மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கல்பனா சோழன் ,ஹாசிப்கான்

##~##

சமையல் அறையில் மும்முரமாக இருந்தாள் அம்மா.

''அம்மா பசிக்குது' என்று குரல் கொடுத்தான் பாபு. 'கொஞ்சம் பொறுடா. வழக்கமா வருந்தி வருந்திக் கூப்பிட்டாலும் வர மாட்டே. இப்போ பசி பசின்னு பறக்கிறே. வெறும் அரிசியையா தர முடியும்?' என்று சொல்லிக்கொண்டே வந்தாள் அம்மா.

சற்று நேரத்தில் உணவு தயாரானது. சாப்பிட அமர்ந்தார்கள். 'நல்லா வெந்திருக்கா பாரு' என்று கேட்டார் அம்மா.

'விட்டால், பச்சையாவே சாப்பிடுவேன். வெந்த வரை போதும்'' என்று அவசரப்பட்டான் பாபு.

'அது எப்படி? சரியாக வேகாததைச் சாப்பிட்டால் வயிறு வலிக்கும்'' என்ற அம்மாவின் குரலைக் காதில் வாங்காமல் விறுவிறு என்று சாப்பிட்டான். வயிறு நிரம்பியதும், கேள்வி பிறந்தது. 'ஏன் வயிறு வலிக்கும்?'

'ரொம்ப நல்ல கேள்வி. எனக்கு இருக்கிற வேலையிலே, இப்போ உட்கார்ந்து விளக்கிட்டு இருக்க முடியாது. உனக்கு புரிகிற மாதிரி  பதில் சொல்லவும் எனக்கும் வராது. உன் மாயா டீச்சர்கிட்டே போய்க் கேளு.' என்று அனுப்பிவைத்தார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சர் வீட்டை பாபு அடைந்தபோது, மற்ற சுட்டிகளும் அங்கே இருந்தார்கள். போனதுமே அந்தக் கேள்வியை மாயா டீச்சரிடம்  கேட்டான்.

'ஒரு சில பருக்கைகள் சாப்பிட்டால் எதுவும் ஆகாது பாபு. நிறையச் சாப்பிட்டால் வயிறு வலிக்கும்தான். யாராவது பச்சையாக அரிசி சாப்பிட்டுப் பார்த்து இருக்கியா?' என்றார் டீச்சர்.

'எங்க பாட்டி, நேத்து சாயந்திரம்கூட ஊறவெச்ச அரிசியை வாயில் போடுறதைப் பார்த்தேனே' என்றாள் மீனா.

'ஐயோ... அவங்க என்ன சாப்பாட்டுக்குப் பதிலாவா சாப்பிட்டாங்க? நல்லா ஊறிடுச்சா... மாவு அரைக்கலாமானு  பார்த்து இருப்பாங்க' என்று பதில் சொன்னாள் சிந்து.

'டீச்சர், ஒண்ணு கேட்டால் யாரும் சிரிக்கக் கூடாது'' என்று பீடிகை போட்ட பாபு, தயக்கத்துடன் கேட்டான், ''அரிசின்னா என்ன டீச்சர்?''

'அரிசிங்கிறது ஒரு வகை தானியம்'' என்றார் டீச்சர்.

'அரிசி எப்படி சோறாக மாறுது?'  - இது  மீனா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'இதை நான் சொல்றதைவிட, நீங்களே அனுபவிச்சுத் தெரிஞ்சுக்குங்க' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தில் ஏற்றி சுட்டிகளைப் பல விதமான அரிசிகளாக மாற்றினார். அவர்கள் வெதுவெதுப்பான  ஒரு சாப்பாட்டுப் பாத்திரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

'ஒரு பாத்திரத்தில் அரிசியையும் தண்ணீரையும் சரியான அளவில் கலந்து அடுப்பில் ஏற்றினால், அந்தச் சூட்டில் தண்ணீர் கொதித்து அரிசிக்குள் ஊடுருவுகிறது. அதற்குள் இருக்கும் மாவுப் பொருள் தண்ணீரை உறிஞ்சிச் சோறாக மாறுகிறது. பச்சை அரிசி, புழுங்கல் அரிசி என்று விதவிதமான வகைகள்... ஒவ்வோர் ரக அரிசியும் வேகும் விதத்தில் வித்தியாசப்படும். பிரஷர் குக்கர், எலெக்ட்ரிக் குக்கர், மைக்ரோ வேவ் என்று பல முறைகளில் சமைக்கலாம். இப்படி சமைத்த சாதம்தான் எளிதாக ஜீரணமாகும்''என்ற டீச்சர், தொடர்ந்தார்...

'அரிசியில் பல விதம் இருந்தாலும், அரிசியில் இருக்கும் ஸ்டார்ச்சைப் பொறுத்து, அமிலோஸ், அமைலோபெக்டின் என்று இரண்டு வகையாப் பிரிக்கலாம். அமிலோஸ் ரக ஸ்டார்ச் இருந்தால், சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாது. சாதம் நன்கு பூ மாதிரி தனித்தனியா இருக்கும். அமைலோபெக்டின் ரக ஸ்டார்ச் இருந்தால், சோறு குழைந்துவிடும்.'' என்றார்.

