Published:Updated:

ஆட்டிஸத்தை கடந்து சாதித்த `இசைக்குயில்' ராகிணியின் நம்பிக்கைக் கதை! # WorldAutismDay

ஆட்டிஸம் பற்றி சமூகத்தில் பல்வேறு தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. அதுபற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டு குழந்தைகளை வழிநடத்துவோம்! பாதிக்கப்பட்ட குழந்தைகளை சாதனையாளர்களாக மாற்றுவோம்! 

ஆட்டிஸத்தை கடந்து சாதித்த `இசைக்குயில்' ராகிணியின் நம்பிக்கைக் கதை! # WorldAutismDay
ஆட்டிஸத்தை கடந்து சாதித்த `இசைக்குயில்' ராகிணியின் நம்பிக்கைக் கதை! # WorldAutismDay

ன்னையின் கருவறையில் முழு வளர்ச்சியடைந்து சுகப்பிரசவத்தில் இந்த மண்ணில் வந்து பிறந்தாள் ராகிணி. எடை மட்டும் சற்று குறைவாக இருந்தது, 2.7 கிலோ. தாயும் சேயும் நலமாக இருந்தனர். குழந்தையின் உருவ வளர்ச்சியின் படிநிலைகள் முழுவதும் பூர்த்தியானது. ஆனால் பேச்சு வருவதற்கு மட்டும் ஐந்து வருடங்கள் பிடித்தன. 

விநோதம் என்னவென்றால், வார்த்தைகள் உதட்டில் அரும்பும் முன்பே, இசையுடன்கூடிய ஒலிகள் குழந்தையின் இதழ்களில் கசிந்தன. இரண்டரை வயதில், இசைக் கட்டுகள் இணைந்த வார்த்தைகளை எளிதாக உதிர்க்கத் தொடங்கினாள். ராகிணியின் குடும்பம் பாரம்பர்யமாக இசையை நேசிக்கும் தென்னிந்தியக் குடும்பம். பொழுது புலர்கையில் தொலைக்காட்சியில் ஒலிக்கும் பக்திப் பாடல்கள், தந்தை முணுமுணுக்கும் கீதங்கள், தாயின் தாலாட்டு என வீட்டில் நாள் முழுவதும் இசைப் பிரவகிக்கும். அதனால் தொன்மையான கர்னாடக இசைக்குறிப்புகளும் பாடல்களும் சிறிய வயதிலேயே ராகிணியின் மனதில் பதிந்து, குரலில் சீராகப் பொங்கி வழியத்தொடங்கின. மேலை நாட்டில் வசித்ததால் மேற்கத்தியத் தொல்லிசையிலும் தேர்ச்சி பெற்றார். 

இசைவாணியான ராகிணி குழந்தைப் பருவம் முதலே ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். அது அவரது பயணத்தில் பெரும் சவாலாக அமைந்தது. சராசரிக்கும் குறைவான அறிவுத்திறன், மொழியைக் கையாள்வதில் சிக்கல், கோவையாக சிந்திப்பதில் பிரச்னை, சமூகத்தைப் பற்றிய அச்சம், மனப் பிரமை என மனம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் அவருக்கு இருந்தன. அன்றாட அலுவல்கள் தரும் சிறு மனஅழுத்தத்தைக்கூட சமாளிக்க முடியாமல் எரிச்சலும், விரக்தியும் அடைந்தார். நாள்கள் செல்லச் செல்ல, இந்த நிலை மேலும்  தீவிரமாகி, பத்து வயதைக் கடக்கும்போது மிகவும் உக்கிரமான கட்டத்தை எட்டியது. 

