Published:Updated:

குழந்தை அதிகநேரம் மொபைலில் விளையாடுகிறதா... தூக்கக்குறைபாடு அபாயம்...!

குழந்தை அதிகநேரம் மொபைலில் விளையாடுகிறதா... தூக்கக்குறைபாடு அபாயம்...!
குழந்தை அதிகநேரம் மொபைலில் விளையாடுகிறதா... தூக்கக்குறைபாடு அபாயம்...!

குழந்தைகள் போதுமான அளவு தூங்க அனுமதிக்கவேண்டும். இரவு 8 முதல் 9 மணிக்குள் அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் அவர்கள் உடலில் தூக்க சுழற்சி முறையாக நடைபெற்று, காலை 4 அல்லது 5 மணிக்கு தானாகவே எழுந்துவிடுவார்கள்.

ந்தாம் வகுப்பு படிக்கும் சுட்டிப்பெண் ஆர்த்தி. படிப்பிலும் கெட்டி. பள்ளி அரையாண்டுத் தேர்வில் முதல் ரேங்க் வாங்கிய மகிழ்ச்சியில் அப்பாவிடம்  விவரத்தைச் சொன்னாள். மகள் முதலிடம் பெற்ற பூரிப்பில் அப்பா, ``ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியிருக்க... உனக்கு என்ன கிஃப்ட் வேணும்டா?" என்றார். 

``அப்பா, என் நண்பர்கள் எல்லாரும் ஸ்மார்ட் போன், டேப்ல நிறைய கேம்ஸ் விளையாடுறாங்க...எனக்கும் ஒண்ணு வாங்கித் தாங்கப்பா" என்று கேட்டது அந்தக் குழந்தை. அப்பாவும் வாங்கிக் கொடுத்துவிட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு பள்ளியில் வகுப்பு ஆசிரியரைச் சந்திக்குமாறு ஆர்த்தியின் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அவசரம் அவசரமாகப் பள்ளிக்குச் சென்றார் ஆர்த்தியின் அப்பா. ``கொஞ்ச நாளாவே உங்க பொண்ணுக்கு படிப்பில் நாட்டமில்ல...வகுப்பில் யாரோடும் பேசுறதும் இல்ல, தனியாவே இருக்கா...எப்போதும் சோர்வா இருக்கா...பாத்துக்கோங்க" என்று எச்சரித்து அனுப்பினார் வகுப்பு ஆசிரியை. 

பதற்றத்துடன் மனநல மருத்துவரிடம் மகளை அழைத்துச் சென்றனர் அந்தப் பெற்றோர். மருத்துவர் ஆர்த்தியிடம் பேசியதில், செல்போனில் குழந்தை விளையாடத் தொடங்கியதிலிருந்து அதன் செயல்பாடுகள் மாறத் தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இரவில் அதிக நேரம் செல்போனில் விளையாடியதால், போதிய தூக்கம் இல்லாமல், தூக்கக் குறைபாட்டால் குழந்தை பாதிக்கப்பட்டதன் விளைவே, பள்ளியில் ஆசிரியரின் புகாராக வெளிப்பட்டிருக்கிறது. 

ஆர்த்தி மட்டுமல்ல, பெரும்பாலான குழந்தைகள் தூக்கக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். `இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்பில் படிக்கும்  மாணவர்களில் சுமார் 73 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம்' என்கிறது ஓர் ஆய்வு. போதிய தூக்கம் இல்லாததால் குழந்தைகளின் அன்றாடச் செயல்பாடுகள், உடல்நலம், படிப்பு, மனநலம் என அனைத்துமே பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து மனநல மருத்துவர் டாக்டர் ஆனந்த் பிரதாப்பிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

``ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜெட் பயன்பாடு அதிகரித்தல், தூக்கத்துக்கு ஏற்ற சூழல் இல்லாதது, பெற்றோர் வீட்டிற்கு வர தாமதிப்பது, உறவினர்களின் வீட்டில் குழந்தைகளை விட்டுச்செல்வது, பெற்றோர் இடையே நிகழும் சண்டை சச்சரவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள். 

10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரவில் சரியான நேரத்தில் தூங்கிவிடுவார்கள். இரவு குறிப்பிட்ட நேரம் ஆனதும்

சோர்வாகிவிடுவார்கள். செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தால்கூட அப்படியே போட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். ஆனால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு எதையும் அறிந்துகொள்ளும், ஆராய்ந்துகொண்டிருக்கும் ஆர்வம் (Curiosity) அதிகமாக இருக்கும். இதனால் தூக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு நீண்ட நேரம் விழித்து இருப்பார்கள். 

