Published:Updated:

குழந்தைகளின் ஆஸ்துமாவுக்கு வாகனப் புகை காரணமா... அதிர்ச்சி அளிக்கும் அமெரிக்க ஆய்வு!

"முதலில், ஆஸ்துமா வந்தவுடன் எந்த மாதிரியான அலர்ஜி காரணமாக வருகிறது என்பதை அறிந்து, அதை நிறுத்த வேண்டும். காய்ச்சிய நீரைக் குடிப்பதற்குக் கொடுக்க வேண்டும். பழங்கள் மற்றும் குளிர்ந்த பொருள்களையும் தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்."

குழந்தைகளின் ஆஸ்துமாவுக்கு வாகனப் புகை காரணமா... அதிர்ச்சி அளிக்கும் அமெரிக்க ஆய்வு!
குழந்தைகளின் ஆஸ்துமாவுக்கு வாகனப் புகை காரணமா... அதிர்ச்சி அளிக்கும் அமெரிக்க ஆய்வு!

மெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவு நம்மைப் பதற வைக்கிறது. இது குறித்து, லேன்செட் மருத்துவ நாளிதழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், உலகளவில் நடத்திய ஆய்வில் 2015-ம் ஆண்டில் வாகன புகையால் குழந்தைகளுக்கு அதிகமாக ஆஸ்துமா ஏற்படும் 194 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 3,50,000 குழந்தைகளுக்கு, போக்குவரத்து வாகனங்களின் புகையால் ஆஸ்துமா ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவில் 7,60,000 குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதால் முதலிடத்தில் உள்ளது. 

அமெரிக்கா 2,40,000, இந்தோனேசியா 1,60,000, பிரேசில் 1,40,000 ஆகிய நாடுகள் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சீனாவில் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) அளவானது அதிகமாக உள்ளது. இந்த NO2 வாகனங்களில் இருந்துவரும் புகையில்தான் அதிகமாக இருக்கும். மேலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சூசன் சி அனன்பெர்க் கூறுகையில், "காற்று மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் உலக நகரங்களின் மில்லியன் கணக்கான புது வகையான ஆஸ்துமா நோய்களைத் தடுக்க முடியும்" எனக் கூறுகிறார். இந்த ஆய்வின் மூலம் போக்குவரத்து புகையினால் 170 புதிய வகையான ஆஸ்துமா நோயால் வருடத்துக்கு 1,00,000 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், ஆஸ்துமா நோய் உள்ள குழந்தைகளில் 13 சதவிகித குழந்தைகள் வாகன புகையால் ஏற்பட்ட அலர்ஜியினால் உண்டாகிறது. தென்கொரியாவில் ஆஸ்துமா உள்ள குழந்தைகளில் 31 சதவிகித பேருக்கு, வாகன புகை காரணமாகும் என்று கூறுகிறது. 

குழந்தைகள் மருத்துவர் டாக்டர் அரவிந்த் பாபு ஆஸ்துமா நோய் குறித்துக் கேட்டேன். 

"குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து ஆஸ்துமா வருகிறது?"

"ஒரு மாத குழந்தை முதல் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன."

"வாகன புகை எவ்வாறு பாதிப்பை உண்டாக்கும்?"

"வாகன புகையில் இருக்கும் NO2 எனும் நச்சு பொருள் நுரையீரலில் உள்ள வைரஸ் கிருமியைத் தூண்டி விடுவதால் ஆஸ்துமா உண்டாகிறது." 

"ஆஸ்துமாவை ஏற்படுத்தும் மற்ற காரணங்கள் எவை?"

"சுத்தம் இல்லாத தண்ணீர், காற்றில் உள்ள தூசி, பூக்களின் மகரந்தம், நாய் மற்றும் பூனை போன்றவற்றின் ரோமங்கள் ஆகியவற்றின் அலர்ஜியினாலும் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இது போன்ற அலர்ஜியினால், நுரையீரலில் ஏற்படும் மாற்றம் ஆஸ்துமாவுக்குக் காரணமாக உள்ளது. சில குழந்தைகளுக்குத் தங்கள் மரபு வழியாகவும் ஆஸ்துமா வருகிறது."

"ஆஸ்துமாவுக்கான அறிகுறிகள் யாவை?"

"அதிக அளவிலான தும்மல். இரவில் குறிப்பாக அதிகாலை நேரத்தில் அதிகமான இருமல். அதிக நாள்களாகத் தொடர்ந்து இருக்கும் சளி போன்றவை ஆகும். இந்த அறிகுறிகளைக் கொண்டு, ஒருவருக்கு ஆஸ்துமா என்ற முடிவுக்கு நாமாகவே வந்துவிடக் கூடாது. மருத்துவர் உறுதிப்படுத்தும் வரை சம்பந்தப்பட்டவரைக் குழப்பவோ அச்சுறுத்தவோ கூடாது."

"குழந்தைகளுக்கு ஆஸ்துமாவைக் குணப்படுத்தும் வழிமுறைகள் என்ன?" 

"முதலில், ஆஸ்துமா வந்தவுடன் எந்த மாதிரியான அலர்ஜி காரணமாக வருகிறது என்பதை அறிந்து, அதை நிறுத்த வேண்டும். காய்ச்சிய நீரைக் குடிப்பதற்குக் கொடுக்க வேண்டும். பழங்கள் மற்றும் குளிர்ந்த பொருள்களையும் தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இன்ஹேலர் பயன்படுத்துவதன் மூலம் எளிதில் நிவாரணம் அடையலாம். கிராமங்களில் உள்ள குழந்தைகளைவிட நகர்ப்புற குழந்தைகளுக்கு அதிக அளவில் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. பெற்றோர்களின் கவனமான ஒத்துழைப்பினால் மட்டுமே ஆஸ்துமாவைக் குணப்படுத்த முடியும். பெற்றோர்களிடம் அவர்களது குழந்தைகளுக்கு ஆஸ்துமா என்று கூறினால் மிகவும் அச்சப்படுகின்றனர். சிலர் சாதாரண இருமல் என அலட்சியமாக நினைத்துவிடுகின்றனர். ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால், குறுகிய காலத்தில் குணப்படுத்திவிடலாம்."