதுத்தேர்வு என்றால் சொல்லவே வேண்டாம். `எக்ஸாம் ஃபீவர்' தொற்றிக்கொள்ளும். சிலருக்குச் சாப்பிடப் பிடிக்காமல் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். ஒரு மாணவன் பொதுத்தேர்வு எழுதுகிறான் என்றால், அக்கம் பக்கத்து வீடுகளில் தொடங்கி, தூரத்து ஊரில் இருக்கும் சொந்தக்காரர்கள் வரை தேர்வைப் பற்றி விசாரித்தே பயத்தை அதிகரிக்கச் செய்துவிடுவார்கள். பிள்ளைகள் எடுக்கும் மதிப்பெண்ணில்தான் குடும்ப கௌரவமே அடங்கியிருக்கிறது என்று பெற்றோரும் குழந்தைகளை `படி... படி...' என்று படுத்தி எடுத்துவிடுவார்கள்.

வீடுகளில் மட்டுமல்ல, பள்ளிகளிலும் அதே நிலைதான், சிறந்த பள்ளி எனப் பெயர் வாங்க வேண்டுமென்பதற்காக மாணவர்களுக்கு ஸ்பெஷல் க்ளாஸ், சண்டே கிளாஸ் என வறுத்தெடுப்பார்கள். மாணவப் பருவத்தைக் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும்கூட, தேர்வு நேரத்தில் பயத்துடன் படிப்பதுபோன்ற கனவுகள் பலருக்கு வருவதுண்டு. இதுபோன்ற நிலைக்கு உளவியல் ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதே காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். 

பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறைதான் நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனால், அப்துல்கலாம் போன்ற கல்வியில் சாதித்த மனிதர்கள் இப்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறை சரியல்ல என்கின்றனர். `மாணவர்கள் புத்தகங்களைத் தங்களுடன் வைத்துக்கொண்டு பார்த்து எழுதும் முறையே சரி' என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். இது தேர்வின்போது மாணவர்களுக்கு எழும் தேவையற்ற பதற்றத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்விதமாக ஒரு செய்தி உலாவருகிறது. 

5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதே அந்தச் செய்தி. 

5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தது தமிழக அரசு. இதையடுத்து, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடாது என்றும் மாநில அரசுகள் விரும்பினால் பின்பற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், திடீரென 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வைக் கொண்டுவரும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அவசர, அவசரமாகச் சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், இந்தக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று ஆறுதல் அளித்திருக்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். அநேகமாக, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

கல்வித் தரத்தை மேம்படுத்தவும், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ பொதுத்தேர்வுகளுக்காக மாணவர்களை ஆரம்பத்திலிருந்தே தயார் செய்வதற்காகவும்தான் இந்தப் புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், இது `மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும்' என்று சொல்லும் குழந்தைகள் உளவியல் நிபுணர் பூங்கொடி, அதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கினார்.

``நம் நாட்டில் ஏற்கெனவே இருக்கும் மிகப்பெரிய சிக்கலே, தேவைக்கதிகமாக மாணவர்களை தேர்வுக்குத் தயார் செய்வதுதான். அரசின் இந்த அறிவிப்பு அதை இன்னும் அதிகப்படுத்தும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம்; அதனால் போட்டிகளும் அதிகம். உதாரணமாக, 60 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தாலே மருத்துவம் படிக்கமுடியும் என்றால், பலர் அதற்குப் போட்டியிடும்போது 95 சதவிகிதத்துக்கும் மேல் எடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. அதனால், மாணவர்களை மார்க் எடுக்கும் மெஷின்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். படித்ததில் அவர்கள்  என்ன தெரிந்துகொண்டார்கள்  என்பதைவிட, எவ்வளவு மார்க் வாங்குகிறார்கள் என்றுதான் பார்க்கிறோம். அதுதவிர, 6 ம் வகுப்பிலிருந்தே நீட், ஐ.ஐ.டி கோச்சிங் என அவர்களுக்குக் கூடுதல் சுமைகளைக் கொடுத்து வருகிறோம். 

எஸ்.எஸ்.எல்.சி வரை நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு குழந்தை, பதினொன்றாம் வகுப்பில் ஃபெயிலாவது இங்கு நடக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம், இங்கே நடைமுறையில் இருக்கும் மனப்பாட முறைக் கல்வியே. ஆனால், நாம் நன்றாகப் படிக்கவில்லையென்று குழந்தைகளைக் குறைகூறிக் கொண்டிருக்கிறோம். முதலில் இங்கிருக்கும் கல்வி முறையை மாற்ற வேண்டும். 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்றால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்க ஆரம்பிப்பார்கள். அவர்களை எப்படியாவது மனப்பாடம் செய்ய வைத்து, பாஸ் ஆக்கும் முயற்சியில் இறங்குவார்கள். அதனால், குழந்தைகளுக்கு இன்னும் கூடுதல் சுமையாகுமே தவிர அவர்களது கற்றல் திறன் மேம்படாது.

கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களது திறனை மேம்படுத்த வேண்டும். மேலை நாடுகளில் இந்த முறைதான் நடைமுறையில் இருக்கின்றன. எந்தெந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கவேண்டும். இதுபோன்ற முறைகளின் மூலமே கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும். மாறாக, குழந்தைகளை வதைக்கக் கூடாது. குழந்தையின் வளர்ச்சி என்பது கல்வியைச் சார்ந்தது மட்டுமல்ல. மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, சமூகத்துடன் அளவளாவுவது எனப் பல்வேறு பரிமாணங்களில் அது நடைபெறும். அதற்கு இதுபோன்ற தேர்வு முறைகள் தடையாக இருக்கும்.

இதுபோன்ற திடீர் அறிவிப்பு தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்குத் தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். அதனால் அவர்களது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். கோபப்படுதல், பொருள்களைத் தூக்கி எறிதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். மன பாதிப்புக்கு ஆளாவார்கள். மன அழுத்தம் அதிகரித்தால் உடலில் கார்டிசால் என்னும் ஹார்மோன் சுரக்க நேரிடும்போது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். அதனால் காய்ச்சல், சளி போன்ற உடல் நலப் பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். 

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நம் நாட்டைப் பொறுத்தவரை பப்ளிக் எக்ஸாம் என்றால் மார்க் வாங்குவது மட்டுமே. குழந்தைகளைச் சரியாக விளையாட விடாமல், தூங்க விடாமல், மார்க்கின் பின்னால் ஓட வைக்கவே பொதுத்தேர்வுகள் உதவும். பள்ளியின் பெயரைக் காப்பாற்ற குழந்தைகளுக்கு இன்னும் நெருக்கடி கொடுப்பார்கள். இன்னும் சிலர் பள்ளியை விட்டு நீக்கவும் செய்வார்கள். அதனால் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மையும், அவ நம்பிக்கையும் ஏற்படும். அதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவது நோக்கமாக இருந்தால் ஒவ்வொரு பள்ளியிலும் அதற்கான சிறப்பு வகுப்புகளை உருவாக்கி பயிற்சிகள் வழங்கவேண்டும். பொதுத்தேர்வுகளை அதிகரித்தால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும்கூட நெருக்கடி அதிகரிக்கும்'' என்கிறார் உளவியல் நிபுணர் பூங்கொடி.