இதே நிலை நீடிக்கும்போது பகல் நேரத்தில் சோர்வு, தூக்கக் கலக்கம், எதிலும் கவனம் இல்லாத நிலை, யாருடனும் பழகாமல் தனித்து இருக்கும் எண்ணம், சிடுசிடுவென்று எரிச்சலுடன் காணப்படும் நிலை ஆகியவை ஏற்படும். இதனால் படிப்பில் கவனமில்லாமல் போகும், ஞாபக சக்தி குறையும். மனநிலையில் பாதிப்புகள் மட்டுமன்றி தலைவலி, கண் எரிச்சல் போன்ற உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்.

குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுவதற்குப் பெற்றோரும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகின்றனர். அரசுப் பணியில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தன் மகனுக்குப் பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுப்பதாக எண்ணிக்கொண்டு, காலையில் 4 மணிக்கு கராத்தே வகுப்பு, 6 மணிக்கு நீச்சல் பயிற்சி... அது முடிந்ததும் பள்ளி... பள்ளி முடிந்ததும் மாலையில் டியூசன் என அனுப்பிக்கொண்டே இருந்தார். மகனை அனைத்துத் துறையிலும் சிறப்பானவனாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார் அந்த அதிகாரி. ஆனால் மகன், அனைத்துத் துறையிலும் தோற்றுப்போனான். காரணம், குழந்தைப் பருவத்தில் அந்தக் குழந்தைக்குப் போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை. பயிற்சி... பயிற்சி என ஓடிக்கொண்டே இருந்ததால் தூக்கம் இல்லாமல் போனது. இதனால் எதிலும் கவனம் இல்லாமல், ஆர்வத்தை இழந்து, வகுப்பில் தூங்கி வழிந்தபடியே இருந்திருக்கிறான். இதனால் ப்ளஸ் டூ தேர்வில் குறைவான மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றான். அதன் பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டான். அதில் தேர்ச்சிபெற முடியாமல், வாழ்க்கையே தோல்வியில் முடிந்துவிட்டது. அன்றாடத் தூக்கம் பாதிக்கப்பட்டதன் விளைவு ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டது.

எனவே, குழந்தைகள் போதுமான அளவு தூங்க அனுமதிக்கவேண்டும். இரவு 8 முதல் 9 மணிக்குள் அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் அவர்கள் உடலில் தூக்க சுழற்சி முறையாக நடைபெற்று, காலை 4 அல்லது 5 மணிக்கு தானாகவே எழுந்துவிடுவார்கள். தாமதமாகத் தூங்கும் குழந்தைகள் தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு, காலையில் தாமதமாக எழுவார்கள்.

இரவு நன்றாகத் தூங்கும் குழந்தைகள் காலையில் சுறுசுறுப்பாக தங்கள் பணிகளைச் செய்வார்கள். எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டுவார்கள். படிப்பிலும் கவனம் செலுத்தமுடியும். எனவே, உங்கள் குழந்தைகளை நன்றாகத் தூங்க அனுமதியுங்கள். தூக்கத்துக்குத் தடையாக இருக்கும் கேட்ஜெட், டிவி என எந்த விஷயமாக இருந்தாலும் அதை அவர்களிடமிருந்து விலக்கி வையுங்கள்" என்றார்.

குழந்தைகளுக்கான தூக்க அட்டவணை

வயது நேரம்
1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 12 முதல் 16 மணி நேரம்
1 முதல் 2 வயது 11 - 14 மணி நேரம்
3 முதல் 5 வயது 10 - 13 மணி நேரம்
6 முதல் 12 வயது 9 - 12 மணி நேரம்
13 முதல் 18 வயது 8 - 10 மணி நேரம்       

இரவு நேரத் தூக்கம் ஒரு மனிதனின் அடுத்தநாள் இயக்கத்துக்கான உந்துசக்தி. தூக்கத்துக்கான மருத்துவரின் ஆலோசனைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல;  பெரியவர்களுக்கும்தான். அதனால் என்ன இடர்பாடுகள் இருந்தாலும் தூக்கத்தை மட்டும் ஒத்திவைக்காதீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு