மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது!

ஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது!

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ந்த இதழில் 10 மற்றும் 11 வயதுகளைப் பற்றிப் பேசப்போகிறேன்.  இதை ‘அடலசன்ஸ் ஏஜ்’ என்று சொல்வோம். வயதுக்கு வருவதற்கு முந்தைய பருவம். உடல், மனம்... இரண்டிலும் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழும் காலகட்டம் இது. உங்கள் வீட்டுக் குட்டிப்பையன் ஆணாகப் போகிறான். சின்னஞ்சிறு தேவதை தன் பெண்மையின் முதல்படியில் ஏறப் போகிறாள்.

ஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது!

10 வயது

பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி 10 - 16 வயதுவரை மிக வேகமாக இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு, இது இன்னும் இரண்டு வருடங்கள் நீடித்து 18 வயதுவரை இருக்கும். பொதுவாக, 10 வயதிலிருக்கும் பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, அதே வயதிலிருக்கும் ஆண் குழந்தைகளைவிட அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், பெண்களுக்கான பிரத்யேக ஹார்மோன்கள்தாம். ‘பெண் வளர்த்தியோ பீர்க்கன் வளர்த்தியோ’ என்கிற பழமொழிக்கான வயது இது. தவிர,
10 வயது ஆண்பிள்ளையைவிட பெண்பிள்ளை மன முதிர்ச்சியிலும் கூடுதலாகவே இருப்பாள்.

இது ரெண்டுங்கெட்டான் வயது. யார், எதைச் சொன்னாலும் சுலபமாக நம்பிவிடுவார்கள். நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அதே நேரம், மன உணர்வுகளை கன்ட்ரோல் செய்வது சுலபமாகக் கைவரும். அதனால், தங்கள் பிரச்னைகளைத் தாங்களே கையாள விரும்புவார்கள். சிலர் அதை வெற்றிகரமாகவும் செய்வார்கள். நண்பர்களிடம் பேசி முடிவுகளை எடுக்க ஆரம்பிப்பார்கள். இதனால், தங்களை அறியாமலேயே தங்களுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இந்த நேரத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை சுயமாக முடிவெடுக்கவிட வேண்டும். அதில் அவர்கள் தவறும்பட்சத்தில் வழிகாட்டலாம்.

ஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது!

இந்த வயதில் மற்றவர்களை வியந்து பார்க்கிற குணம் அதிகமாக இருக்கும். தன்னைவிட அழகான, அறிவான, நன்றாக உடை உடுத்துகிறவர்மீது ஒரு வியப்பு வரும். சில பிள்ளைகள், தாங்கள் வியக்கிறவரைத் தங்கள் ரோல் மாடலாகக்கூட எடுத்துக்கொள்வார்கள். தவறான விஷயங்களின் பக்கம் பிள்ளைகள் தடுமாற ஆரம்பிக்கும் வயதும் இதுதான். அதனால், ‘நம் வீட்டில் இதைச் செய்ய மாட்டோம், இப்படிச் செய்ய மாட்டோம், இதெல்லாம் நம் வீட்டுக்கு மரியாதை குறைவான விஷயம்’ என்பதுபோல எடுத்துச் சொல்ல வேண்டும். பொசசிவ்னெஸ் உணர்வு வர ஆரம்பிக்கும். ஆண்பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகளுக்கு இது அதிகமாக இருக்கும். ‘இவள் என் தோழி’; ‘எனக்கு மட்டுமே தோழி’ போன்ற எண்ணங்கள் வரும். அடுத்ததாக, விதவிதமான இலை கலெக்‌ஷன், ரூபாய் நோட்டு கலெக்‌ஷன் என்று ஏதோ ஒரு விருப்பம் வரும். அது ஆண்பிள்ளைகளிடம் அதிகம் காணப்படும். இருபாலருமே அடுத்தவரின் உணர்வுகளைப் படிக்கப் பழகுவார்கள். அது முக பாவனைகளைவைத்தும் இருக்கலாம்; உடல்மொழி வழியாகவும் இருக்கலாம்.

