மேலைநாடுகளில் 6 முதல் 7 வரையிலான வயதை, `மிகப் பெரிய மாற்றங்கள் நடக்கிற வயது’ என்பார்கள். மிக முக்கியமான அந்த ஒரு வருட காலத்தைப் பற்றித்தான் இந்த இதழிலும் பேசப்போகிறேன்.

7 வயதை நெருங்கும் குழந்தைகள், எதிர்ப்பாலினத்துடன் நட்பு பாராட்டுவதைவிட, தன்னுடைய பாலினத்துடன்தான் அதிகம் நட்பு பாராட்டுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனிமேல் உங்கள் பிள்ளைகள் அறிமுகமில்லாதவர்களுடனும் தயக்கமில்லாமல் பழக ஆரம்பிப்பார்கள். அதனால் குட் டச், பேட் டச் பற்றி இதுவரை சொல்லித் தராத பெற்றோர்கள் உடனே சொல்லிக்கொடுத்துவிடுங்கள்.
மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிற பக்குவம் குழந்தைகளுக்கு 7 வயதைத் தொடப்போகிற இந்த நேரத்தில்தான் வரும். ‘நீ அந்த பொம்மையை எடுத்து வீசினா, அம்மாவுக்குக் கஷ்டமா இருக்கும்ல’ என்றால், அதைப் புரிந்துகொள்வார்கள்.
7 வயதுக்கு மேல்தான் குழந்தைகளுக்கு விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியும். இந்த வயதில் அவர்களுக்கு சரி அல்லது தப்பு என்பது மட்டுமே தெரியும். நாம் யோசிப்பது மாதிரியெல்லாம் அவர்களால் சிந்திக்க முடியாது. அதனால், அவர்களுடைய ‘தவறு’களை ‘அது ஏன் தவறு’ என்று விளக்கிச் சொல்லுங்கள். அவர்களுடைய ‘சரி’களை உடனே பாராட்டுங்கள். ‘நீ செய்யறதெல்லாம் தப்பு’ என்று விமர்சிக்காதீர்கள்.

