Published:Updated:

கேரிபேக் துண்டுகளை விழுங்கி, 4 மாதங்களாக வயிற்றுவலியால் துடித்த சிறுவன் - மீண்டது எப்படி?

திரும்பி வந்த போது கையில் இரண்டு அங்குலம் அளவிலான கேரிபேக் துண்டோடு வந்திருக்கிறார். ``என்ன இது" எனப் பெற்றோர் கேட்டபோது, ``வாமிட் பண்ணும்போது இது வெளில வந்துச்சு '' என்று கூறியிருக்கிறார்.

கேரிபேக் துண்டுகளை விழுங்கி, 4 மாதங்களாக வயிற்றுவலியால் துடித்த சிறுவன் - மீண்டது எப்படி?
கேரிபேக் துண்டுகளை விழுங்கி, 4 மாதங்களாக வயிற்றுவலியால் துடித்த சிறுவன் - மீண்டது எப்படி?

பிளாஸ்டிக் ஷீட், கேரி பேக், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட பதினான்கு வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானபிறகு, மக்கள் மத்தியில் ஓரளவுக்கு விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. ஆயினும் இன்னும் சர்வசாதாரணமாகக் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள், கேரி பேக்கெல்லாம் புழங்கவே செய்கிறது. உணவுப் பொருள்களிலும்கூட பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. 

சென்னை, சின்மயா நகரைச் சேர்ந்தவர் கஸாலி. திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவரது மகன் ஹாரிஸ் அகமதுவுக்கு 12 வயது. சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 4 மாதங்களாகக் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். மருத்துவமனைக்குச் சென்று நிறைய சோதனைகள் செய்து மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டும் வயிற்றுவலி  தீரவே இல்லை. வலி என்றால் சாதாரண வலி அல்ல. வலியெடுத்துக் கத்தினால் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தெல்லாம் ஹாரீஸின் வீட்டுக்கு முன்பு குவிந்து விடுவார்கள். பகல், இரவு என்றில்லாமல் வலியால் துடித்து வந்திருக்கிறார். 

இந்தச் சூழலில், ஒருநாள் அதிக அளவில் தண்ணீர் குடித்திருக்கிறார் ஹாரீஸ். அதிகமாகத் தண்ணீர் குடித்ததால் வாந்தி வருவதாகச் சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் சென்றிருக்கிறார். திரும்பி வந்த போது கையில் இரண்டு அங்குலம் அளவிலான கேரிபேக் துண்டோடு வந்திருக்கிறார். ``என்ன இது" எனப்  பெற்றோர் கேட்டபோது, ``வாமிட் பண்ணும்போது இது வெளில வந்துச்சு'' என்று கூறியிருக்கிறார். தொடக்கத்தில் பெற்றோர் நம்பவில்லை. மீண்டும் வாந்தி எடுக்க, அப்போது அவர்களின் கண் முன்னாலேயே மேலும் ஒரு கேரி பேக் துண்டு வந்து விழுந்திருக்கிறது. அதைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளான ஹாரீஸின் பெற்றோர், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று அல்ட்ராசோனிக் பரிசோதனை செய்திருக்கிறார்கள். பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் நிம்மதியடைந்திருக்கிறார்கள். 

கடந்த நான்கு மாதமாக இருந்த கடுமையான வயிற்றுவலி குறைந்து லேசான எரிச்சல் மட்டும் தற்போது இருப்பதாகக் கூறுகிறார் ஹாரீஸின் தந்தை கஸாலி.

``கடந்த நான்கு மாதங்களாக குடும்பத்தில் நிம்மதியே இல்லை. கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டான் என் மகன். பல மருத்துவர்களிடம் பார்த்தோம். ஒரு பயனுமில்லை. நைட் எல்லாம் தூங்காமல் அழுதுகொண்டே இருப்பான். பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் என அனைத்து வகையான டெஸ்ட்டுகள் எடுத்தோம். பெரும்பாலும் அல்சருக்கான மாத்திரை, மருந்துகளையே கொடுத்தார்கள். அசைவ உணவுகள், காரமான உணவுகளைத் தவிர்க்கச் சொன்னார்கள். தயிர்சாதம் என்றால் அறவே பிடிக்காத என் மகனுக்குக் கடந்த நான்கு மாதங்களாக அதுதான் உணவு.  

காலையில் பள்ளிக்குச் செல்வான். திடீரென பள்ளியிலிருந்து ``வயிற்று வலியால் துடிக்கிறான்'' என போன் வரும். பல இரவுகள் எங்களுக்கு ஆஸ்பத்திரியில்தான் கழிந்தன. 

ஏதாவது ஓர் உணவுப் பொருளோடுதான், கேரி பேக் துண்டுகள் அவன் வயிற்றுக்குள் சென்றிருக்க வேண்டும். வீட்டுச் சாப்பாட்டில் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. அவன் படிக்கும் பள்ளியில் கேன்டீனில் சாப்பிட்ட உணவுகளோடுதான் இது சென்றிருக்க வேண்டும். சம்சா விரும்பிச் சாப்பிடுவான். அதற்குள் வைக்கப்படும் மசாலாப் பொருள்களோடு இது சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. பள்ளியில் புகார் செய்திருக்கிறேன். நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை நான் வெளியிடக் காரணம், பெரும்பாலான இடங்களில் அலட்சியமாகவே உணவுப் பொருள்கள் தயார் செய்கிறார்கள். அந்த உணவுகளின் தரத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. யாரும் பரிசோதிப்பதும் இல்லை. 

முடிந்தவரை ஒவ்வொரு பெற்றோரும் இதுகுறித்து விழிப்புணர்வோடு இருக்கவேண்டியது அவசியம். வெளியில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது எனக் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளி நிர்வாகமும் தங்களின் பள்ளியில் விற்கப்படும் உணவுப்பொருள்கள் தரமாகத்தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்யவேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கும் இதுகுறித்து ஒரு மனு அனுப்பியிருக்கிறேன்'' என்கிறார் கஸாலி. 

இந்தச் சம்பவம் குறித்து இரப்பை மற்றும் குடலியல் மருத்துவர் மகாதேவனிடம் பேசினோம்.

``கண்டிப்பாக இது உணவுப் பொருளோடுதான் வயிற்றுக்குள் சென்றிருக்க வேண்டும். இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது. மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கியிருந்தால் மட்டுமே இது வயிற்றுக்குள் போயிருக்கும். பொதுவாக எக்ஸ்ரே, அல்ட்ராசோனிக் போன்ற எந்தப் பரிசோதனையாலும் கிளாஸ், பிளாஸ்டிக் போன்ற பொருள்களைக் கண்டறியமுடியாது. 

அலட்சியமாக, அவசர அவசரமாக எந்த உணவையும் சாப்பிடக் கூடாது, சாப்பிடுவதற்கு முன்பாக என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பார்த்துப் பொறுமையாக, நிதானமாகச் சாப்பிடவேண்டும். சாப்பாட்டை விழுங்காமல் நன்றாக மென்று  சாப்பிடவேண்டும். பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்கு இதை அறிவுறுத்தவேண்டும்.'' என்றார் அவர்.