தத்தலிபுத்தலி !
##~## |
'சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?’-என்பாரே வடிவேலு மாமா. அதுதான் தத்தலிபுத்தலி.
சின்னப் பிள்ளைகள் சண்டை போட்டால், உடனே மறந்து ஒன்று சேர்ந்துவிடுவார்கள். சில நேரங்களில் நாள்கணக்கில் பேசாமல் ஒருவரை ஒருவர் முறைத்தபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிவார்கள். அதைப் பார்க்கும் நண்பர்கள், அந்த இருவரையும் சமாதானப்படுத்த இந்த விளையாட்டுக்குத்தான் அழைப்பார்கள்.
எல்லோரும்வட்டமாக உட்கார்ந்துகொள்வார்கள். கைகள் இரண்டையும் தரையில் விரித்து உள்ளங்கை மேலே தெரியும்படி வைத்துக்கொள்வார்கள். எல்லோரும் விளையாடும் கலகலப்பில் இருக்க, சண்டையிட்டுப் பேசாதவர்கள் மட்டும் 'உர்’ என இருப்பார்கள். தங்களுக்குப் பிடித்தவர்கள் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்துகொள்வார்கள்.
யார் வேண்டுமானாலும் ஆட்டத்தைத் துவக்கலாம். அதனால், ''நான் ஆட்டத்தைத் துவக்குகிறேன்'' என்று ஒருவர், தன் இடது கையைத் தரையில் வைத்துக்கொண்டு, வலது கையை எடுத்து...
'தத்தலிபுத்தலி
தவளச் சோறு
எட்டெறுமை எளைச்சுப்போச்சு
உங்கப்பன் பேரு என்ன?’
என்று பாடியவாறு, ஒவ்வொருவரின் கையையும் தொட்டு வருவாள்.

யார் கையைத் தொடும்போது இந்தப் பாட்டு முடிகிறதோ... அவர் தன் அப்பாவின் பெயரைச் சொல்ல வேண்டும். மற்றவர்கள் உடனே அப்பாவின் பெயரைச் சொல்லிவிடுவார்கள். ஆனால், சண்டையிட்டுப் பேசாமல் இருக்கும் சுட்டி, தன் அப்பா பெயரைச் சொல்லாமல் இருப்பாள். மற்றவர்கள், 'ஏ... சொல்லு சொல்லு’ எனக் கிண்டலடிக்க, கோபத்தை வெளியில் காட்டாமல், அப்பா பெயரைச் சொல்வாள். இப்படியாக இறுக்கமாக இருக்கும் அந்தச் சுட்டியை மெள்ள மெள்ள கலகலப்பான சூழ்நிலைக்குக் கொண்டுவருவார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொருத்தர் கை மீதும் விரலை வைத்து...
'முருங்கப் பூவைக் காச்சி
முள்ளாங் கஞ்சியக் குடிச்சவரே
சாட் பூட் சப்பாணி
கையை விரி
வயித்துல
எத்தனைபூனைக்குட்டி வெச்சிருக்க?’
என்று பாடுவார்கள்.
யாரிடம் பாடல் முடிகிறதோ... அந்தச் சுட்டியின் இடுப்பில் எல்லோருமாகச் சேர்ந்து கிச்சுக்கிச்சு மூட்டுவார்கள். இதில் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கும் சுட்டியிடம் பாடல் முடிந்தால் அவளை மற்றவர்கள் கிச்சுக்கிச்சு மூட்டும்போது, அவளுடன் சண்டை போட்ட சுட்டியும் சேர்ந்துகொள்வாள்.
இப்படியாக இருவரும் சிரித்து ராசியாகி விடுவார்கள். அப்புறம் என்ன? சண்டைபோட்டவர்களைச் சேர்த்துவைத்த வெற்றியுடன் தத்தலிபுத்தலி தொடரும்... இன்னும் உற்சாகமாக!