மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

##~##

''பரீட்சை முடிகிற வரைக்கும் வெளியே போகக் கூடாதுன்னு தடை உத்தரவு இருந்துச்சு. இப்போ, எல்லாம் முடிஞ்சு லீவும் விட்டாச்சு. ஆனாலும் காலையில் ஒன்பது மணிக்கு மேலே வெளியே போக முடியலை. இந்த வெயில் சுளுக்கு எடுக்குது.''

மாயா டீச்சர் வீட்டில் ஜன்னல் வழியே பார்த்தவாறு சொன்னான் பரத். அவன் குரலில் ஏக்கம். சுரேகா, தீபா, பிரதீப் மூவரும் அவன் அருகே இருந்தார்கள். ஒரு தட்டில் பழச்சாறு நிரம்பிய கண்ணாடி டம்ளர்களுடன் அங்கே வந்தார் மாயா டீச்சர்.

''பசங்களா... எல்லோரும் வாங்க'' என்றதும் சூழ்ந்துகொண்டார்கள். ஆளுக்கு ஒரு டம்ளரை எடுத்து 'மடக் மடக்’ எனக் குடிக்க ஆரம்பித்தார்கள். பிரதீப் மட்டும் சும்மா இருந்தான்.

''எனக்கு வேண்டாம் டீச்சர்!'' என்று சோகத்துடன் சொன்னான்.

''ஏன்டா... ஆரஞ்சு ஜூஸ் உனக்கு ரொம்பப் பிடிக்குமே'' என்றார் டீச்சர்.

''டீச்சர், அவன் உண்ணாவிரதத்தில் இருக்கான்'' என்றாள் தீபா.

''உண்ணாவிரதமா எதுக்கு?'' என்று மாயா டீச்சர் கேட்க, பிரதீப் பதில் சொல்லவில்லை. தீபாவே தொடர்ந்தாள்.

''லீவு விட்டதுமே ஃபேமிலியோடு கொடைக்கானலுக்குப் போகலாம்னு இவனோட அப்பா பிராமிஸ் பண்ணி இருந்தாராம். இப்போ, அடுத்த மாசம்தான்னு சொல்லிட்டார். அதெல்லாம் முடியாது, உடனே போகணும்னு இவன் சொல்றான். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்னிக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கான். தண்ணீர்கூட குடிக்க மாட்டானாம்'' என்றாள் தீபா.

''அது மட்டும் இல்லே, அடுத்த வாரத்தில் இருந்து இரண்டாம் கட்டமாகத் தொடர் உண்ணாவிரதம் இருப்பானாம்'' என்றான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''அப்படின்னா சரி, உன் பங்கு ஜூஸை நான் குடிச்சுடுறேன்'' என்று சொல்லியவாறு குடிக்க ஆரம்பித்தார் மாயா டீச்சர்.

''அடிக்கிற வெயிலுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் தண்ணீர், ஜூஸ்னு குடிச்சாலும் தாகம் அடங்க மாட்டேங்குது. நீ என்னடான்னா... தண்ணீரே குடிக்க மாட்டேன்னு சொல்றே. என்ன ஆகப் போகுதோ?'' என்றான் பரத்.

''டீச்சர், நாம பிரதீப் உடம்புக்குள்ளே போய், என்ன ஆகுதுன்னு பார்க்கலாமா?'' என்று கேட்டாள் சுரேகா.

''என்னோட உண்ணாவிரதம் உங்களுக்கு எல்லாம் கிண்டலா இருக்கா?'' - இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கோபத்துடன் கேட்டான் பிரதீப்.

''கோவிச்சுக்காதே பிரதீப். வேணும்னா நீயும் வா... நாம வேற ஒருத்தரின் உடம்பில் போய்ப் பார்ப்போம். உண்ணாவிரதம் இருக்கிற உனக்கு, இது தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்'' என்றார் டீச்சர்.

யார் உடம்புக்குள் போகலாம் என்று யோசித்தார்கள். அப்போது எதிர் வீட்டு பால்கனியில் ஈஸி சேரைப் போட்டுக்கொண்டு ஒரு தாத்தா உட்கார்ந்து இருந்தார். அவர் கையிலும் பழச்சாறு. அத்தனைப் பேரின் பார்வையும் அவரிடம் சென்றதுமே, ''புரியுது... புரியுது...'' என்றபடி மந்திரக் கம்பளத்தை எடுத்தார் டீச்சர்.

அவர்களைப் பழச்சாறின் துகள் அளவுக்கு குட்டியாக மாற்றிக்கொண்டு பறந்த மந்திரக் கம்பளம், தாத்தாவின் ஜூஸ் டம்ளரில் போய் இறங்கியது. அங்கே இருந்து உணவுக் குழாய் வழியாக தாத்தாவின் உடம்புக்குள் பயணம் செய்தார்கள்.

''டீச்சர் நம் உடம்பில் எவ்வளவு தண்ணீர் இருக்கும்?'' என்று கேட்டாள் சுரேகா.

''சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். 70 கிலோ எடை உள்ள ஒரு மனிதனின் உடம்பில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும்.'' என்றார் டீச்சர்.

''அம்மாடி! நீங்க சொல்றதைப் பார்த்தால், உடம்பின் எடையில் பாதிக்கு மேலே தண்ணீர்தான் இருக்கும் போலிருக்கே'' என்றான் பிரதீப்.

''ஆமாம்! ஒரு வளர்ந்த மனிதனின் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர் மற்றும் ரத்தம் போன்ற தண்ணீர்ப் பொருள்களே இருக்கும். பிறந்த குழந்தைக்கோ 75 சதவிகிதம் எடை தண்ணீரே. பிறகு, படிப்படியாகக் குறைந்து, 10 ஆண்டுகளுக்குள் 60 சதவிகிதத்துக்கு வந்துவிடும்.'' என்றார் டீச்சர்.

''நாம் சாப்பிடும் உணவால் சக்தி கிடைக்கிறது. இந்த தண்ணீரால் என்ன சக்தி கிடைக்கிறது'' என்று கேட்டாள் சுரேகா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''நல்லாக் கேட்டே... உணவில் இருந்து சக்தியை உற்பத்தி செய்வது இரைப்பை, கல்லீரல் போன்ற உறுப்புகள்தான். இந்த உறுப்புகள் சுத்தமாக இருப்பது முக்கியம் ஆச்சே. எப்படி நாம் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கு தண்ணீரைப் பயன்படுத்து கிறோமோ, அப்படியே நம் உடம்பில் இருக்கும் முக்கிய உறுப்பு களைச் சுத்தம் செய்யவும் தண்ணீர் பயன்படுகிறது. தவிர, சக்திகளை மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்வதில் ரத்தம் போன்ற முக்கியமான பொருளாக தண்ணீர் இருக்கு.'' என்றார்.

இப்போது அவர்கள் இரைப்பையில் இருந்தார்கள். தாத்தா குடித்த ஜூஸ், அங்கே சக்தியாகப் பிரிக்கப்பட்டு ரத்தக் குழாய் மூலம் கல்லீரல் நோக்கிச் சென்றது. மாயா டீச்சரும் சுட்டிகளும் ரத்தத்தில் மிதந்தவாறு அந்த சக்தியுடன் பயணம் செய்தார்கள்.

''இந்தக் கல்லீரல்தான் சக்தியை இன்னும் பல துணுக்குகளாக உடைத்து, ரசாயன மாற்றம் செய்து, திரும்பவும் ரத்தம் மூலம் செல்களுக்கு அனுப்பும். பிரதீப், நீ உண்ணா விரதம் இருக்கிறதா சொல்றியே... இந்த சமயத்தில் உன்னைக் காப்பாற்றுவது இந்தக் கல்லீரல் சேமித்துவைத்து இருக்கும் சக்திதான். உணவு அல்லாத பொருளைப் பிரித்து வெளியே அனுப்புவதும் இந்தக் கல்லீரல்தான். அதுதான் இப்போ நம்மையும் வெளியே அனுப்பப்போகுது'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளத்தின் சக்தியால் அவர்கள் தோல் பகுதிக்கு வந்தார்கள். ''உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நம் உடம்பில் அதிக நீர் உள்ள உறுப்பு எதுவாக இருக்கும் சொல்லுங்க'' என்றார் மாயா டீச்சர்.

''இரைப்பை'' என்றான் பரத். ''சிறுநீரகம்'' என்றாள் சுரேகா. ''நுரையீரல்'' என்றான் பிரதீப்.

டீச்சர் ''எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம் பக்கத்தில் வந்தீங்க. ஆனால், மூளையை விட்டுட்டீங்களே... கிட்டத்தட்ட 85 சதவிகிதம் தண்ணீரால் மூளை சூழப்பட்டு இருக்கு. இது போல் ஒவ்வொரு உறுப்பிலும் தண்ணீரின் அளவே அதிகம். சராசரியாக 70 சதவிகிதம் இருக்கும்'' என்றார் டீச்சர்.

''தண்ணீர் இல்லாத பகுதின்னு எதுவுமே கிடையாதா டீச்சர்?'' என்று கேட்டான் பிரதீப்.

''கிடையாது. பற்களில் 10 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். இதுதான் குறைந்த சதவிகிதம். இரும்பு போல் இருக்கும் எலும்பில்கூட 25 சதவிகித தண்ணீர் இருக்கும். இவை, புற அணுக்கள் திரவம், டிரான்ஸ்செல்லுலர் திரவம், பிளாஸ்மா எனப் பல பெயர்களில் ஒவ்வொரு உறுப்பிலும் தமது பணியைச் செய்கிறது. இதுக்குத்தான் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிங்க என்று வலியுறுத்தி சொல்கிறார்கள். அதிலும் கோடை சமயத்தில் தண்ணீரின் தேவை உடம்புக்கு மிக முக்கியம்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

இப்போது மந்திரக் கம்பளம், வியர்வை வழியாக அவர்களை வெளியே அழைத்து வந்தது. ''இது எல்லாம் போக இப்படி உடம்பில் இருக்கும் கழிவுகளை வியர்வை, சிறுநீர் என்ற பெயரில் வெளியே கொண்டு வந்து உடம்பைப் பாதுகாப்பதும் நீர்தான். கரெக்ட்டா டீச்சர்?'' என்றான் பிரதீப்.

மாயா டீச்சர் தலையாட்டினார். மந்திரக் கம்பளம் அவர்களை பழையபடி வீட்டில் இறக்கி, சுய உருவத்தை அளித்தது. ''பிரதீப், உண்ணாவிரதம் நல்ல விஷயம்தான். யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நமது கோரிக்கைகளை அமைதியான முறையில் வலியுறுத்தி நிறைவேற்றிக் கொள்ள காந்தி கண்டுபிடித்த ஐடியா. ஆனால், எதிராளியின் சுழ்நிலையையும் நாம் கவனிக்க வேண்டும். உன் அப்பாவுக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலைகள் இருக்கலாம். அல்லது பணப் பற்றாக்குறை இருக்கலாம். அதுதான் அடுத்த மாதம் அழைச்சுட்டுப்போறதா சொல்றாரே. இதுக்கு மேலேயும் உன் பிடி வாதத்தைத் தொடரணுமா?'' என்று கேட்டார் டீச்சர்.

''புரிஞ்சது டீச்சர். மறுபடியும் ஜூஸ் போட்டு எடுத்து வாங்க. அதை குடிச்சு என்னோட உண்ணாவிரதத்தை முடிச்சுக்கிறேன்'' என்றான் பிரதீப்.

''உண்ணாவிரதத்தை முடிக்கும் தலைவர் பிரதீப் அவர்களுக்கு எல்லோரும் கை தட்டுங்கப்பா'' என்று தீபா சொல்ல, எல்லோரும் சிரிப்புடன் கை தட்டினார்கள்.