ஹரியானாவில் உள்ள மேவாட் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை மஹிரா. நவம்பர் 6-ம் தேதி குழந்தை வீட்டின் பால்கனியில் நின்று விளையாடிக்கொண்டிருந்தபோது, தவறுதலாகக் கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தை மயக்க நிலையில் இருந்ததைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத விதமாகக் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக, நவம்பர் 11-ம் தேதி காலை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் தீபக் குப்தா கூறுகையில், ``குழந்தை நவம்பர் 11-ம் தேதி மூளைச் சாவு அடைந்தது. மஹிராவின் பெற்றோரிடம் உடல் உறுப்புகளை தானம் செய்யக் கூறியதில், அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அதன் அடிப்படையில், குழந்தையின் கல்லீரல் `இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அண்ட் பைலியரி சயின்ஸ்’ஸில் உள்ள ஆறு மாத குழந்தைக்கும், இரு சிறுநீரகங்கள் எய்ம்ஸ்ஸில் உள்ள 17 வயது சிறுவனுக்கும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் குழந்தையின் கருவிழிகள் மற்றும் இதய வால்வுகள் பிற்கால பயன்பாட்டுக்காகப் பாதுகாக்கப் பட்டுள்ளன.
பெரும்பாலும் குழந்தைகள் பால்கனியில் பாதுகாப்பற்ற முறையில் ஏறி உயரத்தில் இருந்து கீழே விழுகின்றனர். தலையில் பலத்த காயங்களோடு இறக்கவும் நேரிடுகிறது.
எனவே, ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் உயரத்தைவிட பால்கனியின் உயரம் இருமடங்கு அதிகமாக இருக்க வேண்டும். இத்தகைய இறப்புகள் மற்றும் காயங்கள் முற்றிலும் தடுக்கக் கூடிய ஒன்றே’’ என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு 16 மாத குழந்தையான ரிஷாந்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது 18 மாத குழந்தையான மஹிராவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. உடல் உறுப்புகளைத் தானம் செய்த இரண்டாவது சிறிய குழந்தை மஹிராதான்.

உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் உடல் உறுப்புகளை தானம் செய்யும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதாவது ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 0.4 பேர் மட்டுமே உடல் தானம் செய்கிறார்கள். அதிலும் சராசரியாக 700 உடல் உறுப்பு தானங்கள் மூளைச்சாவு அடைந்த பிறகே நடைபெறுகிறது.
இறந்தும் இரண்டு பேர் மூலமாக உயிர் வாழ்கிறாள் மஹிரா.