எல்லாக் குழந்தைகளும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தங்களைத் தாங்களே ‘நான் பாப்பா’, ‘நான் குழந்தை’ என்று சொல்லிக்கொள்வார்கள். தன்னைவிட சின்னக் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை இந்த வயதில் அவர்கள் புரிந்துகொள்வார்கள். உங்களுடைய முதல் குழந்தை இந்த வயதில் இருந்தால், இந்த நேரம்தான் நீங்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கான சரியான நேரம்.
இந்த வயதில் சில குழந்தைகள் தம் வயதிலுள்ள மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார்கள். இதற்கு மருத்துவரீதியாக எந்தக் காரணமும் சுட்டப்படவில்லை. அதனால், உங்கள் குழந்தை இப்படி நடந்துகொண்டால், ‘என் குழந்தை ஏன் வித்தியாசமா இருக்கா’ என்று பயந்துவிடாதீர்கள். அது சிலருக்கு இயல்பே.
இந்த வயதில் பல பொருள்களை முன்னால் வைத்தாலும், பிடித்த பொருள்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டவட்டமான விருப்பம் அவர்களுக்கு இருக்கும்.
புது இடங்களில் உங்கள் குழந்தை எப்படி நடந்துகொள்வான் என்பதை நீங்கள் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. வீட்டில் நன்றாக நடனமாடுகிற குழந்தையை ஸ்டேஜில் ஆடச் சொன்னால் ஆட மாட்டான். அது எல்லா வயதிலும் நடக்கிறதுதானே என்றால், 6 முதல் 7 வயதுக்கு முன்னால்வரை கூச்சத்தில், பயத்தில் ஆட மறுத்தவர்கள், இந்த வயதில் தனக்கு அது பிடிக்கவில்லை என்று ஆட மறுப்பார்கள்.
`நான் சிவப்பாக இருக்கிறேன்’, `என் தலைமுடி சுருள் சுருளாக இருக்கிறது’, `நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்’, `நான் கிரிக்கெட் பிளேயர்’ என்று தங்களைப் பற்றி தாங்களே ஒரு தெளிவுக்கு வருவார்கள். தான் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்ற எண்ணத்துடன் அவர்கள் வரையும் ஓவியத்தை பட்டென்று ‘நல்லாவே இல்லை’ என்று விமர்சித்து விடாதீர்கள். அது அவர்களைக் காயப்படுத்திவிடும்.
அவர்கள் நன்கு பழகிய இடங்களில் மனதில் தோன்றியதை, பட்டென்று பேசுகிற இயல்பு வரும். உதாரணமாக, ‘என்னைப் பொய் சொல்லாதேனு சொல்லிட்டு, நீங்க மட்டும் பொய் சொல்றீங்க’ என்பார்கள். சில விஷயங்களை அதன் பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் செய்வார்கள்; உங்கள் குழந்தைகளை ஒருமித்த எண்ணமுடைய மற்ற குழந்தைகளுடன் விளையாடவிட்டுப் பாருங்கள்... ஒரு செளகர்யத்தை அதில் உணர்வார்கள். உணர்வுகளைச் சுலபமாக வெளிப்படுத்துவார்கள்.
சில குழந்தைகள் அடங்காமல் நிறைய கோபப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களை தனியாகக் கூப்பிட்டு கண்டியுங்கள். பொதுவெளியில் வேண்டாம். அவர்களின் கோப உணர்வு அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
தன் பிரச்னையை யாரிடம் கொண்டு சென்றால், தனக்குச் சாதகமாக இருக்கும் என்பதை இந்த வயதில்தான் கண்டுபிடிப்பார்கள். ‘இரு... எங்கம்மாகிட்ட சொல்றேன்’, ‘எங்கப்பாகிட்ட சொல்றேன்’ என்று அவர்கள் சொல்வதற்கு, ‘எங்கம்மா உன்னைவிட ஸ்ட்ராங்; எங்கப்பா உன்னைவிட விவரமான ஆளு; நீ செம அடி வாங்கப்போறே’ என்று அவர்கள் மனதுக்குள் நினைக்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த வயதில் உடலின் பேலன்ஸ் நன்றாக இருக்கும்; தசைகளும் நன்றாக இருக்கும்; எழுதுவார்கள், வரைவார்கள்; சின்னச் சின்னப் பொருள்களையும் அழகாக ஹேண்டில் செய்வார்கள். உச்சரிப்பு சுத்தமாக இருக்கும்.
தினமும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொள்வார்கள். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் தெரிந்து பேசுவார்கள். தங்கள் வயதுக்கான கதைப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பிப்பார்கள்.
இந்த ஒரு வருடத்தில் நீங்கள் அவர்களை இதமாக விமர்சிக்கிற அதே நேரத்தில், அவர்கள் அந்த விமர்சனங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளவும் பழக்குங்கள். இல்லையென்றால், இந்த மாதிரி குழந்தைகளுக்கு பின்னாளில் நடத்தை பிரச்னை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. தங்களிடமிருக்கும் குறைகளையும் புரிந்துகொள்ள அவர்களைப் பழக்கிவிட்டால், பின்னாளில் சந்தோஷமாக இருப்பார்கள். உதாரணமாக, பாலை வேண்டுமென்றே கொட்டுவதற்கும், தெரியாமல் கொட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தெரியாமல் கொட்டினால், எப்படி இரண்டு கைகளாலும் பிடித்து எடுத்துச்செல்வது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். தெரிந்தே கொட்டினால், கண்டிப்பு நிச்சயம் தேவை. இந்த உதாரணம் குழந்தை வளர்ப்பின் அத்தனை படிநிலைகளுக்குமே பொருந்தும்.
(வளர்த்தெடுப்போம்...)
ஆ.சாந்தி கணேஷ்

உளவியல் உண்மைகள்!
புது விஷயத்தை கற்றுக் கொள்ளும்போது, பழைய விஷயங்கள் மறந்துவிடும். உதாரணமாக, `ஆட்டோமேட்டிக்’ கார் ஓட்டக் கற்றுக்கொள்பவருக்கு, திடீரென `கிளட்ச்’ உள்ள காரை ஓட்டக் கற்றுக்கொடுத்தால், தடுமாற நேரும். ஆதலால், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், கடைசி நேரத்தில் புதிய விஷயங்களைப் படிப்பதைக் கைவிட வேண்டும். ஏனென்றால், அவர்களுக்குத் தேர்வின்போது கடைசியாகப் படித்த விஷயங்கள் நினைவில் இருக்குமளவுக்கு, பழைய பாடங்கள் நினைவில் இருக்காது.