''இப்படி வேகவெச்ச சோறை அப்படியே சாப்பிட முடியுமா? என் தங்கச்சி வெறும் சோறு மட்டும் சாப்பிடுவா.' என்றாள் சிந்து.

'உன் தங்கை, சின்னப் பாப்பா. சாப்பிடலாம். ஆனால், சாதம் சுவையாக இருக்கணும்னா, சத்தான உணவு வேணும்னா, அதனுடன் வேறு ஏதாவது கலந்து சாப்பிடணும். உங்களுக்குப் பிடிச்ச சாதங்களைச் சொல்லுங்க'' என்றார் டீச்சர்.

'ஃபிரைட் ரைஸ்' என்றான் மதி.

''எனக்கு தக்காளி சாதம்'' என்றான் பாபு.

'ஐயா எப்பவும் தயிர் சாதம்'' - இது மீனா.

' எனக்கு பொங்கல் பிடிக்கும்'' என்றாள் சிந்து.

'அரிசியில் மட்டும் இல்லே... கோதுமை, பார்லினு எத்தனை விதமான தானியங்கள்? வகை வகையான பருப்புகள், காய்கறிகள். எத்தனை விதமான உணவு வகை இருக்கு? ஒவ்வொன்றையும் ஒவ்வோர் விதமாகச் சமைக்கலாம். கொதிக்கவைக்கலாம், ஆவியில் வேக வைக்கலாம். அரைக்கலாம், பொரிக்கலாம், சுடலாம், உறைய வைக்கலாம், ஊறவெச்சு முளைகட்டி, வேகவைக்கலாம். உங்களுக்குத் தெரிஞ்ச, ஆவியில் வேகும் சாப்பாட்டைச் சொல்லுங்க''என்றார் டீச்சர்.

'இட்லி', 'இடியாப்பம்'', 'புட்டு' எனப் பல்வேறு பதில்கள் வந்தன.

'குட்! சில உணவுகளைப் பொரிச்சு சாப்பிடுறோம். உதாரணமா...'' என்று டீச்சர் சொல்லும்போதே, பாபு குறுக்கிட்டான்.

'வடை, பூரி, பஜ்ஜி, சிப்ஸ்... சரியா?'

'கரெக்ட்! நிறைய காய்கறிகளை வெட்டி, வதக்கிச் சாப்பிடுறோம்'' என்றார் மாயா டீச்சர்.

'அப்போ, எதையும் பச்சையாகச் சாப்பிடக் கூடாதா?' என்று கேட்டாள் மீனா.

'கத்தரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய்களை பச்சையாகச் சாப்பிட முடியாது. தக்காளி, வெள்ளரிக்காய், காரட் மாதிரி சில காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடலாம். சாலட்டாகச் சாப்பிடும்போது, ஏதாவது டிரெஸ்ஸிங் கலந்து சாப்பிடுறோம். அந்த டிரெஸ்ஸிங்கில் எலுமிச்சம் பழச் சாறு அல்லது வினிகர் கலப்போம். அதுவும் ஒருவிதமான சமையலே. சர்க்கரை, புரதச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்கள் எல்லாமே நாம் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்துதான் கிடைக்குது. கறி, கூட்டு, துவையல், பொரியல், சூப், கஞ்சி, ஜூஸ்னு புளிப்பு, உப்பு, காரம், இனிப்பு, துவர்ப்பு இப்படிப் பலவிதமான சுவையோடு எத்தனை விதமாகச் சாப்பிடுறோம்? இப்படி விதவிதமான முறைகளில் அந்தந்தப் பதத்தில் சமைத்துச் சாப்பிடும்போதுதான், தானியங்கள், காய்கறிகளில் இருக்கிற சத்துகள் நமக்குப் பலன் தருகிறது. சாப்பாடு நமக்கு சத்து மட்டும் இல்லை, மருந்தாகவும் பயன்படுது. சரி, இப்போ நாம திரும்பிப் போகலாமா?' என்றார் டீச்சர்.

''போகலாம் டீச்சர். ஆனா, ஒரு கண்டிஷன்'' என்றான் பாபு.

''என்ன?'' என்று கேட்டார் டீச்சர்.

''வீட்டுக்குப் போனதும் எங்க எல்லோருக்கும் சூப்பர் டேஸ்ட்டில் நூடுல்ஸ் செய்து தரணும்'' என்றான்.

''ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்க, வேகாத வெயிலில் அலைஞ்சேன்னு சொல்வாங்க. நீங்களோ, சாப்பாட்டோடு சாப்பாடா வெந்து, உங்க அறிவை வளர்த்துட்டு இருக்கீங்க. நிச்சயமா செய்து தர்றேன்'' என்றார் டீச்சர்.

சுட்டிகள் பழைய உருவத்தை அடைந்து, குஷியுடன் வீட்டுக்குள் குதித்தார்கள்.      

'பசிக்கும்போதுதான் சாப்பாடு பத்தி நினைவு வருதே தவிர, வேளாவேளைக்கு விதவிதமாக் கிடைக்கும் சாப்பாட்டில் இத்தனை விஷயம் இருக்குன்னு இன்னைக்குத்தான் தெரியுது' என்று          பஞ்ச் டயலாக் பேசி அன்றைய கூட்டத்தை முடித்தாள் சிந்து.