Published:Updated:

பாசிப்பயறு குளியல் பொடிக் குழந்தைகளின் சருமத்தை வறண்டு போக வைக்குமா?!

அதிகப்படியான கெமிக்கல்களால் புற்று நோய் பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது

பாசிப்பயறு குளியல் பொடிக் குழந்தைகளின் சருமத்தை வறண்டு போக வைக்குமா?!
பாசிப்பயறு குளியல் பொடிக் குழந்தைகளின் சருமத்தை வறண்டு போக வைக்குமா?!

குழந்தைகளைக் குளிப்பாட்ட கெமிக்கல் நிறைந்த சோப்புகளை தவிர்த்து, வெயில் காயவைத்து அரைத்த பாசிப்பயறு மாவினை பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்குக் குளிப்பாட்டப் பயன்படுத்துகின்றனர். ஆனால், பாசிப்பயறு மாவு குழந்தைகளின் சருமத்தை வறண்டு போக வைக்கும் என்கிற பயம் அம்மாக்களுக்கு உண்டு. அதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் எனச் சமூக வலைதளங்களில் பதிவாகப் போட்டு வருகிறார்கள் பல அம்மாக்கள். அவர்களின் சந்தேகங்களை அப்படியே சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராவிடம் கேட்டோம்.

``பொதுவாகக் குழந்தைகளின் சருமம் மிருதுத்தன்மை கொண்டது. அதில் கெமிக்கல் நிறைந்த சோப்பினையோ, பவுடர்களையோ பயன்படுத்தும் போது ஸ்கின் அலர்ஜி, வறட்சி போன்றவை ஏற்படலாம். அதிகப்படியான கெமிக்கல்களால் புற்று நோய் பரவ வாய்ப்பு இருப்பதாகக்கூட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பாரம்பர்யப் பொருள்களைப் பயன்படுத்தும்படி மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு வலியுறுத்துகின்றனர். சோப்பினைத் தவிர்க்க நினைக்கும் தாய்மார்களின் முதல் சாய்ஸ் பாசிப்பயறு மாவுதான். ஆனால், அதைப்பயன்படுத்துவதால் சருமம் வறட்சி அடைகிறது என்பது எல்லாம் உண்மையல்ல. குழந்தைகளுக்குக் குளியல் பொடி தயார் செய்யும் போது, பாசிப்பயறு மாவுடன் என்ன பொருள்களையெல்லாம் சேர்க்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சில தாய்மார்கள் பாசிப்பயறு மாவுடன், அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஒன்றாக்கி அதைக் குழந்தைகளைக் குளிப்பாட்ட பயன்படுத்துவார்கள். அரிசி மாவு உடலில் உள்ள எண்ணெய்த் தன்மையை நீக்கிவிடும் என்பதால் சரும வறட்சி ஏற்பட்டிருக்கும். மற்றபடி வெறும் பாசிப்பயறு மாவு மட்டும் பயன்படுத்தினால் சரும வறட்சி ஏற்பட நிச்சயமாக வாய்ப்பு இல்லை.

பாசிப்பயறு மாவு மட்டும் பயன்படுத்தும் போது குழந்தையின் உடலில் இருக்கும் அழுக்குகள் அகற்றப்படும். ஆனால், வாசனைக்காகவும், ஆன்டிசெப்டிக்காகவும் குளியல் பவுடர் தயார் செய்யும் போது பாசிப்பயறு மாவுடன் சில பொருள்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம்.

குளியல் பவுடர் தயார் செய்யும் விதம் :

பாசிப்பயறு - 100 கிராம்

வேப்ப இலை - 100 மில்லி கிராம்

துளசி - 10 மில்லி கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 25 கிராம்.

ரோஜா இதழ் - 10 கிராம் ( விருப்பப்படுபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்)

இவற்றை ஒன்றாக்கி அரைத்து சோப்பிற்கு பதிலாகப் பயன்படுத்தினால் குழந்தைகளின் சருமம் எப்போதும் பட்டுப்போல இருப்பதுடன் சரும நோய்களும் தவிர்க்கப்படும்.

குழந்தைகளைக் குளிப்பாட்டும் முன் : 

எந்தப் பருவகாலமாக இருந்தாலும் குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்த பின் குளிப்பாட்டலாம்.

இப்போது கோடைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கு எளிதாக அம்மை, சீல் கட்டிகள், வேர்க்குரு போன்றவை பரவும் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். உங்கள் குழந்தை குளிக்கும் தண்ணீரில் வேப்ப இலை, மஞ்சுள் இரண்டையும் ஒன்றாகக் கலந்து காலை வெயில் சிறிது நேரம் வைத்திருந்து அந்தத் தண்ணீரில் குழந்தைகளைக் குளிப்பாட்ட வெயிலினால் பாதிப்பினைத் தவிர்க்கலாம்.

சில குழந்தைகள் அடிக்கடி நீர்க்கடுப்பு பாதிப்பினால் அவதிப்படுவார்கள். அதனால் வாரம் ஒரு முறை குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. 200 மில்லி நல்லெண்ணெயை நன்கு சூடுபடுத்துங்கள். அதன் பின் அடுப்பை அணைத்து எண்ணெய்யுடன் ஒரு கைப்பிடி சீரகம், சிறிது துளசி, கற்பூரவல்லி இலை சேர்த்து ஒரு தட்டு வைத்து மூடிவிடவும். பத்து நிமிடம் கழித்து, எண்ணெயை வடிகட்டி உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால் நீர்க்கடுப்பு காணாமல்போகும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும் நாள்களில்... குழந்தைகளை மதியம் தூங்க வைக்க வேண்டாம். அன்று ஐஸ்க்ரீம், தயிர் சாதம் போன்ற உணவுகளுக்கு நோ சொல்லுங்கள். 

குறிப்பு :

வெயில் காலத்தில் சில பெற்றோர்கள் குழந்தைகளின் மீது சந்தனத்தைத் தேய்ப்பார்கள். தற்போது கடைகளில் கிடைக்கும் சந்தனங்கள் அதிக கெமிக்கலுடன் இருப்பதால், வேர்க்குரு மீது சந்தனம் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.