மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

ஸ்யாம், முத்து கே.யுவராஜன்

##~##

பரத் ரொம்பக் குஷியாக இருந்தான். காரணம், அவன் வீட்டில் நேற்று ஏர்கண்டிஷனர் ஒன்றைப் பொருத்தி இருந்தார்கள். அதைக் காட்ட, நண்பர்களையும் மாயா டீச்சரையும் அழைத்து இருந்தான். பரத்தின் வீட்டிற்குள் அவர் நுழைந்ததும், சுட்டிகள் எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள். பரத்தின் அம்மா பழச்சாறு கொடுத்தார். ''அடேங்கப்பா... வரவேற்பு பலமா இருக்கே!'' என்று சிரித்தார் டீச்சர்.

''சும்மாவா டீச்சர்... மூணு வருஷமாக் கேட்டு, இப்போதான் அப்பா ஏசியை வாங்கினார். வாங்க டீச்சர், அந்த அறைக்குப் போகலாம்'' என்று அழைத்தான் பரத்.

மாயா டீச்சருடன் ஏசி இருக்கும் அறையில் எல்லோரும் நுழைந்தார்கள். கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் குளிர் காற்று உடலை ஊடுருவியது. சுட்டிகள் கட்டில் மீது ஏறி, ஏர் கண்டிஷனருக்கு மிக அருகே நின்றுகொண்டு குதித்தார்கள்.

''டீச்சர், இதற்கு ஏசி என்கிற  பெயர் எப்படி வந்துச்சு?'' - கேட்டாள் சுரேகா.

''வெப்பமாக்கல், காற்றோட்டம், காற்று சீரமைப்பு அதாவது பிமீணீtவீஸீரீ, க்ஷிமீஸீtவீறீணீtவீஷீஸீ, கிவீக்ஷீ சிஷீஸீபீவீtவீஷீஸீவீஸீரீ என்பதையே சுருக்கி பிக்ஷிகிசி என்கிறார்கள். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ஏர் கண்டிஷன் என்றால் நமக்குக் குளிர்ச்சி மட்டும்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், இது ஒரு பொதுவான வார்த்தை. ஓர் இடத்தில்  வெப்பமூட்டுவதற்கும், காற்றை அதிகமாக்குவதற்கும்கூட ஏர் கண்டிஷன் என்றே பெயர்'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

சுட்டிகள் ஆர்வத்துடன் அவரை நெருங்கி உட்கார்ந்துகொண்டார்கள். ''இன்னும் விளக்கமாகச் சொல்லுங்க டீச்சர்'' என்றாள் தீபா.

''வெப்பம், குளிர்ச்சி என்பது காற்று நம் உடல் மீது படுவதால் ஏற்படுகிற ஒரு நிகழ்ச்சி. அதனால், நம்மைச் சுற்றி இருக்கிற காற்றைக் கட்டுப்படுத்தி, நம் உடலுக்கு ஏற்ற மாதிரி சொகுசாக மாற்றிக்கொள்வதுதான் ஏர் கண்டிஷனிங். தூய தமிழில் 'வளிப் பதனம்’ என்பார்கள். மனிதன் சொகுசாக இருப்பதற்காகத் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கிய சாதனங்களில் ஏர் கண்டிஷனும் ஒன்று'' என்றார்.

''டீச்சர்! நான் ஒரு விஷயம் படிச்சேன். பண்டைய ரோமானிய அரசர்கள் கோடைக் காலத்தில் தங்கள் அரண்மனையின் அறைகளில் பனிக் கட்டிகளைக் குவிச்சுவெச்சுப்பாங்களாம்'' என்றான் பிரதீப்.

''ஆமாம்! இதற்காகப் பனிப் பிரதேசங்களில் இருந்து பனிக் கட்டிகளை வண்டி வண்டியாக எடுத்து வருவார்கள். எட்டாம் நூற்றாண்டில் பாக்தாத் நகரில் வசித்த காலிஃப் என்ற அரசர் தன் அறையில் பனிக் கட்டிகளைக் குவித்து, அதை வேலையாட்கள் மூலமாகப் பெரிய விசிறிகளால் விசிறவைப்பாராம். அதன் மூலம் குளுகுளு காற்று வந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இதே டெக்னிக் மூலம் நியூயார்க் நகரில் 'மாடிசன் ஸ்கொயர்’ என்ற தியேட்டரில்  முயற்சித்தார்கள். ஜன்னல்கள் பொருத்தப்பட்ட நெருக்கமான இரண்டு சுவர்களுக்கு நடுவில் ஐஸ் கட்டிகளை வைத்து மின் விசிறியால் குளுகுளு காற்றை அரங்கின் உள்ளே செலுத்தினார்கள்'' என்றாள் டீச்சர்.

