கே.யுவராஜன் ஹாசிப்கான்
##~## |
மாயா டீச்சருடன் சுட்டிகள் கணிப்பொறி முன்பு இருந்தார்கள்.
பரீட்சை மும்முரத்தில் இருந்த சுட்டிகள், இப்போது வந்து இருப்பதும் பாடம் சம்பந்தமாகத்தான். தீபாவுக்கு மெசபடோமியா பற்றி ஒரு தகவல் தெரிய வேண்டும். பாரதியார் பற்றி எழுதப்போகும் கட்டுரையில், வித்தியாசமான செய்தியைச் சேர்க்க முடியுமா என்பது பரத் எதிர்பார்ப்பு. அவர்களுடன் சுரேகா, பிரவீன், பிரதீப் இருந்தார்கள்.
அப்போது, கணிப்பொறித் திரையில் கோடுகள், அலை அலையாகக் கிளம்பின. அடுத்த சில நொடிகளில்... சுரேகா வைத்து இருந்த செல்போன் இசையை எழுப்பியது. எடுத்துப் பேசிய சுரேகா, ''மாயா டீச்சர் வீட்லதான் இருக்கேன் டாடி. சீக்கிரம் வந்துடுவேன்'' என்று சொல்லிவிட்டு, வைத்தாள். மீண்டும் கணிப்பொறித் திரையில் கோடுகள் வந்து மறைந்தன.
''செல்போனில் கால் வரும்போது... இப்படி கம்ப்யூட்டர், டி.வி. ஸ்க்ரீனில் கோடுகள் உருவாவது எதனால் டீச்சர்?'' என்று கேட்டான் பிரதீப்.
மாயா டீச்சர், ''நீ அகச்சிவப்புக் கதிர்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறாயா பிரதீப்?'' என்று கேட்டார்.

''ஓ... பாடமே படிச்சு இருக்கேன் டீச்சர். சூரிய ஒளியில் ஊதா, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு வண்ணங்கள் இருக்கும். இதில், அலை நீளம் அதிகமான சிவப்பு நிறத்துக்கு அப்பால், இருக்கிற கண்ணுக்குப் புலனாகாத மின் காந்த அலைகளை அகச்சிவப்புக் கதிர்கள் என்பார்கள்'' என்று ஒப்புவித்தான்.
''சபாஷ்டா பிரதீப்! நீ இந்த வருஷம் பாஸ் பண்ணிருவே'' என்று பிரவீன் சொல்ல, மற்ற சுட்டிகள் சிரித்தார்கள்.
''கண்ணுக்குப் புலனாகாத இந்தக் காந்த அலைகளைத்தான் கணிப்பொறி, ரேடியோ, தொலைக்காட்சி போன்ற எலெக்ட்ரானிக் உபகரணங்களில் பயன்படுத்துகிறோம். இவை, ஒரு எலெக்ட்ரானிக் கருவியில் இருந்து வெளியாகும்போது, அருகே இன்னொரு எலெக்ரானிக் கருவியும் இருந்தால், ஹலோ சொல்லிக்கொள்ளும் ரியாக்ஷன்தான் இது'' என்றார் மாயா டீச்சர்.
''அப்படின்னா, செல்போனைத் தடை செய்வதற்கு, ஜாமர் என்று பயன்படுத்துறாங் களே... அதுவும் இதே டைப்தானா?'' என்று கேட்டான் பரத்.
''இல்லை பரத், அது வேறு ரகம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், டிராஃபிக் ஜாம் ஆயிடுச்சு என்றும், லஞ்ச் பாக்ஸைத் திறக்க முடியாமல் போனால், நல்லா ஜாம் ஆயிடுச்சு என்றும் சொல்வோம் இல்லியா? ஜாமர் என்றால், நெருக்குதல் என்று அர்த்தம். இந்த ஜாமர் விஷயத்தைப் பெரும்பாலும் ராணுவத்தில்தான் பயன்படுத்துவார்கள்'' என்றார் டீச்சர்.
''என்னது, ராணுவத்திலா? இது செல்போனில் இருக்கிற சமாச்சாரம்னு நினைச்சேன்'' என்றான் பிரதீப்.
''ராணுவத்தில் இருந்துதான் செல்போன் பக்கம் வந்தது. அதைப்பற்றி அப்புறம் சொல்றேன். இப்போ, போர் நடக்கும் ஓர் இடத்துக்குப் நாம் போய், இந்த ஜாமரை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாமா?'' என்று கேட்டார் டீச்சர்.
''இப்பவா? பரீட்சை இருக்கே...'' என்று இழுத்தாள் தீபா.

''நாம என்ன முதுகில் பெரிய மூட்டையைச் சுமந்துகிட்டு, ரயிலிலும் விமானத்திலுமா போகப் போகிறோம். மந்திரக் கம்பளத்தில் ஏறினால், நிமிஷத்தில் போயிட்டு உடனே திரும்பி வரப் போறோம்... அதானே டீச்சர்?'' என்றான் பிரவீன்.
''அதேதான்! உங்களுக்கும் பரீட்சை டென்ஷனில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைச்ச மாதிரி இருக்கும்'' என்ற மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தை விரித்தார்.
சற்று நேரத்தில், அவர்கள் ஒரு ராணுவ முகாம் அருகே இருந்தார்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளைத் தயார் செய்வது, பீரங்கிகளில் வெடி மருந்துகளை அடைப்பது எனப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தார்கள். மேலே, தூரத்தில்... எதிரி நாட்டின் போர் விமானம் வருகிற ஓசை கேட்டது. மந்திரக் கம்பளம் இவர்களை யார் கண்களுக்கும் தெரியாத மாதிரி மறைத்து இருந்தது. அதே நேரம், சுட்டிகள் தங்கள் கண்களுக்கு எதிரே அலை அலையான கோடுகளைப் பார்த்தார்கள். ''இது என்ன அலைகள் டீச்சர்?'' என்று கேட்டாள் சுரேகா.
''இதுதான் ரேடியோ அலைகள். இப்போது, எதிரிகளின் போர் விமானம் முகாம்களைத் தாக்குவதற்காக வருகிறது. அந்தப் போர் விமானத்தில் ரேடார் இருக்கும். அதன் மூலம் இங்கே இருக்கும் எலெக்ட்ரானிக் கருவிகளில் இருந்து வருகிற அலைகளைக் கண்டுபிடிச்சு, குண்டுகளை வீசித் தாக்குவது திட்டம். அந்த ரேடார் கருவிக்குச் செல்லும் அலைகளைக் குழப்புவதற்கு, அதே அதிர்வு எண்களை உடைய, ரேடியோ அலைகளை ஜாமர் மூலமாகச் செலுத்துகிறார்கள். அந்தப் பீரங்கிகளின் மேலே கவனிங்க. இடிதாங்கி மாதிரி குட்டியாக ஒரு கருவி இருக்கா?'' என்றார் டீச்சர்.
சுட்டிகள் உற்றுக் கவனித்தார்கள். ''அட... ஆமாம்!'' என்றார்கள்.
''அதுதான் ஜாமர் கருவி. இப்போ என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்'' என்றார்.
இப்போது, போர் விமானத்தின் சத்தம் அருகில் கேட்டது. அந்த இடத்தை நெருங்கிவிட்ட விமானத்தில் இருந்து, ஒரு ராக்கெட் குண்டு பாய்ந்து வந்தது. ஆனால், அது இலக்கு மாறி, வெட்டவெளியில் விழுந்து வெடித்தது. அதே நேரம், பீரங்கியில் இருந்து சீறிப் புறப்பட்ட வெடிகுண்டு, போர் விமானத்தைத் தாக்கியது. அந்தப் போர் விமானம் நிலை தடுமாறி, தூரத்தில் சென்று விழுந்து, பெரிதாக வெடித்தது.
அதைப் பார்த்த சுட்டிகள், ''கம்ப்யூட்டரில் வீடியோ கேம் விளையாடி, பல விமானங்களை ஜாலியாக நொறுக்குவோம். அதையே நிஜத்தில் பார்க்கும்போது தான் எவ்வளவு பயங்கரமான விஷயம்னு புரியுது. பாவம்! அதில் இருந்தவங்க செத்துப்போய் இருப்பாங்க தானே...'' என்ற தீபாவின் குரலில் வருத்தம்.
அவள் தலையை வருடிய டீச்சர், ''இப்போ அந்த எதிரி நாட்டுக்காரர் களும் விட்டுற மாட்டாங்க சிர்ப் ராடார் ஃப்ரிக்வென்சி என்கிற அலைவரிசைத் தாவல் முலமாக, ஜாமரை செயல் இழக்கவெச்சு, தாக்குவாங்க. அதை எல்லாம் பார்க்க வேண்டாம். இங்கே இருந்து கிளம்புவோம். போகிற வழியில் இதே டெக்னிக்கல் மூலமாக மொபைல் போன் ஜாமர் செயல்படுவதைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர். மந்திரக் கம்பளம் அந்த இடத்தைவிட்டு 'விஷ்க்’ என மறைந்தது.

''எதுக்கு டீச்சர் இப்படி ஒருத்தர் உயிரை இன்னொருத்தர் பறிக்கிற மாதிரி சண்டை போட்டுக்கணும்?'' என்றான் பரத்.
''மனிதர்களிடம் ஈகோ, பேராசை போன்ற குணங்கள் இருக்கிற வரை இது நடந்துட்டுதான் இருக்கும் பரத். அன்பு ஒன்றுதான் எல்லா மனிதர்களையும் வெல்வதற்கான வழி என்று புரியாததன் விளைவு இது. ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே அறிவியலைப் பயன்படுத்தினால் நல்லது. செல்போன் ஜாமர் ஆக்கப்பூர்வமான விஷயம்தான்.'' என்றார் மாயா டீச்சர்.
இப்போது, அவர்கள் அரசுக்குச் சொந்தமான பாதுகாப்புகள் நிறைந்த ஒரு தொழிற்சாலைப் பகுதியில் இருந்தார்கள். மேலே இருந்து இவர்கள் பார்த்த கோணத்தில், அந்தப் பகுதி முழுவதும் தெரிந்தது. இரு பக்கமும் மரங்கள் சூழ்ந்த நீளமான சாலை. அதில் போக்குவரத்து அதிகம் இல்லை. ஆங்காங்கே இருக்கும் செல்போன் டவர்கள் தெரிந்தன. அங்கே மறைத்துவைக்கப்பட்டு இருந்த ஜாமர் கருவிகள், மந்திரக் கம்பளத்தின் மகிமையால் நன்றாகவே தெரிந்தது. தூரத்தில் ஒரு காரும் வந்துகொண்டு இருந்தது. அதில் வருபவர், செல்போனில் பேசிக்கொண்டே வந்தார்.
''இப்போ என்ன நடக்குது என்று கவனியுங்க'' என்ற மாயா டிச்சர், ரன்னிங் கமென்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார். ''இப்போ செல்போனில் அவர் பேசுவதற்குத் தேவையான அலைகள், செல்போன் டவர் மூலமாகக் கிடைச்சுட்டு இருக்கு. அவர் ஜாமர் இருக்கும் இடத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறார். அந்த ஜாமரில் இருந்து ரேடியோ அலைகள் வந்துட்டு இருக்கு. அதன் சுற்று வட்டத்துக்குள் அவரோட கார் வந்ததும், செல்போனுக்கான அலைகளைத் தடுத்து, செயல் இழக்கவெச்சுடுச்சு.'' என்றார்.
தொடர்ந்து, ''21-ஆம் றூற்றாண்டில் அறிமுகமான இந்த செல்போன், அறிவியல் வளர்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. செல்போன் வந்த பிறகு, அடுத்தவர்களைத் தொடர்புகொள்வது மிக எளிதாக மாறியதும், அதனால் எத்தனையோ நன்மைகள் விளைந்ததும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதுவே சில இடங்களில் தொல்லையாகவும் மாறிப்போச்சு. முக்கியமான மீட்டிங், பெரிய தலைவர்களின் பாதுகாப்பான இடங்களிலும் எல்லோரும் செல்போனில் பேசிட்டே இருந்தாங்க. இதைத் தடுக்கத்தான் ராணுவத்தில் இருந்த ஜாமர் விஷயத்தை இங்கே கொண்டு வந்தாங்க'' என்றார் மாயா டீச்சர்.
சில நிமிடங்களில் மந்திரக் கம்பளம் அவர் களை வீட்டில் இறக்கியது. சுட்டிகள் தங்கள் செல்போன் களை எடுத்துப் பார்த்தார் கள். ஒவ்வொருவரின் போனிலும் அப்பா, அம்மா விடம் இருந்து மிஸ்டு கால்கள் வந்து இருந்தன.
''டீச்சர், இது அநியாயம்... கண்ணுக்குத் தெரியாத அதிர்வு அலைகளை எல்லாம் தெரியவெச்ச மந்திரக் கம்பளம், எங்களுக்கு வந்த போன் கால்களை மட்டும் ஜாமரோடு ரகசியமா கூட்டுச் சேர்ந்துகிட்டு தடுத்துடுச்சே'' என்றான் பிரவீன்.
''ஜாமரோடு ஆரம்பத்தி லேயே இப்படி ஓர் ஒப்பந்தத்தை மந்திரக் கம்பளம் போட்டுகிட்டு தானே நம்மை கூட்டிக் கிட்டே போச்சு'' என்று சொல்லி, புன்னகைத்தார் மாயா டீச்சர்.