இந்த வயதில் உடன்பிறந்தவர்களுடன் அதிகம் சண்டை போடுவார்கள். ‘அவனைப்போல ஷூ போட வேண்டும்’, ‘அவளைவிட பெட்டராகத் தெரிய வேண்டும்’ என்கிற அழுத்தம் வரும் வயதும் இதுதான். தனித்து இல்லாமல் எல்லோருடனும் இணைந்து ஒரு விஷயத்தைச் செய்ய விரும்புவார்கள். ஸ்மார்ட்டாகச் செயல்பட ஆரம்பிப்பார்கள்.  அவர்களிடம்   செல்போனையோ, கம்ப்யூட்டரையோ கொடுத்தால் அதில் பேட்டர்ன், பாஸ்வேர்டு, சீக்ரெட் கோடு எல்லாம் போட ஆரம்பிப்பார்கள். பிரைவசியை விரும்புவார்கள். அதற்கு நீங்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்பமாக உட்கார்ந்து பேசும்போது அவர்கள், ‘நானும் பெரிய மனுஷன்/மனுஷிதான்’ என்கிற தோரணையில் பங்குகொள்ள ஆரம்பிப்பார்கள். ஆராய்ச்சி மாதிரியான விஷயங்களைச் செய்யத் தொடங்குவார்கள்; நூலகம் செல்ல ஆரம்பிப்பார்கள். சுதந்திர மனப்பான்மை வந்துவிட்டதால், அவர்களின் வீட்டுப்பாடம் போன்றவற்றுக்கு நம் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். 10 வயதுப் பிள்ளைகளுக்கு வருகிற பிரச்னைகள் என்று பார்த்தால், வெடித்துச் சிதறுவதுபோல  கோபப்படுவது,  வலுச்சண்டைக்குப் போவது அல்லது மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தும் அளவுக்குக் கோபப்படுவது ஆகியவை. இதற்கு மருத்துவரீதியாக எந்தக் காரணமும் கிடையாது. மனரீதியாக என்ன பிரச்னை என்று கவனிக்க வேண்டும்.

ஆனந்தம் விளையாடும் வீடு - 27 - இதுதான் ரெண்டுங்கெட்டான் வயது!11 வயது

வளர்ந்த ஓர் ஆணுக்கு அல்லது பெண்ணுக்குத் தன்மீது வரும் அக்கறை, மரியாதை, அன்பு எல்லாமே இந்த வயதுக் குழந்தைகளுக்கு வர ஆரம்பிக்கும். பெண்பிள்ளைகளுக்கு இடுப்பிலும் மார்பிலும் கொழுப்பு திசுக்கள் தேங்கி, ஒரு வடிவம் கொடுக்கும். அதனால் உடல் வடிவாகக் காட்சியளிக்கும். மார்பக வளர்ச்சி ஆரம்பிக்கும்.  சில ஆண்பிள்ளைகளுக்கு முகத்தில் ரோம வளர்ச்சி ஆரம்பிக்கும். இரு பாலருக்குமே அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் ரோமம் வளர ஆரம்பிக்கும். வியர்வை மற்றும் அந்தரங்க உறுப்புகளில் லேசான கசிவு ஆரம்பிக்கும் என்பதால் உடலில் லேசாக வாடை வரத் தொடங்கும். அதனால், சுத்தமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

உடல் வளர்ச்சி மிக மிக வேகமாக இருப்பதால், `உடம்பு வலிக்குது’ என்பார்கள். இந்த வயதில் பசி அதிகமாக இருக்கும். எல்லா உணவுகளையும் சாப்பிடுவார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், கன்னாபின்னாவென்று சாப்பிடுவார்கள். ‘என்ன இப்படி சாப்பிடுறே?’ என்று தடுத்துவிடாதீர்கள். ஆரோக்கியமாகச் சாப்பிடுகிறார்களா என்பதை மட்டும் கவனியுங்கள். மனநிலையைப் பொறுத்தவரை ரோலர் கோஸ்ட்டர்போல மேலும் கீழுமாகச் சென்றபடி இருக்கும். அதனால் சந்தோஷம், கவலை, சிரிப்பு, கோபம், உற்சாகம், வருத்தம்  என்று மாறி மாறி நடந்துகொள்வார்கள். இது இயல்பான ஒன்றுதான்.

மற்றவர்கள் தன்னைக் கட்டியணைப்பது, கன்னத்தைக் கிள்ளுவது, முத்தம் கொடுப்பது போன்றவற்றை விரும்ப மாட்டார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’, ‘நீங்கள் யார் இதைச் சொல்வதற்கு?’ போன்ற கேள்விகளை எழுப்ப ஆரம்பிப்பார்கள். ‘நான் பார்த்து வளர்ந்த பிள்ளை என்னைக் கேள்வி கேட்பதா’ என்கிற கோபம் உங்களுக்கு வரும். அதைத் தாண்டி, அவர்களின் பருவ மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நண்பர்கள்மேல் ஆர்வம் அதிகமாகி, குடும்பத்தின்மேல் ஆர்வம் குறைய ஆரம்பிக்கும் வயது இதுதான். அதனால், பிள்ளைகளைக் குடும்ப விழாக்கள் போன்ற உறவுகளுடன் நெருக்கத்தை அதிகரிக்கச்செய்யும் நிகழ்வுகளுக்கு அவசியம் அழைத்துச் செல்லுங்கள். படிப்பில் ஆர்வம் குறைய ஆரம்பிக்கும் வயது. இதில் மட்டும் அதிகம் கவனம் கொடுங்கள்.

இங்கு கூறியிருக்கும் உடல் மற்றும் மன வளர்ச்சிகளெல்லாம் பிள்ளைக்குப் பிள்ளை மாறுபடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

- அடுத்த இதழில் முடியும்...

- ஆ.சாந்தி கணேஷ்