''அதாவது முதல் ஏசி தியேட்டர்னு சொல்லுங்க'' என்றான் பரத்.

''ஆமாம்! அதற்கு முன்னாடி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் டாக்டர் ஜான் கோரி என்பவர் தனது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளின் அறையில் குளிர் வசதிக்காக ஒரு பெட்டிக்குள் ஐஸ் கட்டிகளை வைத்து இதே முறையை செய்துகொடுத்தார். பிறகு ஃபெர்டினாண்ட் சாரே என்ற ஃபிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி அமோனியா வாயுக் குழாய்கள் மூலமாக வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் பிரிக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். இப்படிப் பல படிகளைக் கடந்தே இன்றைய நவீன ஏர் கண்டிஷனர் வந்து இருக்கு'' என்றார் மாயா டீச்சர்.    

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

'' ஏன் டீச்சர் வெயிலில் போய்ட்டு வீட்டுக்குள்ளே வந்ததும் நாம் ஃபேனுக்கு கீழே நிற்கிறோம். அப்போ, நமக்கு எப்படிக் குளிர்ச்சியான காற்று கிடைக்குது?'' என்று கேட்டாள் சுரேகா.

''உண்மையில் அது குளிர்ச்சியான காற்று கிடையாது சுரேகா. வெயில் நேரத்தில் வெளியே இருக்கிற வெப்பக் காற்றுதான் அறைக்கு உள்ளேயும் பரவி இருக்கும். ஃபேன் அந்த அறையில் இருக்கிற காற்றையே இறக்கைகள் மூலம் குவிச்சு நமக்குக் கொடுக்குது. அப்போ அது வெப்பக் காற்றுதானே?'' என்றார் டீச்சர்.

''அப்புறம் எப்படி நமக்கு சூடு தணியுது?'' - இது பிரதீப்.

''அங்கே நடப்பது ஆவியாதல் நிகழ்ச்சி. வெப்பத்தால் நம் உடம்பில் இருந்து வியர்வை வெளியே வருகிறது. அந்த நீர்த் துளிகள் மீது வெப்பக் காற்று வேகமாகப் படுவதால், நீர் ஆவியாகிறது. இப்படி, ஆவியாவதற்குத் தேவையான வெப்பம் நமது உடலில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதனால் சருமத்தில் குளிர்ச்சியை உண்ர்கிறோம்'' என்றார் டீச்சர்.

''அப்படின்னா ஃபேனுக்கும் ஏசி பெட்டிக்கும் என்ன வித்தியாசம்?'' என்று கேட்டான் பரத்.

''அதை இந்த ஏசி பெட்டிக்கு உள்ளேயே போய்ப் பார்த்துடலாமா? எதுக்கும் தேவைப்படலாம்னு மந்திரக் கம்பளத்தை எடுத்து வந்து இருக்கேன்'' என்ற டீச்சர், தனது கைப்பையில் இருந்து கம்பளத்தை எடுத்தார்.

கர்ச்சீப் வடிவில் இருந்த மந்திரக் கம்பளம் வெளியே வந்ததும் பெரியதானது. ''ஏன் டீச்சர் ஏசி பெட்டிக்கு உள்ளே கண்டிப்பாகப் போகணுமா? ரிப்பேர் எதுவும் ஆயிடாதே.... புதுசு ஆச்சே, அதான்..'' என்று இழுத்தான் பரத்.

''தோ பாருடா... இவன் வீட்டுப் பொருள் என்றதும் எவ்வளவு அக்கறை?'' என்று சுரேகா சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.

''பயப்படாதே பரத். உன் ஏசி பெட்டியும் சேஃப்டியாக இருக்கும், நாமும் சேஃப்டியாகப் போய்ட்டு வரலாம்'' என்றார் டீச்சர்.

அடுத்த சில நொடிகளில் அவர்கள் குட்டியூண்டாக மாறி, சிலுசிலு என்று காற்று வந்த ஏர் கண்டிஷனர் உள்ளே நுழைந்தார்கள். அங்கே பளிச் என அவர்கள் கண்களுக்குத் தென்பட்டது ஓர் உருளை. அதன் அருகே செல்லும்போதே எல்லோரும் வெப்பமாக உணர்ந்தார்கள்.

''இதுதான் கம்ப்ரஸர் என்கிற வெப்பப் பம்பு. ஏசியின் மிக முக்கியமான பகுதி. வெப்பத்தைக் குறைந்த வெப்பநிலையில் இருந்து அதிக வெப்பத்துக்கு மாற்றிக்கொடுக்கும் வேலையைச் செய்கிறது. இந்த வெப்பப் பம்பை இயக்க மின்சார மோட்டார் இருக்கும். அதோ ஒரு குட்டி ஃபேன் தெரியுதா?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.

''என்னது அதுவா குட்டி ஃபேன்? எவ்வளவு பெருசா இருக்கு'' என்றான் பரத்.

''நாம இப்போ குட்டியூண்டாக மாறி இருப்பதால், அது பெருசாத் தெரியுது. உண்மையில் அது குட்டி மின் விசிறிதான். இந்த மின் விசிறி ஓர் உருளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும். உருளையுடன் கூடிய இந்த மோட்டார் சுழலும்போது மின் விசிறியும் சுழலும். அப்போது அறைக்குள் இருக்கும் காற்று ஈர்க்கப்பட்டு பெட்டிக்கு உள்ளே வருகிறது. இங்கே இருக்கும் காற்றுச் சீரமைப்பிகளால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. அது குளிர்ப்பான் என்ற பகுதியைச் சுற்றிலும் திரவத்தை வெளிப்படுத்துகிறது. அந்தத் திரவம் ஆவியாக்கி சுருள் என்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறது. அங்கே அது சுருக்கப்பட்டு திரவத்துடன் கூடிய குளிர் காற்றாக அறைக்குள் வருகிறது. முதலில் குளிர்விக்கப்பட்ட இடத்தில் உறிஞ்சப்பட்ட வெப்பமானது மற்றொரு பகுதி மூலம் வெளியேற்றப்படுகிறது'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் ஏர்கண்டிஷன் பெட்டிக்குள் மெதுவாகச் சுற்றி வர, மாயா டீச்சர் ஒவ்வொரு பாகத்தையும் காட்டி அதன் செயல் முறையை விளக்கினார். ''சரி இப்போ வெளியே போய்டுவோம். நல்லாப் பார்த்துக்க பரத். உன் ஏர் கண்டிஷனரில் நாங்கள் எதையும் எடுத்துக்கலை'' என்று சொல்லிப் புன்னகைத்தார் டீச்சர்.

அவர்கள் பழைய உருவத்துடன் வெளியே வந்தார்கள். ''ஏன் டீச்சர் இந்த ஏசி மூலம் கிடைக்கும் காற்று நல்லதா... கெட்டதா?'' என்று கேட்டாள் தீபா.

''இதுக்கு எப்படி பதில் சொல்றது? இயற்கையாகக் கிடைக்கும் விஷயங்களில் பக்க விளைவுகள் இருப்பது இல்லை. மற்றபடி, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் அளவோடு பயன்படுத்தினால் நல்லது. அந்த மாதிரிதான் இதுவும். ஏசி பெட்டியின் மிக அருகில் ரொம்ப நேரம் இருக்கக் கூடாது'' என்றார் டீச்சர்.

அப்போது உள்ளே வந்த பரத்தின் அம்மா ''லஞ்ச் ரெடி... எல்லோரும் வாங்க'' என்றார்.

''நல்லதாப்போச்சு. எல்லோரும் மொட்டை மாடிக்குப் போய்டுவோம். அங்கே குளிர்ச்சிக்காகப் பனை ஓலையால் அறை கட்டி இருக்கோம். அங்கே கிடைக்கும் இயற்கை ஏர் கண்டிஷனரை அனுபவிச்சுகிட்டே சாப்பிடலாம்'' என்றான் பரத்.

மாயா டீச்சருடன் சுட்டிகளும் துள்ளல் நடையில் மாடிக்குச் சென்றார்கள்.