ஸ்யாம் கே.யுவராஜன்
##~## |
மாயா டீச்சரின் வீட்டுக்குள் ஒரே பரபரப்பு. சுரேகாவைத் துரத்தித் துரத்திச் செல்லமாக அடித்துக்கொண்டு இருந்தார்கள் மற்ற சுட்டிகள். அவசர வேலையாக வெளியே போய்விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்தார் மாயா டீச்சர். உடனே சுரேகா, ''டீச்சர் காப்பாத்துங்க! காப்பாத்துங்க!'' என்று அடைக்கலம் கேட்டாள்.
''என்ன ஆச்சு? எதுக்கு இந்த விரட்டு விரட்டுறீங்க?'' என்று கேட்டார் டீச்சர்.
''இவளைத் திடீர்னு ஒரு வாரமாக் காணலை. 'எங்கேடி போனே?’னு கேட்டால், ஊட்டியில் ஜாலியா இருந்துட்டு வந்தாளாம். எங்ககிட்டே ஒரு வார்த்தைகூடச் சொல்லலை''- இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முறைப்புடன் சொன்னாள் தீபா.
''திடீர் புரோகிராம் டீச்சர்... அம்மா, அப்பாவோடு கிளம்பிட்டேன்'' என்றாள் சுரேகா.
''நாங்க இங்கே வெயிலில் காய்ஞ்சுட்டு இருக்கோம். இவள் மட்டும் குளுகுளுன்னு இருந்துட்டு வந்திருக்கா. டீச்சர், உடனே மந்திரக் கம்பளத்தை எடுங்க. இவளை விட்டுட்டு நாம எல்லோரும் ஊட்டிக்குப் போகலாம்'' என்றான் பரத்.

''கூல்... கூல்'' என்று அவர்களைச் சமாதானம் செய்தார் மாயா டீச்சர். பிறகு, ''ஊட்டிக்குப் போறதுக்கு சாதாரண பஸ்ஸோ, வேனோ போதுமே... மந்திரக் கம்பளம் எதுக்கு? மந்திரக் கம்பளத்தில் உங்களை எல்லாம் ஏற்றி, ஊட்டியை மட்டும் அல்ல, அதையும் தாண்டிப் பல இடங்களுக்கும் கூட்டிட்டுப் போகப்போறேன்'' என்றார்.
''என்னை விட்டுட்டுப் போகாதீங்க ஃப்ரெண்ட்ஸ். நான் ஏற்கெனவே ஊட்டிக்குப் போய் இருக்கிறதால, மந்திரக் கம்பளம் திடீர்னு ரூட்டை மறந்துட்டாலும் வழி காட்டுவேன். உங்களுக்கு ஹெல்ப்பா இருப்பேன். என் அனுபவத்தை யூஸ் பண்ணிக்கங்க ஃப்ரெண்ட்ஸ்'' என்று பந்தாவாகச் சொன்னாள் சுரேகா.
அவளையும் ஏற்றிக்கொண்டு மந்திரக் கம்பளம் பறந்தது. ஒரு சில நொடிகளிலேயே அவர்கள் ஊட்டியின் சிலுசிலுப்பான ஓர் இடத்தில் இருந்தார்கள்.
''டீச்சர், மலைப் பகுதியில் காற்று இவ்ளோ குளிர்ச்சியா இருக்கக் காரணம் என்ன?'' என்று கேட்டான் பிரதீப்.
குறுக்கிட்ட சுரேகா, ''சிம்பிள்... இங்கே மரங்கள் நிறைய இருக்கு'' என்றாள்.
''அப்போ, வெறும் மணலாக இருக்கிற கடற்கரையில் வீசுகிற காற்றும் குளிர்ச்சியாக இருக்கிறது எப்படி?'' என்று மடக்கினார் டீச்சர்.
''ரொம்ப சிம்பிள்... அங்கே கடல் இருக்கு'' என்ற சுரேகாவை எல்லோரும் முறைத்தார்கள்.
''மலைப் பகுதியில் மரங்கள் இருக்கிறதும் கடற்கரையில் கடல் இருக்கிறதும் யாருக்கும் தெரியாதா? இங்கே எல்லாம் ஓசோன் வாயு அதிகமாக இருக்கும். அதோட ஆக்சிஜனும் சேர்ந்தால், சரிவான பாதையில் சைக்கிள் ஓட்டிட்டுப் போகிற மாதிரி. லேசாகச் சுவாசித்தாலே போதும். நுரையீரலுக்கும் சுவாசக் குழலுக்கும் அதிக வேலை கொடுக்காமலேயே தேவையான காற்று கிடைச்சுடும்'' என்றார் மாயா டீச்சர்.
மந்திரக் கம்பளம், அந்தப் பகுதியில் இருந்த ஓசோன் படலத்தை அவர்களின் கண்களுக்குக் காட்டியது. அந்த ஓசோன் படலத்தை நெருங்க நெருங்க ப்ளீச்சிங் பவுடர் வாசம் போல ஒரு வித மணம் மூக்கைத் துளைத்தது. ''ஓசோன் என்றால் என்ன அர்த்தம் டீச்சர்?'' என்று கேட்டான் பிரதீப்.
''கிரேக்க மொழியில் மணம் என்று பொருள். ஆக்சிஜனுக்கு மணம் கிடையாது. ஆனால் ஓசோனுக்குத் தனிப்பட்ட மணம் உண்டு. காற்றில் ஒருவித மணம் இருப்பதற்குக் காரணம், இந்த ஓசோன்தான். 1840-ஆம் ஆண்டு கிறிஸ்டியன் ஃப்ரெட்டிரிச் (Christian Friedrich)என்பவர்தான் இதனைக் கண்டுபிடித்து, ஓசோன் என்று பெயர் வைத்தார்'' என்றார் டீச்சர்.

''டீச்சர், இந்த ஓசோனுக்கும் ஆக்சிஜனுக்கும் என்ன வித்தியாசம்?'' என்று கேட்டான் பரத்.
''இதை ஆக்சிஜனின் இன்னொரு வடிவம்னு சொல்லலாம். ஆக்சிஜன் வாயுவின் மூலக் கூறில் 2 ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும்(02). மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்த மூலக்கூறு இந்த ஓசோன். இதனை 03 என்பார்கள். ஆனால், ஆக்சிஜனுக்கும் இதற்கும் குணத்தில் நிறைய வித்தியாசம் இருக்கு. ஆக்சிஜன் சூப்பர் ஹீரோ மாதிரி நமக்கு நன்மை மட்டுமே செய்யும். ஆனால், கடவுள் பாதி மிருகம் பாதி இரண்டும் சேர்ந்த கலவை ஓசோன். அளவுக்கு மீறினால் ஆபத்து. எந்த உயிரையும் அழிக்கும். உலோகங் களையும் உருக்கிவிடும். அதே நேரம் பூமியைச் சுற்றி ஒரு போர்வை மாதிரி இருந்து, நம்மைக் காப்பதும் ஓசோன்தான்'' என்றார் டீச்சர்.
''ஆகா... அப்படின்னா வாங்க டீச்சர் திரும்பிப் போயிரலாம்'' என்றான் பரத்.
''கம்பளம் இருக்க, கலக்கம் ஏன் மகனே?'' என்றாள் சுரேகா. அவர்கள் ஓசோன் படலத்தின் மிக அருகே வந்துவிட்டார்கள். சூரியனிடம் இருந்து உக்கிரமான அல்ட்ரா வயலெட் கதிர்கள் வந்துகொண்டு இருந்தன. அவற்றைக் கட்டுப்படுத்தி, ஓசோன் படலம் நமக்குத் தேவையான வகையில் வடிகட்டி அனுப்பிக்கொண்டு இருந்தது.
''இப்போது, நாம் பூமியின் சுற்று வட்டத்தில் 30 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறோம். இங்கே இருந்தவாறுதான் ஓசோன் படலம் நமக்கான பணிகளைச் செய்கிறது. இப்படி மேலே கடவுளாக இருக்கிற ஓசோன், பூமியை நெருங்க நெருங்கத் தன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்கிறது. அதன் மூலக்கூறில் மாசு உண்டாகி, சுவாசிப்பவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்துகிறது. அதனால்தான் மலைப் பகுதியில் சுகமாக இருக்கிற காற்று, கீழே செல்லச் செல்ல நமக்குத் தொல்லை அளிக்கிறது. அதற்கு நாமும் பல வகையில் காரணமாக இருக்கிறோம். ஏர் கண்டிஷனர், குளிர்சாதனப் பெட்டி, அளவுக்கு அதிகமான மின் விளக்குகள், தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் வெப்பத்தை அதிகமாக்கிவிடுகிறோம். இவை காற்றில் கலந்து நமக்கே வில்லனாக மாறுகின்றன'' என்றார் மாயா டீச்சர்.
''ஓசோனில் ஓட்டை ஏற்படுவதும் அதனால்தானே டீச்சர்?'' என்று கேட்டாள் தீபா.
''ஆமாம். வாங்க அதைப் பார்க்கலாம்'' என்று டீச்சர் சொல்ல, கம்பளம் நகர்ந்து இன்னோர் இடத்தில் நின்றது. ''இதுதான் ஓசோன் ஓட்டை'' என்றார்.
''எங்கள் கண்களுக்குத் தெரியலையே டீச்சர்'' என்றான் பரத்.
புன்னகைத்த டீச்சர் ''நீங்கள் வட்டமாக ஓர் ஓட்டையை மனதில் நினைத்துக்கொண்டு பார்க்கிறீர்கள். ஓசோன் படலத்தில் ஓட்டை என்பதை அதே அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. படலம் சில இடங்களில் அடர்த்திக் குறைவாக இருக்கும். அந்த இடத்தில் சூரியனின் அல்ட்ரா வயலெட் அதிகமாக பூமியில் இறங்கும். இப்போது உற்றுக் கவனியுங்கள். சற்று முன் நாம் பார்த்த இடத்தில் இருந்த ஓசோன் படலத்துக்கும் இங்கே இருக்கும் ஓசோன் படலத்தின் அடர்த்திக்கும் வித்தியாசம் தெரிகிறதா?'' என்று கேட்டார் டீச்சர்.
''ஆமாம் டீச்சர்'' என்று நான்கு பேருமே ஒரே குரலில் சொன்னார்கள். ஒரு சில நொடிகள் மட்டுமே அங்கே இருந்த மந்திரக் கம்பளம், அவர்களை உடனடியாக ஊட்டியின் ஒரு பகுதிக்கு அழைத்துவந்து இறக்கிவிட்டது.
''அது சரி டீச்சர், ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்துறதும் ஒரு காரணம்னு சொல்றீங்க. நம்ம வீடு இப்படி ஊட்டி மாதிரியான இடத்தில் இருந்தால், ஏஸியே இல்லாமல் இருக்கலாம். சென்னையில் முடியுமா?'' என்று கேட்டான் பரத்.
''அதுக்காக நாம் அலட்சியமாக இருந்தால், சில பல வருடங்களுக்குப் பிறகு ஊட்டியும் கொதிக்கும் அடுப்பு மாதிரி மாறிடும். அப்போ, சம்மர் லீவுக்கு எங்கே போவே? டீச்சர் நான் சொல்றது சரிதானே!'' என்றாள் சுரேகா.
''ரொம்பச் சரி. சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் நேரடியாகத் தாக்குவதால் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் அதிகரிக்கும். நாம் ஒவ்வொருவரும் இதில் அக்கறை எடுத்து செயல்பட்டால்தான் வருங்கால மனித குலத்தைக் காப்பாற்ற முடியும். தேவை இல்லாமல் ஓர் அறைக்குள் எரிகிற ஒரு மின் விளக்கினை அணைப்பதன் மூலமாகக்கூட நமது பங்களிப்பைத் தரலாம்'' என்றார்.
''நிச்சயமாக எங்களோட பங்களிப்பு இருக்கும் டீச்சர். இப்போ, மந்திரக் கம்பளத்தை மடக்கிவெச்சுட்டு, சிலுசிலு காற்றைச் சுவாசிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம் நடக்கலாமே'' என்றான் பிரதீப்.
மாயா டீச்சரும் சம்மதித்தார். அவர்கள் மக்களுடன் சேர்ந்து உற்சாகத்துடன் நடக்க ஆரம்பித்தார்கள்.