பிரீமியம் ஸ்டோரி

``உங்கள் குழந்தை அழுகையும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மகிழ்ச்சியாகக் குளியலுக்குத் தயாராக, குளியலைச் சுமையாக நினைக்காமல் சுகமாக உணர... இவற்றையெல்லாம் செய்யுங்கள்” என்கிறார் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சந்திரகுமார்.

குளியலும் சுகம் தரும்!

சந்திரகுமார்
பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர்

* பிறந்து ஓராண்டுவரை, கைபொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பான நீரில் குழந்தையைக் குளிப்பாட்டலாம். பிறகு, நார்மல் தண்ணீருக்குப் பழக்கப்படுத்தலாம்.

* காலில் படுக்கவைத்து தண்ணீர் ஊற்றுவதென்றால், குப்புறத் திருப்பிப் படுக்கவைக்கும்போது குழந்தையின் தலை இடது அல்லது வலதுபுறமாகத் திரும்பியிருக்குமாறு  பார்த்துக்கொள்ள வேண்டும்.

* குளிக்கவைக்க தண்ணீர் மக்கைப் பயன்படுத்தவும்; ஷவரில் குளிப்பாட்டுவதைத் தவிர்க்கவும்.

* குழந்தைகளைப் பிரத்யேகமான குளியல் தொட்டியில்  (Baby Bath Tub) அமரவைத்து அல்லது சாய்வாகப் படுக்கவைத்துக் குளிப்பாட்டுவது சிறந்தது. அப்போது, குழந்தை சரியாக உட்காரவும் சாய்ந்துகொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும். குளியல் தொட்டியில்  குழந்தையின் இடுப்பளவுக்குத் தண்ணீர் இருக்கலாம். அதில் சில பொம்மைகளைப் போட்டுவைத்தால், குழந்தை விளையாடிக்கொண்டே குளியலுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கும்.

குளியலும் சுகம் தரும்!


* சிலர் குழந்தையை, கால்களில் படுக்கவைத்துக் குளிப்பாட்டுவார்கள். இதனால் குழந்தை நழுவி விழ வாய்ப்பில்லை. ஆனால், இந்த முறையில் குழந்தை உடல்மீது படும் நீர் வழிந்தோடிவிடுவதால், அதன் மேனி தண்ணீரில் சில நிமிடங்கள் கிடந்து அனுபவிப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விடும். எனவே, அப்படிக் குளிப்பாட்டப்படும் குழந்தைகளுக்கு அவ்வப்போது பாத் டப் குளியலும் தரலாம்.

* குழந்தையின் உடலை அழுத்தித் தேய்த்துக் குளிப்பாட்டிவிடக் கூடாது. மெதுவாக மசாஜ் செய்வதுபோலக் குளிப்பாட்டிவிடும்போதுதான், அதைக் குழந்தை சுகமாக உணரும்.

* பயத்த மாவு/குளியல் பொடி தேய்த்துக் குளிப்பாட்டிவிடுவதென்றால்,  மிகவும் மிருதுவாக அரைக்கப்பட்டிருக்க வேண்டும். கொரகொரப்பாக இருந்தால், குழந்தையின் மிருதுவான மேனியில் தேய்த்துக் குளிப்பாட்டும்போது அது வலியை ஏற்படுத்தும்.

* தலை, கைகால்கள், உடல் என ஒவ்வொரு பகுதியாகத்தான் குளிப்பாட்டிவிட வேண்டும். தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது, சில குழந்தைகள் அதகளம் செய்வார்கள். பொறுமையாகக் கையாள்வதுடன், கண்ணில் சோப்பு/ஷாம்பூ நுரை படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* குளிக்கவைப்பதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யலாம். அதற்கு, செக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாம். வழிந்து ஒழுகும்விதத்தில்  குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக எண்ணெய் தேய்த்துவிடக் கூடாது. குழந்தையின் கண், காது உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயம் எண்ணெய்விடக் கூடாது.

குளிப்பாட்டி முடித்ததும், குழந்தையின் உடலை மென்மையான டவலைக் கொண்டு துவட்டிவிட வேண்டும். அழுத்தித் துடைக்காமல், குழந்தையின் உடலில் ஒற்றியெடுக்க வேண்டும்.

- கு.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு