Published:Updated:

"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!
"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!

அடுத்த சில நாள்களில் அவன் உடல்நிலை மோசமானது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார்கள். கல்லீரல் தானத்துக்காகக் காத்திருந்த நேரத்தில், ராதேஷின் உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. உயிருக்குத் தவிக்கும் குழந்தையைக் கண்டு பெற்றோர் நிலைகுலைந்து நின்றனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த வரதராஜன் - தேவஶ்ரீ தம்பதியரின் மகன் ராதேஷ். மூன்று வயது சுட்டிச் சிறுவன். கடைக்குட்டி என்பதால் பெற்றோர்களின் செல்லம். வழக்கமாக, குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் சளி, காய்ச்சல் தொந்தரவுகள் தவிர்த்து, வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏதும் ராதேஷுக்கு இல்லை. கடந்த மாதம், அவனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இரண்டு நாள்களுக்குமேல் சரியாகாமல் நீடிக்கவே, பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராதேஷைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு 'லிவர் ஃபெயிலியர்' என்று கூறினர். 

"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!

அடுத்த சில நாள்களில் அவன் உடல்நிலை மோசமானது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார்கள். கல்லீரல் தானத்துக்காகக் காத்திருந்த நேரத்தில், ராதேஷின் உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. உயிருக்குத் தவிக்கும் குழந்தையைக் கண்டு பெற்றோர் நிலைகுலைந்து நின்றனர். 

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.    

அதுபற்றி ராதேஷின் தந்தை வரதராஜன் நெகிழ்ச்சியாகப் பேசினார். 

"எங்களுக்கு மொத்தம் மூணு குழந்தைங்க. மூணாவது பிள்ளைதான் ராதேஷ். சின்ன பிள்ளைகளுக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வர்றது வழக்கம்தானே.  அப்படித்தான் ராதேஷூக்கு ஏப்ரல் 9-ம் தேதி காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சுது. டாக்டரை போய் பார்த்தோம். டாக்டர்கள் அவனை சோதிச்சிட்டு 'லிவர் ஃபெயிலியர்' ன்னு சொல்லிட்டாங்க..."  கண்கள் கலங்குகின்றன வரதராஜனுக்கு.

ராதேஷுக்கு மருத்துவம் பார்த்த, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் சுசித்ரா ரஞ்சித் பேசினார்.  

"ராதேஷூக்கு கல்லீரல் பாதிப்பு எப்படி ஏற்பட்டுச்சுன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள, அவனின் உடல் உறுப்புகள் அடுத்தடுத்துப் பாதிப்படையத் தொடங்கிடுச்சி. கல்லீரல் பாதிப்புக்கான அத்தனை பரிசோதனைகளையும் மிகவிரைவாச் செஞ்சோம். ஆனாலும், காரணத்தை மட்டும் எங்களால் கண்டுபிடிக்க முடியலை. அவனுடைய கல்லீரலின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரே நாளில் நின்னுடுச்சி.

"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!

மருத்துவ மொழியில், இதை 'ஃபல்மினன்ட் லிவர் ஃபெயிலியர்'னு (Fulminant Liver Failure) சொல்லுவோம். அது பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. நாங்களே தடுமாறிப் போனோம். பொதுவா, குறிப்பிட்ட நிலைக்கு மேல பாதிப்பு ஏற்பட்டால் 'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை'தான் ஒரே தீர்வு. ராதேஷ் விஷயத்துல, அந்தக் கட்டத்துக்கு வந்துட்டோம். அவனுக்கு, 'ஓ பாசிட்டிவ் பிளட் க்ரூப்'ங்கறதாலயும், அவன் குழந்தைங்கறதாலயும் கல்லீரல் தானம் கிடைக்கிறதுல நிறைய சிக்கல் இருந்துச்சு. மனித உடம்புல, சிறிதும் பெரிதுமா 500-க்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்யிற உறுப்பு கல்லீரல். செரிமானம் தொடங்கி ரத்தத்துல இருக்க நச்சுகளை நீக்குவது, ரத்த ஓட்டம் சீராக இருப்பதுவரை எல்லாமே கல்லீரலோட வேலைதான். கல்லீரல் செயல்படாததாலே, கொஞ்ச கொஞ்சமா, ராதேஷூடைய மூளை வீக்கமடைவதையும், அவன் உடம்புல அங்கங்க ரத்தக்கட்டு ஏற்படுவதையும் நாங்க தெரிஞ்சுகிட்டோம். இந்த நிலை இன்னும் சில நாள்கள் தொடர்ந்தா, அவனுடைய உயிருக்கே ஆபத்தாகலாம்ங்கறது எங்களுக்கு புரிஞ்சுது. ஆனா, தானமளிக்க தகுதியான நபர் கிடைக்காததால, எங்களால எதுவுமே செய்ய முடியலை.

