மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

ஹாசிப்கான் ,கே.யுவராஜன்

##~##

''பரீட்சை பக்கத்தில் வர வர உடம்பு லேசா நடுங்க ஆரம்பிக்குது'' என்றான் பரத்.

''இப்பவே நடுங்குதா? அப்படின்னா பரீட்சை அன்னைக்கு பூகம்பமே வந்துடும்'' என்றாள் சுரேகா.

''நிஜமாவே பூகம்பம் வந்துட்டா, பரீட்சையைத் தள்ளி வெச்சுடுவாங்க இல்லே'' என்ற பிரதீப் குரலில் ஆர்வம் பொங்கியது.

''அடப்பாவி! ஏன்டா உனக்கு இந்த விபரீத ஆசை?'' என்ற தீபாவின் குரல்,  பூகம்பம் வந்ததைப் போல் நடுங்கியது.

அன்று ஞாயிற்றுக் கிழமையின் மாலை நேரம். எல்லாச் சுட்டிகளும் மாயா டீச்சர் வீட்டில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களுக்காக சமையல் அறையில் சிற்றுண்டியைத் தாயாரித்துக்கொண்டு இருந்த டீச்சர், இவர்களின் பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டார்.

சில நிமிடங்களில் சூடான உணவுடன் டைனிங் ஹாலுக்கு வந்தார். ''இந்தப் பசங்க பேசினதைக் கேட்டீங்களா டீச்சர்?'' என்ற தீபாவின் குரலில் இன்னும் நடுக்கம் போகவில்லை.

''ம்...ம்... கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். என்ன பரத், பிரதீப் நீங்க எல்லாம் நல்லாப் படிக்கிற பசங்கதானே? அப்புறம் எதுக்கு பூகம்பத்துக்கு இன்விடேஷன் கொடுக்கறீங்க?'' என்று கேட்டார்.

''நல்லாவே படிக்கிறோம். எக்ஸாமிலும் நல்லாவே கலக்கிடுவோம். இருந்தாலும் காரணம் சொல்ல முடியாதபடி ஒரு நடுக்கம்'' என்றான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''பரவாயில்லை. இந்த நடுக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனா, பூகம்பம் லட்சக்கணக்கான உயிரினங்களைப் பலி வாங்கிடும்'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர் என் ஃப்ரெண்டு பாவ்னா, 'ஒவ்வொரு வருஷமும் உலகம் முழுக்க பத்து லட்சம் பூகம்பங்கள் ஏற்படுது’னு சொல்றா. அது உண்மையா? கதை விடறாளா?'' என்று கேட்டாள் சுரேகா.

''உண்மைதான் சுரேகா. ஆனால், பெரும்பாலும் ரொம்பவே சின்னச் சின்ன நிலநடுக்கங்கள். ரிக்டர் அளவில் 1-3 வரையான நிலநடுக்கங்களை, பூகம்பமானியால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.'' என்றார் டீச்சர்.

''பூகம்பம், நிலநடுக்கம் இரண்டுமே ஒண்ணுதானே டீச்சர்?'' என்று கேட்டான் பிரதீப்.

''சின்னதாக வந்தால் நிலநடுக்கம் என்றும், பெரியதாக வந்தால் பூகம்பம் என்றும் வார்த்தையால் வேறுபடுத்துகிறோம். அவ்வளவுதான். அளவைப் பொறுத்துதான் பாதிப்புகள் இருக்கும். இப்போ இங்கே எட்டு பேர் இருக்கோம். ஒரு செகண்டுக்கும் குறைவான நேரத்தில் ரொம்ப மைல்டா ஒரு நிலநடுக்கம் வந்துட்டுப் போய்டும். பரத், சுரேகான்னு நாலு பேர் உணர்ந்து இருப்பாங்க. நாம நாலு பேர் உணர்ந்துகூட இருக்க மாட்டோம்''

டீச்சர் இப்படிச் சொன்னதும் தரையில்வைத்து இருந்த தனது கால்களைத் தூக்கிக்கொண்டாள் தீபா. இதை நொடியில் கவனித்த மற்றவர்கள் சிரித்தார்கள். ''தீபா நீ ரொம்பவே பயப்படறே. உன் பயத்தைத் தெளியவைக்க ஒரே வழி, ஒரு பூகம்பத்தை  நேரடியாக் காட்டுறதுதான்'' என்றார் மாயா டீச்சர்.

''ஹை... சூப்பர்! நான் போய் மந்திரக் கம்பளத்தை எடுத்து வரேன்'' என்றவாறு அறைக்குள் ஓடினான் பிரதீப்.

''என்னமோ தீம் பார்க் கூட்டிட்டுப் போகிற மாதிரி ஓடறான் பாரு. நான் வர மாட்டேன்ப்பா'' என்றாள் தீபா.

''பயப்படாதே தீபா. மந்திரக் கம்பளத்தை உடையாத பெரிய கண்ணாடிக் கோலிக்குண்டாக மாத்திடறேன். அதில் இருந்தவாறு பார்க்கலாம்.  எந்த பாதிப்பும் ஏற்படாது'' என்று உறுதி அளித்தார் மாயா டீச்சர்.

பிரதீப் கம்பளத்துடன் வந்தான். அதில் ஏறியதும் கம்பளம், கண்ணாடி கோலிக்குண்டு போல் மாறியது. பூமியைத் துளைத்துக்கொண்டு கீழே.... கீழே சென்று, ஓர் இடத்தில் மிதந்தது.

''இரண்டு பாறைத் தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதும் சம்பவம்தான் பூகம்பம் என்று உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். இதிலும் மூன்று விதங்கள் இருக்கு. இங்கே ரெண்டு பக்கமும் கவனிங்க. பாறைத் தட்டுக்கள் நகர்ந்து வருது. இந்த நகர்தல் ஆண்டுக்கு சில சென்டி மீட்டர்தான் இருக்கும். சாதாரணக் கண்களுக்கு இது தெரியாது. மந்திரக் கம்பளத்தின் மகிமையால் நம் கண்கள், மெகா சைஸ் மைக்ரோஸ்கோப்பாக மாறி, காட்சியைக் காட்டுது'' என்றார் மாயா டீச்சர்.

சுட்டிகள் பார்த்தார்கள். பிரமாண்டமான பாறைத் தட்டுக்கள் நேருக்கு நேராக நெருங்கிக்கொண்டு இருந்தன. சுட்டிகள் முகங்களில் 'என்ன நடக்குமோ?’ என்கிற பயம் தோன்றி இருந்தது.

''இந்த மோதல்களில் கூடவா வகைகள் இருக்கு?'' என்று கேட்டான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஆமா! ஒண்ணு... ஒரே திசையில் பக்கம் பக்கமாகப் போய்ட்டு இருக்கிற இரண்டு பாறைத் தட்டுக்கள், முனைகளில் லேசாக உராய்ந்துகொள்வது. அடுத்தது, பெருசும் சிறுசும் மோதிக்கொள்வது. அதாவது, ஒரு சிறிய பாறைத்தட்டு நேராக வந்து, ஒரு பெரிய பாறைத் தட்டின் கீழே இருக்கும் இடைவெளியில் எக்குத் தப்பாக மாட்டிக்கொள்ளும். மூன்றாவது வகை, சம அளவு உடைய இரண்டு பாறைத் தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது. இது, இரண்டு சுமோ வீரர்கள் மோதிக்கொள்வது மாதிரி.'' என்றார் டீச்சர்.

''அப்படின்னா, இப்போ நாம் பார்க்கிறது சுமோ வீரர்கள் மோதலையா? நல்லாக் கூட்டிட்டு வந்தீங்க டீச்சர்.''

தீபா இப்படி பயத்துடன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு பாறைத் தட்டுக்களும் மோதிக்கொள்ள, பயங்கரமான சத்தம். மிக மிக பாதுகாப்பான மந்திரக் கம்பளத்தின் உள்ளேயே அதை உணர முடிந்தது.

''நமக்கே இப்படின்னா, தரைக்கு மேலே என்ன நடந்து இருக்குமோ?'' என்ற சுரேகா குரலில் வருத்தம்.

''உங்களுக்கு ஓர் ஆறுதலான விஷயத்தைச் சொல்றேன். இந்த பூகம்பம் நடந்து இருப்பது பெரும்பாலும் வெட்டவெளியாக இருக்கிற ஒரு தீவில்தான். அதனால், உயிர் மற்றும் பொருள் சேதம் குறைவு. இதுவே, கட்டடங்கள் நிறைந்த இடத்தில் ஏற்பட்டு இருந்தால், பயங்கரமாக இருக்கும்.'' என்றார் மாயா டீச்சர்.

''அப்படின்னா பெரிதாக ஏற்படுகிற உயிர் சேதங்களுக்கு மனிதர்களும் ஒரு காரணம்னு சொல்லுங்க'' என்றான் பரத்.

''ரொம்ப கரெக்ட்! மனிதன் பேராசையால், உயர உயரமான கட்டடங்களைக் கட்டி, அதில் வசிக்கிறான். பூகம்பத்தால் அந்தக் கட்டடங்கள் நொறுங்கி, நொடிப்பொழுதில் பலரைக் கொன்றுவிடுகிறது.'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் மீண்டும் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது. ''ஜப்பானில் மட்டும் ஏன் டீச்சர் அடிக்கடி பூகம்பம் ஏற்படுது?'' என்று கேட்டான் பிரதீப்.

''பூமியின் அடிப் பகுதியில் எங்கே எல்லாம் இரண்டு பாறைத் தட்டுக்கள் சந்திக்கின்றனவோ, அங்கேதான் பூகம்பம் ஏற்படும். ஜப்பான், அந்தமான் தீவுகள் அதில் முக்கியமானவை. அதனால்தான், அங்கே அடிக்கடி ஏற்படுகிறது. ஆனாலும் ஒரு விஷயம். ரிக்டர் அளவில் எட்டுக்கு மேல் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டால், அந்த இடத்தில் அடுத்த 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு பூகம்பம் ஏற்படாது. காரணம், இந்த பாறைத் தட்டுக்களால் ஏற்பட்ட அழுத்தம் அந்த இடத்தில் நீங்கிவிட்டு இருக்கும்'' என்றார் மாயா டீச்சர்.

ஒரு வழியாக மந்திரக் கம்பளம் அவர்களை மாயா டீச்சரின் வீட்டில் பழைய நிலையில் இறக்கியது. தீபா ஓடிச்சென்று தொலைக்காட்சியை இயக்கினாள். அதில், பூகம்பம் ஏற்பட்ட தீவினைக் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

''அடேங்கப்பா... அதுக்குள்ளே மீடியாக்கள் அங்கே போய் படமே பிடிச்சுடுச்சே'' என்று வியந்தான் பரத்.

''எல்லாம் அறிவியல் வளர்ச்சியின் வேகம்தான் காரணம். ஆனால், பழங்காலத்தில் பூகம்பம் பற்றி பல்வேறு மூட நம்பிக்கைகள் இருந்தன. பூமிக்குக் கீழே ஒரு மீன் தாங்கி பிடிச்சுட்டு இருக்கு, அது பாரம் தாங்காமல் உடலைக் குலுக்குவதுதான் பூகம்பம் என்று ஜப்பானியர்கள் நினைத்தார்கள். அந்தமான் பகுதி ஆதிவாசிகள், 'பூமிக்கு கீழே ராட்சசப் பன்றி இருக்கிறது. ஆண்டுக்கணக்கில் தூங்கும் அது, கண் விழித்ததும் சோம்பலுடன் புரண்டு படுக்கும். அதுதான் பூகம்பம்’ என்று நினைத்தார்கள். அவ்வளவு ஏன்? தத்துவ மேதை அரிஸ்டாட்டிலே 'பூமிக்குக் கீழே வீசும் புயலே பூகம்பம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். பிறகுதான், இவை எல்லாம் தவறு என்று கண்டுபிடித்தார்கள். பூகம்பமானியால் துல்லியமாக அளக்கும் முறையும் வந்தது'' என்றார் டீச்சர்.

''இவ்வளவு கண்டுபிடிச்சாங் களே... பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கிறதுக்கு ஒரு கருவியைக் கண்டுபிடிக் கலையா?'' என்றான் பிரதீப்.

''இன்று வரை இல்லை. இனி வருங்காலத்தில் கண்டுபிடித்தால், அது விஞ்ஞான வளர்ச்சியின் மைல் கல்லாக இருக்கும். ஆனால், சில பறவைகள், நாய் போன்ற சில விலங்குகளால் கடைசி சில நிமிடங்களில் உணர முடியும். பூமிக்கு கீழ் பரப்பில் இருந்து மேலே வருகிற கந்தக வாசனையை அறிந்துகொள்ளும். நமக்கு அந்த சக்தி கிடையாது.'' என்றார் டீச்சர்.

''சரி, டீச்சர் எங்களுக்கு நேரமாகுது. நாங்க கிளம்பறோம். இல்லைன்னா எக்ஸாமை பக்கத்தில் வெச்சுகிட்டு இவ்வளவு நேரம் அரட்டையானு எங்க வீட்டில் பூகம்பம் ஏற்படும்.'' என்றாள் தீபா.

''ஆமா! ஆமா! அதுக்கு ரிக்டர் அளவே கிடையாது'' என்றபடி கிளம்பினார்கள்.