Published:Updated:

கோடை விடுமுறையில் குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் 7 உணவுகள்!

சிவப்பு அவலை ஓரிரு நிமிடங்கள் ஊறவைத்து அதனுடன் காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து காலை உணவாகக் கொடுக்கலாம். அல்லது காலை 11 மணி அளவில் சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம். இது எளிதில் செரிமானமாகிவிடும்.

கோடை விடுமுறையில் குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் 7 உணவுகள்!
கோடை விடுமுறையில் குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் 7 உணவுகள்!

தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் பள்ளிக் குழந்தைகள். விடுமுறையில் படிப்பிலிருந்து ஓய்வு கிடைக்கும், நிறைய விளையாடலாம். ஊர் சுற்றலாம். அதே நேரத்தில் பெற்றோர் பாடு திண்டாட்டம்தான். 

பள்ளி நாள்களில் உணவு கொடுத்து அனுப்பினால் நண்பர்களுடன் சேர்ந்தோ, ஆசிரியரின் கண்டிப்பினாலோ சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால், விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளைச் சாப்பிட வைப்பது மிகவும் சிரமமான காரியம். பள்ளி செல்லும் குழந்தைகளில் பலர் காலை நேர உணவை அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். இன்னும் சில குழந்தைகள் சாப்பிடாமலேயே பள்ளிக்குச் சென்றுவிடுவார்கள். விடுமுறை தினங்களில் குழந்தைகளுக்குப் பிடித்த, அதே வேளையில் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுப்பதில் பெற்றோர் அக்கறை கொள்ள வேண்டும். 

குழந்தைகள் விரும்பும் வகையில் என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம்..? இயற்கை மருத்துவர் தீபாவிடம் கேட்டோம். 

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையிலான இயற்கை உணவுகள் பற்றிச் சொல்கிறார் அவர்.   

இயற்கை சாக்லேட்

கேழ்வரகு, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு, மக்காச்சோளம், பொட்டுக்கடலை, சோயா, தினை, கறுப்பு உளுந்து, சம்பா கோதுமை,

பார்லி, நிலக்கடலை, அவல், ஜவ்வரிசி, வெள்ளை எள், கசகசா, ஏலக்காய், முந்திரி, சாரப்பருப்பு, பாதாம், ஓமம், சுக்கு, பிஸ்தா, ஜாதிக்காய், மாசிக்காய் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி சத்துமாவு தயாரித்துக்கொள்ள வேண்டும். 

அவற்றுடன் துருவிய தேங்காய், நெய், பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் மற்றும் நீரில் கரைத்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து சாக்லேட் பதத்துக்கு பிசைய வேண்டும். நட்சத்திரம், பொம்மை போன்ற வடிவங்களில் அவற்றை உருவாக்கித் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளைத் தூவி அலங்கரித்துக் கொடுக்கலாம். முழுக்க முழுக்க புரதச்சத்து அடங்கிய உணவான இது குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தருவதுடன், போதுமான ஆற்றல் கிடைக்கவும் உதவும். 

பேரீச்சை சாக்லேட்

பேரீச்சம்பழத்தின் விதையை நீக்கிவிட்டுத் துருவிய கேரட், பீட்ரூட், வெள்ளைப் பூசணி ஆகியவற்றை அதனுள் கொஞ்சமாக `ஸ்டஃப்’ செய்ய வேண்டும். துருவிய தேங்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை அதன்மேல் தூவி அலங்கரிக்கலாம். இதைச் சிற்றுண்டியாகச் சாப்பிடக் கொடுக்கலாம். பேரீச்சம்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதுடன், ரத்த அணுக்கள் உருவாக உதவிபுரியும். இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இனிப்பு சாலட்

முளைக்கட்டிய பாசிப்பயறு, சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம், காய்ந்த திராட்சை, துருவிய தேங்காய், இனிப்பு தேவைப்பட்டால் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிடக்கொடுக்கலாம். இந்த இனிப்பு சாலட், பசி உணர்வை அதிகரிக்கச் செய்யும். கோடைக்காலத்தில் எந்த நோய்களும் தாக்காதவகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அவல் உணவு

சிவப்பு அவலை ஓரிரு நிமிடங்கள் ஊறவைத்து அதனுடன் காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து காலை உணவாகக் கொடுக்கலாம். அல்லது காலை 11 மணி அளவில் சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம். இது எளிதில் செரிமானமாகிவிடும். மேலும், இயற்கை உணவு என்பதால் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படாமல், சரியான எடையை நிர்வகிக்க உதவும். ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த உணவு குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

இயற்கை ஐஸ்க்ரீம்

வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி இரவில் ஃப்ரீசரில் வைத்துவிட வேண்டும். காலையில் அந்த வாழைப்பழத்தை வெளியே எடுத்து மிக்ஸியில் போட்டு க்ரீம் பதத்துக்கு அரைக்க வேண்டும். அதனுடன் காய்ந்த திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக்கிச் சேர்த்து மீண்டும் இரண்டு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறலாம். குழந்தைகளைக் கவரும் நிறத்தில் கொடுக்க விரும்பினால் பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றின் சாற்றை அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். அவகேடோ எனப்படும் வெண்ணெய்ப்பழம் மற்றும் மாம்பழத்தில் மூன்றில் ஒருபங்கு வாழைப்பழம் சேர்த்து, இதேமுறையில் ஐஸ்க்ரீம் செய்துகொடுக்கலாம். கூடுதல் இனிப்பு தேவைப்பட்டால் மிக்ஸியில் பழங்களை அரைக்கும்போது சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம். 

கடைகளில் வாங்கிச் சாப்பிடும் ஐஸ்க்ரீமைக் காட்டிலும் பழத்தில் தயாரிக்கப்படும் இந்த ஐஸ்க்ரீம், உடலுக்குத் தேவையான கலோரிகளைக் கொடுக்கும். மூன்று பழங்களிலும் வைட்டமின் சி, நார்ச்சத்துகள் உள்ளன. வெயிலில் விளையாடிவிட்டு வீடு திரும்பியதும் இதைச் சாப்பிடக் கூடாது. சளி, இருமல் இருந்தாலும் குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. ப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம், அவ்வப்போது செய்தும் சாப்பிடலாம்.

புட்டிங்

கேரட்டை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் நீர் ஊற்றி சூடாக்கி அதில் சிறிது கடல்பாசி சேர்க்க வேண்டும். இதையடுத்து கடல்பாசி, கேரட் சாற்றைச் சேர்த்து, எந்த வடிவத்தில் வேண்டுமோ அதற்குத் தகுந்த பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும். கடல்பாசி சேர்ப்பதால் சிறிது நேரத்தில் ஜெல்லி பதத்துக்கு வந்துவிடும். இதை ப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம். பீட்ரூட், ஆரஞ்சு, மாம்பழம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் புட்டிங் செய்யலாம். கடல்பாசி, உடல் வெப்பத்தைத் தணித்து உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றும்.  

ஃபலூடா

ஒரு கண்ணாடி டம்ளரில் இளநீர் வழுக்கையையும், அதன்மேல் ஒருமணி நேரம் ஊறவைத்த சப்ஜா விதைகள், மாதுளம்பழ முத்துகள், மாம்பழத் துண்டுகள், மீண்டும் சப்ஜா விதைகள், ஆப்பிள், கொய்யாப்பழத் துண்டுகள் என்ற வரிசையில் அடுக்க வேண்டும். அதன்மேல் சிறிது தேன் ஊற்றி, டூட்டி ஃப்ரூட்டி தூவி அலங்கரிக்கலாம். இதனுடன் இயற்கையாகத் தயாரித்த புட்டிங்கைச் சேர்க்கலாம். கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை இளநீர் தடுக்கும். ஃபலூடாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பழங்களில் வைட்டமின் ஏ, சி சத்துகள் உள்ளன. சியா விதைகள் உடலைக் குளிர்விக்கும். இதைச் சாப்பிடுவதால் வாய்வுக்கோளாறு, மலச்சிக்கல் ஏற்படாது. 

விடுமுறை நாள்களில் காலை 10.30 மணி வரை வெளியே விளையாடலாம். அதன் பிறகு வெப்பம் அதிகரிக்கும் என்பதால் மாலை 4 மணி வரை வெயிலில் விளையாடக் கூடாது. அந்த நேரங்களில் உள்அரங்க விளையாட்டுகளான சதுரங்கம், கேரம், பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் வெளியே விளையாட அனுமதிக்கலாம். வெளியே சென்று விளையாடினால் இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். விடுமுறை நாள்களில் அதிக நேரம் செல்போன்களில் விளையாடுவது, டிவி பார்ப்பது போன்றவற்றை பெற்றோர் ஆதரிக்கக் கூடாது. 

இவை தவிர, விடுமுறைக் காலங்களில் பெற்றோரும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும், அவர்களுடன் அதிகநேரம் செலவழிக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொதுவிஷயங்கள் பற்றிப் பேச வேண்டும். இதுபோன்ற செயல்கள் உளவியல் ரீதியாக குழந்தைகளை நல்வழிப்படுத்துவதுடன் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.