எரிச்சலுறும் போக்கையும் மனஅழுத்தத்தையும் கட்டுப்படுத்த 19-வது வயதுவரை மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். அத்துடன் முயன்று தொழில்பயிற்சியிலும் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு தனக்கென்று ஓர் இசைக்கூடத்தை அமைத்துக்கொண்டார். தனக்குப் பிடித்த பாடல்களை கேட்பதோடு, சில குழுக்களுக்கு இசைப்பயிற்சியும் அளித்தார். ஆனால், நீண்ட பொழுதுகளை இசைக்கூடத்தில் தனிமையில் கழித்ததால், ராகிணிக்கு `நாம் சமூக வாழ்க்கையிலிருந்தே ஒதுங்கி விட்டோம்' என்ற கசப்புணர்வு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாமல், யாருக்கும் பயனற்றுப்போனதாக உணரத் தொடங்கினார்.

அது தற்கொலை எண்ணம் வரை இட்டுச் சென்றது. எதற்கும் உணர்ச்சிவசப்பட்டு, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்தார். இந்த அறிகுறிகள் ஆறு மாதத்தில் உச்சத்தை அடைந்தன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ராகிணி தீவிர மனச்சோர்வுக்குத் தள்ளப்பட்டார். மனச்சோர்வைக் குறைக்க கொடுக்கப்பட்ட  மாத்திரைகள் எதுவும் பயனளிக்கவில்லை. அடுத்த ஐந்து மாதங்களில் அவர் வாழ்க்கை நரகமானது. அடிக்கடி `ஓ'வென்ற அழுகை, அலறல்கள், `வீட்டைவிட்டுப் போகிறேன்’ என்ற பயமுறுத்தல்கள் என நாள்கள் கடந்தன. இந்தநிலையில்தான் ராகிணியை சென்னைக்கு அழைத்து வந்தார் அவரது அம்மா.

ஆட்டிசத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தொடக்கத்தில் மருத்துவர் குழுவுடன் ஒத்துழைக்கத் தயங்கினார் ராகிணி. இறுகிப்போன ராகிணியின் மனநிலையை இளக வைப்பது மருத்துவர்களுக்கும் பெரும் சவாலாகவே இருந்தது. ராகிணிக்கு வலிப்பு வருவதற்கான நோய்க்கூறுகள் இருப்பதும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. வலிப்பு வருவதைத் தடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகள் ராகிணியின் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, எதிர்விளைவுகளைத் தோற்றுவித்தது. இதனால் அவருக்கு ஏற்ற மருந்துகள், சிகிச்சை முறைகள் அடங்கிய திட்ட அறிக்கையைத் தயாரிக்க அவகாசம் தேவைப்பட்டது.

இறுதியில் ராகிணியின் உடல் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான மருந்துகளை வழங்கும் திட்டம் தயாரானது. மருந்துகளுடன் உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட பிற சிகிச்சைகளால் ராகிணியின் உடல்நிலையிலும் மனநிலையிலும் விரும்பத்தக்க நல்ல மாற்றங்கள் மலரத்தொடங்கின. தான் இழந்ததாகக் கருதிய சுயமதிப்பை மீண்டும் உணரத் தொடங்கினார் ராகிணி. மனநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் குறைந்தது. சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றம் ராகிணியை மட்டுமல்ல, அவரின் தாயாரின் மனதையும் குளிர்வித்தது.

ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ராகிணியின் இந்த வெற்றிக்கதையை, `ட்ரைமெட்-நியூரோக்ரிஷ் மருத்துவமனை' வெளியீடான `தி புத்தி புக்’ (The Buddhi Book) என்ற நூலில் எழுதியிருக்கிறார், பேராசிரியர், மருத்துவர் `எண்ணப்பாடம்'  சீ.கிருஷ்ணமூர்த்தி. 

இந்தியாவில், 125 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆட்டிசம் பற்றி சமூகத்தில் பல்வேறு தவறான எண்ணங்கள் நிலவுகின்றன. அதுபற்றித் தெளிவாகப் புரிந்துகொண்டு குழந்தைகளை வழிநடத்துவோம்! பாதிக்கப்பட்ட குழந்தைகளை சாதனையாளர்களாக மாற்றுவோம்! 

ஆட்டிசம் குறைபாடு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்!