தானம் கிடைக்கிற வரைக்கும், பையனை காப்பாத்த, 'காம்ப்ளெக்ஸ் ஐசியூ லிவர் சப்போர்ட் தெரபி'னு (Complex ICU Liver Support Therapy) ஒரு சிகிச்சை செஞ்சோம். மூளை செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு, செரிமானம் எல்லாத்தையும் இயந்திரங்கள் மூலமாகச் செயற்கையாக செயல்பட வச்சோம். ஏறத்தாழ பத்து நாள்கள் வரைக்கும் இந்த மாதிரி செஞ்சோம். அதுக்கப்பிறகுதான் அந்த அதிசயம் நடந்துச்சு... அது, நாங்க யாருமே எதிர்பார்க்காத அதிசயம்!" என்றார் ஆச்சர்யம் குறையாமல்.

"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!

அப்படி என்னதான் அதிசயம் நடந்தது? 

கல்லீரல் பாதிப்படைவதற்கு மது அருந்துதல், சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரித்தல், தைராய்டு சுரப்பில் சமச்சீரின்மை, அதீத உடல் பருமன், ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பாதிப்பு என எந்தக் காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். சில நேரங்களில், கல்லீரல் பாதிப்புக்கான காரணங்களை மருத்துவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாமல் போகும். ராதேஷுக்கும் அப்படித்தான் ஆனது.

ஆனால், கல்லீரலின் சிறப்பென்பது, எவ்வளவு பழுதடைந்தாலும், தன்னைத்தானே அது சீரமைத்துக்கொள்ளும். ஏறத்தாழ 80 சதவிகிதத்துக்கு மேல் பாதிப்படைந்தால், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைதான் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும். ஆனால், ராதேஷுக்கு 100 சதவிகித பாதிப்புக்குப் பின்னும் கல்லீரல் முழுமையாய் குணம் அடைந்து செயல்படத் தொடங்கிவிட்டது. ஆம், ராதேஷூக்கு நடந்தது ஒரு மெடிக்கல் மிராக்கிள். எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவன் உடலின் உறுப்புகள் செயல்பட்டதால், கல்லீரல் தன்னைத்தானே சரிசெய்து கொண்டுள்ளது.

இன்னும் இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கும் ராதேஷின் அம்மா தேவிஶ்ரீ கண்கள் கலங்கப் பேசினார். 

"உண்மைய சொல்லனும்னா, பையனை ஹாஸ்பிட்டல்ல சேர்ந்ததுலருந்து, ரொம்ப பயமா இருந்துச்சு. ஹாஸ்பிட்டல் செலவு, மருந்து செலவுங்கறதையெல்லாம் பார்த்த சிலபேர் 'உங்களுக்குதான் மூணு குழந்தை இருக்குல்ல, எதுக்கு இந்த குழந்தைக்கு இவ்வளவு மெனக்கெடறீங்க'ங்கற மாதிரி பேசினாங்க. ஆனா எனக்குள்ளருந்து வந்த உசிராச்சே... அவ்வளவு சீக்கிரம் விடமுடியுமா... அடிப்படையில எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். வேண்டாத தெய்வம் இல்ல. பையன் பிழைச்சிடுவான்னு நம்பினேன். ஆனா, ஒரு சின்ன கத்திகூட அவன் உடம்புல படாம, பையன் முழுசா சரியாகிடுவான்னு நான் எதிர்பார்க்கல. அவனுக்கு மருத்துவம் பார்த்த எல்லா டாக்டரும், 'இது எப்படி நடந்துச்சுன்னு எங்களுக்கேத் தெரியல'ன்னு  சொன்னாங்க. ஆனா உண்மையை சொல்லனும்னா, அவங்களாலதான் இது சாத்தியப்பட்டிருக்கு" என்றார் தேவிஶ்ரீ.

"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!

கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, மருத்துவமனையிலிருந்து ராதேஷ் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான். இப்போது மற்ற குழந்தைகளைப்போல ஓடி ஆடி விளையாடுகிறான். கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக்கொண்டு மேட்சுக்கு ரெடி ஆகிறான்; அக்கா - அண்ணனுடன் சண்டை போடுகிறான்; அப்பாவின் ஸ்மார்ட் ஃபோனுக்காக அடம்பிடிக்கிறான். 

ராதேஷுக்கு தற்போது என்ன மாதிரியான மருத்துவ ஃபாலோ அப் செய்யப்படுகிறது என்று அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டரிடம் கேட்டோம்.

"ராதேஷூக்கு, எந்த மருந்து மாத்திரையும் இப்போதைக்கு பரிந்துரைக்கப்படவில்லை. உணவில் கவனம் செலுத்தி, மூன்று மாதம் வீட்டில் ரெஸ்டில் இருந்தால் போதும் என்பது மட்டும்தான் எங்களின் இப்போதைய பரிந்துரை" என்றார். 

"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே..." - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்!

ராதேஷ், தனக்கு நிகழ்ந்த எதுவும் அறியாது, ஒரு பட்டாம்பூச்சியைப் போல துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறான். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது! 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு